திருவெள்ளறை – கிருஷ்ணன் சங்கரன்

2019 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையும் இந்து சமய அறக்கட்டளை நடத்தும் அந்தக் கருத்தரங்குக்குச் சென்றிருக்காவிட்டால் எனக்கு திருவெள்ளறை என்ற பெயரே தெரிந்திருக்காது.ஸ்வேதகிரி என்கிற திருவெள்ளறை நூற்றுஎட்டு வைணவத்திருப்பதிகளில் ஒன்று. ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற தலங்களை விடப் பழமையானது. அதன் காரணமாகவே ஆதிவெள்ளறை என்றழைக்கப்படுவது.   இதுபோல தெரியாத தலங்கள்தான் எத்தனையோ? அன்று நடந்த கருத்தரங்கு திருவெள்ளறைக் கோயிலில் சமீபத்தில் நடந்த மறுசீரமைப்பு குறித்த ஒன்று. மறுசீரமைப்பைத் தலைமையேற்று நடத்திய குமரகுருபரன் ஸ்தபதி உரை நிகழ்த்தினார். அவரை அறிமுகம் செய்தவர் சென்னை ஐ ஐ டி கட்டுமானத்துறைத் தலைவர் அருண் மேனன். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தப் புராதனக் கோயிலை ஜெயபால் என்கிற ஒரு தனி மனிதர் தன் சகோதரரோடு உயிர்பெற்றெழச் செய்திருக்கிறார். இங்குள்ள கைவிடப்பட்ட பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்கோபுரம் தமிழகத்தில் ஹொய்சாள பாணியில் கட்டப்பட்ட ஒரே கோபுரம் என்று கருதப்படுகிறது. (வேணுகோபாலன் சந்நிதி, ஸ்ரீரங்கம் – சுற்றுச்சுவர், அடிக்கட்டுமானம் மட்டும் ஹொய்சாள பாணியில் அமைந்தவை.) ஜெயபால் ஒரு என்ஜினீயர். அவர், சென்னை ஐ ஐ டி, குமரகுருபரன் ஸ்தபதி என்கிற முக்கூட்டு முயற்சியால் இந்தக்கோபுரம் விழாமல் காக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு நிகழ்ந்தது என்று விளக்குமுகமாக இந்த உரை நிகழ்ந்தது.

தனக்குள்ளாகச் சிதிலமடைந்து சரிந்து கொண்டிருக்கும் கோபுரத்தின் உள்கட்டுமானத்தை சரிசெய்து, அதனை மேலும் எடைதாங்கக் கூடியதாக்கச் செய்வது முக்கியப்பணி. முற்றிலும் கைவிடப்பட்ட வெளிப்பிரகாரங்களை செப்பனிட்டு, இலுப்பை, புங்கை, கடம்பு போன்ற மரங்களை நட்டு, அங்கு மிகச் சிறந்த முறையில் ஒரு நந்தவனத்தை ஏற்படுத்தி தொடர்ந்து பாதுகாத்து வருவது இன்னொரு முக்கியப்பணி. இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி வாங்குவது, லட்சக்கணக்கில் தன் சொந்தப்பணத்தை செலவழித்து, கோபுரம் கட்டுவதற்கான பொருட்களை இந்தியாவெங்கும் பயணம் செய்து திரட்டுவது, பொத்தாம்பொதுவாகப் போடப்படுகிற வழக்குகளை எதிர்கொள்வது என்று பெருமாளைப் போல தசாவதாரம் எடுத்திருக்கிறார் ஜெயபால். வேலைகள் ஆரம்பித்து நடக்க நடக்க ஐம்பதுவருடத்திற்கு முந்தைய சில கட்டுமானங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. அதாவது முன்னிருந்தவர்கள் கோபுரம் விழாதிருக்க சிமெண்டால் செய்த ஒட்டுவேலைகள். இதையெல்லாம் நீக்கி பாரம்பரியக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு எப்படி உள்கட்டமைப்பு நிலைநிறுத்தப்படுகிறது என்று இந்தக் காணொளி விளக்கமாகக் காட்டுகிறது. பெருமாளை ஏழப்பண்ணுவது என்று கூறுவார்கள். அதாவது பெருமாளை அலங்கரித்து பல்லக்கில் அமர்த்துவது. இது பெருமாள் கோயில் கோபுரத்தை ஏழப்பண்ணுவதுதான்.

