நமது விமர்சன மரபு

வ வெ சு அய்யர்

தமிழில் இலக்கிய விமர்சனம்

இலக்கிய விமர்சனம் என்பது…

அன்புள்ள ஜெ

வணக்கம்!

(உங்களுக்கு கடிதம் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
ஒவ்வொரு முறையும் என் கடிதம் உங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை பாழக்குமோ என்ற எண்ணம்.அப்படி ஒன்றும் நான் ஓய்வாகவும் இல்லை காலையில் 3:30 எழுகிறேன் நாள் முழுவதும் பணி இரவு 7:30 க்கு வீடு, 8:30 க்கு உறக்கம். ஆனால் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் நான் அதிகமாக வாசிக்கிறேன்.உங்களுக்கு எழுதவும் செய்கிறேன்.இவ்வளவு நாளாக இருந்த தயக்கம் எங்கே போனது என தெரியவில்லை. )

இலக்கிய விமர்சனம் பற்றிய சிறு அபிப்பிராயங்கள். தற்காலத்தில் இலக்கிய விமர்சகர் எனயாராவது இருக்கிறார்களா,வாசகன் அந்த விமர்சகரை பின்தொடர்ந்து இலக்கிய படைப்புகளை கைகொள்ள?ஏனென்றால் விமர்சனம் என நான் படித்தது எல்லாம் பழையவைதான்.

சுந்தர ராம சாமி எழுதிய ந. பிச்சமூர்த்தியின் கலை இலக்கிய திறன் ஆய்வு நூலை ஒரு முன்னோடி என சொல்வேன். அதாவது இலக்கியத்திறனை ஆராய்வது.அதற்கு பிறகு நீங்கள் தான் தெரிகிறீர்கள்.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது சந்திராவின் “அறைக்குள் இருக்கும் தனிமை “என்ற சிறுகதையை நீங்கள் பகுப்பாய்வு செய்தது , உங்களின் சொற்களாலே அந்த கதை என்னுள் ஆழ இறங்கியது.இப்படி எண்ணற்றதிறன் ஆய்வுகளை உங்கள் தளத்தில் காணலாம் .

க.நா,.சு

அப்படியிருக்க தமிழின் தற்காலத்தில் உள்ள குறிப்பிடதகுந்த eழுத்தாளர்களில் யார்யாரெல்லாம் வெண்முரசை பற்றி எழுதியிருக்கிறார்கள்.

நான் உங்கள் தளத்தில் காண்பதெல்லாம் வெண்முரசின் வாசகர்களால் எழுதப்படும் விவாதங்கள் தான்.ப. சரவணனை தவிர்த்து. தங்களின் ஆசிரியர்களானநாஞ்சில் நாடனையும் அ.முத்துலிங்கத்தையும் நாங்கள் (வாசகர்கள்) கணக்கில் வைப்பதில்லை.

ஒருவேளை டி.தருமராஜ் சொல்வது போல தமிழ் எழுத்தாளர்களுக்கும்,
ஆய்வாளர்களுக்கும்.வெண்முரசை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லையா ?இப்பொடி ஒரு நிகழ்வு தமிழிலோஇந்தியாவிலோ ஏன் உலகலவிலோ கூட நடந்திருக்காது தானே .

எட்டாண்டுகள் ஒரு படைப்பு தொடர்ந்து எழுதப்படுவதென்பது.
முந்நூறு பக்க நாவலொன்றை பத்தாண்டுகளாக எழுதிகொண்டிருந்தேன் என்பதல்ல இது.

ரகுபதி கத்தார்

செல்லப்பா

அன்புள்ள ரகுபதி,

இலக்கிய விமர்சனம் பலவகைப்படும். அழகியல் விமர்சனம். கல்வித்துறை விமர்சனம், கோட்பாட்டு விமர்சனம் என பொதுவாக ஒரு பகுப்பை நிகழ்த்திக்கொள்ளலாம்.

இது ஓர் அறுதியான பகுப்பு அல்ல. புரிந்துகொள்ளும் வசதிக்காக நாம் செய்துகொள்வது. அடிப்படை அணுகுமுறைகளைக்கொண்டு நாம் உருவாக்கிக்கொள்வது என்னும் தெளிவு நமக்கு தேவை.

