அருஞ்சொல் – கடிதம்

அருஞ்சொல் – இணையதளம்

வணக்கம்!

சமஸ்ஸின் அருஞ்சொல் தொடக்கம் சிறக்க வாழ்த்துக்கள்.

அவரின் அருஞ்சொல்லில் மற்ற பகுதிகளை தவிர்த்து கலை இலக்கிய பகுதிகளுக்காக வரவிருக்கும் வாசகர்களை தக்கவைத்துக்கொள்வதற்கு அவருக்கு பெரும் சவால் ஒன்று காத்திருக்கிறது.

ஒரு இலக்கிய வாசகனாகநான் காலச்சுவடின் சந்தாதாரராக இருந்திருக்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறேன். எல்லா பகுதிகளுக்கும் காலச்சுவடு வந்து சேர்ந்திருக்கிறது. இதழின் கட்டமைப்பு, தாள்தரம், இவைகளில் காலச்சுவடு சிறப்பாகவே இருந்தது. பிறகு உயிர்மையும் வாங்கினேன். ஆனால் மெல்ல மெல்ல என்னையறியாமலேயே நான் இந்த இதழ்களிலிருந்து விலகிகொண்டிருந்தேன். ஒவ்வொரு மாதமும் காலச்சுவடுக்காக காத்து கொண்டிருப்பேன். வந்தவுடன் அன்றிரவே வாசித்துவிடுவது, நான் பணியிலிருந்து வீடு திரும்ப தினமும் இரவு பதினொன்றாக ஆகும். அந்த இரவிலும் எனக்கு எதாவது தபால் வந்திருக்கிறதா என்று காண்பேன். அப்படிதான் பிள்ளைகெடுத்தான் விளையை நள்ளிரவில் வாசித்தேன்.

காலச்சுவடு, உயிர்மை இரண்டிலிருந்தும் நான் என்னையறியாமலே விலகியதற்கு காரணம் அதன் போதாமையும், உள்ளடக்கமும். அதன் அப்பட்டமான அரசியலும் காரணம். ஆனால் இது எல்லாவற்றுக்கும் மேல் ஒன்று உள்ளது அது நீங்கள். உங்கள் இணையதளம். உங்கள் இணையதளம் என்னை ஆட்கொண்ட வேகமும் அதனில் நான் மூழ்கிவிட்டதும் ஒரு முக்கியமான காரணம். உங்கள் தளத்தில் இல்லாத என ஒன்றை நான் எந்த இதழிலாவது கண்டடைய முடியுமா? அதி தீவிர இலக்கிய தேடல் கொண்ட ஒரு வாசகனின் பாதை முற்றுப்பெறும் இடம் உங்கள் தளமாகத்தான் இருக்கிறது.

அருஞ்சொல் என்றில்லை ஏற்கனவே உள்ள வல்லினம், திண்ணை என எந்த இலக்கிய இதழ்களுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் இருக்கும் ஒரே பெரிய சவால் உங்கள் இணையதளம் தான். உங்கள் இணையதளத்தில் இல்லாத ஒன்றை அதற்கிணையான தீவிரத்தை எந்த இதழ் அடையுமோ அதுவே நிலைக்கும்.

அதற்கு உங்கள் தளத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஆராய்ந்து அறிந்திருக்க வேண்டும். அது இயலாத காரியம் அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். தமிழின், இந்தியாவின் பிறமொழிகளின், உலக இலக்கியங்களின் இலக்கிய கர்த்தாக்களின் சிறந்த படைப்புகளின் திறன் ஆய்வு கட்டுரைகளை உங்கள் தளத்திலன்றி வேறு எந்த இலக்கிய இதழ்களிலும் பின்னோக்கி காணகிடைக்காது. நேற்று உங்கள் தளத்தில் லஷ்மி மணிவண்ணனின் கட்டுரையை பின்தொடர்ந்து சென்று, மழைதானா அது? என்ற வரியில் உடையும் முன் காருர் நீலகண்டபிள்ளையின் ”கொச்சுக்ரஹஸ்த”யில் நீங்கள் கண்டைந்த அந்த தெய்வதரிசனத்தை எனக்கும் கடத்தி இரவு இரண்டு மணிவரை உறங்காமல் என் நாலு வயது மகளை இறுக அணைத்தபடியே புரண்டுகொண்டிருந்தேன் .

