எழுத்து செல்லப்பா – உஷாதீபன்

சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் – என்ற க.நா.சு.வின் கூற்றை ஏற்றுக் கொண்டுதான், அதனைக் குறிக்கோளாகக் கொண்டுதான் “எழுத்து” தொடங்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார் சி.சு.செ.

இன்றைய புதுக்கவிதை வளமுற்று செழித்து விளங்குவதற்கு எழுத்துதான் அடிப்படையாகும். தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு ஏற்றவாறு “எழுத்து“ சாதனை புரிந்ததினால், நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஓர் மைல் கல்லாக அது இருக்கிறது – என்று இப்புத்தகத்திற்கான பதிப்புரையில் திரு அ.ந. பாலகிருஷ்ணன் பதிப்பாசிரியர் தெரிவிக்கிறார்.

விமர்சனங்கள் – விமர்சிக்கின்றவரின் மீது விமர்சனங்கள் காணும் போக்கு விடுத்து, கதை மாந்தர்களின் மீது மட்டும் விமர்சனம் அமையுமானால் தமிழில் விமர்சனக் கலை மேலும் சிறக்கும் என்றும் குறிப்பிடுகிறார். இப்புத்தகம் வெளியிட்ட காலகட்டமான 2001 லேயே இம்மாதிரியான அபிப்பிராயங்கள் விரவி இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிய முடிகிறது.

தமிழ் எழுத்துலகில் “மணிக்கொடி எழுத்தாளர்கள்“ என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த படைப்பாளிகளில் சி.சு. செல்லப்பாவும் ஒருவர் என்று கூறித்தான், அவரைப்பற்றியும், அவரின் எழுத்து இதழ் பற்றியதான தகவல்களையும் ஆரம்பிக்கிறார் திரு வல்லிக்கண்ணன். 1930 களில் தமிழ் சிறுகதைக்கு இலக்கியத்தரம் சேர்க்கவும், தமி்ழ் சிறுகதையை உலக இலக்கியத் தரத்துக்கு உயர்த்தவும் இலட்சிய வேகத்தோடு செயல்பட்டவர்கள் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று புகழாரம் சூட்டுகிறார். வெறும் புகழ்ச்சியா இது? அன்றைய கால கட்ட எழுத்தாளர்களைத்தானே இன்றும் நாம் திரும்பத் திரும்பப் படித்து வழிகாட்டிகளாய்ப் பின்பற்றி வருகிறோம்?

புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, மௌனி, பி.எஸ்.ராமையா, பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ந.சிதம்பர சுப்ரமணியம், சி.சு.செ., க.நா.சு., எம்.வி.வி., இவர்கள் அவரவர் ஆற்றலையும், தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் சிறுகதைகளை எழுதக்கண்டுதானே பிற்காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். பின்னர் கதைகள் எழுத முற்பட்ட இளைஞர்களை இவர்களது எழுத்துக்கள்தான் பாதித்தன என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை?

தந்தை வழியில் சின்னமனூரும், தாய் வழியில் வத்தலக்குண்டுமாக நான் மதுரை ஜில்லாக்காரன் என்று கூறிப் பெருமை கொள்கிறார் சி.சு.செ. ஆனாலும் திருநெல்வேலியில் அவருக்கு ஒரு தனி அபிமானம் இருந்திருக்கிறது. அவரது தந்தை பொதுப்பணித்துறையில் ஓவர்சீயராக இருந்ததுவும், தாமிரபரணியிலிருந்து தூத்துக்குடிக்கு இருபத்திநாலு மைல் தூரம் குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

அத்தோடு தாய் வழி ஊரான வத்தலக்குண்டு பற்றி அறியச் செய்ய வேண்டும் என்று பி.ஆர். ராஜம் அய்யருக்கு (கமலாம்பாள் சரித்திரம்) நூற்றாண்டு விழா எடுக்கிறார். ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்தபோது எழுத்தாளன் ஆக வேண்டும் என்கிற உந்துதலில் கதை எழுதி அந்த முதல் கதை சங்கு இதழில் வெளி வருகிறது. என் வாழ்வில் சங்கு சுப்ரமணியன் அவர்களை என்னால் மறக்கவே முடியாது. என் கதையை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தி முதல் கடிதத்தை எழுதியவர் அவர்தான் என்று பெருமையோடு நினைவு கூறுகிறார் சி.சு.செ.

வாடிவாசல் நெடுங்கதையை எழுதுவதற்காக மஞ்சிவிரட்டு நடக்கும் இடத்திற்குச் சென்று கையில் ஒரு காமிராவோடு அவரே பல கோணங்களில் அந்த ஜல்லிக்கட்டு நிகழ்வைப் படம் பிடித்து வந்ததும், வீட்டிலேயே ஒரு இருட்டறை அமைத்து, அந்த ஃபிலிம்களைக் கழுவி புகைப்படங்களை உயிர் பெறச் செய்ததும் அந்த சிறு நாவலை எழுதுவதில் அவர் எவ்வளவு ஆர்வமும், தன் முனைப்பும் காட்டியிருகி்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.  

