அன்புள்ள ஜெ
வணக்கம் !
இரு கேள்விகள்.
நான் இமயத்தின் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன். கோவேறு கழுதைகளும் ஆறுமுகமும். அவரை தொடர்ந்து வாசிக்காமல் போனதற்கு காரணம் 2 ஜி ஊழல் வெளிவந்தபோது அப்படி ஒரு ஊழல் நடக்கவே இல்லை, நடக்க வாய்ப்பே இல்லை என துண்டு பிரசுரங்களை சென்னை தியாகராய நகரில் அவர் வினியோகித்துகொண்டிருந்தது. ஒரு எழுத்தாளன் இப்படி சரிவதை என் மனம் ஏற்றுகொள்ளவில்லை.மிகுந்த மனகசப்புக்கும் ஒருவிதமான கைவிடப்பட்ட நிலமைக்கும் ஆளேன்.
அப்போது அவருடய சிறு துண்டு பேட்டியும் கேட்டேன். போராளிகளுக்கே உண்டான ஆவேச தொணியில் பேசினார்.அது மேலும் அவரிடமிருந்தும் அவர் படைப்புகளிடமிருந்தும் என்னை விலக்கியது.ஒரு எழுத்தாளன் இப்படி ஆவேசமாக கத்தி நெஞ்சுபுடைக்க பேசுவதை ஒரு வாசக மனம் ஏற்குமா ?அப்பொழுது அந்த ஊழலைப்பற்றி ( கனிமொழி)நீங்களும் எழுதியிருந்தீர்கள் இரண்டையும் காணும் வாசகன் என்ன முடிவெடுப்பான்?யாரை பின்தொடர்வான் ?
என்னுடய கேள்வி இதுதான்,என்னதான் பாமரனுக்கு கலை இலக்கியம் பரிச்சியம் இல்லையென்றாலும் எழுத்தாளன் என்பவனை, ஒரு ஆசான்.அறம் கொண்டவன் என்று தானே புத்தியில் ஏற்றிவைத்திருப்பான்.அத்தகைய பாமரரர்கள் இந்த மாதிரி கரை வேட்டி கட்டிய எழுத்தாளர்களை எவ்வாறு பார்ப்பார்கள் ? என்னவாக நினைப்பார்கள்?கண்மனிகுணசேகரன் இதை மிகமிக வெளிப்படையாகவே செய்கிறார்?
நீங்கள் திருமாவளவோனோடு மேடையை பகிர்ந்துகொண்டபோது அதற்கு ஒரு விளக்கத்தை அளித்திருந்திர்கள். அந்த மாதிரியில்லை இவர்கள். இவர்கள் வெளிப்படையாக கட்சிகாரர்களாகவும் அதே சமயத்தில் எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள்.உண்டாட்டுவில் அவருக்கு கரைவேட்டி பரிசளித்ததை திமுக தொண்டர்கள் வரவேற்று மகிழலாம்.ஆனால் இலக்கிய வாசகன் ?
இலக்கியத்தில் ஆழம் கண்ட எழுத்தாளர்களும் கவிகளும் இப்படி கட்சியின் உறுப்பினராக கட்சிக்கார்களா இருப்பது பெரிய சோர்வை வாசகனுக்கு உண்டாக்காதா? அந்த எழுத்தாளர்கள் வாசகனை இழப்பது வாசகர்களின் குற்றமா ?அல்லது எழுத்தாளர்களின் குற்றமா ?
ஒரு நல்ல வாசகன் நிச்சயம் எந்த கட்சியும் சாராதவனாக எந்த கட்சிமீதும் கடும் சினம் கொள்ளாதவனாக இருக்கத்தானா வாய்ப்புகள் உண்டு.எப்படி இலக்கியம் வேறு கட்சி வேறு என ஒரு இலக்கியவாதியால் இயங்க முடிகிறது ?நான் இலக்கியவாதி என்றால் தூயவன் என்ற பாங்கில் கூற வில்லை இது எப்படி சாத்தியமாகிறது ?
