அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பொதுவான சினிமா மற்றும் ஊடக பேச்சுகளில் அடிப்படும் வாக்கியம் அடித்தட்டு மக்களுக்கான விடுதலை கல்வியில் தான் இருக்கிறது, கல்வியே மனிதனை சிந்திக்க வைக்கும், அதுவே தனிமனித உணர்வை உருவாக்கும், அதன் மூலமே அனைத்து கட்டுகளில் இருந்தும் விடுதலை அடையமுடியும் என்பது. அதே நேரத்தில் மரபான பாரம்பரியம், கலை மற்றும் அறிவு ஆகியவைகளை பேணுதலும் வலியுறுத்தப்படுகிறது. அதுவே நமது அடையாளம் எனவும் சொல்லப்படுகிறது.
இது மிகப் பெரிய முரணாக இருக்கிறது. கல்வி அனைத்தையும் ஒற்றைப்படையாக ஆக்கும். அதுவும் நம் ஆங்கில வழிக் கல்வியின் ஒரே குறிக்கோள் அனைவரையும் மையச் சமூகமாக மாற்றுவது. அது மரபான அறிவை முற்றாக அழிக்கும். கல்வி மட்டுமே ஒரே தீர்வு என வலியுறுத்திய அம்பேத்கர் இந்த மரபான அறிவை குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என தெரியவில்லை (அவரைப் பற்றி ஒரு பொட்டுக்கூட படிக்கவில்லை), ஆனால் இன்று நாம் வெகுவாக மரபு குறித்த சிந்தனை தாக்கம் பெற்றுள்ளோம். மரபை முழுதாக துண்டிப்பது சிந்தனை செயல்பாட்டிற்கே எதிரான போக்கு என்று வாதாடும் அளவுக்கு வந்துள்ளோம்.
அனேகமாக நிலம் சார்ந்து எழுதப்பட்ட அனைத்து தமிழ் இலக்கிய ஆக்கங்களும் மரபான அறிவை முன்வைத்தே பேசுகின்றன. அதன் அழிவை பெரும் மானுட இழப்பாக முன்வைக்கின்றன. விவசாயம் சார்ந்த, கடல் மீன்பாடுகள் சார்ந்த, காடு சார்ந்த, தேர் செய்வது, பானை குயவுவது என எந்த மரபான கலை மற்றும் அறிவுச் செயல்பாட்டையும் நமது ஆங்கில கல்வி முழுமுற்றாக அழிக்கவே செய்யும். செய்தும் இருக்கிறது. ஜோ டி குருஸ் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் இதையே பெரும் திரளாக முன்வைக்கிறது. பரதவர்களின் கடல் ஞானம் இயந்திரங்களால் புறக்கனிக்கப்பட்டதை, வியாபாரம், ஆங்கில கல்வி என சிதைந்ததை கூறுகிறார். ஜெயமோகனின்(உங்களின்) பல கதைகளில் அறிவியல் எப்படி மரபான அறிவை வென்றது என்று எழுதியிருக்கிறீர்கள். ஒரு தலைமுறையில் மருத்துவ அறிவு மறக்கடிக்கப்பட்ட நாவித சமூகம் தனது மருத்துவ அறிவை இழந்து வெரும் நாவிதர்களாகவே வரலாற்றில் மிஞ்சியதை சுளுந்தி பேசுகிறது. பல தலைமுறை ஞானத் திரட்டை அழிக்க ஒரு தலைமுறை போதும் போல.
கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியோ அவசியம் பற்றியோ நான் இங்கு ஏதும் பேசப்போவதில்லை, அது பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டது. என்னுடய சந்தேகம் இதைச் சமன் செய்ய முடியுமா என்பதே. அனைவருக்கும் ஆங்கில வழிக் கல்வியும் அதே வேளையில் மரபான அறிவும் சாத்தியமா? கல்வி மட்டுமே ஒரே தீர்வு எனத் திரும்பத் திரும்ப முன்வைப்பது பிரச்சனையை எளிமையாக்கி எஸ்கேப்பிஸமாக தெரிகிறதே. உண்மையில் மனிதனாகப் பிறந்த அனைவரும் அறிவை கல்வியில் மட்டுமே அடையவேண்டுமா? நன்கு படித்து முடித்து வாழ்க்கையில் செட்டிலாகியப் பிறகு காட்டைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை, கடலைப் பற்றி ஒன்று தெரியவில்லை அனைத்தையும் இழந்தாயிற்று என புலம்புவதற்கு படிக்காமல் அந்த தொழிலையே செய்துகொண்டிருக்கலாமே?