பிறகு இலக்கிய விமர்சனத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டு அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் லைப்ரரி என்று பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து விடா முயற்சியோடு படித்திருக்கிறார். அந்த சமயம் அவர் வசித்தது சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு. வத்தலக்குண்டில் போதிய இலக்கிய ஆர்வம் இல்லை என்று கூறி சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து, பிறகு பையனுக்கு பெங்களூர் மாறுதலில் அங்கும் சென்று வசித்து, அந்தச் சூழலும் பிடிக்காமல் தனியே மனைவியோடு வந்து மீளவும் திருவல்லிக்கேணிக்கே வந்து சேர்கிறார்.

இதழுக்கு “எழுத்து” என்று பெயர் வைத்தபோது கேலி செய்தவர்கள் அநேகம். இதிலென்ன தவறிருக்கிறது? இங்கிலீஷில் ரைட்டிங், நியூ ரைட்டிங் என்றெல்லாம் பெயர் வைத்து இதழ் நடத்தவில்லையா? அதே மாதிரிதான் இதுவும் என்று பதிலளிக்கிறார் சி.சு.செ. சந்தாதாரர்களுக்கு மட்டுமே இவ்விதழ், கடை விற்பனை கிடையாது என்று கண்டிப்பாகக் கூறிவிடுகிறார். இதழுக்கு சந்தா சேர்ப்பதற்காக ஊர் ஊராக அலைந்து பஸ்ஸிலும், ரயிலிலும் பயணம் செய்து, வாசிப்பில் ஆர்வமுள்ளவரிகளிடம் இதழ்பற்றி எடுத்துச் சொல்லி இதழை வளர்க்க அவர் பட்ட பாடு நம்மை நெகிழ வைக்கிறது.

அதுபோல் சிறந்த புத்தகங்களை வெளியிட வேண்டும் என்கிற ஆர்வமும் அதிகரிக்க, வ.ரா., ந.பிச்சமூர்த்தி, சிட்டி ஆகியோரின் படைப்புக்களை எழுத்து பிரசுரமாகக் கொண்டு வருகிறார். வல்லிக்கண்ணன் எழுதி, தீபத்தில் வெளிவந்த ”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற கட்டுரை நூலை நான்தான் கொண்டு வருவேன் என்று ஆர்வத்தோடு சொல்லி வெளியிட்டிருக்கிறார். அது முழுதும் விற்றுப் போகிறது. ஆனால் அந்தப் பணம் வெவ்வேறு வகையில் செலவாகிப்போக, மனசாட்சி உறுத்த, ஒரு கட்டத்தில் ஒரு ஆயிரம் ரூபாயைச் சேர்த்துக் கொண்டு வல்லிக்கண்ணனிடம் சென்று கொடுக்க, அவர் காசு வேண்டாமே என்று மறுக்க, நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது, இது முதல் தவணைதான் என்று சொல்லி வற்புறுத்திக் கொடுத்து வருகிறார். பிற்பாடு இன்னொரு சமயத்தில் இன்னொரு ஆயிரம் ரூபாயை வழங்கி இப்போதுதான் மனம் நிம்மதியாச்சு என்று கூறி மகிழ்கிறார். அந்த நேர்மை உள்ளமும், நாணயமும்…இன்று ஒவ்வொருவரும் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

எழுத்து பிரசுரம் நூல்களைக் கடைக்காரர்கள் வாங்க மறுக்க, வற்புறுத்திக் கொடுக்க, விருப்பமின்றி வாங்கி மூலையில் போட்டு வைக்கிறார்கள். பார்வையாய் அடுக்காமல் மூலையில் அடுக்கினால் எப்படி விற்கும்? எவ்வளவு விற்றிருக்கிறது? என்று அடுத்து இவர் போய் ஆர்வமாய் நிற்க, ஒண்ணு கூடப் போகலீங்க…என்று திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். இந்தப் புத்தகங்களையும், எழுத்து இதழ்களையும் தரமான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவும், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் நூலகங்கள் என்று சி.சு.செ.யோடு வல்லிக்கண்ணனும் சேர்ந்து அலைந்திருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் சி.சு.செ.யோடு அலைந்ததோடு வல்லிக்கண்ணன் நின்று கொள்கிறார். புத்தக மூட்டைகளை, பைகளைச் சுமந்து சுமந்து தோள்பட்டை வலியெடுத்து, கால் மூட்டு வலி பெருகி, ஒரு கட்டத்தில் சி.சு.செ.யும் இனி அலைதல் ஆகாது என்று நிறுத்திக் கொள்கிறார்.

