குடவாயில் பாலசுப்ரமணியம்
இனிய ஜெயம்,
தமிழ் நிலத்தில் காஞ்சிபுரம் துவங்கி வந்தவாசி, திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம் எனும் இச்சிறிய எல்லைக்குள் தொட்டணைத் தூறும் மணற்கேணி போல எத்தனை தொல்லியல் தடங்கள். அவற்றைப் பற்றிக் கிளர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது நிறைவொழியாத குறைபடாத பண்டைய வரலாறு. கொரானா முடக்கம் தளரத் தளர, வார இறுதிகளில் இந்த எல்லைக்குள் ஏதேனும் ஒரு சமண, பல்லவ, சோழ, நாயக்க வரலாற்றுக் கலைத் தடத்தை சென்று பார்ப்பது என்று வகுத்துக் கொண்டு பயணம் செய்கிறேன்.
இந்த முறை பயணத்தில் சென்று பார்க்க வேண்டிய தடங்கள் சார்ந்த கற்பனைகளை பத்திரிக்கையாளர் (சென்னையின் நீர்வழித்த தடங்கள், சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று தேடல் போன்ற நூல்களை எழுதிய) கோ. செங்குட்டுவன் அவர்கள் எழுதிய – சங்கராபரணி முதல் தென் பெண்ணை வரை- எனும் வரலாற்றுத் தடப் பயணக் கட்டுரை நூல் எனக்கு அளித்திருந்தது. கிளம்பும் வாரம் நாங்களும் வருவோம் இல்லன்னா கதறி கதறி அழுவோம் என்று தாமரைக் கண்ணன் முறையிட்டார். அந்த வாரம் எல்லா நண்பர்களும் வரும் பண்டிகை தினத்துக்கான குடும்ப முஸ்தீபுகளுள் உழல, நான் பயணத்தை மாற்றி காலச்சுவடு வெளியிட்ட ஆய்வாளர் பாலுச்சாமி எழுதிய அர்ஜுனன் தபசு ஆய்வு நூலை கையில் காவிக் கொண்டு மாமல்லை சென்றங்கி அந்த பேனலை மட்டும் நெடுநேரம் பார்த்து விட்டு வந்தேன்.
பாலுச்சாமி அவர்கள் அந்நூலில் அந்த சிற்ப வரிசையின் ஒவ்வொரு சிலையையும் அணுகி விவரித்து, பல்லவப் பண்பாட்டுப் பின்புலம், இலக்கியப் பின்புலம் இவற்றின் பின்புலத்தில் அதை அர்ஜுனன் தபசு என்று விவரித்திருப்பார். ஆய்வாளருக்கே உரிய மறுப்பதற்கான எதிர் முரண் நிலைக்கு மதிப்பளிக்கும் சமன் கொண்ட ஆய்வு நூல் அது. அந்த சிற்ப வரிசையை பாலுச்சாமி அவர்கள் பயன்படுத்திய அதே ஆய்வு முறைமைகள் வழியே அது பகீரதன் தவம் என்று காஞ்சி பேராசிரியர் ஷங்கர நாராயணன் அவர்கள் இதே சமநிலை கொண்ட ஆய்வை எழுதி இருக்கிறார். அன்று எனது நாள் அந்த சிலேடை சிற்ப வரிசை முன் கழிய, இந்த பயணத்துக்காக இந்த வாரம் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டனர்.
காலை ஏழு மணிக்கு மணி காரோட்ட, இடதே திருமா இணைய, பின்னால் நானும் தாமரைகண்ணனும் விஷ்ணுவும் ஆரோகணிக்க புதுவையில் இருந்து புறப்பட்டோம். மயிலம் தொட்டு தாதாபுரம் வரை நான் போட்டிருந்த வரைபடத்தை அவரது நண்பர் திருவாமாத்தூர் சரவணகுமார் அவர்கள் உதவியுடன் வந்தவாசி வரை நீட்டித்திருந்தார் தாமரைகண்ணன். தமிழ் நிலத்தின் முதல் விநாயகர் சிலையில் பயணத்தைத் துவங்கி தமிழ் நிலத்தின் முதல் நடராஜர் படிமையில் முடிப்பது அவரது திட்டம். 12 மணிநேரத்தில் இதற்கான சாத்தியம் குறைவு. ஆகவே இந்த வரைபடம் வழியாகவே சென்று இரவு ஏழு மணிக்கு எந்த புள்ளியில் நிற்கிறோமோ அங்கிருந்து மீண்டும் புதுவை திரும்பிவிடலாம் எனும் முடிவுடன் ஆரஞ்சு அலார்ட் மழைக்கான துவக்கத் தூவான மழையின் கீழ் எங்கள் முதல் இலக்கான மயிலம் அடுத்த ஆலகிராமம் கிராமத்தை அடைந்தோம்.
ஆலகிராமம்.
சிறிய கிராமம். ஊர் நுழைந்தவுடனேயே இடதுபுறம் நீண்ட வருட பணியாக புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் எம தண்டீஸ்வரர் ஆலயம் கண்ணில் பட்டது. காரை ஓரம் கட்டிவிட்டு நசநசக்கும் தூரலில் கோவிலுக்குள் நுழைந்தோம். ராஜகோபுரம் தாண்ட, முதலில் கண்ணில் பட்டது சூலக் கல். கோவில் கட்டுவதற்காக தேவ தானம் செய்யப்பட்ட நிலத்தில் அது சமணம் எனில் முக்குடையும், வைணவம் எனில் திருச்சங்கும், சைவம் எனில் சூலமும் என அவ் வடிவில் ஒரு குத்துக்கல் செய்யப்பட்டு அந்நிலம் நடுவே முதலில் பதிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பல்லவர் காலத்தில் துவங்கி சோழர் காலம் வரை இந்த சூலக் கற்களில் நான்முக சூலக் கல் வரை பரிணாம வளர்ச்சி உண்டு. வைணவ சங்குக் கல் சில இடங்களில் கிடைத்திருக்கிறது. ஆனால் முக்குடை கல் காண அபூர்வமே.