கோவிட் தொற்றின் காரணமாக வீடடைந்து கிடந்ததில் ஏதோ வாழ்க்கையே சூனியமாகத் தெரிந்த நேரத்தில், நண்பர்கள் ஏற்பாடு செய்த கொடைக்கானல் சுற்றுலாவில் கலந்துகொண்டு சிறப்பித்துவிட்டு வருகிறவழியில் திருச்சியில் இறங்கிக்கொண்டேன். அங்குள்ள முக்கியக் கோயில்களைப் பார்ப்பது திட்டம். முதல் கோயில் திருவெள்ளறை. காலையில் ஐந்தரை மணிக்கே  கிளம்பிவிட்டேன். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்தில் அண்ணாசிலையில் இறங்கி துறையூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். திருச்சி, சேலம், கோவை நகரங்களில் கடந்த இருபது வருடங்களாகப் பயணம் செய்ததில் மாறாத ஒன்று பேருந்துகளில் மிக அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்கச்செய்வது. இன்றும் அதேதான். நடத்துனரிடம் சொன்னால் ‘சில பாட்டு அந்த மாதிரி ‘ரெகார்ட்’ ஆயிருக்குதுங்கண்ணா, அடுத்த பாட்டுல சரியாயிரும்’ என்றார். நன்கு தயாரிக்கப்பட்ட பதில். அடுத்த பாட்டு முதல்பாட்டை விட சத்தமாக இருந்தது. நிச்சயமாக திவ்யதேசங்களுக்குப் போகும்போது கேட்டுக்கொண்டு போகும் பாடல்கள் அல்ல. மிஷ்கின் படங்களின் குத்துப்பாட்டு வரிசை. காலையின் அமைதி கெட்டது. கண்ணுக்கு இமைபோல காதுக்கு ஏதாவது இருந்தால் தேவலை என்றிருந்தது. எத்தனை சிறந்த பாடலாக இருந்தாலும் சினிமாப்பாடல் காலை எட்டுமணிக்குள் கேட்கக்கூடிய ஒன்றல்ல என்பதே என் எண்ணம். வரும் வழியில் மணச்சநல்லூரிலிருந்து திருப்பைஞ்ஞீலி (இறைவன்பெயர் ஞீலிவனநாதர், ஞீலி – வாழைமரம், தலவிருட்சம்) செல்லும் வழி தனியாகப் பிரிகிறது. அது ஒரு பாடல் பெற்ற சிவத்தலம். எல்லாப்பேருந்துகளிலும் திருப்பைங்கிளி என்று எழுதியிருந்தார்கள். அரைமணி நேரப்பயணத்தில் திருவெள்ளறை வந்து சேர்ந்தது. அப்பாடா…

திருச்சி துறையூர் சாலையில் மண்ணச்சநல்லூர் தாண்டி ஏழாவது கிலோமீட்டரில் திருவெள்ளறை. சற்றே பெரிய கிராமம். லேசான தூறல் போட்டு வாசல் தெளிக்கிற வேலையை இல்லாமலாக்கியிருந்தது. வானம் மழைமேகம் கோர்த்து சாம்பல் நிறத்தில் இருந்தது. சாலையின் இருபுறமும் நெடுக புளியமரங்கள். பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிமீ உள்ளே நடந்து சென்றால், செந்தாமரைக் கண்ணன் செங்கமலத்தாயாருடன் குடிகொண்டிருக்கும் புண்டரீகாட்சப்பெருமாள் கோயில். முதல்பார்வையிலேயே கோயிலின் பழமை தெரிந்து விடுகிறது. பழமையான அந்த மொட்டைக்கோபுரமே கம்பீரமாகத்தான் இருக்கிறது. இதன் உள்கட்டமைப்புதான் மீட்டுருவாக்கப்பட்டுள்ளது. ஒரு இருபது படி ஏறினால்தான் நுழைவாயிலை அடைய முடியும். இது போன்ற கோயிலை மலைக்கட்டுக்கோயில் என்கிறார் வேளுக்குடி கிருஷ்ணன். மேலே கட்டுமானப்பணி தொடரப்படவில்லை. வழக்கு முடியாமல் இருக்கலாம். பெரிய கோட்டைச்சுவர் போல நீண்ட நெடுஞ்சுவர். மிகப்பெரிய வெண்பாறைமலை மீது அமைந்த கோயில். அதை பிரகாரத்தில் நடக்கும்போதே உணரமுடிகிறது. ஆள், அரவம் இல்லை. நான் மட்டும்தான். புகைப்படம் எடுத்துக்கொண்டே பிரதட்சிணம் செய்தேன். பிரகாரத்திலேயே ஒரு ஆலமரத்தின் கீழ் கற்றளி. உள்ளே மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்த குகை. தொடர்ந்து மயில்களின் அகவலும், கிளிகளின் கீச்சிடலும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. நிறைய மரங்கள் கொண்ட மிகப்பெரிய நந்தவனம், காட்டுக்குள் இருப்பதுபோலவே இருந்தது. கோட்டைச் சுவர்மீது வரிசையாக அமர்ந்திருந்தன மயில்கள். பிரகாரத்தில் சிதறிக்கிடந்தன அவற்றின் எச்சங்கள்.

