இரு கலைஞர்கள் – கடிதம்

சஞ்சய் 

அன்புநிறை ஜெ,

‘கவிதை’ என்று நம் தளத்தில் தேடி, 267 பக்கங்கள் தேடல் முடிவுகளை எடுத்து ஒவ்வொரு பதிவாக பார்த்து கவிதை குறித்த விரிவான பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு பழைய பதிவு வந்தது – நீங்களும் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியமும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் (https://www.jeyamohan.in/1896/). இரு வேறு துறையின் மாபெரும் கலைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பிரியத்தையும் மதிப்பையும் பகிர்ந்துகொண்ட கணங்கள் இருவரையும் ரசிக்கும் என் மனதுக்கு மிக மிக நெகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் தாங்கள் சஞ்சயின் குரலை முதல் முறை கேட்ட இரவை சொல்லும் விதம்! அத்தனையும் சொல்லாக்கி விட முடியும் உங்களால். சஞ்சய்க்கு எப்படி இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டேன். ஒரு நெகிழ்ச்சியான பாடலாக அது மலர்ந்து விட்டிருக்குமோ! பன்னிரு வருடங்களுக்கு முந்தைய கடிதம் எனக் காண்கிறேன்! அதன் பின் ஆற்றில் அனேக வெள்ளம் ஓடியிருக்கும்.

இன்னொரு அழகான விஷயம் இதில் நீங்கள் எழுதியிருக்கும் இந்த வரி – அத்தனை சத்தியமானது.

“ஒரு கலைஞனுக்கும் நமக்குமான உறவு என்பது அத்தனை அந்தரங்கமானது. சொல்லப்போனால் அதை அந்தக் கலைஞனிடம் பகிர்ந்துகொள்வதேகூட கூச்சம் அளிக்கக் கூடிய அளவுக்கு அந்தரங்கமான ஒன்று அது.”

ஒரு கலைஞர் மீது நாம் கொண்டுள்ள அணுக்கத்தை சொல்வதில், அவர் மீதான அபிமானமே என்றாலும் அதை நான் நேரிடையாக சொல்லி அவர் அறியலாகுமா என அதை முதன்முதலில் சொல்வதில் காதலைச் சொல்வது போல பெரும் கூச்சம் இருக்கிறது.

எனக்கு இக்கடிதத்தில் மிக அணுக்கமான இன்னொரு விஷயம் இசையை நீங்கள் அறியும் அனுபவம்.

“ஆனந்தபைரவி என்றால் சட்டென்று கிளையை சற்றே உலுக்கி சிறகசையாமல் மேலே எழும் பறவை. இந்த காட்சிகளுக்கு தர்க்கமே கிடையாது. தன்னிச்சையாக பிம்பங்கள் கொட்டிக்கோண்டே இருக்கும். விழிப்புநிலைக் கனவுபோல. இது பல்லாயிரம் பேர் கூடியிருக்கும் கச்சேரியிலும் நிகழும்.  ஆகவே நான் கேட்கும் இசையே வேறு. நீங்கள் ஒரு நீண்ட ஆலாபனை வழியாக துல்லியமான கணக்குகளுடன் ஒரு ராகபாவத்தை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கும்போது நான் ஒரு பெரும் கோபுரத்தைக் கண்டுகொண்டிருக்கலாம். நீங்கள் உச்சத்துக்கோ நுண்மைக்கோ செல்லும்போது நான் அது என்ன என்று தெரியாமலேயே புல்லரிப்பு கொள்வேன்.”

இவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியாவிட்டாலும் இசையை நான் உணர்வதும் இது போன்றதொரு அனுபவமே. எனக்கு இசைக்கோர்வை அனைத்தும், பாடல்கள் கேட்கும் அனுபவங்கள் அனைத்தும், ராகங்கள் அனைத்தும் காட்சிகளே.. அப்படித்தான் ராகங்களை ஏதோ சிறிதளவு இனம் பிரித்து அடையாளம் காண்கிறேன்.

எப்போதுமே மத்யமாவதி விரிந்த நிச்சலன நீர்ப்பரப்பின் மீது கடந்து செல்லும் இளம்காற்று. ஹம்சநாதம் அந்தரத்தில் மிதக்கும் இறகு. பஹாடியின் நிலவொளியைக் கொண்டே அத்தனை பாடல்களையும் அறிகிறேன். அதை ஒரு சிலமுறை எழுதிப் பார்க்க முயன்றிருக்கிறேன். (https://manaodai.blogspot.com/2020/06/blog-post_4.htmlhttps://manaodai.blogspot.com/2020/06/blog-post_10.html) வேறு யாருக்கும் தொடர்புறுத்திக் கொள்ள முடியவில்லையோ என பிறகு எழுதுவதில்லை.

இன்று உங்கள் பதிவை வாசித்ததும் மனது பொங்கி பரவசமாகி விட்டது! ஆனால் இது போன்ற காட்சி அனுபவமே தங்கள் தியானத்துக்கு தடையாக இருக்கிறது என்றெழுதியிருந்தீர்கள். அது ஒன்றுதான் சற்று துணுக்குற செய்தது. ஆனால் தடை ஒன்றிருந்தாலும் முன் சென்ற உங்கள் வழி ஒன்று இருக்கும் அல்லவா என சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

சுபா

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

முந்தைய கட்டுரைநாவல் உரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉணர்வுகள், உன்னதங்கள்-கடிதங்கள்