அன்புள்ள ஜெ
இந்த கேள்வியை தங்களை நேரில் சந்திக்கையில் கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆயினும் எனக்கு அவ்வளவு பொறுமை காக்க முடியாததால் இந்த கடிதம்.
தற்போது இந்த வாரம் கவிதை பயிலரங்கு கோவையில் நடந்தது. இதே போன்ற பல அரங்குகளை வருடம் முழுவதும் ஒருங்கமைக்கிறீர்கள். இந்த அரங்குகளில் கலந்து கொள்வது பலரது புரிதலை, உத்வேகத்தை பெருமளவு மேம்படுத்தி விடுவதை பார்க்கிறேன். இவற்றில் நேரடியாக கலந்து கொண்டு அடைபவற்றை வேறெவ்வகையிலும் நிகர் செய்ய முடியாது என்று அறிகிறேன். உங்கள் அருகமர்ந்து கற்க கூடியவற்றை வேறெப்படி அடைய முடியும்!
இவற்றில் கலந்துகொள்ள என் உடற்குறையை பெரும் தடையாக உணர்கிறேன். இந்த வாழ்க்கை என்னை கண்டடைந்த கலைக்கு, அதில் என்னை முற்றளித்து கொள்ள பெரிய அனுகூலம் ஒன்றை கொடுக்கையிலேயே இப்படி ஒரு தடையை வைக்கிறது. இதை நான் எப்படி கடந்து வெல்வது ?
அதற்கான வழியை நானே தான் தேடி கண்டடைய வேண்டுமா ? தங்களிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டல் என்னை தெளிவுப்படுத்தும்..
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள சக்திவேல்,
உங்கள் உடல்நிலைச்சிக்கல் எனக்குத் தெரியும். நேரில் வந்திருந்தபோதும் இதைக் கேட்டீர்கள். நான் அப்போது ஒன்று சொன்னேன். உங்களுக்கு உடல்சார்ந்த வரையறைகள் உள்ளன. உடல்நிலை சிறப்பாக இருப்பவர்கள் எல்லாரும் விடுதலை கொண்டவர்கள் என்று அதற்குப்பொருள் இல்லை. ஒருநாளில் 18 மணிநேரம் வேலைசெய்தால் மட்டுமே வாழமுடியும் என்னும் நிலையில் இருப்பவர், பெரும் குடும்பப்பொறுப்புகளை வாழ்நாள் முழுக்க சுமப்பவர் உங்களைவிட சிறைப்பட்டவர்தான்.
அத்தகையவர்கள் என்ன செய்ய முடியும்? நேர்ச்சந்திப்புகள், இலக்கியக் கூடுகைகள், இலக்கியவிழாக்கள் மிக மிக முக்கியமானவை. இலக்கியத்தை ஓர் இயக்கமாக ஆக்குபவை அவைதான். நம்மைப்போன்ற பிறரை சந்திக்கிறோம். சமானமானவர்களுடன் உரையாடுகிறோம். நாம் இங்கிருக்கும் ஒரு தனிச்சமூகம் என்னும் உணர்வை அடைகிறோம். அத்துடன் இத்தகைய நிகழ்வுகளிலேயே நாம் தீவிரமாக இலக்கியம் போன்ற கலையில் முழுமூச்சாக நாள் முழுக்க திளைக்கிறோம். ஆகவே இவை தவிர்க்கக்கூடியவை அல்ல. ஆனால் இவற்றை அடையும் படியான வாழ்க்கைச்சூழல் அனைவருக்கும் இல்லை. பலர் வாழ்க்கையில் கட்டுண்டவர்கள்.
அவர்கள் செய்யக்கூடுவது ஒன்றே. அவர்கள் தொடர்ச்சியாக முயலவேண்டும். முடிந்தவரை நேர்ச்சந்திப்புகளுக்கான ஆர்வத்தையும் முயற்சிகளையும் தக்கவைக்கவேண்டும். ‘நம்மால் எப்படி முடியும்’ என சோர்வுநிலையை உருவாக்கிக்கொண்டு சாத்தியமான வாய்ப்புகளை நழுவவிடக்கூடாது. ‘அதெல்லாம் தேவையே இல்லை’ என்று போலிக்கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.
அப்படி என்றால் அதற்குரிய வாய்ப்புகள் அமையும். இணையான உள்ளம் கொண்டவர்களுடன் உரையாட இன்று பல வாய்ப்புகளை தொழில்நுட்பம் அளிக்கிறது. நாம் சூம் உரையாடல்களில் ஈடுபடலாம். குழுமங்களில் உரையாடலாம். எப்போதேனும் தனிப்பட்ட சந்திப்புகளை நிகழ்த்திக்கொள்ளவும் கூடலாம்.
அத்துடன், இந்த இழப்பு நமக்கு உள்ளது என்னும் பிரக்ஞை இருக்குமென்றால் அதை ஈடுகட்டும் அளவுக்கு விசையுடன் மற்ற தளங்களில் செயல்படலாம். நேர்ச்சந்திப்புகள் பல மாதங்களுக்கு நீளும் ஊக்கத்தை அளிக்கின்றன. அவை இயலாதென்பவர்கள் அந்த ஊக்கத்தை தாங்களே தங்கள் வாசிப்பின் வழியாக சிந்தனை வழியாக உருவாக்கிக் கொள்ளலாம். நம் மூளையின் மிகச்சிறப்பான ஓர் அம்சம் என்னவென்றால் நம்மால் நம் மூளையை மகிழ்ச்சியாகச் செயல்படவைக்கும் செரட்டோனின் போன்ற சுரப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதே. நம்மை நாமே ஊக்கப்படுத்த முடியும், செயலுக்குத் தூண்டமுடியும்.
குறிப்பாக உங்களைப்போன்ற வரையறைகள் உள்ளவர்கள் எந்நிலையிலும் தன்னிரக்கச் சிந்தனைகளுக்குச் செல்லக்கூடாது. செரட்டோனினைப்போலவே சோர்வை உருவாக்கும் சுரப்புகளையும் நாமே உருவாக்கிப் பெருக்கிக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தன்னிரக்கம் சார்ந்து பேசுபவர்களை தவிர்த்துவிடுங்கள். அக்குரல்களுக்கு உள்ளும் புறமும் இடமளிக்காதீர்கள். ‘ஊக்கத்துடன் செயல்படச்செய்யும் புறச்சூழல் எனக்கு இல்லை. ஆகவே என் அகம் ஊக்கத்துடன் இருந்தாகவேண்டும். எந்நிலையிலும் அதை தளர்வடைய விடமாட்டேன்’ என்று உங்களுக்கு நீங்களே ஆணையிட்டுக்கொள்ளுங்கள்
ஜெ