(நேற்று வார இறுதிநாள் விடுமுறைக்கு முந்தின நாள் சம்பளமும் வந்திருந்தது. குடும்பத்தோடு “மால்” சென்று திரும்பி உறங்கும் முன்னர் உங்கள் தளத்தை துழாவி காரூர் நீலகண்ட பிள்ளையின் அந்த சின்ன குலமகள்”என்னுள் ஏற்கனவே இருக்கும் அந்த பெருந்துயரத்தை கீறிவிட்டாள். பிறகு …இளம்பருவத்து தோழி, Life is beautiful ,ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ், என்று மனம் சிதறிக்கொண்டிருந்தது).

அன்புடன்

ரகுபதி

கத்தார் .

***

அன்புள்ள ரகுபதி,

சமஸின் அருஞ்சொல் சிறப்பாகவே வெளிவந்துகொண்டிருக்கிறது. அது இன்றைய தமிழ்ச்சூழலில் உள்ள பல சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று, இன்றைய வாசகர்கள் ஓரிரு பத்திகளுக்கு மேல் வாசிப்பதில்லை. பொறுமையில்லை என்பதல்ல. மொழிப்பழக்கம் குறைவு. ஆங்கில வழியில் கற்றவர்கள். ஆகவே தமிழ் அவர்களுக்கு இயல்பானதாக இல்லை. எழுத்துருக்களை கூட்டிக்கூட்டி வாசிக்க வேண்டியிருக்கிறது. சரி, ஆங்கிலமாவது தெரியுமா என்றால் நடைமுறைத் தேவைக்குரிய ஓர் ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருக்கும். ஆகவே சுருக்கமான வரிகளாலான முகநூல் வம்புகளிலேயே பெரும்பாலானவர்களுக்கு நாட்டம் உள்ளது.

சமஸ் உத்தேசிப்பது அனைவரும் எழுதும் நடுநிலை இதழ். அத்தகைய இதழை எல்லா ‘கடுநிலை’ அரசியல்தரப்புகளும் எதிர்ப்பார்கள். தங்கள் எதிர்த்தரப்பு என முத்திரை குத்தி அவதூறு செய்து வசைபாடுவார்கள். உண்மையான நடுநிலையாளர்களே அவற்றுக்கு வாசகர்களாக வருவார்கள். ஆனால் இன்று அத்தகையவர்கள் அருகி வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் இந்துத்துவ வெறியர்கள் அல்லது இந்துமதத்தையே வெறுக்கும் எதிர்க்காழ்ப்பாளர்கள்.

இச்சவால்களை அருஞ்சொல் வெல்லவேண்டும். அது ஓர் இலக்கிய இதழ் அல்ல. அது செய்திஇதழ்தான்.செய்திகளை வெளியிடுபவை நாளிதழ்கள், இது செய்திகளை ஆராயும் இதழ். இன்று ஓர் இலக்கிய இதழை தரமாக நடத்தவேண்டும் என்றால் சொந்தக்காசில், வாசகனுக்கு ஒரு பைசா செலவில்லாமல் நடத்தவேண்டும்– என் தளம் போல, அல்லது வேறு இணைய இதழ்களைப்போல. ஏனென்றால் இங்கே இலக்கியவாசகர் குறைவு. அவர்கள் பணம் செலவு செய்யவும் மாட்டார்கள். அவர்களை நம்பி அச்சிதழ் நடத்த முடியாது. அருஞ்சொல் இதழில் உள்ள இலக்கியத்தை ஓரு பொது இதழின் இலக்கியப் பக்கம் என எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஒரு பிரதிநிதித்துவப் பக்கம். இலக்கியத்தின் ஒரு துளி ‘சாம்பிள்’.

என்னுடைய இணைய தளத்திற்கும் பிறவற்றுக்கும் பெரிய வேறுபாடுண்டு. இது ஓர் எழுத்தாளனுடைய தளம். எழுத்தாளனின் தீவிரம் இதில் உள்ளது. நீங்கள் அவனுடன் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே ஒரு தொடர்ச்சி உங்களுக்கு அமைகிறது. பிற தளங்கள் பொதுச்சூழலை முன்வைக்கின்றன. அவற்றில் பலவகைக் குரல்கள் உள்ளன. அங்கே அந்தத் தொடர்ச்சி இருக்காது. ஆனால் அவை முக்கியமானவை. அவை இங்கே என்ன நிகழ்கின்றது என்று காட்டுபவை.

ஜெ

***

அருஞ்சொல்,தேவையும் எதிர்பார்ப்பும்

மின்பரப்பியமும் மாற்றும்

முந்தைய கட்டுரைஎழுத்துரு பற்றி, மீண்டும்…
அடுத்த கட்டுரையார் தருவார் எனக்கான ஓலைச் சிலுவையை ?