ஒருபுறம் தங்களை அறிவு ஜீவிகளாக புனைத்துகொள்பவர்கள் இலக்கிய கருத்தரங்கில் எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் பற்றி பேசுவது, மறுபுறம் கட்சி நடத்தும் தொலைக்காட்சியில் கட்சியின் தலைவரே மகத்தான எழுத்தாளர் படைப்பாளி விடிவெள்ளி என பேசுவது ஒருபக்கம் தங்களின் அறம் சிறுகதைகளை விதந்தோதுவதும் மறுபக்கம் அதற்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாமல் தொலைக்காட்சிகளில் பேசுவது .
ரகுபதி கத்தார்
அன்புள்ள ரகுபதி
எழுத்து எழுத்தாளன் இரண்டு புள்ளிகளையும் பிரித்துப்பார்க்கவேண்டும். அதெப்படி என்று கேட்கலாம். மிக எளிமையான பதில் இதுதான். கனவு ,கனவு காண்பவன் ஆகிய இரண்டு புள்ளிகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்றால் உங்களால் அவற்றை புரிந்துகொள்ள முடியாது.
இலக்கியம் ஒரு படைப்பாளியின் ஒருவகை விழிப்புநிலை கனவு. மொழியினூடாக அவன் உருவாக்கிக்கொள்ளும் கனவு அது. மொழிக்கு ஒரு தன்னிச்சையான பெருக்கு உண்டு. மொழிக்குள் உள்ள கதை போன்ற வடிவங்களுக்கும் தன்னியல்பான ஒரு கட்டமைப்பு உண்டு. தன்னை மொழிக்கு ஒப்புக்கொடுத்து, ஒரு கதைவடிவுக்குள் எழுத்தாளன் அமையும்போது அவனுடைய நனவிலியில் சேர்ந்திருக்கும் அகஅனுபவங்கள் திரண்டு இலக்கியப் படைப்பாக ஆகின்றன.
அது கிட்டத்தட்ட கனவு நிகழ்வதற்குச் சமானமான ஒரு செயல்பாடுதான். கனவு அக்கனவைக் காண்பவனின் வெளிப்பாடுதான். ஆனால் துயிலில் அவனுடைய விழிப்புநிலை மறையும்போது நனவிலியில் இருந்து அக அனுபவங்கள் ஒரு வடிவ ஒழுங்கு கொண்டு கனவாக வெளிப்படுகின்றன.
ஏன் இலக்கியப் படைப்புக்கள் முக்கியம் என்றால் அவை எழுதுபவனின் ‘அபிப்பிராயங்கள்’ அல்ல. எழுதுபவனின் ’எண்ணங்களை’ அவை முன்வைப்பதில்லை. அவனுடைய ‘நிலைபாடுக’ளின் தொகுப்பு அல்ல அவை. அவை அவனுடைய ஆழுள்ளத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனின் ஆழுள்ளம் அச்சமூகத்தின் கூட்டு ஆழுள்ளத்தின் வெளிப்பாடே. ஆகவே ஒரு சமூகத்தின் ஆழுள்ளம்தான் ஒரு படைப்பாளி வழியாக வெளிப்பாடு கொள்கிறது.
ஆகவே அச்சமூகம் தன்னைத்தானே அறிய இலக்கியப்படைப்புக்கள் உதவுகின்றன. தன்னையே மதிப்பிட அவை வழியமைக்கின்றன. ஆகவேதான் உலகம் முழுக்க இலக்கியப்படைப்புக்கள் அவை உருவான சமூகம் மீதான மனசாட்சியின் அறைகூவலாக உள்ளன. மறைந்துள்ள வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவருவனவாக உள்ளன. அச்சமூகத்தின் நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் மாற்றியமைப்பவையாக உள்ளன. அழகியல் கட்டுமானங்களை மாற்றியமைப்பவையாக நிகழ்கின்றன.
