கல்குருத்து- சிறுகதை
அன்புள்ள ஜெ
வணக்கம். கல்குருத்து கதையை வாசித்தேன். அம்மிக்கல்லில் படியும் நீலச்சாயத்துக்கேற்ப கல்லைச் செதுக்கிச் சமன்படுத்துவதைப் போல வாழ்வையும் முன்னகர்த்துகின்ற விசையும் விருப்பும் ஓய்ந்த வேளையிலும் நினைவில் இருந்து தித்திக்கும் இனிப்பு எழுகிறது. அந்த இனிப்பன்றி நிகழ்வாழ்வின் எதனோடும் நேரடித் தொடர்பற்றவர்களாக மூத்தோர்கள் இருவரும் இருக்கிறார்கள். கல்லில் கனிவு கூடும் பருவத்தை பிள்ளைகளின் மீதான துயராலும் ஆற்றாமையாலும் மூழ்கடித்துத் தேய்ந்தொழியும் மூத்தோர்களும் நினைவிலெழுந்தனர். கல்லில் குருத்தின் கனிவு கூடும் தருணம் வெளிப்படும் கதை.
அரவின் குமார்
மலேசியா
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கத்துடன் தமிழரசி எழுதுவது
கடையில போய் ஒரு பொருளை வாங்கி வர்றதுக்கும், நம்ம வீட்ல நமக்கு சொந்தமாயிருக்கறதுல இருந்து புதுசா ஒன்னை உருவாக்கி எடுக்கறதுக்கும் இடையில இருக்கற வித்தியாசம் இதை படிச்ச பிறகு பொட்டுல அறைஞ்ச மாதிரி புரிஞ்சிது.
கல்லாசாரி தாணுலிங்கம் “அம்மிணியே, அது சந்தைக்குப் போயி பசுவையும் குட்டியையும் வாங்கிட்டு வாறது மாதிரியாக்கும். இது நம்ம வீட்டிலே பிறந்த கன்னுக்குட்டி கொம்பும் குலையுமா பசுவா மாறி வயறு தெறண்டு ஈனுகது மாதிரியில்லா?”
ஓடித் தேஞ்சு மூத்து குருத்து ஆன மாதிரி தானே பாட்டனும் பாட்டியும் இருக்காங்க.
மூத்ததும் குருத்து ஆகும்னு ஒரு சொல்லு உண்டு” என்றார் தாணுலிங்கம். “கல்லு அப்டியே எளங்குருத்து மாதிரி ஆயிடும்.
அழகம்மையின் புன்னகை அவ புரிஞ்சிகிட்டான்னு காட்டுது. அவ இனி பாட்டனையும் பாட்டியையும் பற்றி சடைச்சிக்கிட மாட்டா.
குழவிக்கும் இந்த மாதிரி செதுக்கணும்” என்று தாணுலிங்கம் சொன்னார். “ஆனா அதுக்கு பிறவும் அரைச்சா கல்லுகடிக்கும். ஒரு நாலைஞ்சுநாளு உமி வைச்சு அரைக்கணும்… நல்லா பதம் வந்து பாலீஷாகி கிட்டின பிறவுதான் கறிக்கு அரைக்கணும் பாத்துக்கிடுங்க.”கண்ணப்பன் அரைச்சா கல்லுகடிக்கற மாதிரிதான் இருக்கான். அழகம்மை சடைச்சிக்கிடாம பாட்டனையும் பாட்டியையும் பார்த்துக்கிடறது உமி வைச்சி அரைச்சி பாலிஷ் போடற மாதிரி கண்ணப்பனுக்கு.
ஆமா கேட்டேன்… எனக்கு இல்ல. இவளுக்கு… குடு”
கிழவி ஆவலாகக் கருப்பட்டியை கைநீட்டி வாங்கிக்கொண்டது.
“நாலஞ்சு தடவை கருப்பட்டி கருப்பட்டின்னு பேச்சு வாக்கிலே சொன்னா.., செரி, சவத்துக்கு இனிப்பு ஞாபகம் வந்துபோட்டுது போலன்னு நினைச்சு கொண்டுவரச் சொன்னேன்” என்றார் கிழவர்.( வாவ் கவிதை கவிதை கவிதை)
பாட்டனும் பாட்டியும் ஒருத்தர ஒருத்தர் பார்க்காம உட்கார்ந்திருந்தாலும் ஒன்னுக்கொன்னு தொடர்பேயில்லாம பேசினாலும் அவங்க இரண்டு பேருக்கும் இடையில கண்ணுக்குத் தெரியாம நூல் கட்டின மாதிரி ஒரு தொடர்பு இருக்கு. பாட்டனும் பாட்டியும் உண்மையாவே வாழ்ந்திருக்காங்க ( கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு)
இருபது வருஷத்துக்கு முன்னால அம்மி பொளியறதுன்னு ரோட்ல கூவிக்கிட்டே போவாங்க.மிக்ஸி ,கிரைண்டர் பரவலா ஆனபிறகு இவங்களை காணோம்.
நன்றி.
தமிழரசி.