ரிஷப மண்டபம் கடக்க, (பெரும்பாலும் நந்தி என்றும் நந்தி மண்டபம் என்றும் அழைக்கப்பெறும் இவர் நந்தி அல்ல. ரிஷபம். நந்தி என்பவர் அதிகார நந்தி. இந்த தனித்துவங்கள் காலப்போக்கில் கைகழுவ பட்டுக்கொண்டே வருகிறது. இவர் ரிஷபம். இவர் இருக்கும் மண்டபம் ரிஷபக் கொட்டில் : விஷய தான உபயம் குடவாயில் பாலசுப்ரமணியம்) எதிரே கோயில் பூட்டி இருந்தது. கிராதி வழியே எட்டிப்பார்த்தேன். இடதுபுறம் அம்மன் சன்னதி வாசலில் ஐந்தாம் நூற்றாண்டு லகுலீசர். இவரை வீராகவன் அடையாளம் கண்டு எழுதிய தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலின் முன் பணிகளின் போதே (2015) இங்குள்ள விநாயகர் அவர் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழ் உள்ள கல்வெட்டு ஆவணத்தின்படி (4-5 நூற்றாண்டு) ஐராவதம் மகாதேவன் அவர்கள் வாசித்து ஒப்பு நோக்கி இவரே தமிழ் நிலத்தின் முதல் விநாயகர் என்பது ஊர்ஜிதம் ஆனது.
அந்த விநாயகர் இருக்கும் எம தண்டீஸ்வரர் கருவறை பூட்டி இருந்தது. திருவாரூர் கோயிலில் சண்டேசர் சன்னிதி அருகே எமதண்டீஸ்வரர் என்ற பெயருடன் வணங்கப் பெறுபவர் லகுலீசரே. கோவிலை சுற்றிவிட்டு வெளியே வந்து கிராமத்துக்குள் நடந்தோம். ஊர்வாசிகள் ஊருக்குள் சமணக் கோயில் எதிரே இந்த கோயில் ஆட்கள் இருப்பார்கள் சாவி கிடைக்கும் என்று கொடுத்த தகவலின் பேரில் கிராமத்துக்குள் நடந்தோம். வலது புறம் ஒரு சிறிய வளவுக்குள் இதே பல்லவர் கால ஐயனார் வழிபாட்டில் இருந்தார். உள்ளே சென்று ஐயனார் சிலையை அணுகி ரசித்தோம். கோவிலுக்குள் இருக்கும் லகுலீசரின் அதே சிற்ப ஒருமை. ஆயுதம் மட்டும் இல்லை. சற்று நேரம் அந்த தட்டகத்தில் இருந்து விட்டு வெளியேறி பார்சுவநாதர் கோயில் நோக்கி நடந்தோம்.
ஒரு நூறு வருடத்துக்கு முன்பு உறைந்து நின்று போன அழகிய ஓட்டு வீடு வரிசைகள் இரு மருங்கிலும் அமைந்த அமைதியான தெரு. திண்ணைகள் அதில் எழுந்த தூண்கள், தூண்களை இணைக்கும் உத்தரங்கள், அதில் சரிந்து நிற்கும் ஓட்டுக் கூரைகள், இடையிடையே நூற்றாண்டு கண்ட அந்த தோற்ற அழகு அவ்வாறே நீடிக்கும் சுவஸ்திக் பதாகை பதித்த ஒற்றை மாடி வீடுகள், மணல் பாவிய தெரு அதன் மேல் வீழும் தண்ணொளி, சாரல் மழை மத்தியில் அருகன் ஆலயம். ராஜகோபுரம் அற்ற வாயில் கடந்தால் மகாவீரர் பரிநிர்வாணம் எய்திய 2500 அகவையை வணங்கி எழுப்பட்ட மங்கல ஸ்தூபி. 600 வயது கொண்ட விமானம். 24 தீர்த்தங்கரர், பிற சமண தெய்வ தொகுதிகள் அடங்கிய அழகிய விமானம். குஷ்மாந்தினிதேவி, சாஸ்தா, மகாவீரர் என ஒவ்வொரு சன்னதியாக பார்த்தோம்.
மிக சுத்தமாக பராமரிக்கப்படும் கோவில். அர்ச்சகர் எங்களை இன்முகத்துடன் வரவேற்று, விசாரித்து, கோயில் கதை சொல்லி, பார்ஸ்வநாதருக்கு சுடராட்டு நிகழ்த்தினார். அஷ்ட மங்கலமும் முன் நிற்க, பல்வேறு ஜைன செப்புத் திருமேனிகளுடன் இடதுபுறம் வாக்தேவி நின்றிருக்க கருவறையில் கருணைக் கருங்கடல் மேனியில் சுடராட்டும் ஒளி மலர்க்கொத்தில் பட்டாம்ப்பூச்சி என்று சிறகடித்தது. தட்சணை இட்டு மீண்டும் ஒரு சுற்று வந்து கோயில் விட்டு வெளியேறி, எம தண்டீஸ்வரர் கோயில் சாவி எவரிடம் உண்டோ அவரை கோயிலுக்கு வர கோரி விட்டு, மீண்டும் எம தண்டீஸ்வரர் கோயில் வந்தடைந்தோம்.