இக்காரணத்தால்தான் ஓர் எழுத்து ஜோடிக்கப்பட்டது என்றால் அதை வாசகர் நிராகரிக்கின்றனர். எழுத்தாளனின் தரப்பை பேசிக்கொண்டிருக்கிறது என்றால் அது எவ்வளவு நேர்மையானது என்றாலும் அதை கலைப்படைப்பு என ஏற்றுக்கொள்வதில்லை. எழுத்தாளனின் தரப்பை எழுத்துக்களில் விமர்சகர் தேடுவதில்லை. அந்த படைப்பு ஒரு முழுமையான கட்டமைப்பு, கனவு போல. ஒரு சமூகம் கூட்டாகக் கண்ட கனவு. அக்கனவை வைத்து அச்சமூகத்தையும் அச்சமூகத்தை வைத்து அக்கனவையும் புரிந்துகொள்ள முயல்கின்றனர்
ஓர் எழுத்து இலக்கியமாக அமைந்துள்ளதா என எப்படி மதிப்பிடுகிறோம்? அது ஆசிரியனின் நனவிலியின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அது நமது நனவிலியின் வெளிப்பாடும்கூட. நம் ஆழுள்ளத்தால் நாம் அந்தப்படைப்பை அறியமுடியும். நம் கனவை அப்படைப்பு தொட்டு எழுப்பும். வாசிப்பு என்பது நமது ஆழுள்ளத்தால் புனைவில் வெளிப்படும் ஆழுள்ளத்தை சந்திப்பதுதான்.
ஆகவேதான் புனைவில் வெளிப்படும் உண்மைகளை அது நிரூபிக்க முற்படுவதில்லை. அது வெறுமே உண்மைகளைச் சித்தரித்துக் காட்டுகிறது. நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் நாமே அதை ஏற்கனவே அறிந்திருப்போம். ஒரு படைப்பை வாசிக்கையில் உங்களையே நீங்கள் அதில் பார்த்தால், உங்கள் சொற்களாகவே அந்தப்படைப்பின் சொற்கள் மாறிவிட்டால், நீங்கள் மங்கலாக, தெளிவில்லாததாக அறிந்தவற்றையே அந்தப்படைப்பு கூர்மையாக உக்கிரமாகச் சொல்லியிருந்தால் அது கலைப்படைப்பு.
கலைப்படைப்ப் உங்களுக்கு எதையும் கற்பிப்பதில்லை. அது உங்களுள் ஒரு கனவென நுழைந்து நிகழ்கிறது. உங்களை ஒரு கனவுக்குள் வாழச்செய்கிறது. உண்மையான வாழ்வுக்குச் சமானமான வாழ்க்கை அது. அந்த வாழ்க்கையில் நீங்கள் அறிவன எல்லாமே நீங்களே உங்களில் இருந்து அடைவனதான். ஆசிரியன் உங்களுக்கு அளிப்பன அல்ல.
அந்தக் கனவை தன்னுள் இருந்து எடுக்கும் ஆசிரியன் அக்கனவை எழுதியபின் அதே உச்சநிலையில் இருப்பதில்லை. அவன் அன்றாடத்துக்குத் திரும்புவான். சாமானியனாக ஆவான். பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுதாதபோது சாமானியர்களாகவே இருப்பார்கள். பெரும் அறிவுஜீவிகளாகவோ தத்துவவாதிகளாகவோ இருக்கமாட்டார்கள். களச்செயல்பாட்டாளர்களாகவோ சேவை செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.
சொல்லப்போனால் அவர்கள் சர்வசாதாரணமாக இருப்பார்கள். அப்போதுதான் சாதாரண மனிதர்களில் ஒருவராக அவர்களால் திகழமுடியும். பெருந்திரளில் கரைந்து இருக்க முடியும். அவ்வாறு இருந்தால்தான் பெருந்திரளாக உள்ள சமூகத்தின் ஆழுள்ளம் அவர்கள் வழியாக வெளிப்பட முடியும்.
ஆகவே சாதாரணமாக இங்கிருக்கும் பல குறைபாடுகளும் எழுத்தாளர்களுக்கு இருக்கும். பிறரைப்போலவே அவர்களுக்கும் அரசியல் சார்புகள் இருக்கும். குடும்பப்பிரச்சினைகள் இருக்கும். தனிப்பட்ட பலவீனங்களும் தீய பழக்கங்களும் இருக்கும். தன் சொந்தச்சிக்கல்களை அவர்களால் தீர்க்கமுடியால் இருக்கும்.