அர்ச்சகர் அப்போதுதான் கதவைத் திறந்து கொண்டிருந்தார். ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வந்திருந்தது. முதலில் ஆண்டாள் சந்நிதி. ‘இங்க தாயாருக்கே ஏச்சம். புறப்பாடோ, பூஜையோ தாயாருக்குத்தான் மொதல்ல’ என்றார். ஏச்சம், (ஏட்சமா? ஏற்றம் என்பதன் மரூஉவாக இருக்கலாம்) புதியவார்த்தை.  ‘பெருமாள் சந்நிதிக்கு வரவேண்டியவர் வரலை, நான்தான் வரணும்’ என்றார். அவருடனேயே நடந்து பெருமாள் சந்நிதியை அடைந்தோம். போகிற வழியில் சிவனுக்கு பிரம்மஹத்தி நீங்கியதைக் குறித்த ஒரு சுதைச்சிற்பம் இருந்தது. சைவக் கோயில்களில் வைணவக் கோயில்களையும், வைணவக் கோயில்களில் சைவக்கோயில்களையும் மட்டம் தட்டக்கூடிய ஏதாவது ஒரு வரலாறு இவ்வாறு வழங்கப்படுகிறது. சீர்காழியில் விஷ்ணுவை சட்டையாக அணிந்துகொண்ட சட்டநாதர் நினைவுக்கு வந்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையும் நினைவுக்கு வந்தார். பல கோயில்களுக்கு தலவரலாறு எழுதியவர் அவர். இது யாரோ அவருடைய மூதாதையாக இருக்கும். போகும் வழியில் ஒரு நுழைவாயிலில் குபேரனின் செல்வக்குவைகளான சங்கநிதி, பதுமநிதி இருவரும் துவாரபாலகர்களாய் நின்றிருந்தார்கள். உத்தராயணம், தட்சிணாயனம் என்று இரண்டு நுழைவாயில்கள் பெருமாள் சந்நிதிக்கு. ஆறுமாதத்திற்கு ஒரு நுழைவாயில்.

பெருமாள் சந்நிதியில் கர்ப்பகிருகத்தில் குடும்பசகிதமாக ‘குரூப் போட்டோ’ எடுத்துக்கொண்டிருப்பது போல ஒரே கூட்டம். அதாவது கடவுளர் திருக்கூட்டம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்ப் பெருமாள். கருத்த மேனியோடு நின்ற திருக்கோலம். கையில் பிரயோகச் சக்கரம். சந்திரர், சூரியர், ஆதிசேஷன், கருடன் பக்கத்தில்.   பெருமாளின் கல்யாண குணநலன்களை விளக்கிக்கொண்டிருந்தார் அர்ச்சகர். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தது. பெருமாள் சிபிச்சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்த தலம். மகாலட்சுமியும், மார்க்கண்டேய மகரிஷியும் தவம் செய்த தலம். எங்களாழ்வார் விஷ்ணுசித்தரும், மணவாள மாமுனிகள் உய்யக்கொண்டாரும் அவதரித்த திருத்தலம். செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிங்கப்பெருமாள்கோயில் நரசிம்மரைப் போல திடுக்கிடச்செய்யும் உருவ அமைப்பு இல்லை. சாந்தமான முகம்தான். ஆனால், பொதுவாக சமீப காலத்திய பெருமாள் கோயில்களில் இருப்பது போன்ற பளிச்சிட்டுத் துலங்குகிற முக அமைப்பு இல்லையென்பதே, இதன் புராதனத்தை தெரியப்படுத்துகிறது.

அடுத்தடுத்த கோயில்களுக்குச் செல்லும் அவசரத்தில் திருவெள்ளறை கோயிலில் நான் முக்கியமான ஒரு இடத்தைக் காணத்தவறிவிட்டேன். மகாலட்சுமி தவமிருந்த பூங்கிணறு. ‘ஸ்வஸ்திகா குளம்’ என்று அழைக்கப்படுகிறது. திரும்ப வந்து திருச்சிக்கு பேருந்துக்காக காத்திருக்கும்போதுதான் எதிரே இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் வழக்கமான நீலநிறப் பலகையை கவனித்தேன். வாய்ப்பு போனது போனதுதான். சாலையைக் கடந்து எதிர்ப்புறம் செல்வதற்குள் கண்முன்னால் ஒரு பேருந்தைத் தவறவிட்டிருந்தேன். ‘ஏன் யாரும் ஏறவில்லை?’ என்று அருகில் இருப்பவரைக் கேட்டேன். ‘இது எல்லாம் சாரதாஸ், மங்கள் & மங்கள்ல்ல வேலை பாக்குற பொண்ணுக. இப்ப கோபாலன் வருவான் பாருங்க. அவன்தான் கடைகிட்டயே எறக்கிவிடுவான்’ என்றார். பெருங்கூட்டம். ஐந்தே நிமிடத்தில் வந்த கோபாலன், மேலுதட்டில் மென்மயிர்ப் பரவலும், மருண்ட பார்வையுமாக கைபேசியோடு நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரையும் வாரிப்போட்டுக்கொண்டு போய்விட்டான். ‘ஆளொளிஞ்ச கோயிலிலே கல்விளக்காய் நின்னுஞான்’ என்ற மோகன்லாலின் பாடல் வரி திடீரென்று நினைவுக்கு வந்தது. அடுத்த வண்டி அரைமணி நேரம் கழித்தே வந்தது.

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைவெண்முரசெனும் புதுச்சொற்களஞ்சியம்- முனைவர் ப. சரவணன், மதுரை.
அடுத்த கட்டுரைஎழுத்து செல்லப்பா – உஷாதீபன்