தற்கொலைகள் – கடிதங்கள்

இன்றைய தற்கொலைகள்

அன்புள்ள ஆசிரியருக்கு

சமீபமாக பன்னீர் செல்வம் ஈஸ்வரன் அண்ணா கடிதம் எழுதி வருகிறார்.உங்கள் இடது புறம் உள்ளவர்.ஈரோடு வாசகர் சந்திப்பில் அண்ணாவை நேரில் சந்தித்தேன்.சொல்முகம் நிகழ்விற்கு வந்திருக்கிறார்.தொடர்ந்து உங்கள் படைப்புகள் வாசிப்பது அது குறித்து தன் அனுபவத்தை பகிர்வது என்று தொடர்பில் இருக்கிறார்.

உடலுக்கு அப்பால்,தற்கொலைகள் கேள்வி பதில் இன்றைய சூழலில்மிக முக்கியமாக தோன்றுகிறது.

நன்றிகள்.

குமார் ஷண்முகம்

அன்புள்ள ஆசானுக்கு ,

நலம் என்று நினைக்கிறேன்.என் வாழ்க்கையில் எப்போது எல்லாம் ஒரு குழப்பமான சூழல் வருகிறதோ அப்போது எல்லாம் .உங்கள் பதிவு அதை தெளிவாக்கிவிடுகின்றது.இதற்கு முன் பல முறை பல சிக்கல்கள் பற்றி உங்களுக்கு கடிதம் எழுத  எண்ணி இருந்த போது அடுத்த நாள் அதைப்பற்றி யாரோ ஒருவர் கேட்டிருப்பார்.உங்கள் பதிலும் எனக்கு ஏற்புடையதாக இருக்கும். அப்படி தான் உங்கள் இன்றைய தற்கொலைகள் பதிவும் . அதற்கு முன் இரவு தான் முதுநிலை நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்தது.நான் தேர்வில் மிக மோசமான மதிப்பெண் பெற்றேன்.

நான் சிறுவயதில் இருந்தே தேர்வுகளில் வெற்றி பெற்றே வந்ததால் இந்த தோல்வி  என் சுற்றத்தை தான் பாதித்து.எனக்கு இந்த முடிவுகள் பெரிய துக்கத்தை தரவில்லை. நான் சோர்வு அடையாததே கூட அவர்களுக்கு ஒரு ஆச்சரியமாக இருந்திருக்கலாம். என் நண்பர்களில் பலர் மிக பெரிய வெறுமைக்கு செல்வதை பார்க்கிறேன். ஒரு  தேர்வின் தோல்வி அவர்களை உடைக்கிறது இதற்கும் அவர்கள் அடிப்படைகள் எல்லாம் கற்ற மருத்துவர்கள் .அந்த தேர்வில் வென்றாலும் மீண்டும் மூன்றாண்டு மிக கடுமையான பயிற்சி தான் இருக்கும்.அதன் பின் மீண்டும்  ஒரு தேர்வு என்று அடுத்த இலக்கு. உங்கள் கட்டுரையில் கூறியது போல ” இளமையை  இழந்தவர்கள்” தான் நாங்கள் .

அந்த கட்டுரை வருவதற்கு முன்பாக இந்த கேள்வி மனதில் இருந்தது. ஒரு முதுநிலை படிப்பு ஏன் அவசியமான ஒன்றா என்று. அப்படி ஒன்று எனக்கு தேவையானது தான் என்று என் சமூகம் எனக்கு மூளையில் ஏத்திவிட்டு இந்த பந்தையத்தை வெற்றி பெற்றுவா என்று என்னை அனுப்பி வைக்கிறது.நானும் ஒன்றரை வருடம் இதன் பின்னால் ஓடி வெறுத்துவிட்டேன்.என் மனதுக்கு இதில் ஆர்வம் அற்று பல நாட்கள் ஆகிறது. உங்கள் கட்டுரை எனக்கு என் வழியை காட்டியதாக  உணர்கிறேன் ஜெ. இந்த ஒன்றரை வருடமும் இலக்கியம் கூட இல்லை என்றால் இந்த வருடத்தை நான் இழந்ததாகவே கருதி இருப்பேன். என் நண்பர்கள் போல  மிக பெரிய வெறுமைக்கு தான் சென்று இருப்பேன். அதில் இருத்து உங்கள் எழுத்து என்னை காக்கிறது…

நன்றி ,

பா.சுகதேவ்.

மேட்டூர்.

முந்தைய கட்டுரைவிந்தைகளுக்கு அப்பால்
அடுத்த கட்டுரைபெரியம்மாவின் சொற்கள், பிரதமன் – கடிதங்கள்