கூடுதலாகவும் அவர்களுக்குச் சிக்கல் இருக்கும். அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல சாதாரணமாக வாழ்பவர்கள். சாதாரண மனிதனின் உள்ளமும் அறிவும் கொண்டவர்கள். ஆனால் இலக்கியம் வாசிப்பவர்கள், ஓயாது இலக்கியம் படைக்க முற்படுபவர்கள். ஆகவே தொழில், வணிகம் போன்றவற்றில் அவர்களின் கவனம் நிலைகொள்ளாமல் போகலாம். அந்நிலையில் சாதாரண மனிதனை விட ஒரு படி கீழே அவர்கள் இருக்கலாம். திறமையற்ற, கவனமற்ற, அப்பாவியான மனிதர்களாகவும் அவர்கள் தென்படலாம்.
ஓர் எழுத்தாளனை எழுதாதபோது மிகச்சரியான சாமானியன் என்று புரிந்துகொள்ளுங்கள். அவன் எழுத்தின்பொருட்டு அவனை மதியுங்கள். அவன் எழுத்தை ஒரு கனவு என எடுத்துக்கொண்டு அதில் உங்கள் கனவை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்று பாருங்கள். முடியும் எனில் அதுவே உங்களுக்குரியது. அந்த எழுத்தாளன் எப்படி இருந்தாலும் அது உங்கள் பிரச்சினை அல்ல. அவ்வெழுத்தாளன் உங்களுக்கு பிடிக்காதவனாக இருப்பதனால் படைப்பை நிராகரித்தால் அது உங்களுக்கே இழப்பு
இதை ஏன் வலியுறுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது? ஏனென்றால் இலக்கியம் எப்போதுமே சங்கடமான உண்மைகளைச் சொல்கிறது. அரசு, அரசியல்வாதிகள் உருவாக்கியிருக்கும் ஒருவகையான ஒட்டுமொத்தச் சித்திரத்தை அது ஊடுருவி உடைக்கிறது. கனவுகள் நாம் நம்மைப்பற்றி நம்பியிருப்பவற்றை உடைக்கின்றன அல்லவா அதைப்போல. ஆகவே எப்போதுமே அரசும் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளை எதிர்ப்பார்கள். அவதூறுசெய்வார்கள். அவர்களுக்குப் புரிந்த எளிய முத்திரைகளை குத்துவார்கள். இழிவு செய்வார்கள். அவமதிப்பார்கள். ஆதிக்க அரசு என்றால் சிறையிலடைப்பார்கள்.
நீங்கள் முகநூலிலேயே பார்க்கலாம். முகநூலில் பெரும்பாலானவர்கள் சாதி மத அடிப்படையில் ஏதேனும் அரசியலை ஏற்றுக்கொண்டு கூச்சலிடும் அரசியலாளர்கள்தான். எங்கேனும் எவரேனும் ஏதேனும் எழுத்தாளரைக் கொண்டாடிப் பார்த்திருக்கிறீர்களா? ஏதேனும் ஒரு காரணத்தைப் பிடித்துக்கொண்டு எழுத்தாளர்களை வசைபாடிக்கொண்டே இருப்பார்கள். பத்துநாளுக்கு ஒருமுறை ஓர் எழுத்தாளர் அவர்களின் வசைகளுக்கு இரையாவார். இதுவே அரசியலாதிக்கத்தின் இயங்குமுறை. இவர்கள் எழுத்தாளர்கள் மீதான காழ்ப்பை மக்களிடம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஜெயமோகனை இந்துத்துவ எழுத்தாளர் என்பார்கள். இமையத்தை தலித் எழுத்தாளர் என்பார்கள். ஓர் இலக்கியவாசகன் இவர்களைக் கடந்தே இலக்கியவாதியிடம் வரமுடியும். இலக்கியத்தை வாசிக்கமுடியும். அது ஜெயமோகனை அணுகுவதாக இருந்தாலும் இமையத்தை வாசிப்பதாக இருந்தாலும்.
