குருவி, கடிதம்

அன்பு ஜெ,

நலமா? தங்களைத் தொடர்பு கொண்டு நீண்ட நாட்கள் ஆகிறது.  மின்னஞ்சல் வழி தொடர்பில் இல்லை என்றாலும் உங்கள் எழுத்தின் மூலம் தினமும் தங்களுடன் தொடர்பில்தான் உள்ளேன். அதைவிட ஒரு எழுத்தாளருடன் வாசகன் தொடர்பில் இருந்துவிட முடியாதல்லவா? தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவது போன்றொரு கனவு நேற்று கண்டேன். மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டதென கனவிலேயே வந்துவிட்டீர்கள் போலும்! நேற்று மிக எதேச்சையாக குருவி சிறுகதை வாசித்தேன். சரியான என்னுடைய பிறந்தநாளன்று தளத்தில் வெளிவந்துள்ளது. தன்னகங்காரம் கொண்ட வித்யா கர்வம் கொண்ட ஒரு கலைஞன் சிறு குருவிக்கு முன்பாக தன்னை முழுமையாகச் சமர்பணம் செய்யும் கதை. அந்தப் பகுதி கதையின் உச்சம். நேற்று மட்டுமே இரண்டு முறை வாசித்துவிட்டேன். புனைவு களியாட்டு சிறுகதைகள் அந்தக் காலகட்டத்தை மீறி மீண்டு புதிதாக வாசிக்கும்போது அதுதரும் ஒரு உயர் சித்திரம் மிக பிரம்மிப்பாக உள்ளது.

குருவி சிறுகதையிலேயே கதை பின்னல் மிக மிக இயல்பாக ஒரு சாதாரண கதையாக செல்கிறது. வைர்மேன் மாடன் பிள்ளையின் வாழ்க்கை முறை அவன் எண்ண ஓட்டங்கள் இந்த சமூகத்தில், மற்ற மனிதர்களுடன் அவனுக்கிருக்கும் விலக்கம் அதை மறைக்கவும் மறக்கவும்தான் குடியுடன் இருக்கிறான். எந்நேரமும் கலை உள்ளத்துடன் இருக்கும் ஒருவன் சாதாரண மனிதர்களிடம் சாதாரணமாக அவனைப் போல் உரையாடிவிடுவது அவ்வளவு எளிதில்லைதான். தன்னுடைய தொழிலை தொழிலாக எண்ணாமல் கலையாக எடுத்துச் செய்யும் ஒருவனின் கலைத்திமிர் கையளவு கொண்ட ஒரு குருவிக்கு முன்பு முகத்திலறைந்ததுபோன்று தோற்று நின்ற இடம் இந்தக் கதையின் உச்சம். என் மனதில் மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிதான் ஓடுகிறது. பெரியோரைக் கண்டு வியத்தலும் இலமே அதனினும் சிறியோரைக் கண்டு இகழ்தலும் இலமே என்ற வரி அடுத்தடுத்து மனதில் தோன்றுகிறது. இதைவிட மிகப் பொருத்தமாக ஔவையாரின் பாடல்வரிகள் ஒன்றுள்ளது. இந்தக் கதையின் ஒட்டுமொத்த மையக்கருத்தையும் அதில் குறுகத்திரித்து கூறிவிட்டது போன்ற பாடல்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்யாம்பெரிதும்

வல்லாமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது

மாடன்பிள்ளைக்கு நிச்சயம் இந்தப் பாடல் தெரிந்திருக்காது. ஆனால் அவன் ஆத்மா வான்குருவியின் கூடைக் கண்டதும் உணர்ந்துவிட்டது. அந்தத் திருப்பம்தான் கதையை வாசிக்கும்தோறும் மனதை உலுக்குகிறது. அந்தக் கதையில் கலைஞனின் தினப்பாடு, அங்கலாய்ப்புகளை மாடன்சாமியின் குமறல்களாகவே வெளிப்பட்டுவிட்டது.