சுந்தர ராமசாமி

அழகியல் விமர்சனம் என்பது படைப்பை ஒரு முன்னுதாரணமான வாசகராக நின்று வாசிப்பது. விமர்சகன் தன் வாழ்க்கையையும் அதுவரை வாசித்த நூல்களையும் கொண்டு அவற்றை புரிந்துகொள்வது. அதுவரையிலான இலக்கிய மரபின் பின்னணியை படைப்புக்கு அளிப்பது. இலக்கியப்படைப்பின் அடிப்படைத் தரிசனம், உணர்வுநிலைகள் ஆகியவற்றையும் அவற்றை வெளிப்படுத்தும் மொழி, வடிவம் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு மதிப்பிடுவது.

அழகியல் விமர்சனம் அகவயமானது. அதை முன்வைக்கும் விமர்சகனின் ரசனையே அதில் முதன்மையானது. அவனுடைய ஒட்டுமொத்தப்பார்வையே அந்த விமர்சனத்தின் அளவுகோல். கல்வித்துறை விமர்சனம்  கோட்பாட்டு விமர்சனம் ஆகியவை விமர்சனத்தை புறவயமாக ஆக்க முயல்கின்றன. அழகியல் விமர்சனத்தை தனிநபர் விமர்சனம் என நிராகரிக்கின்றன. பொதுவான புறவயமான அளவுகோல்களை கண்டடைய முயல்கின்றன.

பிரமிள்

கல்வித்துறை விமர்சனம் எப்போதுமே முறைமையை முன்வைக்கிறது. ஆய்வுக்கான புறவயமான நெறிமுறைகள் அவை. அதுவரையிலான கல்வித்துறை ஆய்வுகளின் நீட்சியாக அது அமைகிறது. படைப்பின் வடிவம், மொழி, காலம், உள்ளடக்கம் சார்ந்து பகுப்பாய்வுசெய்து தொகுத்து அட்டவணைப்படுத்துவதே அதன் வழிமுறை.

அதற்கு காலந்தோறும் பல வழிகள் உள்ளன. இலக்கியத்திற்குள் இலக்கண அணுகுமுறை, ஒப்பாய்வு  அணுகுமுறைகள் இருந்தன. அவை நுண்மொழியியல் [ microlinguistics ] என அழைக்கப்படுகின்றன

சென்ற முப்பபதாண்டுகளில் நவீன மொழியியல் ஆய்வுமுறைகள் வந்துள்ளன.இவை பொதுமொழியியல்  [Macrolinguistics] என்று அழைக்கப்படுகின்றன. இவை மொழி எப்படி பொருளை உருவாக்குகிறது எப்படி தொடர்புறுத்துகிறது என்று ஆராய்பவை. அவற்றின் அடிப்படையில் இலக்கியப்படைப்பு எப்படி பண்பாட்டுக்கூறுகளை உருவாக்குகிறது, அவற்றை அலகுகளாகக் கொண்டு தன் வடிவை அமைக்கிறது, எப்படி தொடர்புறுத்துகிறது, அதன் அர்த்த உருவாக்கம் எப்படி நிகழ்கிறது என்றெல்லாம் ஆராய்கின்றன.

வெங்கட் சாமிநாதன்

கல்வித்துறைக்குள்ளேயே நாட்டாரியல், மானுடவியல், சமூகவியல் போன்ற வெவ்வேறு தனி அறிவுத்துறைகள் உள்ளன. அவற்றின் கொள்கைகளை அளவீடுகளாகக் கொண்டு இலக்கியத்தை ஆராயும் போக்குகளும் கல்வித்துறை விமர்சனங்களாக உள்ளன

கல்வித்துறையின் முறைமையை கைக்கொள்ளாமல், நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையில் தர்க்கபூர்வமாக இலக்கியத்தை ஆராய்பவர்களையே கோட்பாட்டு விமர்சகர்கள் என்கிறோம். இவர்கள் அரசியல்கோட்பாடு, சமூகவியல்கோட்பாடு, மொழிக்கோட்பாடு என சிலவற்றை கற்று தங்களுடைய பார்வையை அவற்றின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவர்கள். அவற்றைக்கொண்டு இலக்கிய ஆக்கங்களை ஆராய்ந்து மதிப்பிடுபவர்கள். இவர்களின் ஒட்டுமொத்தமான பார்வையும் நிலைபாடுமே இவர்களின் விமர்சனங்களை உருவாக்குகின்றன.