இந்தக் காழ்ப்பை உருவாக்குவதற்கு இந்த அரசியலாளர்கள் செய்யும் வழிமுறை இலக்கியவாதியின் ஆளுமையை கீழ்மைப்படுத்துவது. அவனை நேர்மையற்றவன் என்பார்கள். முன்னுக்குப்பின் பேசுபவன் என்பார்கள். [எழுத்தாளன் மாற்றமில்லாமல் ஒன்றையே சொல்பவன் அல்ல. அந்தந்த படைப்பில் தன்னிச்சையாக வெளிப்படுபவன் அவன்] அவனுடைய தனிப்பட்ட பேச்சுக்களை எடுத்துக்கொண்டு அவதூறும் திரிபும் செய்வார்கள். அவனுடைய சாதாரணத்தன்மையையே அவனை இழிவுபடுத்தும் காரணமாக காட்டுவார்கள். நாம் அந்த வலைக்குள் விழுந்துவிடலாகாது. எந்நிலையிலும் எதன்பொருட்டும் எந்த எழுத்தாளர் மீதும் காழ்ப்புகளை கசப்புகளை விலக்கத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாது.
இமையம், கண்மணி குணசேகரன் பற்றிச் சொன்னீர்கள். சி.சு.செல்லப்பா பிராமணர் சங்க ஊர்வலத்தில் முன்னணியில் நடனமாடியபடிச் சென்றவர். அதனால் வாடிவாசல் மோசமான நாவல் ஆகிவிடுமா? அவர் தமிழ்ச்சிற்றிதழ் முன்னோடி அல்ல என்றாகிவிடுவாரா? அப்படி ஓர் அறிவுஜீவி சென்றால் அவனை நிராகரிப்பேன். புனைவெழுத்தாளன் சென்றால் அவனுடைய ’தரைதொட்ட’ நிலை என்று மட்டுமே புரிந்துகொள்வேன்.
யோசித்துப் பாருங்கள். இமையம் தன்னை திமுக ஆதரவாளர் என்று சொல்கிறார். கட்சியில் செயல்படுகிறார். ஆனால் தன் எழுத்து முழுக்கமுழுக்க வேறு என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். தான் எழுத்தாளன் மட்டுமே என்றும் அது எந்த அரசியல்பதவியை விடவும் மேல் என உணர்வதாகவும் எல்லா அரசியல்மேடையிலும் நிமிர்ந்து நின்று சொல்கிறார். தன் எழுத்து தனக்கு அப்பாற்பட்ட ஒன்று, எழுதும்போது தான் கட்சிக்காரனோ அரசியல்வாதியோ அல்ல என்றும், அதுவே தான் என்றும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அந்தத் தெளிவை தன் எழுத்துவழியாகவே அடைந்தவன் கலைஞன். அவர் தன்னை தலித் என்பதில்லை. தன்னை திமுக என்பதில்லை. எழுத்தாளன் என்று மட்டுமே சொல்கிறார். அதையே நாம் அவருக்கு அளிக்கும் அடையாளமெனக் கொள்வதே இலக்கிய அறம்.
கம்பன் எப்படி இருந்தான் என உங்களுக்கு தெரியுமா? கம்பராமாயணம்தானே இன்றும் நிலைகொள்கிறது? கம்பன் தாசித்தெருவில் அலைந்தான் என்று கதை உண்டு. ஆகவே கம்பராமாயணத்தை வாசிக்கமாட்டேன் என்று சொன்னால் அது எவருக்கு இழப்பு? எழுத்தாளன் ஒரு அம்மன்கொண்டாடி போல. அவனும் சாமானியன். உள்ளூர் டீக்கடையில் அமர்ந்து உள்ளூர் அரசியல் பேசுபவன். ஆனால் திருவிழாவில் சன்னதம் கொண்டால் அவனிடம் வெளிப்படுவது தெய்வம். அந்த தெய்வம்தான் உங்களிடம் பேசுகிறது. அது பூசாரியின் சொல் அல்ல.
ஜெ