“சொல்லல்லா? இதுவரை மனசறிஞ்சு சொல்லல்லா? இந்த உலகத்திலே அத்தனை பேரும் எங்கிட்ட என்னவே சொல்லுறிய? ஒளுங்கா குளி, பல்லுதேயி, காலம்பற தோசை தின்னு, மத்தியான்னம் சோறு தின்னு, சாயங்காலம் டிவி பாரு, பொஞ்சாதிக்கமேலே ஏறு, பிள்ளைகள பெத்து அதுகளுக்கு சொத்து சேத்து வையி. எங்கள மாதிரி செத்து மண்ணாப்போ அதைத்தானே? வே, நான் கேக்கேன். இந்த உலகத்திலே எனக்கு அட்வைஸ் மயிரச் சொல்லாத எந்த தாயோளியாவது உண்டாவே? எனக்க அப்பனுக்க ரூபமாக்கும் அம்பிடுபேரும். சொன்னேருல்லா, டிப்பாட்மெண்டு. அது அப்பனுக்கு அப்பன். அதிலே ஓரோருத்தனும் அப்பன்.”

“ஆப்பீசர பயப்படுதான். காசுள்ளவனை பயப்படுதான். கையூக்கு உள்ளவனை பயப்படுதான். ஆனா ஆர்ட்டிஸ்டுன்னா மட்டும் எல்லாவனுக்கும் அவனை நல்லாக்கி போடலாம், சீர்திருத்திப் போடலாம்னு தோணுது. போனவாரம் நம்ம ஆபீஸிலே தூத்துவாருத கோரன் சொல்லுதான், ஏலே மாடன் பிள்ளை, மனுசனாட்டு வாளுலேன்னு. அம்பிடு தாயோளிகளுக்கும் சொல்லுகதுக்கு ஒண்ணுதான் இருக்கு. மனுசனாட்டு வாளு…”

அவன் குரலைத் தூக்கி உரக்க சொன்னான் “வே, நான் மனுசன் இல்ல. நான் ஆர்ட்டிஸ்டு. நான் மனுசன் இல்லவே. நான் பாவி. நான் கேடுகெட்ட குடிகார நாயி. நான் அசிங்கம் பிடிச்ச மிருகம்.. பண்ணி. நான் புளுவாக்கும். பீயிலே நெளியுத புளு, நான் சாத்தானாக்கும். பேயாக்கும். சங்க கடிச்சு ரெத்தம் குடிக்குத மாடனாக்கும். என்ன மயிரானாலும் உம்மையும் உங்காளுகளையும் மாதிரி மண்ணாப்போன மனுசனா இருக்கமாட்டேன் வே…”

இந்த வரிகள் மிகவும் கணமும் வலியும் நிறைந்த வரிகள். அதை அப்படியே வாசகருக்கும் கடத்தக்கூடிய சக்திவாய்ந்த வரிகள். ஒரு கலைஞன், எழுத்தாளன் என அனைவரும் கண்டிப்பாக வாசிக்கக்கூடிய சிறுகதை. சமீபகாலத்தில் வெளிவந்த மிக மிக ஆகச்சிறந்த உன்னதமான கதை இது எனத் தயக்கமில்லாமல் சொல்லலாம்.

இந்த ஆண்டிற்குள் வெண்முரசை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன். மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். குருவி சிறுகதை என்னை மிகவும் பாதித்துவிட்டது. நேற்று இன்று என என்னால் மீளமுடியவில்லை. இன்றைக்கான வெண்முரசு அத்தியாயத்தை இன்னமும் படிக்கவில்லை மனம் முழுவதும் வான்குருவியும் மாடன்பிள்ளையும் தான் நிறைந்து நிற்கிறார்கள். இனி மீண்டும் புனைவுக் களியாட்டு சிறுகதைகளை தினமும் ஒரு கதை வீதம் வாசிக்க வேண்டும். எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். செயல்கூட வேண்டும்.

அன்புடன்

ரா. பாலசுந்தர்

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க

குமரித்துறைவி அச்சுநூல் வாங்க 

வான் நெசவு அச்சுநூல் வாங்க

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்