கல்குருத்து- சிறுகதை
அன்புள்ள ஜெ
கல்குருத்து கதை விகடனில் வெளிவந்தபின் மீண்டும் இந்தத் தளத்தில் வாசித்தேன்.மிகச்சிறந்த கதை. கதையின் வடிவம் அற்புதமான ஒருமையுடன் வெளிவந்துள்ளது. இரண்டு கதைகள். ஒன்று கனிந்த பழங்களைப் பற்றியது. இன்னொன்று கனியப்போகும் இரண்டு பிஞ்சுகளைப்பற்றியது. பிஞ்சுகளில் கசப்பும் துவர்ப்பும் உள்ளது. ஆனால் அவை கனிந்துகொண்டிருக்கின்றன. அதைத்தான் கதை அற்புதமான படிமம் வழியாகச் சொல்கிறது.
கல்லில் அம்மி கொத்தும் அனுபவம். மெல்லமெல்ல கல் அம்மியாகிறது. மேடுபள்ளங்கள் அழிகின்றன. உரசும் மேடுகளை செதுக்கச்செதுக்க அது மென்மையாகிக்கொண்டே இருக்கிறது. அம்மியும் குழவியும் உறவாடி உறவாடி அவை வாழையிலைபோல ஆகிவிடுகின்றன. தளிர்மாதிரி மென்மையாக ஆகிவிடுகின்றன. அந்தக் கனிவை சொல்லிய கதை சமீபத்தில் ஆழமான மனநிறைவை அளித்த கதைகளில் ஒன்று. குமரித்துறைவியிலுள்ள அந்த நிறைவு அப்படியே இதிலும் நீடிக்கிறது.
சியாம்சுந்தர், கல்கத்தா
அன்புள்ள ஜெ
கல்குருத்து கதையை படிக்கப்படிக்க சிரிப்பும் நெகிழ்ச்சியுமாக இருந்தது. வயதான தம்பதிகள் வயதான நண்பர்கள் ஆகியோரைப்பார்ப்பதெல்லாம் மகிழ்ச்சியானதுதான். என் தாத்தாவும் அவர் நண்பரும் வாடா போடா என அழைத்துக்கொள்வார்கள். தாத்தாவுக்கு தொண்ணூறு நண்பருக்கு ஒருவயது குறைவு. பார்க்கப்பார்க்க சந்தோஷமாக இருக்கும். நான் என்ன நினைக்கிறேனென்றால் பொதுவாக நாம் அறிவதெல்லாமே தற்காலிகமான உறவுகளைத்தான். பெரிய அர்த்தம் எல்லாம் அதற்கு இல்லை என்று நினைத்துக்கொண்டிருப்போம். இப்படிச் சிலவற்றைப் பார்க்கையில் வாழ்க்கைமேலும் அதன் வேல்யூஸ் மேலும் நம்பிக்கை வருகிறது.
கல்குருத்து கதையிலுள்ள அந்த வயதான தம்பதியினரால் பேசிக்கொள்ள முடியவில்லை. காது போய்வுட்டது. ஆனால் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வெளியே நாம் கேட்கும் பேச்சுக்கு அர்த்தமில்லை. அவர்களின் ஆன்மாக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன. அது ஆழமான ஒரு பேச்சு. அம்மியும் குழவியும் வழுக்கிச் செல்கின்றன. ஆனால் அவை மிகமிக மென்மையாக ஒன்றையொன்று அறிந்துகொண்டே இருக்கின்றன
ராஜ்