நான் இதைப் பற்றி வெகு நாட்களாகவே சிந்தித்து வருகிறேன். தமிழக கல்வித் துறை தமிழ் பாட புத்தகங்களில் துணைப்பாடமாக சிறுகதைகளை வைத்துள்ளது. அதில் மு.வ வின் கதைகள், சமூகத்தைச் சீண்டாத ஜெயகாந்தன் மற்றும் புதுமைப்பித்தனின் கதைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. பள்ளி படித்து முடித்தபின்தான் தெரியவந்தது பாடப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளவை மூலக்கதைகளிலிருந்து சில பத்திகளை நீக்கிவிட்டு தரப்பட்டுள்ளவை என்று.
இம்மாதிரியான சிறுகதைகளை தேர்வில் ஒரு வினாவாக கேட்கிறார்கள்,” ‘சட்டை’ கதையை அதன் நயம் குறையாமல் இரண்டு பக்கங்களுக்குள் எழுதுக” என்று. என் சந்தேகம் யாதெனில் இரண்டு பக்கங்களில் நயம் குறையாமல் எழுதிவிட முடியுமென்றால் அதை ஜெயகாந்தனே எழுதியிருக்கமாட்டாரா? இப்படி ஒரு சிறுகதையை சுருக்கி எழுதுவதில் என்ன பயன்? அவ்வாறு விடை எழுதும் பொழுதும் அதற்கு பல உட்தலைப்புகள் இட்டு, கதைமாந்தர்கள் எழுதி எழுதவேண்டும் என்கிறார்கள். இப்படி ஒரு கதையை வெட்டி (dissect) துண்டங்களாக எழுதி என்ன நிகழப்போகிறது?
மறுமுறை யோசிக்கையில் வேறு விதமாகவும் தோன்றுகிறது. இன்று பொறியியல் கல்லூரியில் படிக்கும் என் சக நண்பர்களுக்கு தெரிந்த தமிழ் எழுத்தாளர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் தான். அவர்களும் இம்மாதிரியான பாடப்புத்தக சிறுகதைகளின் மூலம் அறிமுகமானவர்கள். அப்படி இருக்க பாடப்புத்தகங்களிலிருந்து அந்தக் கதைகளை நீக்கிவிட்டால், அவர்கள் கல்கியின் பெயரை மட்டுமே சொல்லக்கூடும். இப்படி ஒரு கதையை சுருக்கி எழுதுவது எழுத்தாளரை அவமதிக்கும் செயல் என்று தோன்றுகிறது. அக்கேள்வி இல்லையெனில் தமிழில் யார் எழுதுகிறார்கள் என்று பலருக்கு (வாசகர் அல்லாதவர்கள்) தெரியாமலே போய்விடும் என்றும் தோன்றுகிறது. எதிலும் சமாதானம் இல்லை. விளக்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன்,
சீரா
அன்புள்ள சீரா
இது ஒரு முக்கியமான கேள்வி. வழக்கமாக இத்தகைய கேள்விகளுக்குச் சில தயார்நிலை பதில்கள் உண்டு. ஆனால் அவற்றைப் பற்றி நடைமுறை சார்ந்து யோசிக்க ஆரம்பித்தால் ஆழ்ந்த சிக்கல்கள் தோன்றுகின்றன
நமது கல்விமுறை – தேர்வுமுறை என்பது சுயசிந்தனைக்கு உரியது அல்ல. ஆசிரியர்கள் அதற்குப் பயிற்றுவிக்கப்பட்டவர்களோ அல்லது தகுதியானவர்களோ அல்ல. நம் ஆசிரியர்களில் இலக்கிய அறிமுகம் என எதேனும் உடையவர்கள் மிகமிகச் சிலரே. அந்நிலையில் இலக்கியப்படைப்புகளை எப்படி பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்க முடியும்?
ஓர் இலக்கிய ஆக்கத்தைப் பற்றி மாணவன் தன் கருத்தை எழுதச்சொன்னால் அதை எப்படி புறவயமாக மதிப்பிட முடியும்? அதை மதிப்பிடும் தகுதி அனைத்து ஆசிரியர்களுக்கும் இருக்கவேண்டுமே. ஒரு படைப்பூக்கம் கொண்ட பதில் மாணவனால் அளிக்கப்படுகிறது. அது ஒன்றும் புரியாத ஆசிரியர் கையில் வந்தால் அவர் எப்படி மதிப்பெண் போடுவார்?
ஆகவே இங்கே கேள்வி பதில் இரண்டுமே தரப்படுத்தப்பட்டு வரையறை செய்யப்படவேண்டும். விடைத்தாளில் இந்த வகையான பதில் இருந்தால், இன்னின்ன விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தால் இவ்வளவு மதிப்பெண்கள் அளிக்கப்படவேண்டும் என்னும் ஆணை அளிக்கப்பட்டிருக்கவேண்டும். அந்நிலையில்தான் புறவயமான மதிப்பெண் அளிக்கப்பட இயலும்.