வாசலில் சக்தி வேல் எனும் நண்பர் எங்களை எதிர்கொண்டார். கார், ஆட்கள் படை, இவற்றைக் கண்டு தொல்லியல் அல்லது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இவற்றில் இருந்து எவரோ வந்திருக்கிறார் என்று நினைத்து விசாரித்தார். நாங்கள் வேறு, எங்கள் ஆர்வம் வேறு என்று தெரிந்ததும் மிகுந்த உற்சாகம் கொண்டு உடனடி ஸ்நேகிதம் கொண்டார். உள்ளே இருக்கும் புகழ்வாய்ந்த அந்த நான்காம் நூற்றாண்டு ஏக தந்தனை கிராமத்து சிறுவர்கள் ஸ்டெம்ப் ஆக நிறுத்தி கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். லகுலீசர். லகுலீசர் போலவே உருவ அமைதி கொண்ட பெயரற்ற தெய்வம் எல்லாமே வெட்ட வெளியில் கிடந்திருக்கிறது. மிகச்சிறிய மர உத்திரமும் அதன் மேல் செங்கல் கட்டுமான விமானமும் கொண்ட சிறிய கருவரையாக மட்டுமே அப்போது எஞ்சி நின்ற கோயில் இது. இந்த விநாயகர் கவனம் பெற்ற பிறகே, இந்த கோயில் இப்போது காணும் பரிணாமத்தை அடைந்திருக்கிறது. எல்லா கதையும் சக்தி வேல் சொன்னார்.
தாமரை இயல்பான ஆவலில் அது என்ன பேர் தெரியாத சாமி என்று வினவ, வாங்க காட்றேன் என்று சக்தி கூட்டி சென்று ஒரு இடத்தை காட்டி, இதுக்கு கீழ புதைஞ்சு கிடக்கு என்றார். புதிய கட்டுமான பணிக்கான மணலால் புதைந்து கிடந்தது. ஒரு வகையில் அடையாளம் காணப்படாத சிலையாக வெளியில் கிடந்து உடைந்து போவதை விட இது சிறப்பானதே. அந்தக்கால அந்நியர் படையெடுப்பில் பல சிலைகள் இவ்வாறு குழி எடுத்து வைக்கோல் பரப்பி, அதன் மேல் சிலையை போட்டு வைக்கோல் பரப்பி மீண்டும் மண் போட்டு மூடி பல ஆண்டு கழித்து பின்னமின்றி சிலையை வெளியே எடுத்திருக்கிறார்கள். தாமரையும் திருமாவும் மணியும் நானும் கைகளாலேயே மண் பறிக்கத் துவங்கினோம். இருங்க வரேன் என்று சக்தி, புகழ் என்ற இளைஞருடன் கடப்பாரை மண்வெட்டி சகிதம் திரும்பி வந்து, சக்தியும் புகழும் கவனமாக மண் அகற்றி சிலையை வெளியே காட்டினர். உள்ளே உள்ள லகுலீசர், வெளியே உள்ள அய்யனார் போல அதே உருவம் வலக்கையில் வேல் அல்லது தாமரைமொட்டு. நாங்களே அகழ்வு செய்து பண்டைய கலை ஒன்றை மீட்டதை போல உவகை அடைந்திருந்தோம். அர்ச்சகரும் வந்து சேர, சக்தி மற்றும் அர்ச்சகர் வசம் பெயரரியா இச்சிலையை கோயிலுக்குள் வைத்துப் பூட்டிப் பாதுகாக்க உறுதிச் சொல் பெற்றோம்.
கோயிலுக்குள் சென்று கருவறை இடதுபுறம் நின்றிருந்த விநாயகரை கண்டோம். சில தினங்கள் முன்பு கடந்து சென்ற விநாயகர் சதுர்த்திக்குத்தான் வாதாபி கொண்டான் துவங்கி அயோத்திதாசரே சொல்லிட்டார் வரை எத்தனை ‘கருத்தியல்’ அடிதடிக்கள். அந்த அடிதடிக்களின் நிழல்கூட மேலே படாமல் ஒரு ஓரமாக ஒதுங்கி அமைதியாக எங்களுக்காக காத்திருந்திருக்கிறார் இவர். இவர் முகிழ்ந்தது ஐந்தாம் நூற்றாண்டு எனக்கொண்டால் அதற்கான பண்பாட்டுப் பின்புலம் அதற்கும் முன்னால் ஒரு இருநூறு ஆண்டுகள் பின்னால் நீளக்கூடியது என்பது வெளிப்படை. இடஞ்சுழி துதிக்கை. ஏக தந்தம். குறிப்பான விஷயம் இந்த விநாயகருக்கு தொப்பை இல்லை. மிக இலகுவாக சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார். ஊர் சார்ந்த அர்ச்சகர். ஊர் பிரச்னைகளில் கோயில் அதிகாரம் எவருக்கு என்று நிகழும் இழுபரிக்களை பேசிப் பேசி மாய்ந்தார். அப்பன் அம்மையை வணங்கிவிட்டு வெளியே வந்தோம். காஞ்சி பெரியவர் சந்திர சேகர சரஸ்வதி அவர்கள் பல பத்து முறை இக் கோயிலுக்கு விஜயம் செய்து அவரது கரங்களால் அப்பன் அம்மைக்கு பூஜை செய்திருக்கிறார் என்று சக்தி சொன்னார். இங்க இன்னொன்னு இருக்கு. புகழ் காட்டுவான். என்றுவிட்டு சக்தி விடை பெற, புகழ் எங்களை அருகே வயல் காட்டுக்குள் இருந்த செல்லியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்று காட்டினார். முதல் பார்வைக்கு திடுக்கிட வைத்த சிலை. ஆளுயர தவ்வை. பல்லவர் காலம். சற்று நேரம் சிலை முன் நின்று புகழ் வசம் பேசிக்கொண்டிருந்துவிட்டு எங்கள் அடுத்த இலக்கான தாதாபுரம் நோக்கி கிளம்பினோம்.
தாதாபுரம்.
