காந்திமீதான விமர்சனங்கள்

காந்தியும் கறுப்பினத்தவரும்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

அரவிந்தர் காந்தியை விமர்சனக் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார் என நினைக்கிறன். காந்தியின் அஹிம்சை, சத்தியாகிரகம் யாவும் லியோ தல்ஸ்தோயின்  ரஷ்ய கிறிஸ்துவ கருத்துக்கள் தாம். இவை யாவும் இந்திய

முலாம் பூசப்பட்ட ருசிய நம்பிக்கைகள் எனச் சொல்லும்  அரவிந்தர், இந்திய தன்மை அரசியலில் இல்லாததால் தாம் அதில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவிக்கிறர்.  காந்தியின் வழி மேற்கத்தியது தானா? அவ்வாறு இருந்தாலும் அதில் என்ன தவறு?

என்றும்

கிருஷ்ணமூர்த்தி.

 

அன்புள்ள ஜெ

பெரி ஆண்டர்சன் Perry Anderson தன்னுடைய இந்தியன் ஐடியாலஜி The Indian Ideology நூலில் காந்தியையும் நேருவையும் கடுமையாக விமர்சிக்கிறார். அதை கவனித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?

பாலா வைத்யா

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி, பாலா

காந்தியை பல கோணங்களில் பலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். காந்தி மிகத்திட்டவட்டமான ஒரு பார்வையை முன்வைப்பவர். அதனூடாக ஒரு வரலாற்று நிகழ்வை முன்னின்று நடத்தியவர். ஆகவே அவரை விமர்சிக்கும் தரப்புகள் அவர் தொடங்கியபோதே, தென்னாப்ரிக்காவிலேயே வலுவாக எழுந்து வந்தன.இன்னும் வந்தபபடியேதான் இருக்கும். அவற்றை பரிசீலிக்கலாம். உங்களுக்கு எது உகந்தது என தோன்றுகிறதோ அதைக் கொள்ளலாம்.

அரவிந்தரின் கருத்தை வாசித்திருக்கிறேன். நாற்பதாண்டுகளுக்கு முன் வாயில் நுரைதள்ள ஆவேசமாக அவற்றை பேசி, பிரச்சாரம் செய்திருக்கிறேன். அரவிந்தரின் பார்வை இந்தியாவின் கடந்த கால நிலப்பிரபுத்துவ வரலாறு சார்ந்து உருவாக்கப்பட்ட பழமைவாத அணுகுமுறை, இந்துத்துவர்களுக்கு மட்டுமே உவப்பானது. இந்தியா ஷத்ரிய வீரத்தால் சுதந்திரம் பெற்றிருக்கவேண்டும் என்கிறார். அவருக்கு ஜனநாயகத்தில், பொதுமக்களின் திரள்விசையில் நம்பிக்கை இல்லை. அகிம்சை வழிமுறைகள் கோழைத்தனம் என்கிறார்.

அரவிந்தர் பேசுவனவற்றில் காலம்கடந்த ஆன்மிகமான சில தளங்கள் உள்ளன. யோகம் சார்ந்தவை ஒரு தளம். இந்திய மெய்யியலை கவித்துவம் வழியாக அணுகும் அறிவார்ந்த பார்வை இன்னொரு தளம். அவ்விரண்டுமே முக்கியமானவை. அரசியலில் அவர் காலாவதியான சென்ற யுகத்தைச் சேர்ந்தவர். நவீன மனிதனால் முழுமையாகவே நிராகரிக்கப்படவேண்டியவர். அதை கண்டடைய எனக்கு சில ஆண்டுகளே ஆயின.

பெர்ரி ஆண்டர்சனை நீங்கள் சொல்வது வரை படித்ததில்லை. நான் அவரைப்பற்றி கேள்விப்படும்போது அவரைப்போன்ற  மேலைமார்க்சியர்களை எல்லாம் ஒருவகையான கல்வித்துறை காளான்கள் என்னும் முடிவுக்கு வந்திருந்தேன். அவர்களுக்கு வறுமையோ சுரண்டலோ முக்கியமல்ல. மனிதர்கள் முக்கியமல்ல. மார்க்ஸியம்கூட முக்கியமல்ல. அவர்கள் தாங்கள் இருப்பதை அறிவிக்க மூளையை நுரைக்க வைக்கிறார்கள். அவர்களுக்காக நாம் அளிக்கும் உழைப்பும் பொழுதும் வீண். நீங்கள் அரசியல் கோட்பாட்டில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் வேலைக்குச் சேர்வதென்றால் அவரையெல்லாம் வாசிக்கலாம்.