பணத்தின் தேவை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. அத்தனையும் எழுத்து இதழுக்காகவும், புத்தகங்கள் போடுவதற்காகவும் என்று கரைந்திருக்கிறது. கோவை ஞானி அவர்கள் ஒரு முறை ஆயிரம் ரூபாய் அனுப்புகிறார். அதைக்கூட மறுத்து விடுகிறார் சி.சு.செ. அது உடல் நலமின்றி அவர் இருந்த நேரம். இருந்தாலும் அன்பளிப்புப் பெறுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருந்திருக்கிறார். என் விஷயத்திலும் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை என்று வருந்துகிறார் ஞானி அவர்கள். அமெரிக்காவின் குத்துவிளக்கு அமைப்பு புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு வழங்கியபோதும் அதை மறுத்துவிடுகிறார். அந்தப் பணத்தைப் பெற்று புத்தகங்கள் வெளியிடப் பயன்படுத்தலாமே என்று நண்பர்கள் கூற, அதை நீங்களே செய்யுங்கள் என்று இவர் கூறிவிட, பிறகுதான் சி.சு.செல்லப்பாவின் என் சிறுகதை பாணி என்ற நூல் வெளி வருகிறது.

 பிறகு பி.எஸ்.ராமையாவின் கதைக்களம் என்ற புத்தகத்தைக் கொண்டுவருகிறார். பிறகுதான் மகத்தான நாவலாக “சுதந்திர தாகம்” வெளி வருகிறது. பி.எஸ்.ராமையாவின் மீது அவ்வளவு அன்பு அவருக்கு. படைப்புக்களத்தில் ராமையாதான் பெஸ்ட். வேர்ல்ட் ஃபிகர் என்று புகழ்கிறார். ராமையா அவர்களின் எழுத்துபற்றி வேறு விதமாய்க் கருத்துக்களை வெளியிடுபவரை அவர் விரோதியாய் மதித்திருக்கிறார். அப்படியான ஒரு கருத்தை திரு சி.கனகசபாபதி அவர்கள் கூறிவிட ரெண்டு பேருக்கும் சண்டை வந்துவிடுகிறது. பேச்சு நின்று போகிறது. கடைசிவரை இருவரும் பேசவேயில்லை என்பதுதான் துயரம்.

குங்குமப்பொட்டுக் குமாரசாமி போன்ற கதைகளெல்லாம் சுமார் ரகம்தானே என்று ஒரு முறை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கூறிவிட உடனே சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொள்கிறார் சி.சு.செ. உங்களோடு பேசுவதைவிட சுவரோடு பேசுவதே மேல் என்கிறார்.

திருப்பூரார் அவர்கள் அதை தமாஷாக இப்படிக் கூறுகிறார். அறையில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தோம். இப்போது மூவராகிவிட்டோம்.  நான், அவர், சுவர்….

ராமையாவை விமர்சிக்கும் நபரோடு எனக்கு பேச்சு வார்த்தை கிடையாது என்று சொல்ல, சரி…நாம் அவரை விட்டுவிட்டு வேறு பேசுவோம் என்று கூற சரி என்று அவர் பக்கம் திரும்பிக் கொள்கிறார். குழந்தை மனம் கொண்ட கோபம். அந்த உதட்டில் ஒளிந்து கொண்டிருந்த சிரிப்பு…என்னடா பண்ணுவேன்…என்னால உன்னோட பேசாம இருக்க முடியாதே….!!! – மனம் நெகிழ்கிறது இவருக்கு. நமக்கும்தான்.

நான் தேர்ந்து கொண்ட கொள்கைகளிலிருந்து வழுவாமல் கடைசிவரை நேர்மையாக வாழ்ந்து கழித்து விட்டேன். அந்த திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது. என்று பெருமையுறும் சி.சு.செ.1998 டிசம்பர் 18ல் அந்தத் திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் வீட்டில் காலமாகிறார்.

சி.சு.செ.யைப்பற்றி இப்படிப் பல நினைவலைகளைப் பெருமையாய்ப் பகிர்ந்து கொள்ளும் வல்லிக்கண்ணன் அவரின் இலக்கிய சாதனைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவருக்கு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை என்று நிறுவுகிறார்.

இத்தொகுப்பில் காந்தியவாதி செல்லப்பா  என்று ஏ.என்.எஸ். மணியன் என்பவர் எழுதிய கட்டுரை மிகவும் மன நெருக்கமானதாகவும், ஆழ்ந்த நட்பு கொண்டதாகவும், மிகுந்த நேசத்தோடு விளங்குவதாகவும் அமைந்துள்ளது. சி.சு.செ., க.நா.சு. பற்றிய  சில குறிப்புகள் என்ற தலைப்பில் திரு தி.க.சிவசங்கரன் அவர்கள் (தி.க.சி) எழுதிய அற்புதமான கட்டுரையும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கிறது. எழுத்து இதழை மதிப்பீடு செய்து சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய சில அத்தியாயங்கள் கொண்ட நீண்ட கட்டுரையும் இப்புத்தகத்திற்கு அழகு செய்கிறது. ஒரு சிறந்த ஆவணமாய்ப் பாதுகாக்கப்பட வேண்டிய வல்லிக்கண்ணனின் இந்நூல் இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்

உஷாதீபன்

முந்தைய கட்டுரைதிருவெள்ளறை – கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைசெருக்கும் கலைஞன் – பாலாஜி ராஜு