நேரம் 11 கடந்திருக்க விஷ்ணு மெல்ல தொண்டயை செருமினார். திருமா உற்சாகமாகி ‘உங்களுக்கு இன்னும் விஷயம் தெரியாதுல்ல. இவங்க நாள் முடிஞ்ச பிறகுதான் சோத்த கண்ல காட்டுவாங்க’ என்று சொல்ல திடுக்கிட்டுவிட்டார் விஷ்ணு. அவர்தான் ச்சும்மா பண்ணையார் வீட்டுப் பிள்ளை கணக்கா ராமர் பச்சை வண்ண ஜிப்பா, நீல ஜீன்ஸ், வானவில் குடை சகிதமாக தயாராகி வந்திருந்தார். பண்ணையார் போலவே பயணம் நெடுக கோயில் அர்ச்சகர் உதவிக்கு வந்த பிள்ளைகள் என எல்லோருக்கும் தாராள தட்சிணைகள் தந்தார். ‘ வழில ஓட்டல் இருக்க மாதிரி மேப் போடாத சீனு தாமரை இவங்கதான் அதுக்கு பொறுப்பு’ என்றுவிட்டார் மணி.
திருமா ‘டோன்ட் ஒரி’ என்று விட்டு பையை திறந்தார். தீபாவளி முறுக்கு அதிரசம். நானும் என்று விஷ்ணுவும் பையை திறக்க அவரது கேரள வீட்டுக்காரம்மா கொடுத்து விட்ட கேரள அல்வா, நேந்திரம்பழ சிப்ஸ். காலி செய்யவும் தாதாபுரம் நெருங்கவும் சரியாக இருந்தது. ராஜராஜேஸ்வரம் அதுவே தாதாபுரம் என்று மருவி விட்டதாக இணையம் சொல்கிறது. ராரா எங்க இருக்கு தாதா எங்க இருக்கு அது எப்புடிங்க இப்புடி மாறும் என்றார் திருமா. உண்மைதான் உச்சரிக்க கடின ஒலி கால ஓட்டத்தில் மட்டுப்பட்டு உச்சரிக்க எளிய ஒலியாக மருவுவதே வழமை. இது நேர் தலைகீழாக இருக்கிறது. இதே கதைதான் தாராசுரத்துக்கும். நிறைய ஏரி குளம் எல்லாம் வெட்டி, மூன்று கோயில் கட்டி, ராஜராஜ சோழனின் அக்கா குந்தவை உருவாக்கிய ஊர்.
முதலில் நாங்கள் சென்று பார்த்து குந்தவை எடுப்பித்த ரவி குல மாணிக்க ஈஸ்வரர் கோயில். ரவி குல மாணிக்கம் என்பது ராஜ ராஜனின் பெயர்களில் ஒன்று என்றும், குந்தவை மட்டுமாக ராஜராஜனை விளிக்கும் பெயர் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் கோவில் போல தெரியவில்லை. கேட்ட திறந்து உள்ள போங்க, அர்சகர வர சொல்றேன் என்றார் கோவில் பக்கத்து வீட்டம்மா. கேட்டை திறந்து உள்ளே போனோம். மழையில் நனைந்து வண்ணங்கள் துலங்க நின்றிருந்தது கோயில். காம்பௌண்ட் சுவர் மூலையில் உடைத்து கிடக்கும் சப்த கன்னியர், அழகிய வடிவத்தில் தவ்வை இவற்றை நெருங்கிப் பார்த்தோம். வெளி பிரகாரத்தில் அழகிய எண்கர பைரவர் நாய் வாகனம் இன்றி நின்றிருந்தார்.
வெளி பிரகாரம் வழியே கோவிலை சுற்றி வந்தோம். மிக்க தனித்துவமான வடிவழகு கொண்ட கோயில். பொதுவாக வெளி சுவற்றில் தெய்வங்கள் நிற்கும் கோஷ்டங்கள் என்பது இருபுறமும் தூண்கள், அதன் மேல் கபோதம் சென்று இணையும் பஞ்சாரம் அந்த பஞ்சாரத்தின் மையத்தில் கீர்த்தி முகமோ வேறு சித்திரங்களோ இருக்கும். இப்படி எட்டு விதமான பஞ்சார வடிவத்தை காமிகா ஆகமம் கூறுகிறது. அப்படி ஒன்றில் தெய்வங்கள் இன்றி வெறும் தூண்கள் மட்டும் கொண்டு அதன் வடிவ அழகை மட்டும் கொண்டு நிற்கும் அமைப்புக்கு, கபோத பஞ்சாரம் (அல்லது பஞ்சஹம்) என்று பெயர். ஒன்பதாவது பஞ்சர வகை இது. இந்த கபோத பஞ்சரம் எனும் வடிவழகு கொண்டு உருவாக்கப்பட்ட கோயில் இது. சோழக் கோயில் கலை வெளிப்பாட்டு முறையில் இதற்கு முன்பும் பின்பும் இது போன்ற ஒன்று இல்லை என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உண்மையாகவே வடிவழகு கொண்ட கோயில். சுற்றி வருகையில் தட்சிணாமூர்த்தி தாண்டி கண்ட இணையற்ற மற்றொரு அழகு, மகிஷாசுர மர்த்தினி. தாமரை படிகள் ஏறி பொதிந்து வைத்திருந்த ஆடையை, சூடி இருந்த மாலைகளை அகற்றி தெய்வத்தை எழுப்பினார். அழகி. பேரழகி. மகிஷம் இடது புறம் சரிந்திருக்க, அந்த சரிந்திருக்கும் தலைமேல் உடலை வலப்பக்கம் சரித்து, ) இப்படி சரிந்து இடது புறம் வில்லை ஊன்றி, சமன் கொண்டு நிற்கிறாள் தேவி. இடது கீழ்க் கையில் கடி ஹஸ்தத்தில் கிளி. நீண்ட நேரம் ரசித்து விட்டு, மீண்டும் பூக்கள், ஆடை அனைத்தையும் கொண்டு தேவியை புதைத்துவிட்டு கோயிலுக்குள் கருவறை சென்றோம். வலதுபுறம் வேலியிட்ட ஒரு சிறிய மண்டபத்தில் சமயக் குறவர் மூவர், நடராஜர் சிவகாமி என சோழர்கால செப்புத் திருமேனிகள். அர்ச்சகர் வந்திருந்தார். அர்சனைக்கு எங்கள் பெயர்கள் கேட்டார். நான் என் ஆசிரியர் ஜெயமோகன் பெயரை சொன்னேன்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
சுடராட்டினை, நாவுக்கரசர் கவிதையுடன் நிறைவு செய்தார். இனிப்பு பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு வெளியேறி, குந்தவை எழுப்பிய பெருமாள் கோயில் நோக்கி நகர்ந்தோம்.
செல்லும் வழியில் அழகிய ஏரி. அருகே புதிய சப்த கன்னி ஆலயம். சுற்றிலும் துவங்கி விட்ட பாறைச்செரிவு கொண்டு முகம் மாறும் நிலக் காட்சி. கோயிலுக்குள் சென்றோம். வளாகத்தில் அய்யனார் குதிரைகள் என எல்லாமே புதிய வண்ணம் கொண்டு மின்னும் கோயில். கிராமத்து சினிமா கோயில் காட்சி அலங்காரம் ஒன்றுக்குள் வந்து நின்றுவிட்ட உணர்வு. அங்கே நாங்கள் வந்தது சோழர் கால நவ கண்ட சிலையைக் காண நின்றிருந்தவரோ புதிய நவகண்டர்.
கோயில் வளாகத்தில் இருந்த கிழவியை பிடித்து தாமரை விசாரிக்க, அந்த பழைய நவ கண்ட சிலைப் பலகையை உள்ளே வந்த கார் திரும்பிய வகையில் அதில் முட்டி உடைந்து விட்டது என்கிறார். சர்தான் உடைஞ்சது எங்க என்றார் தாமரை. கிழவி கை காட்டிய இடத்தில் வழக்கம் போல அணுக இயலா முட்புதருக்கு அப்பால் கிடந்தது அச்சிலை. நெருஞ்சி பதம் பார்த்த பாதத்துடன் அனைவரும் தேடிச்சென்று பார்த்தோம். மீண்டு கரி வரதராஜ பெருமாள் கோயில் வந்தோம். உள்ளே கருவறை பூட்டி இருக்க வெளியே சுற்றி வந்தோம். முந்தைய அதே பாணியிலான கோயில். சிறிய சிறிய பாகவத புடைப்பு சிற்பங்களன்றி பெரிய சிற்பங்கள் ஏதும் இல்லை. இங்கேதான் குந்தவை எடுப்பித்த ஜைன கோயில் குறித்த கல்வெட்டு இருக்கிறது. கல்வெட்டு இருக்கிறது. கோயிலைக் காணவில்லை. கோவில் சுற்றி முடித்து எங்கள் அடுத்த இலக்கான கீழ்மாவிலங்கை சென்றோம்.
தாதாபுரம் கரிவரதராஜப்பெருமாள் ஆலயம்
கீழ்மாவிலங்கை.
புறநானூற்றில் விரிவான ஊர் சித்தரிப்புடன் அறிமுகம் ஆகும் ஊர் இந்த இலங்கை. மாவிலங்கை, நன்மாவிலங்கை என்றெல்லாம் சிறுபாணாற்றுப்படையால் விளிக்கப்படும் ஊர். இப்போது கீழ் மாவிலங்கை மேல் மாவிலங்கை என சாதிக் கோட்டால் பிரிந்து நிற்கும் கிராமத்தில் கீழ்மாவிலங்கையில் 1,2,3 நந்திவர்மன்களின் ஏதோ ஒரு வர்மன் காலத்தில் கட்டப்பட்ட மிக சிறிய பெருமாள் குடைவரை.அதுவே எங்கள் இலக்கு. ஊருக்குள் விசாரித்துக் (மூக்கறுத்தான் பாறைதானே அதோ இருக்கு) கண்டுபிடித்தோம்.
தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள குடைவரை. அணுகத் தடையாக இருந்தது மழையும், கோயிலுக்கு பத்தடி தொலைவு வரை இடைவரை வளர்த்து கிடந்த புதரும். இட்ட காலை தளைத்து, எடுத்த காலை பிணைக்கும் புதர். இடையே கண்ணில் பட்ட பாறையில் ஏறிச் சாடி, தாவி கோயிலை அடைந்தோம். நின்ற திருக்கோலத்தில் பெருமாள். அடைத்த கிராதி வழியே முகம் பொத்தி சற்று நேரம் பார்த்து நின்றோம். மழை வலுக்கத் துவங்க, எங்கள் அடுத்த இலக்கு நோக்கி நகர்ந்தோம்.
மாம்பாக்கம்.
வழியில், தாமரையின் நண்பர் திருவாமாத்தூர் சரவணகுமார் அவர்கள் வழி சொல்ல மாம்பாக்கம் கிராமம் சென்றடைந்து, வழியில் வயல்வெளிக்குள் மாமரத்தின் கீழ் சிவன், விநாயகர், சிறிய நந்தி சகிதமாக வெட்ட வெளியில் நின்றிருந்த பல்லவர் கால லகுலீசர் சிலையை கண்டோம். தாமரை அருகே கேணியில் இறைத்து விநாயகர் லகுலீசார் அனைவரையும் சுத்தம் செய்தார். அதன் பிறகு நிதானமாக அதன் வடிவழகை ரசித்தோம். இப்படித்தான் பறந்து சிதறிக் கிடக்கிறது நமது பண்பாட்டுத் தடங்கள். குறைந்த பட்சம் ஒரு பெரிய அகழ்வைப்பகம் இருந்தால், இவற்றை பெயரிட்டு காலம் வரலாறு பட்டி இட்டு, ஒரு இடத்தில் பூட்டி பத்திரமாக வைக்கவாவது வழி உண்டு. ஒன்றும் செய்வதற்கு இல்லை.
