வணக்கம் ஐயா,
ஊரடங்கு காலத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.பொன்னியின் செல்வன் தொடங்கி ஐந்தாவது புத்தகமாக அறம் வாசித்தேன்.பாரதி பாஸ்கர் அவர்கள் அறத்தில் ஆச்சி கதாபாத்திரத்தினை விளக்கும் வகையில் காணொலி காட்சி யினை வலைதளத்தில் கண்டேன் அதன் மூலம் அறத்தினை படிக்க ஆர்வம் ஏற்பட்டது.ஒவ்வொரு மனிதர்களின் உண்மை கதையை படிக்கும் போது மனதில் ஒவ்வொரு விதமான மனநிலை ஏற்பட்டது.dr.k,கெத்தேல் சாகிப், அறம் ஆச்சி,100 நாற்காலிகள் காப்பன்,நெய்யலூர் மக்களின் பாசத்திற்குரிய சாகிப்பே,மத்துறு தயிர் பேராசிரியர், ராஜம்… நன்றி ஐயா புதிய மனிதர்களை அறிமுகம் செய்ததற்கு… மேலும் புதிய மனிதர்களின் உண்மை கதையை படிக்க அறம் இரண்டாம் பகுதியை எதிர்ப்பார்க்கும் புதிய வாசிப்பாளராக நானும் என் நண்பர்களும்
அழகுப்பிரியா
அன்புள்ள ஜெ
அறம் கதைகளை மீண்டும் இப்போது படித்தேன். தமிழகத்தில் நவீன இலக்கியத்தில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட கதைகள் என்றால் அறம் தொகுதியைத்தான் சொல்ல முடியும். அவற்றில் பல கதைகள் இன்று தொன்மங்களாகவே ஆகிவிட்டன. இத்தனைக்குப்பிறகும் இக்கதைகளை இன்று படிக்கையில் மீண்டும் மீண்டும் புதியவற்றைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம் என்பதே இக்கதைகளை ஆற்றல்மிக்க புனைவுகளாக ஆக்குகிறது
உதாரணமாக யானை டாக்டர். அந்த கதையில் கதைசொல்லும் அதிகாரிக்கும் குரங்குகளுக்குமான ஒர் உரையாடல் உள்ளது. அவரை காடு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் யானை டாக்டரை காடு ஏற்றுக்கொண்டு விட்டிருக்கிறது. அந்த நுட்பத்தை இப்போதுதான் கவனித்தேன். அறம் கதைகளைப் பற்றி பேசும் எவரும் மேலோட்டமாகவே பேசுகிறார்கள் என்றும் அவற்றின் உண்மையான ஆழம் சிலருக்கே தெரியவந்துள்ளது என்றும் படுகிறது
நட்புடன்
விவேக் சுப்ரமணியம்