இதற்கு வைக்கும் எதிர் வாதம் குப்பை அள்பவன் குப்பை மட்டுமே அள்ளிக் கொண்டிருக்கவேண்டுமா, நரிக்குறவர்கள் பாசி, காடை, கெளதாரி விற்றுக்கொண்டிருக்க வேண்டுமா, பறை அடிப்பவன் பறை மட்டுமே அடித்துக் கொண்டிருக்க வேண்டுமா, பாடை கட்டுபவன் பாடை மட்டுமே கட்டிக்கொண்டிருக்க வேண்டுமா, இருளர் பாம்பை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமா என்பதாகவே இருக்கிறது. எனது சந்தேகம் பாம்புக் கடிக்கு இருளர்களிடம் வழி வழியாக வரும் மருத்தவ அறிவை என்ன செய்வது, நரிக் குறவர்களின் நாடோடி வாழ்வை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? அவர்களும் ஜீன்ஸ் டி-ஷர்ட்டு சிவகார்த்திகேயன் சினிமா என வாழ்க்கையை வாழ வேண்டுமா.
அதேவேளையில் ஜெயமோகனைப் போல எழுத்தாளன் ஆவதற்கோ எலான் மஸ்க்கைப் போல அறிவியலில் வாழ்வதற்கோ கல்வி அவசியமே, ஆனால் அவர்களின் அந்த நிலையை எட்ட மரபான அறிவின் பங்களிப்பு இருந்திருக்குமேயானால் (இல்லாதிருந்தாலும்) அதை எப்படி பேணுவது?
இப்படிக்கு
ஆனந்த்ராஜ்
***
அன்புள்ள ஆனந்த்ராஜ்,
இந்தக் கேள்வி இன்று மட்டும் நான்குபேரால் எழுப்பப்பட்டுள்ளது. இப்படி கேள்வி எழுப்புபவர்களில் பெரும்பாலும் எவருமே அவர்களின் பாரம்பரியப்படி வாழ்பவர்கள் அல்ல. தங்கள் மரபை, குலத்தொழிலை விட்டுவிட்டு நவீனக் கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்புடன் உயர்நிலை வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்தான் அவர்கள். இந்தக்கேள்வியை கேட்க தகுதி கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மரபின் ஞானத்தை பேணும்படி அமைத்துக்கொண்டவர்கள், அதில் வெற்றிகரமாக வாழ்பவர்கள் மட்டும்தான் இல்லையா?
யோசித்துப்பாருங்கள், இங்கே நம் மரபார்ந்த ஞானத்துக்கு இன்று என்ன உலகியல் மதிப்பு இருக்கிறது? அதை நம்பி வாழ்பவர்கள் எந்த வகையான பொருளியல் வாழ்க்கையை வாழமுடியும்? பாம்புபிடிப்பதை விடுங்கள். பொற்கொல்லர்கள் எப்படி வாழ்கிறார்கள்? பாரம்பரிய மீனவர்களின் வாழ்நிலை என்ன? நீங்கள் நாவிதர் எவரிடமாவது மருத்துவம் செய்துகொண்டது உண்டா? சரி, பாரம்பரியத் தொழில்புரியும் அர்ச்சகர்களின் நிலைமை என்ன? அவர்கள் நம் சூழலின் சமூக அதிகாரத்தின் உச்சத்தில் நிற்கவேண்டியவர்கள், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
இந்நிலையில் பாரம்பரிய அறிவு அழிகிறது என்றெல்லாம் பேசுவது ஒரு வன்முறை. பாரம்பரிய ஞானம் பேணப்படவேண்டும், ஆகவே நீங்கள் சென்று வறுமையிலும் இழிவிலும் தேங்கி வாழுங்கள் என்று இன்னொருவரிடம் கூறும் கீழ்மை. அதுதான் சமூகநீதி பேசுபவர்களால் சுட்டப்படுகிறது. இதைப்புரிந்துகொள்ள மிக எளிமையான ஒரு நேர்மை இருந்தால் போதுமானது.
ஒன்று நினைவில்கொள்ளுங்கள். பாரம்பரிய ஞானம் என்பது சென்றகால பழங்குடிவாழ்க்கை, நிலவுடைமைக்கால வாழக்கையுடன் இணைந்தது. அந்தக் காலகட்டம் இன்று இல்லை. இது முதலாளித்துவ யுகம். தொழில்மயம்,பெருநுகர்வு, உயர்தொழில்நுட்பம், பெருவணிகம் திகழும் காலகட்டம். இன்று பழங்குடியாகவும் நிலஅடிமையாகவும் வாழ்பவர்கள் தேங்கி நின்றுவிட்டவர்கள், சமகாலத்தால் கைவிடப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்நூற்றாண்டு அளிக்கும் எந்த வசதிகளும் கிடைக்காது. உணவு, மருத்துவம் எல்லாமே மறுக்கப்படும். அவர்கள் அழிவார்கள். இன்றைய காலகட்டத்திற்குரிய கல்வி, தொழில், தொழில்நுட்பம், வணிகம், அரசியல் ஆகியவற்றுக்குள் வருபவர்களே வெற்றிபெறுவார்கள். வாழ்க்கையை அடைவார்கள்.
மரபார்ந்த ஞானம் அழியலாகாது என்றால் என்ன செய்யவேண்டும்? அவற்றை இன்றைய காலகட்டத்திற்கு கொண்டு வரவேண்டும். இந்தக் காலகட்டத்திற்கு வந்த ஒன்று மட்டுமே இன்று பயனுள்ளதாக இருக்க முடியும். அதுதான் உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. சென்ற காலகட்டத்தில் மரபார்ந்த ஞானம் குலப்பாரம்பரியமாக கைமாற்றம் செய்யப்பட்டது. இனக்குழுக்களுக்குள் பரிமாற்றம் செய்யப்பட்டது. பழங்குடி வாழ்க்கையிலும் நிலவுடைமைக்கால வாழ்க்கையிலும் பிறப்பு அடிப்படையிலான குடிவழி மரபும் குலவழி மரபுமே இயல்பானவையாக இருந்தன. இன்றைய யுகத்துக்கு அந்த முறை எவ்வகையிலும் பொருந்துவது அல்ல. ஆகவே இன்று எந்த ஞானமும் ஒரு சாராரிடம் பிறப்பு அடிப்படையில் திகழவோ, கைமாற்றம் செய்யப்படவோ இயலாது.
இன்று அந்த ஞானம் புறவயமாக்கப்படவேண்டும். ஆவணப்படுத்தப்படவேண்டும். அவற்றை அறிவியலாக ஆக்கி அனைவருக்கும் கற்பிக்கும் அமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். ஆர்வமுள்ளவர்கள் கற்று அதில் நிபுணர்களாக உருவாகவேண்டும். அவ்வாறுதான் இதில் முன்னோடியான சீனா செய்கிறது. ஆகவே சீனப்பாரம்பரிய மருத்துவத்துக்கு நோபல்பரிசு கிடைத்துள்ளது. நம் அருகிலேயே கேரளத்தில் அது நிகழ்கிறது. பளியர்கள் முதலிய பழங்குடிகளின் காடுசார்ந்த ஞானம் நிபுணர்களால் இன்று பதிவு செய்யப்படுகிறது. அவர்களின் தாவரவியல் அறிதல்கள் ஆவணப்படுத்தப்பட்டு சர்வதேசக் காப்புரிமைகளே பெறப்பட்டுள்ளன. அதுவே இச்சூழலில் மரபார்ந்த ஞானத்தை அழியாமல் காக்கும் வழி.
இதை பாம்புபிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல அர்ச்சகர்களுக்கும் சொல்கிறேன். மரபுசார் அர்ச்சகர்கள் அப்படியே நீடிக்கவேண்டும் என்றால் அவர்கள் வறுமையில் பழைமையான வாழ்க்கையில் நீடிக்கவேண்டும் என்றே பொருள். அவர்களிடமுள்ள பண்பாட்டுக்கூறுகள் காலத்தில் நீடிக்கவேண்டுமென்றால் அவை புறவயமாக்கப்பட வேண்டும். கேரளத்தின் பூசனைமுறை தாந்த்ரீகம் சார்ந்தது. மிகுந்த ரகசியச் சடங்குகள் கொண்டது. அவற்றையே முறையான தாந்த்ரீகப் பள்ளிகள் வழியாக அனைவருக்கும் கற்பித்து, அனைவரிலும் இருந்து பூசகர்களை உருவாக்கிப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். வேறுவழியே இல்லை. இந்தக் காலகட்டத்தின் வழிமுறை இது ஒன்றே. எல்லா ஞானமும் பொதுவானதாக, புறவயமானதாக வந்தாக வேண்டும். எதுவும் பிறப்புசார்ந்து வரையறை செய்யப்பட இயலாது. அந்த ஞானத்துக்கு சந்தை மதிப்பும் அறிவுலக மதிப்பும் அவ்வண்ணமே உருவாகும். அந்நிலையிலேயே அதைச்செய்பவர்களுக்கு பொருளியல் நலனும் சமூக இடமும் உருவாகும்.
நீங்கள் கல்வி பற்றி கேட்டதை இதனுடன் சேர்த்துக் கொள்கிறேன். இங்கே கல்வி என்று சொல்லப்படுவது எது? நவீன முதலாளித்துவச் சமூகச்சூழலுக்குரிய அறிவுத்துறைகள் அனைத்துக்குள்ளும் நுழைவதற்கான பொதுவான பயிற்சியையே இங்கே கல்வி என்கிறோம். பொதுவாக வரையறை செய்யப்பட்டு, புறவயமான முறையில் நிறுவனங்கள் வழியாக அனைவருக்கும் அளிக்கப்படும் பயிற்சி அது. நவீன உலகத்தை உருவாக்குபவை அத்தகைய கல்விநிறுவனங்கள்தான். நிர்வாகம், வணிகம், தொழில்நுட்பம், அறிவியல், கலை அனைத்துக்குமான பாதை அது. அதன் வழியாக மட்டுமே நவீன உலகின் அரசியலுக்குள், பொருளியலுக்குள், தத்துவம் உட்பட்ட அனைத்து ஞானங்களுக்குள் செல்லமுடியும். அதைத் தவிர்ப்பவர்கள் சென்றகாலத்தில் தேங்கி நின்றிருக்க வேண்டியிருக்கும்.
அது பொதுமைப்படுத்துகிறதா? ஆம், அந்தப் பொதுமைப்படுத்தல் வழியாகவே இங்கே நவீனச் சமூகம் உருவாக்கப்பட்டது. பண்டைக்காலத்தில் மக்கள் சிறுசிறு வட்டங்களுக்குள் வாழ்ந்தனர். தொழிற்குழுக்கள், சாதிகள், பழங்குடிக்குலங்கள், சிற்றூர்கள் என அவ்வட்டங்கள் அமைந்திருந்தன. இன்று அவ்வட்டங்கள் இல்லை. இன்று உலகம் ஒன்றென ஆகியிருக்கிறது. அதற்கு நவீனத்தொழில்நுட்பம் வழியமைத்திருக்கிறது. அந்த உலகில் வாழ்வதற்கான பயிற்சியை நவீனக் கல்வி அளிக்கிறது. ஆகவே அது பொதுமைப்படுத்துகிறது. இன்று எவரும் இல்லாத சிறு வட்டங்களை உருவாக்கிக்கொண்டு வாழமுடியாது. ஆனால் நவீனக்கல்வியின் பொதுமைப்படுத்தல் அடிப்படை நிலைகளில் மட்டுமே. ஆரம்பக்கல்வியில் மட்டுமே. அதற்குமேல் கல்வி மேலே செல்லச்செல்ல நுண்ணிய பிரிவுகளாக விரிந்துகொண்டேதான் செல்கிறது. அங்கே பொதுமையாக்கம் இல்லை, மிகமிகக் கூர்மையான நுண்மையாக்கவே உள்ளது. அங்கேதான் நிபுணர்கள் இருக்கிறார்கள்.இன்றைய கல்விமுறை நிபுணர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது.
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், எந்த இருளரைவிடவும் ரோமுலஸ் விட்டேகர் தமிழகப் பாம்புகளைப் பற்றி அறிந்தவர். எந்த பளியரை விடவும் உல்லாஸ் காரந்த் தென்னகப் புலிகளைப் பற்றி அறிந்தவர். ஏனென்றால் அவர்களின் ஞானம் என்பது புறவயமாக தொகுக்கப்பட்டது. ஜிம் கார்ப்பெட் முதல் தொடர்ந்து வரும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களின் ஞானத்தை முழுக்க அவர் கற்றுக்கொள்ள முடியும். உலகம் முழுக்க இருந்து அறிவை எடுத்துக்கொள்ள முடியும். அவர்கள் அறியாத ஒன்று இருளரிடமோ பளியரிடமோ இருக்கும் என்றால், அவற்றை பொதுமைப்படுத்தி புறவயமாக்கி கற்பிக்கமுடியுமென்றால் அவர்களால் மிகமிக எளிதாக அவற்றைக் கற்றுக்கொள்ளமுடியும். ’மறைந்திருப்பதே உயரிய ஞானம்’ என்பது ஒரு பழமையான மனநிலை. அதை கற்பனாவாத கோணத்தில் பார்க்கவேண்டியதில்லை.
பாரம்பரிய ஞானம் அழியலாகாது என்பதன் பொருள் அந்த ஞானத்தை கொண்டுள்ள மக்களை அப்படியே வைத்திருக்கவேண்டும் என்பது அல்ல. நவீனக் கல்விமுறைக்குள், ஆய்வுமுறைக்குள் பாரம்பரிய ஞானமும் கொண்டுவரப்பட வேண்டும் என்பது மட்டுமே .இன்று மிகப்பெரிய அளவில் நிகழும் ஆய்வுகள் அந்நோக்கம் கொண்டவை. மானுடவியல்,சமூகவியல்,நாட்டாரியல் என்னும் களங்களில் அவை நடந்துகொண்டிருக்கின்றன. வெறும் இருபதாண்டுகளில் உலகளாவிய பாரம்பரிய ஞானம் மிகப்பெரும்பாலும் திரட்டப்பட்டு முறையாக பகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நம்மைச்சுற்றி பெரிய அளவில் இப்பணி நிகழ்ந்துகொண்டிருக்கிறது, கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் தெரியும். இணையத்திலேயே நூல்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்துள்ளன. நவீனத் தொழில்நுட்பம் அந்த ஞானத்தை உலகளாவ ஒன்றாக்கிக்கொண்டிருக்கிறது. தனித்தனி குல,குடி, இடம் சார்ந்த வட்டங்களுக்குள் சிக்கி மறைந்திருந்த பாரம்பரிய ஞானங்கள் ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் தொகுக்கப்படுகின்றன.
ஆம், மேலைநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களே அவற்றைச் செய்கின்றன. நம் கல்வியமைப்பு அவற்றின் துணையமைப்பாகவே செயல்படுகிறது. நாம் மேலும் நிதியையும் அறிவியக்க ஒருங்கிணைப்பையும் அளித்து நம் பாரம்பரிய ஞானத்தை திரட்டி தொகுத்து புறவயமாகக் கற்பிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். அவ்வண்ணம் அவற்றை நிலைநிறுத்தவும் வளர்க்கவும் செய்யலாம். அவற்றில் நவீன நிபுணர்களை உருவாக்கலாம். சீனா அதையே செய்கிறது. அதுவே நவீன யுகத்தின் வழி.
கல்வி மட்டும் போதுமா என்றீர்கள். போதாது. ஆனால் நவீன உலகில் தேவையான பிற அனைத்துக்கும் கல்வியே அடிப்படை. அதுவே தொடக்கம். நான் சொன்னதுபோல அனைத்துக்குமான பயிற்சிகளின் தொகையையே கல்வி என்கிறோம். கல்வியே தொழில்நுட்பத்திற்குள் நுழைவதற்குரிய வழி. நவீன வணிகத்திற்குள் நுழைவதற்குரிய தகுதி. இன்றைய நிர்வாகத்திற்குள் இடம்பெறுவதற்கான முறை. இன்றைய அரசியலதிகாரத்தை புரிந்துகொண்டு அடைவதற்கும் அதுவே அடிப்படை. கல்வியற்ற சமூகங்களுக்கு தொழில், வணிகம், அதிகாரம் ஏதும் இல்லை. அவை அடிமைப்பட்டு சுரண்டப்பட்டு தேங்கி நின்றிருக்கவே நேரும்.