அதற்குரிய கேள்விதான் நீங்கள் சொன்னது. ஒரு கதையை சில ‘பாயிண்டுகளாக’ சுருக்குவது. கதாபாத்திரங்கள், சூழல் பற்றிய தகவல்கள். கதையின் பேசுபோருள் சார்ந்த சில கருத்துக்கள். அந்த புள்ளிகள் விடையில் தொடப்பட்டிருந்தால் மதிப்பெண்கள் அளிக்கப்படும். இந்தத் தேர்வுமுறைக்கு இது ஒன்றே வடிவமாக இருக்கமுடியும்.
அமெரிக்காவில் ஓர் இலக்கியப்படைப்பை வாசிக்கும் குழந்தை வகுப்பில் அதைப்பற்றிப் பேசும்படி சொல்லப்படுகிறது. அது பேசுவதை மற்றகுழந்தைகள் மதிப்பிடுகின்றன. அதையொட்டி அந்த ஆசிரியை மதிப்பெண்கள் வழங்குகிறார். அது அகவய அணுகுமுறை. வகுப்பின் தரம், ஆசிரியையின் திறன் ஆகியவற்றைச் சார்ந்தது. அது இங்கே சாத்தியமா என்ன?
இங்கே கல்வியில் எந்தவகையான அகவய மதிப்பீடுகளும் சரியாக வராது. இண்டெர்னல் மார்க்ஸ் எப்படி நம் கல்விநிலையங்களில் அளிக்கப்படுகிறதென நாம் அறிவோம். பெரும்பாலும் அது மாணவன் ‘சொன்னபேச்சு’ கேட்டு இருந்தால் அளிக்கப்படுகிறது. சாதி பார்த்து அளிக்கப்படுகிறது. எந்த மதிப்பீடும் இல்லாமல் குத்து மதிப்பாக அளிக்கப்படுகிறது. எந்த ஆசிரியரும் அதில் அக்கறையே காட்டுவதில்லை. இதுதானே நடைமுறை?
இந்நிலையில் இலக்கியப்படைப்புக்களை பாடமாக வைக்கத்தான் வேண்டுமா? நீங்கள் சொன்னதுபோல அவ்வாறு பாடநூலில் இடம்பெற்றவர்களே அடுத்த தலைமுறைக்கு அறிமுகமாகிறார்கள். அவர்களை மட்டுமே பரவலாக சமூகம் அறிந்திருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பெயர்கள் அறிமுகம் ஆகின்றன. அவர்களில் சிலநூறுபேர் பின்னாளில் அந்நூல்களை வாசிக்கிறார்கள்.ஆகவே பாடநூல்களில் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் அறிமுகமாவது நன்று.
இது ஒரு பொதுப்பதில். ஆனால் ஆச்சரியமான நடைமுறை உண்மை ஒன்று உண்டு. அவ்வாறு கல்விமுறை வழியாக அறிமுகமாகும் படைப்பாளி மேல் ஓர் உதாசீனம் மாணவர்களிடையே உருவாகிறது. அவர்களை ‘ஏற்கனவே தெரிந்தவர்கள்’ என நினைக்கிறார்கள். ஆர்வத்துடன் தேடி வாசிப்பதில்லை. பாடத்திட்டத்துக்குள் வாசிப்பது, வெளியே வாசிப்பது என இரண்டு வகை வாசிப்பு உண்டு. இலக்கியம் வெளியே உள்ள வாசிப்பாகவே கொள்ளப்படுகிறது. பாடத்திட்டம் மீதான அதிருப்தியே சில மாணவர்களை தேடித்தேடி வாசிக்க வைக்கிறது. அவர்கள் பள்ளி கல்லூரிகளில் ஏற்கனவே பெயர் தெரியவந்தவர்களை நாடி வாசிப்பதில்லை.
புதுமைப்பித்தன் 1980 வரைக்கும் கூட எந்தப்பாடங்களிலும் இல்லை. ஆனால் திரு.வி.கவும் சி.என்.அண்ணாத்துரையும், ரா.பி. சேதுப்பிள்ளையும், மு.வரதராசனாரும் பாடத்திட்டத்தில் இருந்தனர். ஆகவே அன்று புதுமைப்பித்தன் தேடித்தேடி வாசிக்கப்பட்டார். பாடத்திட்டத்தில் இருந்தவர்கள் பாடம் எழுதியவர்களாக மட்டுமே கருதப்பட்டனர், அனேகமாக அவர்களுக்கு வாசகர்களே இல்லை. இன்றும் அப்படித்தான். மு.வரதராசனாரின் நாவல்கள் பாடநூல்களாக அச்சிடப்பட்டு வந்தபடியே இருக்கின்றன. வாசகர்கள் என எவரையாவது பார்த்திருக்கிறீர்களா?
ஆனால் பாடத்துக்குள் நுழைந்ததும் புதுமைப்பித்தன் மீதான கவற்சி இல்லாமலாகியது. நவீனத்தமிழிலக்கியச் சூழலில் புதுமைப்பித்தனை வாசிக்காத இளைய தலைமுறை இருப்பது இப்போதுதான். பலர் ஒரு கதைகூட வாசித்ததில்லை என்பதை கண்டு திகைப்படைந்திருக்கிறேன். ஜெயகாந்தனுக்கும் இதே நிலைதான்.