ஆனால் இப்போது இந்த ஒருநூலை மட்டுமே பார்க்கையில் அவர் ஒருவகை ’கோட்பாட்டு மூடர்’ என்னும் எண்ணமே உருவாகிறது. இந்திய மார்க்சியர்களே அவரை விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவரிடமிருப்பவை இரண்டு வகை கண்மூடித்தனங்கள். ஒன்று, இந்தியாவின் அரசியல் போராட்டத்திலுள்ள பிழைகளை தேடித்தேடிச் சேர்த்து, தனக்குத் தேவையானவற்றை மட்டுமே சேகரித்து, திரித்து, பொய்ச்செய்திகளையும்கூட பயன்படுத்திக்கொண்டு ஒரு கரிய சித்திரத்தை உருவாக்குகிறார். அவ்வாறு செய்வதிலுள்ள அறிவுமோசடித்தனம்கூட அவர் கண்ணுக்குப் படவில்லை. ‘கொள்கையின் பொருட்டு’ அவற்றைச் செய்யலாம் என்று நம்புவது மார்க்ஸியர்களின் வழி.

ஆனால் இந்த இந்தியக் கருத்தியல் பலகோடி பேரை ஆதிக்கத்தில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுவித்து அரைநூற்றாண்டுக்குள் ஒரு நவீன உலகு நோக்கி கொண்டுவந்திருக்கிறது. கோடிக்கணக்கில் பொதுமக்களை பலி கொடுக்கவுமில்லை. அவர் நம்பும் மார்க்ஸியத்தின் எல்லா வெற்றிகளுமே கொடுங்கோல் அரசுகளை, அடிமைத்தனத்தை, பஞ்சங்களை, எளிய மக்களின் பேரழிவுகளை மட்டுமே உருவாக்கியிருக்கின்றன. அதைப்பற்றி அவருக்கு சமாளிப்புகளே உள்ளன. வழக்கம்போல ‘தியரி தெய்வீகமானது, நடைமுறையின் பிழைகளில் சிலகோடி மக்கள் செத்தழிந்தால் அது அவர்களின் தலையெழுத்து’ என்னும் பாவனை. எல்லா மதவெறிகளிலும் உள்ள பார்வை அது.

இரண்டு, இத்தனை முற்போக்குக்கு அடியிலும் அவரிடமிருப்பது வெள்ளை இன மேட்டிமைவாதம்தான். ‘அதெப்படி இந்தியா தனக்குரிய அரசியலை தானாகவே உருவாக்கிக் கொள்ள முடியும்? அதற்கான அறிவு அந்தப் பின்தங்கிய சமூகத்துக்கு எப்படி இருக்க முடியும்? நாங்கள் வெள்ளையர் இங்கே பிறகு என்னத்துக்கு இருக்கிறோம்?’ என்பதே அவருடைய அடியுள்ளம் சொல்வது. சராசரி பிரிட்டிஷாரின் அதே மேட்டிமைவாதமும் கசப்புமே இவரில் புரட்சிப்பூச்சுடன், பலவகை பசப்பல்களுடன் வெளிப்படுகிறது. கடந்துபோகவேண்டிய சொற்குப்பை என்பதற்கு அப்பால் அவர் எழுத்துகளைப் பற்றி பேசுவதே வீண்.

ஆனால் இ.எம்.எஸ் காந்தியின் வழிமுறைகளை மார்க்சியக் கோணத்தில் கடுமையாக விமர்சனம் செய்தவை கவனத்திற்குரியவை. ஏனென்றால் அவை நேரடியாகக் களத்திலிருந்து எழுந்த சிந்தனைகள். குறிப்பாக காந்தியின் தர்மகர்த்தா கொள்கை, நுகர்வுத்துறப்புக் கொள்கை இரண்டையும் இ.எம்.எஸ் முழுமையாக நிராகரிக்கிறார். உடைமையை உருவாக்கிக் கொள்ளும் உள்ளம் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு கொண்டது, ஆகவேதான் அது செல்வத்தை திரட்டுகிறது. அதன் வெற்றி, அடையாளம், மகிழ்வு எல்லாமே செல்வத்தைத் திரட்டலில்தான் உள்ளது. பகிர்வது என்பது அதற்கு நேர் எதிரான மனநிலை. அதைநோக்கி இயல்பாகவே உடைமையுள்ளம் வந்துசேரும் என்றோ சேரவேண்டும் என்றோ சொல்வது வெறும் கற்பனாவாதம் என்கிறார் இ.எம்.எஸ்.

நுகர்வு என்பதை காந்தி காணும் பார்வையும் இ.எம்.எஸ்ஸால் ஏற்கப்படுவதில்லை. நுகர்வு என்பது வெறும் கேளிக்கை அல்ல. அது வாழ்க்கைப் போராட்டத்தின் நுகத்தில் இருந்து விடுவிக்கிறது . அதன் வழியாக மனிதனை சிந்திப்பவனாக ஆக்குகிறது. அதுவே மேலும் சிறந்த பண்பாட்டை உருவாக்கும். நுகர்வு அற்ற சமூகம் தேங்கிப்போன ஒன்று. நுகர்வுமறுப்பு என்பது  பொருளியல் தேக்கத்தையே உருவாக்கும். அது சிந்தனைத் தேக்கத்தையும் கலாச்சாரத் தேக்கத்தையும் காலப்போக்கில் உருவாக்கும். காந்தியின் கிராம சுயராஜ்யம் என்பது ஆயிரமாண்டு காலமாக தேங்கிக்கிடந்த இந்தியக் கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டது என்கிறார்  இ.எம்.எஸ். அது தேக்கத்தையே உருவாக்கும் என்கிறார். காந்தி வெறும் உழைப்பை மட்டுமே முன்வைப்பவர், கலாச்சார வளர்ச்சி கலைகள் சிந்தனைகள் ஆகியவற்றுக்கு எதிரானவர் என்கிறார்.

