வியனுலகு வதியும் பெருமலர்- கடிதங்கள்

கவிதைக்கான ஒரு நாள்

வியனுலகு வதியும் பெருமலர்- உரைகள்

வணக்கம் ஜே.

நீங்கள் என்னிடம் கூறியது போலவே வாசித்தல் என்னுள் ஒரு அகவயமான தேடலை உருவாக்கி விட்டது. நீங்கள் ஒருமுறை சொன்னது போல இலக்கியத்தை வாழ்க்கையாக பின்பற்ற விரும்பும் எவரும் அதற்காக அவர்களின் நேரத்தையோ அல்லது அது தொடர்பான பயணத்தையோ அல்லது அவர்களின் நேர்மையான பங்களிப்பை அதில் கொடுக்க முன்வரவில்லை என்றால் அவர்கள் அதை லட்சியமாக கொள்வதில் என்ன பயன் இருக்க போகிறது என்று. இந்த கேள்வியின் தொடக்கம் தான் நீங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு விரிநீர் பெருமலர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை கொண்டு வந்து நிறுத்தியது என்று நினைக்கிறேன்.

இலக்கியம் சார்ந்து நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி. உங்களை சந்திக்கும் வாய்ப்பும் உங்களிடமிருந்து கையெழுத்தும் கிடைக்க பெறுவேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை ஜே. இன்னும் அந்த மகிழ்ச்சியின் உச்சத்தில் திழைத்துக் கொண்டே இருக்கிறேன். உங்கள் எழுத்துக்கள் போலவே சொற் பொழிவும் என்னை அதே உயிர்ப்புடன் கடத்திக் கொண்டே இருத்தது. அந்த புத்தகத்தின் தலைப்பில் துவங்கி புத்தகம் உள்ளடக்கிய ஒவ்வொரு களத்தையும் நீங்கள் வரையறுத்த விதம், நவீனத்தில் மரபு கலத்தலை சிம்லா உணவக மேசையில் வைத்திருக்கும்  சிறிய இமயமலை கொடுக்கும் சிலிர்ப்புடன், தோட்ட கலைகளில் ஒன்றான ரப்பர் ஒட்டு கட்டுதலுடனும் மிக அழகாக தொடர்பு படுத்தி கூறியது, இப்படி நீங்கள் பேசபேச திரு.மனோ மோகன் அவர்கள் குறிப்பிட்டது போல நீங்கள் எங்கள் தமிழ் இலக்கிய உலகின் பீஷ்மர் என்பதில் ஐயமே இல்லை என்று தோன்றியது.

உண்மையில் உங்களின் பல புத்தக வெளியீட்டு விழா சிறப்புரைகளை வலைதளங்களில் பார்த்திருகிக்றேன். நேரில் காண வேண்டும் என்ற ஆசை என் நண்பர்கள் உதவியுடன் அன்று நிறைவேறியது. நீதி உணர்வை பிரதிபலிக்கும் கவிதைகள் யாவையும் அரசியல் கவிதைகளே என்ற உங்களின் பார்வை அனைவரும் ஏற்றுக்கொண்டு வழிமொழிய வேண்டியவையே. உணவு என்பது விற்பனைக்குரியதாக இல்லாமல் இருந்த பாலை வன பகுதிகளும் இஸ்லாமிய பண்பாடும் இருந்த சமூகம் அப்படியே மறைந்து விடாமல் இன்றும் லிங்காயத் எனும் பசவ சமூக மக்கள் உணவிற்கு விலை வாங்குதில்லை என்பதை அப்பகுதியில் இருந்து வந்தும் நான் அறியாமல் இருந்தது பெரும் வருத்தமளித்தது.

இன்றைய கவிதைகளில் சமக்கால தன்மையின் ஈர்ப்பு மற்றும் அழகு குறித்து நீங்கள் மேற்கோள் காட்டிய டச் ஸ்க்ரீன், நான்கு வண்ண மாத்திரை என தொடக்கம் முதல் முடிவு வரை உங்கள் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு தாக்கத்தை உள்ளூர தந்துக் கொண்டே இருந்தது. நேரம் கடந்தும் ஒரு நிறைவான நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மனநிறைவுடன் விடைப் பெற்றேன். உங்களை காண விழைந்ததுடன் மற்ற சிறந்த கவிஞர்களையும் இத்தனை இலக்கிய ஆர்வலர்ளையும் பார்க்க நேர்ந்தது என்னுள் ஏற்படுத்திய பூரிப்பிற்கு எல்லையே இல்லை. வாழ்வின் ஒரு நிறைவான நினைவான நாளாக என் மனதில் பதிந்து போனது.

என் முதல் நன்றிகுரிய அன்புள்ள ஜெவுக்கு அத்துணை நன்றிகள்

நீனா

அன்புள்ள ஜெ

நான் கவிதை விமர்சகன் அல்ல. வாசகன் மட்டுமே. கவிதையை அதன் உத்திகள் மொழியழகு எதற்காகவும் நான் வாசிப்பதில்லை. என் வாழ்க்கையைப்பற்றிய ஒரு சின்ன அதிர்வையாவது கவிதை தரவேண்டும், எனக்கு ஒரு புன்னகையையாவது விட்டுத்தரவேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அந்தவகையில் இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் அற்புதமான ஒரு தொகுதி. உண்மையில் கவிதைக்கு இன்று கவிஞர்கள்தான் வாசகர்கள். கவிஞர்களுக்கு வெளியே உள்ள வாசகர்களுக்காக நாம் பரிந்துரைக்கத் தகுதியான கவிஞர்களும் கவிதைத்தொகுதிகளும் மிகச்சில தான். அவற்றில் சமீபத்தில் வந்த முக்கியமான நிகழ்வு இந்த தொகுதி

நீ ஒளிவதற்கு என் அன்பே

இடமா இல்லை?

ஆத்மாநாமுக்கு வாய்த்தது ஒரு கிணறு

தேடு

எங்காவது இருக்கும்

எங்காவது இருக்கும்

பத்தாவது மாயியில் இருந்து

பூமிக்குப் பாயும் வழியிலும்

ஒரு கிணறுண்டு அன்பே

 

என்னும் கவிதையிலுள்ள இருட்டுக்கும் கசப்புக்கும் பிறகு திரும்பவும் பக்கங்களை துழாவிக்கொண்டிருந்தபோது இந்தக் கவிதையை கண்டுபிடித்தேன்

 

உதிர்ந்த இலையில்

தன் மரணத்தை

பார்த்துக்கொண்டிருக்கிறது

மரம்

குனிந்து

அந்த மரத்தைப்

பார்த்துக்கொண்டிருக்கிறது

வானம்

 

இந்தக்கவிதை சரியான பதிலாக அமைவதுபோலத் தோன்றியது.

 

ஆர்.ராகவேந்திரன்

சென்னை கவிதைவிழா- கடிதங்கள்

முந்தைய கட்டுரைகல்குருத்து கடிதங்கள்-9
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா