பாபுராயன் பேட்டை பெருமாள்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

இந்த தீபாவளியன்று சென்னைக்கு அருகில் உள்ள பாபுராயன் பேட்டை என்னும் விஜய நகர சம்ராஜ்யச் சிற்றூர் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கோவிலின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அறிந்து என்ன செய்ய முடியும் என்று பார்த்துவரலாம் என்ற எண்ணம்.

அங்கு சாம்ராஜ்யத்தின் பெயரைக் கொண்டுள்ள விஜய வரதராஜப் பெருமாள் கோவிலின் தற்போதைய நிலையைப் பதிவு செய்துள்ளேன். மனதைப் பிழியும் அக்கறையின்மை மற்றும் தொடர்ந்து வந்துள்ள அரசுகளின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டு கொந்தளித்தேன்.

காஞ்சி மடம் ஏதோ சிறு உதவி செய்துகொண்டிருக்கிறது. அதனால் கோவிலில் ஒரு கால பூஜை நடக்கிறது. பட்டர் அருகில் உள்ள ஒரத்தி என்னும் ஊரில் இருந்து வந்து சென்றுகொண்டிருக்கிறார். அவ்வூரில் உள்ள தொம்னையான சிவன் கோவிலையே காணவில்லை. சிவலிங்கத்தின் ஆவிடையார், துவாரபாலகர்கள் என்று பலதையும் இடிந்துகொண்டிருக்கும் பெருமாள் கோவிலில் வைத்துள்ளார்கள்.

சில ஆண்டுகள் முன்பு சிங்கப்ப்பூரில் சந்தித்த போது நீங்கள் கோவில் கோபுரங்களுக்கு வெள்ளை அடிப்பதைப் பற்றியும், வீச்சு மணல் கொண்டு சிலைகளைச் சிதைப்பதைப் பற்றியும் சொல்லியிருந்தீர்கள். இந்தக் கோவிலில் அவற்றுக்கான தேவையே இல்லை. எதுவும் செய்யாமலேயே வரலாறு நம்மை விட்டுப் பிரிந்து சென்றுகொண்டிருக்கிறது.

அன்னியப் படை எடுப்பு என்கிற தேவையே இல்லாமல் அறம் குறைந்த மானிடர்களால் நடத்தப்படும் அரசுகளின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அந்தக் கோவில் இருப்பதை என் உள்ளத்தில் உணர்ந்தேன்.  விஷ்ணுபுரத்தில் வரும் கோவில் சிதைவுகள் நினைவிற்கு வந்தன.

அற நிலையத்துறை, தொல்லியல் துறை என்று அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

‘குமரித்துறைவி’யில் மீனாட்சியம்மைக்கு நடக்கும் மீண்டெழுதல் வரதாராஜனுக்கும் நடக்க வேண்டும்.

ஆமருவி தேவநாதன்

www.amaruvi.in

 

அன்புள்ள தேவநாதன்,

சற்றுமுன் அ.கா.பெருமாள் அவர்கள் வந்து அவர் எழுதி வெளிவந்த நூலை அளித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது இங்கே குமரிமாவட்டத்தில் கைவிடப்பட்டு அழியும்நிலையில் இருக்கும் ஆலயங்களையும், அங்குள்ள கல்வெட்டுகளையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

நான் சில மாதங்களுக்கு முன் கரியமாணிக்கபுரம் பெருமாள் ஆலயம் சென்றதை அவரிடம் சொன்னேன். அந்த ஆலயம் குமரிமாவட்டத்தின் மிகத்தொன்மையான ஆலயங்களில் ஒன்று. ஆனால் நாங்கள் சென்றபோது தெரிந்தது, அங்கே அன்றாட பூஜைக்கு அர்ச்சகர் இல்லை. சுசீந்திரத்தில்  இருந்து ஓர் அர்ச்சகர் பகலில் ஏதேனும் ஒரு வேளை வந்து திறந்து விளக்கேற்றிவிட்டுச் செல்கிறார். ஆலயம் திறப்பதில்லை என்றார்கள் ஊர்க்காரர்கள்.

சுற்றிலும் செல்வச்செழிப்பு. மாடமாளிகைகள் என்று சொல்லவேண்டும். அத்தனைபேரும் இந்துக்கள். அந்த கோயிலுக்கு அங்குள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் நூறு ரூபாய் மாதம் அளிக்கமுடிந்தால் ஐம்பதாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு நல்ல அர்ச்சகரை அமர்த்தலாம். பூஜைகளை முறையாகச் செய்யலாம். ஒரு வேளை உணவுக்கு ஓட்டலில் ஆயிரம் ரூபாயை செலவிட தயங்காதவர்கள் அவர்கள். ஆனால் எவருக்கும் எந்த தயக்கமும் இல்லை. அப்படி ஓர் ஆலயம் ஊர்நடுவே கைவிடப்பட்டு கிடப்பதென்பது தலைமுறைகளுக்கும் பழி சேர்க்கும் என்று தெரியாது. தெரிந்தாலும் அக்கறை இல்லை.

ஆனால் அவர்களில் பலருக்கு இந்துத்துவ உணர்வு உண்டு. தேர்தலில் அப்படித்தான் வாக்களிப்பார்கள். கிறிஸ்தவர்கள்மேல் காழ்ப்பு உண்டு. குமரிமாவட்டத்தில் ஆயிரத்துக்குமேல் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. பராமரிப்பில்லாத, கைவிடப்பட்ட ஓர் ஆலயம்கூட இல்லை. பக்தர்கள் செல்லாத ஓர் தேவாலயம் கூட இல்லை. அந்த அப்பட்டமான உண்மை மட்டும் இவர்களுக்கு உறுத்துவதே இல்லை.

இப்படித்தான் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள். எந்தப் பயணத்திலும் கைவிடப்பட்ட ஆலயங்களைப் பார்க்காமல் வர முடிவதில்லை. தஞ்சையில் பல ஆலயங்களுக்குள் மாடுகளை கட்டியிருப்பார்கள். சாணி குவித்திருப்பார்கள். கழிப்பறைகளாக பயன்படுத்தப்படும் ஆலயங்களைக்கூட இங்கே கண்டிருக்கிறோம். சொல்லிக்கொண்டே இருப்போம், ஊழிருந்தால் இந்த அழியும் இனம் செவிகொள்ளட்டும்

ஜெ

பிகு : குமரித்துறைவி நாவலில் வரும் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயமே அந்நிலையில்தான் உள்ளது

 

முந்தைய கட்டுரைஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்
அடுத்த கட்டுரைஇருட்கனியின் ஐயங்கள்