இ.எம்.எஸ் அவர்களை நான் முழுமையாக நிராகரிப்பதில்லை. அவை அவருக்கு முன்னரே எம்.என்.ராய் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டவையும் கூட. காந்தியை நாம் நடைமுறையில் நின்று மதிப்பிடவேண்டுமென்றால்  இ.எம்.எஸ் போன்றவர்களின் கருத்துக்கள் மிக அவசியமானவை. சிந்தனையில் என் இடம் காந்திக்கும் இ.எம்.எஸ் அவர்களுக்கும் நடுவில் எங்கோதான். திடமான நிலைபாடு கொண்டது அல்ல அது, நிரந்தரமாக ஊசலாடுவது.

எம்.என்.ராய்

மேலே சொன்ன அரவிந்தர், மார்க்ஸியம் என்னும் இரு தரப்புக்கும் பொதுவானதாக உள்ளது வன்முறையே தீர்வு என்னும் நம்பிக்கை. கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் போராட்டங்களுக்காக பலகோடிபேரை கொன்றழித்தனர். ஒன்றும் அறியாத எளிய மக்கள் ஈசல்கள்போல மடிந்தனர்.  அதைப்பற்றிய எந்த குற்றவுணர்ச்சியும் அவர்களிடமில்லை. அந்தப் போராட்டமே தவறென்று நிரூபிக்கப்பட்டால் ‘அது ஒரு கொள்கைப்பிழை, அவ்வளவுதான்’ என கடந்துசென்றுவிடுவார்கள். ஷத்ரியவீரம் பேசுபவர்கள் சென்றகாலம் முழுக்க   அரசர்களின் பூசல்களில் செத்தழிந்த சாமானியர்களைக் கருத்தில் கொள்வதே இல்லை. இரு தரப்புக்கும் நம்பிக்கை, அடையாளம், கொள்கை, அதிகாரம், வரலாறு ஆகியவை முக்கியம். அவர்கள் சாமானியர்களை பொருட்படுத்துவதே இல்லை.

காந்தி சாமானியர்களைப் பொருட்படுத்தியவர். சொல்லப்போனால் வரலாற்றில் சாமானியர்களைப் பொருட்படுத்தி, அவர்களின் பார்வையில் அரசியலை அணுகிய முதல் அரசியல் கோட்பாட்டாளர் அவர்தான். மக்களை கொலைக்களத்துக்கு அனுப்பும் எந்தப் போராட்டத்தையும் அவர் வெறும் அழிவு என்றே எண்ணினார். ஒரு போராட்டத்தின் விளைவு என்ன என்பது நம் கையில் இல்லை. அது வரலாற்றின் ஒழுக்கில் எப்படியும் ஆகலாம். அந்நிலையில் அதன்பொருட்டு மக்களை காவு கொடுப்பது வெறும் மதியீனம் மட்டுமே

தான் நினைப்பதே அறுதி உண்மை, அதை நிறுவ எத்தனைகோடிபேர் செத்தாலும் சரியே என எண்ணும் அரசியல்தலைவன் அல்லது அரசியல்கோட்பாட்டாளன் வெறும் ஆணவக்காரன் மட்டுமே. வரலாறு மிகமிகப்பெரிய பெருக்கு. அதில் எல்லா மாமனிதர்களும் மாபெரும் சிந்தனையாளர்களும் வெறும் குமிழிகளே. அந்த வரலாறு மக்கள் வழியாகவே நிகழ்கிறது. மக்களின் எண்ணங்களை, வாழ்க்கைமுறையை மாற்றுவதே உண்மையான மாற்றம். அந்த மாபெரும் தரிசனமே காந்தியத்தின் அடிப்படை. அதுவே காந்தியை அரவிந்தரோ அல்லது இ.எம்.எஸ்ஸோ சொல்லும் கோட்பாட்டுநம்பிக்கை மற்றும் வன்முறைப்பாதை ஆகியவற்றை நிராகரிக்கச் செய்தது.

மக்களைப் பயிற்றுவிப்பது, அதற்கான அமைப்புகளையும் இயக்கங்களையும் உருவாக்குவது, அதனூடாக மக்களை தங்களுக்கு தேவையானவற்றை நோக்கிச் செல்லும்படி வரலாற்றினூடாக இயல்பாகச் செலுத்துவது ஆகியவையே காந்தியத்தின் அடிப்படை. மக்கள் என்பது ஒருவகை களிமண், தங்கள் கைவிரல்களால் பிசைந்து விருப்பப்படி சிற்பமாக்கலாம் என நம்பும் ஆணவம் எவருக்கு இருந்தாலும் அவர்களால் காந்தியை ஏற்கமுடியாது

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைவசைபாடிகளின் உலகம்- கடிதங்கள்