அடுத்த இலக்கு செல்ல காரேறினோம். விஷ்ணு தண்ணீர் பாட்டில் எடுக்க, திருமா ‘வெளிய மழை, குளிர் வேற, உங்களுக்கு மட்டும் எப்புடி தண்ணி தாகம் எடுக்குது’ என்று யதார்த்தமாக சந்தேகம் கேட்க, விஷ்ணு பொங்கி விட்டார் பொங்கி. சோறுதான் இல்லன்னு ஆகிபோச்சி தண்ணி கூட குடிக்க கூடாதா என்று குமுற, குடிங்க குடிங்க…என்று பெருந்தன்மையாக சம்மதித்தார் திருமா. கிளம்பினோம். நிலம் முற்றிலும் மாறி கோலிகுண்டு பாறைகள் செறிந்த மலைத்தொடர் நோக்கி நகர்ந்தோம்.
தொண்டூர்.
அங்கிருந்து நாங்கள் அடுத்து வந்த ஊர் தொண்டூர். இங்கே விண்ணாம்பாரை என்ற இடத்தில், வயல்வெளிக்குள் மூன்றாம் நந்திவர்மன் துவங்க நினைத்த பெருமாள் கோயில் பணிகளை ஒட்டி ஒரு பாறையில் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்ட சயனப் பெருமாள் ஒருவர் உண்டு. அவரை தரிசிப்பதே எங்கள் அடுத்த இலக்கு.
கிராமத்தில் வழி கேட்க, புருஷோத்தமன் எனும் எழாம் வகுப்பு பையன் எங்களை வழிகாட்டி அழைத்து சென்றான். சாரல் மழையில் அவனை பின்தொடர்ந்தோம். வழியில் மலை மேல் பொழிந்த மழையால் இழிந்த சலசலக்கும் சிற்றோடையை கடந்தோம். பாறை இருக்கும் இடம் சுற்றி இடுகாட்டு ஆக்கிரமிப்பு. புதிய புதிய சமாதிகள். இந்துக்கள்தான். தாண்டி குதித்து உளை சேற்றின் மேல் பரவிய புல்வெளித் திடலில் சில பத்து மீட்டர் நடந்தால் அரங்கசாமி.
கொக்கு போல காலெடுத்து நடக்காவிட்டால் உளைசேரு வழுக்கும். எனக்கு வாத்துக் கால். வழுக்கியது. மட்டமல்லாக்க விழுந்த பக்தனின், பப்பரப்பே என்று விரிந்த கால்கள் இடையே தரிசனம் தந்தார் பெருமாள்.
இந்த பெருமாள் கொஞ்சம் வித்தியாசம். செல்பி படம் போல இடம் வலமாக மாறிய பெருமாள்.அரவத்தின் ஐந்தலையும் வித்தியாசமான முகத்துடன் பெருமாளின் முகத்தை எட்டிப்பார்க்க தீவிர முயற்சியில் இருந்தன. ஜடா மகுடம். கொழுங்கன்னம். தொட்டாடும் நீள் குழைகள். சுளை போலும் கீழுதடு. பாவம் இரண்டே கைகள். புஜவளைகள் கைவளைகள் சரப்பொளி. யஞ்சோபவீதம். இடையாடை முடிந்து, அதன் மேல் துவண்ட சல்லரி, சேவடிகள்.
கல்வெட்டுப் பலகை மேல் சாய்ந்திருந்து நீண்ட நேரம் ரசித்தோம். மழை வலுக்க கிளம்பினோம். விஷ்ணு அவரை சுற்றி நின்ற எல்லா சிறுவர்களுக்கும் அவர்கள் மகிழும் அளவு சில ரூபாய்கள் அளித்தார். திரும்பி வழியில் மலை தந்த மழை ஓடையில் மணி என்னைப்போட்டு குளிப்பாட்டினார். ‘அது எப்புடி சீனு நல்லா மட்ட மல்லாக்க விழுந்தீங்க ஆனா டிக்கில மட்டும்தான் மண்ணு ஒட்டிருக்கு’ என்று தன் சந்தேகத்தையும் வினவினார். ‘அதுவா, சின்ன வயசுல இருந்தே அடிக்கடி விளர பழக்கம் உண்டா, அதுனால விழும்போதே டெக்னீக்கா விழுவேன்’ என்ற எனது பதில் அவருக்கு திருப்தியாக அமைய, அடுத்த இலக்கான பஞ்சனார் பாடி குன்று சமணர் படுக்கை தேடி நகர்ந்தோம். அருகிலேயே உள்ள மற்றொரு குன்று அது.
வழக்கம் போல உளை, வயல் சதுரம் கட்டம் கட்டமாக பிரித்த வரம்புகள் மேலே நடந்து குகை வாயிலை அடைந்தோம். சில படிகள் உயர்ந்தால், பிரம்மாண்ட பாறைகள் ஒன்றன் மேல் ஒன்று அமைந்த இடைவெளியில் அமைந்த விசாலமான குகை. மேலே குளிர் பாறையில் நான்கைந்து படுக்கை வெட்டுக்கள். இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு, எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பார்ஸ்வநாதர் புடைப்பு சிற்பம் என 700 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்ப்புடன் சமணம் இயங்கிய சான்றுகள் கொண்ட தலம்.
வழக்கம் போல அங்கே அமர்ந்து, நண்பர்கள் லகுலீச சைவம் சமண பிரிவுகள் பௌத்த தத்துவம் பிற மதப்பண்பாடு சார்ந்து என கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். இன்றெல்லாம் நண்பர்கள் வசம் பேசியவற்றில் ‘எனக்கு நானே’ சொல்லிக்கொண்டது பல. குறிப்பாக, பிறவிகள் பல வழியே பிராமணன் என்றாகி பிரம்மத்தை அடைவது எனும் நிலை குறித்து திருமா கேட்ட வினாவுக்கான பதில். திருமா வசம் சொன்னேன். என் நண்பர் அனிஷ் க்ரிஷ்ணன் நாயர் இந்த ஆச்சாரங்களில் நம்பிக்கை உள்ளவர். நானறிந்த, பிற மனிதர்கள் மேல் வெறுப்பே இல்லாத மிகச் சில மனிதர்களில் அவரும் ஒருவர்.