டி.தர்மராஜ்
அ.ராமசாமி

இந்த ஒவ்வொரு தளத்திலும் முக்கியமான ஆய்வாளர்கள் உள்ளனர். கல்வித்துறை ஆய்வாளர்களில் க.பூரணசந்திரன், க.பஞ்சாங்கம், அ.ராமசாமி, டி.தருமராஜ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கோட்பாட்டு விமர்சகர்களில் இன்று செயல்படுபவர்களில் தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, ராஜ்கௌதமன் ஆகியோர் முதன்மையானவர்கள்.

க.பூர்ணசந்திரன்
எஸ்.வி,.ராஜதுரை

அழகியல் விமர்சனத்தை அழகியலுணர்வுள்ளவர்களே செய்ய முடியும். ஆகவே மிக அரிதாகவே படைப்பிலக்கியவாதிகள் அல்லாதவர்கள் அழகியல் விமர்சகர்களாக வருகிறார்கள். தன்னளவில் ஒரு நல்ல படைப்பை எழுதாதவரின் அழகியல் விமர்சனத்தை கவனிக்கவேண்டியதில்லை என்றே எஸ்ரா பவுண்ட் குறிப்பிடுகிறார்.

தமிழின் அழகியல்விமர்சனம் என்பது வ.வே.சு.அய்யர், ஏ.வி.சுப்ரமணிய அய்யர், ரா.சி.தேசிகன் போன்றவர்களால் தொடங்கப்பட்டது. ஆனால் க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்ற படைப்பிலக்கியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது. சுந்தர ராமசாமி, பிரமிள் போன்ற படைப்பிலக்கியவாதிகளால் வளர்க்கப்பட்டது. நானும் அவ்வரிசையில் வருபவனே. தமிழ்ப்படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் வகையில் கொஞ்சம் இலக்கியவிமர்சனமும் எழுதியிருப்பார்கள்.

ராஜ் கௌதமன்
தமிழவன்

படைப்பிலக்கியவாதி அல்லாத அழகியல்விமர்சகர் என்றால் வெங்கட் சாமிநாதன். ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார் ஆகியோரையே சொல்லவேண்டும். அவர்களையே நாம் விமர்சகர் என அறிந்திருக்கிறோம்.

ஆனால் தமிழில் விமர்சனம் என்பது ஒரு செயலூக்கம் கொண்ட களம் அல்ல. வெங்கட் சாமிநாதன் ஒருவரே நம்பிக்கையுடன் தொடர்ந்து அதில் ஈடுபட்டவர். தமிழ் விமர்சகர்களிலேயே ஏறத்தாழ முழுமையாக அனைவரைப்பற்றியும் எழுதிய விமர்சகன் நான் மட்டுமே. அது எவரும் வாசிக்கவில்லை என்றாலும் எழுதிவைப்போம் என்னும் உளநிலையின் விளைவு.

வேதசகாயகுமார்
ராஜமார்த்தாண்டன்

உண்மையில் ஓர் இலக்கிய வாசகன் அழகியல் விமர்சனத்தை மட்டும் கருத்தில்கொண்டால் போதும்.அவனுக்கு வாசிப்பதற்கான பயிற்சியை, ஒட்டுமொத்தப் பார்வையை அவையே அளிக்கும். அழகியல் விமர்சனத்தை அறிந்து, முழுமையான வாசிப்புக்குத் தேறியபின் தேவைப்பட்டால் பிற விமர்சனங்களுக்குள் செல்லலாம்.

ஏனென்றால் எளிய இலக்கிய வாசகன் கல்வித்துறை, கோட்பாட்டு விமர்சனங்களுக்குள் சென்றால் அவன் இலக்கியப்படைப்பை வாழ்க்கையின் ஒரு வடிவமாகப் பார்க்கும் நோக்கை இழப்பான். ஆய்வுப்பொருளாக காண ஆரம்பிப்பான். அது பெரும் வீழ்ச்சி. மீள்வது மிகக்கடினம்.

ஜெ

 

எஸ்.வையாபுரிப்பிள்ளை

 

முந்தைய கட்டுரைகவிப்பெரும்பழம்- கா.சிவா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா, வருக!