வாசித்தல், கடிதம்

அன்புள்ள ஜெ,

வணக்கம்!

நூல்களை படிப்பதைப் பற்றிய பல குறிப்புகள் தளத்தில் உள்ளன. லாஓசி அவர்களின் ஒரு குறிப்பும் வெளியாகியுள்ளது. [தினமும் படிக்க வேண்டும், ஒரே நேரம் ஒரே இடம் நல்லது, படித்ததை சிந்திக்க வேண்டும், சிந்திப்பதன் வழிமுறைகள், குறிப்புகள் எடுக்காமல் அபுனைவை வாசிப்பது வீண், குறிப்புகள் எப்போதும் முழு சொற்றொடராக இருத்தல் அவசியம்…. இன்னபிற ]. முன்னொரு குறிப்பில் குரு நித்யாவிடம் இருந்து நூலின் சாரத்தை விரைவில் கிரகிப்பதற்கு கற்றதாக எழுதியிருந்தீர்கள். பத்தாயத்தில் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பவா அவர்கள் உங்களை அறிமுகப்படுத்தவும்(!) அதையேதான் சொன்னார். நூலை அப்படியே ‘தள்ளுவது’ எப்படி? (முழு உள்ளடக்கத்தையும் நினைவில் நிறுத்திக்கொண்ட பின்புதான்). விரிவாக எழுதினீர்கள் என்றால் பலருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

நன்றியுடன்

யஸோ தேவராஜன்

 

அன்புள்ள யசோ

 

நான் பலமுறை எழுதியதுதான். வழிமுறைகள் என நான் சொல்பவை நானே கண்டடைந்தவை. வாசிக்கும் இடம், நேரம் போன்றவற்றை வகுத்துக்கொள்ளுதல். வாசிப்பதற்குரிய மனநிலையை உருவாக்கிக் கொள்ளுதல். வாசித்தவற்றை தொகுத்து எழுதிக்கொள்வதன் வழியாக நினைவில் நிறுத்தல்

ஆனால் அனைத்துக்கும் அடிப்படையானவை இரண்டு. ஒன்று வாசிக்கையில் கவனம் சிதறாமல் இருப்பது. செல்பேசிதான் இன்றைய வாசிப்பின் மிகப்பெரிய தடை. அது செயல்பாட்டில் இருந்தால் வாட்ஸப் செய்திகள் குறுஞ்செய்திகள் வந்துகொண்டே இருக்கும். அவற்றை பார்த்துக்கொண்டே கவனமாகப் படிக்க முடியாது. படிக்கும் நேரம் வீணாகும்.

படித்தவை உட்னடியாக மறந்துபோகும் என்றாலும் படிப்பதனால் பயன் இல்லை. ஆகவே அவற்றை குறிப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை எவரிடமாவது பேசிப்பார்க்க வேண்டும். நான் நூல்களிடமும் மானசீகமாக விவாதிப்பவன். ஆகவே மறப்பதில்லை.

அரைக்கவனத்துடன் எதையும் செய்யாமலிருந்தாலே போதும். நிறைய செயலாற்ற முடியும். செய்யும் செயலில் முழுக்கூர்மையை செலுத்தவேண்டும் என்று நாமே முடிவுசெய்து அதற்காக முயன்றால் போதும். நமக்கான வழிமுறைகளை நாமே கண்டடைவோம்

ஜெ

வாசிப்பை நிலைநிறுத்தல்…

சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு

வாசகனும் எழுத்தாளனும்

முந்தைய கட்டுரைஎழுதுவதை பயில்தல்
அடுத்த கட்டுரைகுருவி, கடிதம்