இந்த நம்பிக்கையில் உள்ள தீவிரம் அதை ஒட்டி நேர்மையாக அது சொல்லும் ஆச்சாரங்களை கடை பிடிப்போர் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. இதை வகுப்பாக ‘பொதுவில்’ போதிக்கும், அது அப்படித்தானே, சங்கரரே பிரம்ம ஸூத்ர பாஷ்யத்ல ஸ்தாபிச்ருக்காரே என்று தனது சாதி சுமட்டுதனத்தை சங்கரரை கொண்டு நியாயம் செய்து கொள்ளும் ஆசாமிகள் இவர்கள் மீது அவர்கள் எவராயினும் அவர்கள் மேல் எனக்கு எந்த மதிப்பும் இல்லை. மொத்த இந்து மத மெய்யியல் பார்வைகளின் வரலாற்றையே ராம கிருஷ்ண பரமஹம்சருக்கு முன் பின் என்று பிரித்துவிட முடியும். மெய்யியல் ஓடைகள் அவை பேசும் பல ஆச்சார விஷயங்களை அது அவ்வாறல்ல என்று வாழ்ந்து காட்டி நிறுவிச் சென்றவர் பரம ஹம்சர். சங்கரரே சொல்லி இருந்தாலும் அவரிடம் அவர் பணிகள் குறித்த மதிப்பு குறையாமல் அவரிடம் சொல்லிவிட வேண்டும். ஞமலியோ குஞ்சரமோ அவற்றின் மேல் பொழியும் வெய்யோன் ஒளி ஒன்றுதான். அவ்வாறே பிரம்மம். பிரம்மம் ஒன்றுதான். குஞ்சரம் என்றானால்தான் ஞமலியால் அடையமுடியும் என்றொரு பிரம்மம் இல்லை.
மெல்லக் கலைந்து எங்கள் அடுத்த இலக்கான வெடால் எனும் கிராமம் நோக்கி நகர்ந்தோம்.
வெடால்.
வெடால் கிராமத்தில் தாமரையின் நண்பர் திருவாமாத்தூர் சரவணகுமார் அவர்களின் நண்பர்கள் பிரகாஷ், விஜயன், விநாயக மூர்த்தி மூவரும் எங்களை தத்தெடுத்துக் கொண்டனர். வெடால் பேருந்து நிறுத்தம் அருகிலேயே தேனீர் கடை வைத்திருக்கிறார் பிரகாஷ். வீட்டின் முன் பகுதி கடை. தேநீர் உபசரிப்புக்குப் பிறகு எங்களை விநாயக மூர்த்தி வசம் ஆற்றுப் படுத்தினார்.
விநாயக மூர்த்தி எங்களை மீண்டும் சேற்றுவெளி கடந்து மீண்டும் மலை மேல் ஏற்றினார். சில நூறு அடிகள் கரடு முரடான படிகளில் உயர்ந்தால் பெரும் பாறையில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை. வன துர்க்கை என ஊரார் ராகு கால பூஜைக்கு இங்கே வருகின்றனர். அந்த பாறைக்கு மேலே முதல் அடுக்கில் ஒரு மலை ஊற்று. சாரல் மழையும் குளிர் காற்றும் அக் கணவாய் வழியே சுழன்று வீசியது. அதற்கும் மேலே பாறைகளை ஒட்டி பராமரிப்பு இல்லாத சிறிய செங்கல் கட்டுமான கருவரைக்குள்ளே இடதுபுறம் ஒரு அடி உயர கணபதி விஷ்ணு சிலை பாறை புடைப்பு சிற்பமாக, எதிரே உள்ள பாறைக் குடைவில் ஒன்றரை அடி உயரத்தில் முருகன். இருபக்கமும் அடையாளம் அறிய இயலா நான்கு கர தெய்வங்கள், ரிஷி எவரோ வழிபடும் வடிவிலான லிங்கம். எல்லைகண்டேஸ்வரர் என்று இவர் எப்படிப் பெயர் பெற்றாரோ அறியேன்.
அந்தி மயங்கும் இருளில் விநாயக மூர்த்தி பணிந்து கேட்டுக் கொண்டார் (என் தாடி நாமம் வழியே ஏதோ தவறாக நினைத்திருக்கிறார் :) ) அதன்படி கோவில் தெய்வங்களுக்கு நான் சுடராட்டு நிகழ்த்தினேன். நண்பர்கள் சுடர் வணங்கி நிறைய, கருவறை விட்டு வெளியேறி இன்னும் சற்று மேலே சென்றோம். அத்தி மரத்தின் கீழே மற்றொரு ஊற்று. எங்களுடன் அப்போது விஜயனும் வந்து இணைந்து கொண்டார். இந்த ஊரின் இது போல தான் பயணம் போகும் ஊரின் வரலாற்று தடங்கள் இவற்றை ஜெய்ஹிந்த் தமிழன் எனும் தனது யூ டியூப் சானலில் பதிந்து வருகிறார். ஊரில் வார்டு கவுன்சிலர் அல்லது அப்படி ஒரு பொறுப்பில் இருக்கிறார்.
நெடுநேரம் அங்கு வந்த வரலாற்று ஆய்வாளர்கள், நடந்த சுவாரஸ்ய விஷயங்களை விஜயன் அவர்களும் விநாயக மூர்த்தியும் பகிர்ந்து கொண்டனர். மாலை மயங்கத் துவங்கி விட கீழே இறங்கினோம். மழைக்கால மாலை நாங்கள் இருந்த இடத்தில் மின்சார தொடர்பும் கிடையாது சீக்கிரம் பார்த்து விடுவோம் என்றபடி எங்கள் அனைவரையும் அடுத்த இலக்கு கூட்டிச் சென்றனர்.