நான் நவீனக்கல்விக்கு எதிராக எப்போதும் எழுதியவன் அல்ல. மாறாக ஏராளமான கதைகளில் நவீனக்கல்வி அளித்த விழிப்புணர்வு, விடுதலை பற்றியே எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். மரபான அறிவு அழியலாகாது என்னும் எண்ணம் உண்டு. ஆனால் அந்த மரபான அறிவை காப்பதற்கு அந்த மக்களை அப்படியே தேக்கநிலையில், சென்ற நூற்றாண்டுகளில் வாழச்செய்வதே வழி என எண்ணுபவன் அல்ல. அவ்வாறு சொல்வது ஒரு சமூக வன்முறை என நினைக்கிறேன்.
நீங்கள் உங்கள் கடிதத்தில் நவீனக்கல்வியால் நரிக்குறவர்கள் ஏன் நாடோடி வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்கள். சில நூறாண்டுகளுக்கு முன் உங்கள் குடியும் குலமும் வாழ்ந்த வாழ்க்கையை மாற்றிக்கொண்டுதான் இப்படி கடிதம் எழுதுகிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம். தமிழகத்தில் இன்று வாழும் சாதிகளில் பாதிக்குமேல் மேய்ச்சல் நாடோடி வாழ்க்கை முறையில் இருந்தவர்கள்தான். நவீன யுகம் உருவாக்கிய பாசன வசதிகள் அவர்களை வேளாண்குடிகளாக ஆக்கின. அதனூடாக உருவான உபரி மூலதனம் தொழில்குடிகளாக ஆக்கியது.
சென்ற ய்கத்தில் உலகம் முழுக்க பல்லாயிரம் நாடோடிக்குடிகள் இருந்தன. அவை முழுமையாகவே மறைந்து வருகிறார்கள். பெரும்பாலான பழங்குடிகள் அவர்களின் பழைய வாழ்க்கையில் இருந்து மாறிவிட்டார்கள். ஏனென்றால் அது இன்றைய சூழலுக்குரிய வாழ்க்கை அல்ல. நாடோடிவாழ்க்கை என்பது சென்ற நூற்றாண்டுகளின் வரலாற்றுச்சூழலில் உருவாகி வந்த ஒரு கட்டாயமே ஒழிய ஒரு தனிச்சிறப்பான வாழ்க்கை முறை அல்ல. பாதுகாப்பின்மை, கல்வியின்மை, மருத்துவ உதவியின்மை, பட்டினி ஆகியவற்றாலானது அது. அதில் தாங்கள் நீடிப்பதா வேண்டாமா என அம்மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும், மற்றவர்கள் சொல்வது ஒடுக்குமுறை அன்றி வேறல்ல.
பழங்குடிகள் கல்விகற்றால் ’ஜீன்ஸ் டி-ஷர்ட்டு சிவகார்த்திகேயன் சினிமா என வாழ்க்கையை’ வாழ்வார்கள் என்னும் முன்முடிவுதான் பழமைவாதம், மேட்டிமைவாதம். அதைக் கொஞ்சம் சுயபரிசீலனை செய்து பாருங்கள். கல்வி அனைவருக்கும் உரியது. அதில் முதன்மை பெறுவது, அடிப்படைத்தகுதி பெறுவது, தேறாமல்போவது என பல படிநிலைகள் உள்ளன. அதுவும் அனைவருக்கும் பொதுவான நிலைமைதான். எல்லா இனக்குழுவினரிலும் தேறாமல் போகிறவர்களே மிகுதி. புதியதாக நவீனக்கல்விக்குள் வரும் மக்களிடையே தேறாமல்போகிறவர்கள் சற்றுக் கூடுதலாக இருக்கலாம் அவ்வளவுதான்.
அறுதியாகவே சொல்கிறேன். இந்த நவீன யுகத்தின் அறிவு, அதிகாரம் இரண்டுக்குள்ளும் நுழையவும் உரிமை, உயர்வு இரண்டையும் அடையவும் நவீனக்கல்வி ஒன்றே தொடக்கம். தொழில் வணிகம் எல்லாமே அதன்வழியாக அடையப்படுவன மட்டுமே. நவீனக்கல்வி என்பது நவீன காலகட்டத்தின் குடிமக்களாக வாழ்வதற்கான அடிப்படைப்பயிற்சி.
ஜெ