இதை சுந்தர ராமசாமி உணர்ந்திருந்தார். பாடநூல் அறிவுத்தேடல் கொண்டவர்களுக்கு ஓர் ஒவ்வாமையை உருவாக்குகிறது என்று அவர் சொல்வார். அதன் அச்சுமுறையே நுண்ணுணர்வுகொண்டவர்களை விலக்குவது. அதன் கேள்விபதில் கட்டமைப்பே குமட்டல் வரவழைப்பது என்பார்.
நான் அன்று பாடநூலாக இருக்கும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் கைடுகளை நாகர்கோயில் பழைய புத்தகக்கடையில் வாங்கி அவற்றையே படிப்பேன். அவற்றில் சொற்பொருள், பொழிப்புரை எல்லாம் இருப்பதனால் எளிதாக படிக்கமுடியும். இல்லையேல் அகராதியைப் புரட்டியே சலிப்புறுவோம். அப்படித்தான் நான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பெரும்பாலானவற்றை ஆழ்ந்து பயில முடிந்தது.
ஆனால் சுந்தர ராமசாமி அந்நூல்களை கண்ணால் பார்க்கவும் கூசுவார். “தூக்கி அப்டி வீசுங்க…நாத்தம்” என்பார். “எப்டி அச்சுபோட்டிருக்கான் பாருங்க, அசடு” என்று குமுறுவார். தன் கதைகள் பாடநூல்களாக ஆகக்கூடாதென்பதில் உறுதியாகவும் இருந்தார். அவர் கல்வித்துறை ஆசாமிகளைப்பற்றி எழுதிய மேஸ்திரிகள் என்னும் கவிதை புகழ்பெற்றது.
ஆனால் பின்னர் காலச்சுவடு பெரும் பதிப்பியக்கமாக ஆனபோது சுந்தர ராமசாமி கல்லூரிகள் தோறும் பாடமானார். தமிழில் அதிகமாக கல்வித்துறைக்குள் சென்ற நவீன எழுத்தாளர் சுந்தர ராமசாமியே என்பது பெரிய முரண்நகை. அவரே தன் மகனின் நிறுவனம் பொருளியல் ரீதியாக வேரூன்றவேண்டும் என்னும் நோக்கத்துடன் அதற்கு முன்முயற்சி எடுத்தார். அவருடைய படைப்புகளின் சாணித்தாள் பாடநூல்கள் இன்று நைந்த பழையபிரதிகளாக அதே ஷேக்ஸ்பியர் கைடுகள் விற்ற நபர்களால் விற்கப்படுகின்றன.
தமிழில் நவீன எழுத்தாளர்களில் பாடங்களில் இடம்பெற்றவர்கள் இலக்கிய ரீதியாக மதிப்பிழந்திருப்பதை காணமுடிகிறது.சுந்தர ராமசாமி அடுத்த தலைமுறையினரால் போதிய முக்கியத்துவம் அளித்து வாசிக்கப்படுவதில்லை – சுந்தர ராமசாமியை விடாது வலியுறுத்தும் காலச்சுவடு தமிழிலக்கியத் தளத்தில் ஒரு பெரிய நிறுவனமாக திகழும்போதுகூட.
நான் ஓர் எழுத்தாளனாகவும் விமர்சகனாகவும் காலச்சுவடை விட கூடுதலாக சுந்தர ராமசாமியை தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த தளத்தில் அவர் பேசப்படாத மாதமே இல்லை. ஆனாலும் இளம் வாசகர்களிடையே அவரைப்பற்றிய தேடலும் கவனமும் இல்லை. அவருக்கே அந்நிலை என்றால் தோப்பில் முகமது மீரான் போன்று பாடநூல்களில் வாழும் நவீன ஆசிரியர்களைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்.
நான் என் நூல்கள் வாசகர்களால் தேடி வாசிக்கப்படவேண்டும், அவை வாசகர்களைத் தேடிச்செல்லக்கூடாது என நினைக்கிறேன். ஆகவே பாடநூல்களாக்குவதற்கு எதிராக உள்ளேன்.ஆனால் யானைடாக்டர் பாடத்திட்டத்தில் உள்ளது, அதன் சுருக்கமான வடிவம். நான் அதற்கு தயங்கியபோது சிறில் அலெக்ஸ் அதற்கு வற்புறுத்தி என்னை ஏற்கச் செய்தார். அது டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை ஒரு பொது ஆளுமையாக தமிழ்ச் சமூகமனதில் நிலைநிறுத்தும் என்றார். அதைச் செய்வது என் கடமை என்றும், அதை இலக்கியப்பாடமாக கருதவேண்டியதில்லை என்றும் வாதிட்டார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.
இப்படித்தான் நிலைமை இருக்கிறது. யானைடாக்டரின் சுருக்கம் வழியாக என்னை தெரிந்துகொண்டு என்னை மதிப்பிடும் ஒரு திரள் உருவாவதை என்னால் ஒன்றும் செய்யமுடியாது. அது ஒரு சமரசம்தான்.
ஜெ