ஊருக்கு வெளியே, மெல்ல சரியும் அந்தியில், பெய்யும் சாரல் மழையில், மலையடிவாரத்தில், புதர்காட்டுக்குள் ஒரு அமானுஷ்யப் பயணம். ஹீனமாக ஏதோ ஒரு குரல் பாம்பு இருக்குமா என்று வினவ, கொஞ்சமும் இரக்கமே இன்றி இருக்கு என்று பதில் சொன்னார் விநாயக மூர்த்தி. புதரை விலக்கி விலக்கி துழாவித் துழாவி இறுதியாக விஜயன் எங்களை கொண்டு நிறுத்திய இடம் சங்க காலம். வலதுபுறம் சங்க கால கல் வட்டங்கள். எல்லாம் புதர் மண்டி நெருங்கிப் பார்க்க வழியே இன்றிக் கவிந்து மூடிய முட்புதர்கள். இடதுபுறம் போரில் செத்த வீரனுக்கான குத்துக் கல். உண்மையில் அந்த நேரம் அந்த இடம் திரவம் போன்ற திடமான அமைதிக்குள் சாரல் மழையின் கிசுகிசுப்பு, அடங்கும் முன் மெல்ல ஒளிர்ந்த மாலைக் கருக்கல் எல்லாம் கூடி ஒரு அமானுஷ்ய உணர்வை அளித்தது. எவரோ ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்க இது பத்தி என்று கேட்க. இடை மறித்து நான் சொன்னேன் ‘ஆராய்ச்சியாளரின் இறுதி எல்லை அறிபவன் அறிபடு பொருள் எனும் இருமை. இந்த புற யதார்த்தத்தை அவர்களால் தாண்டவே முடியாது. ஆராய்சியாளர் சொன்னதை விடுங்க, இப்போ உங்க அகத்தின் ஆழம் என்ன சொல்லுது அதை மட்டும் கேளுங்க. அதுதான் இங்க இருக்க ஒரே உண்மை’ எங்கிருதோ பெயரரியாப் பறவை ஒன்று சிலம்பியது. ஏனோ நண்பர்கள் அமைதிக்குள் விழுந்து நீண்டநேரம் அங்கே அவ்வாறே நின்றிருந்தனர்.
அங்கிருந்து கிளம்பி இருள்வெளிப் பயணமாக வேறொரு இடத்திலிருந்த சமணர் பள்ளியை சென்றடைந்தோம். இது ஒரு முக்கியமான பள்ளி. கனக வீர குறத்தி எனும் தலைமை ஆசிரியை கீழ் மாணவிகளும் மாணவர்களும் சேர்ந்து பயின்ற சமணப் பள்ளி. போர் வீரர்கள் புடைப்பு சிற்பங்கள் வரிசைக்கு கீழே ஆதித்த சோழனின் கல்வெட்டு உள்ள பள்ளி. இருளுக்குள் இருளாக இருளின் வண்ண பேதங்கள் புடைப்புகள் வழியே அமானுஷ்யம் கொண்டு நின்றிருந்தது பள்ளி. மொபைல் டார்ச் ஒளி பட்ட இடம் மட்டும் ஏதேதோ அசைவுகள், ஒவ்வொரு நிழல் அசைவும் உள்ளே எதையோ கிளர்த்த மனம் வைப்ரேட் மோடிலேயே இருந்தது. மெல்ல குகைக்குள் சென்றோம். மிக அகலமான குகை. வாசலில் பெரிய மண்டப முற்றம். குகைப் பாறை இடுக்கு வழியே கீழே இறங்கி நின்ற வேர்கள் ஏதோ தனித்த உயிர் போல தோன்றின. எங்கள் குரல் எங்களுக்கே எதிரொலிக்க, குகைக்குள்ளும் மண்டப வாசலிலும் ஒரு சுற்று நடந்தோம். தூண் ஒன்றின் அருகே அருகர் படிமை இருந்த பீடம் மட்டும் இருந்தது. அருகர் அற்ற பீடமும் அந்த இருளும் அந்த நேரமும் ஏதோ பெரிய குறியீடு போல இருந்தது.
விநாயக மூர்த்தி எங்களை அந்த இருளுக்குள் பிளாஷ் போட்டு வளைத்து வளைத்து படம் பிடித்தார். எல்லாம் முடித்து ஒருவர் கையை ஒருவர் பற்ற, எல்லோரையும் விஜயனும் மூர்த்தியும் வழிநடத்தி மய்ய சாலை கொண்டு வந்து சேர்ந்தனர். விநாயக மூர்த்தி விடை பெரும் முன்பாக என்னை இருக்க அணைத்துக் கொண்டார். நாம ரெண்டு பேரும் சேந்து ஒரு பயணம் போகணும் என்று தெரிவித்தார். இந்த பயணத்தின் மிக இனிய நினைவு இந்த வெடால் கிராமத்தில் கிடைத்த இந்த நண்பர்கள். கட்டி அணைத்து பிரியா விடை பெற்றோம். 25 கி மி இல் வந்தவாசி. அடுத்து எங்க என்று திருமா வினவ, காலை திட்டப்படி இப்போது இரவு 7.30 ஆகி விட்டது வீடு திரும்புவோம் என்று தாமரை டிக்ளேர் செய்ய, 9.30 கு புதுவை வந்து சேர்ந்து அந்த நாளின் முதல் உணவை உண்டு மகிழ்ந்து, (புலவராக இல்லாவிட்டாலும்) உவப்பத் தலை கூடி உள்ளம் பிரிந்து அவரவர் இல்லம் மீண்டோம்.
கடலூர் சீனு