எரியும் தீ -சௌந்தர்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

கவிதை முகாம்கள் ,பட்டறைகளில் , கலந்து கொள்வதிலுள்ள முதல் சவால்,  நாம் வாசித்த கவிதை நமக்கு முகிழ்ந்த தருணம் மிகவும் அகவயமானது, அதை அங்கே ஒருவருக்கும் புரிய வைத்துவிட முடியாது. என்று தெரிந்தும், ஒரு உந்துதலில் நாம் ஒன்றை சொல்ல , அவர்கள் அதை மறுக்க என,  நமக்கு பிடித்த அல்லது பிடிகிட்டிய கவிதை கல்லடி பட்ட குழந்தை என பரிதாபமாக நின்றிருக்கும் .

கவிதையை கலந்தாலோசிக்கவே கூடாதா ?  என்றால் அது மேலும்   பரிதாபம். தோழமையற்ற அனாதையாய் அக்குழந்தை  தனித்து விடப்படும்.

இந்த இரண்டு சிக்கல்களிலும் இருந்து மீட்டெடுக்க ஒரு விட்டேத்தியான மனம் கொண்ட , காதலும் ,கவிதையும் தெரிந்த ,அதி மானுடனும் , ஆதி மானுடனும்  கலந்த  சாருவாகன் என நின்றிருக்கும் நம்பிராஜன்களால் மட்டுமே முடிகிறது.

விக்ரமாதித்யன் கவிதை தொகுப்புகள் ,  கட்டுரை தொகுப்புகள்  என எழுதி குவித்திருக்கிறார்.  அதே வேளையில் அந்த படைப்புகள் பற்றிய,  பற்று, அங்கீகாரம் , என எதையும் எதிர்பார்த்துக் கொண்டு நில்லாமல், இதோ இந்த கட்டுரையை நாம்  படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இரண்டு கவிதைகளை எங்கோ ஓரிடத்தில் எழுதி வைத்திருப்பார்.

எனினும் ,அவரிடம்.   கவிதை என்றாலே படிமங்கள் , உருவகங்களை, உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்கிற வியாபார   நேர்த்தியெல்லாம் செல்லவே செல்லாது.

படிமங்களை முன்னிறுத்தாமல் கவிதை புனைவதில் உள்ள சிக்கல், அன்றாடத்தையும் , எதார்தத்தையும் சோகமே உருவாக , சுய பட்சதாபமே, கச்சா பொருளாக கவிஞன் கைக்கொள்ள வேண்டி இருக்கிறது.   ‘அமர்’ என தன்னை கவிதைகளினுடாக அறிவித்துக்கொள்ளும்  விக்கிரமாதித்தன்  அந்த சிக்கலிலும்  மாட்டிகொள்ளாதவர்.

உதாரணமாக , நம்மை மறந்தாரை  நாம் மறக்க மாட்டேமால்‘  எனும் தொகுப்பில்   ஏமாற்றிவிட்ட எதிரி  எனும் கவிதையில்  படிமம் -உருவகம் என எதையும் வைக்காமல்  மனித மன ஆழங்கள், எதை வைத்து விளையாடுகின்ற என்பதை, நேரடியாக உள்ளே சென்று தைத்திருப்பார் .

எதிரி 

இறந்திருக்கக் கூடாது

இருந்திருக்க வேண்டும் 

 

எதிரி இல்லாமல் 

எப்படி 

எதிரி தானே

இயக்கத்துக்கே காரண கர்த்தா 

 

எதிரியே மறைந்துவிட்டால் 

என்ன செய்ய

சுலபத்தில்

கிடைப்பானா எதிரி 

 

எவ்வளவு காலமாய் 

எதிரியோடு 

எதிரி இருந்தவரை 

எத்துணை சுவாரஸ்யம் 

 

இப்போதோ சலிப்பு 

இத்தனை சீக்கிரமே போயிருக்க வேண்டுமா ?

 

எதிரியில்லாமல் 

எவ்வளவு காலம் 

எப்படியொரு சூன்யம்

எதிரியின் சாமர்த்தியம் யாருக்கு வரும்.

 

ஏமாற்றிவிட்ட எதிரியை மன்னிக்க முடியாது –

 

இதில் நாம் ஒவ்வாத உறவுகளை , பற்றிக்கொண்டிருக்கும் உறவுகளை என யாவரையும் போட்டு வாசித்துப் பார்க்கலாம்  ஒரு குறைவும் வந்துவிடாது .

அதேபோல் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் , முதலிடம் பிடிப்பதில் மனிதர்கள் அடையும்  உற்சாகத்தையும் , பரபரப்பையும், பார்த்து.  அனுபவம் மிக்க சான்றோன் என ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு , ஒரு கவிஞன் என்ன செய்வான் தெரியுமா? என்கிற தோரணையில் செய்யப்பட்ட வரிகள் , விக்கிரமத்தியனின் சுய பிரகடனம்.

 

முன்வரிசை

——————-

முன்வரிசையில் இடம்பிடிக்க 

மனம் சம்மதிப்பதில்லை 

முன் வரிசைக்கு செல்லவே முயன்றதில்லை ஒருபோதும் 

முன்வரிசையில் இருக்க பிரமுகரான வேண்டும் 

 

பின்வரிசை தான் 

பெரிதும் செளகரியம் 

நினைத்த போது 

எழுந்து போய்விடலாம் 

தேனீர் குடிக்க ,சிகரெட் பிடிக்க, சலித்துப் போனால் 

ஒயின் ஷாப் கூட சென்று விடலாம் 

 

முன்வரிசை என்றால் இருக்கையை காபந்து பண்ணவேண்டும் 

மிக முக்கியமானவர்கள் வருகைபுரிந்தால் 

இடத்தை  ஒழித்துக் கொடுக்கவேண்டும் 

தோன்றினால் எழுந்து போக இயலாது 

சம்பிரதாயம் , மரபு , நாகரீகம் 

விடமுடியாது .

பின்வரிசையில் எந்த பிரச்னையும் கிடையாது 

யாரும் கவனிக்க மாட்டார்கள் 

எழுந்து நின்று வணக்கம் போட வேண்டியதில்லை 

அசதியாயிருந்தால் சற்றே கண்ணுறங்கலாம் 

பின்வரிசை தான் பிடிக்கிறது 

 

முன்வரிசைக்கு ஒருநாளும் முண்டி மோதியதில்லை 

தொடக்கப்பள்ளியில் இருந்தே பின்வரிசை தன 

கவிதையிலும் ,வாழ்விலும் அதே கதை தான் 

முன்வரிசை விட்டுவிடுவதும் 

பின்வரிசை இடமளிப்பதும் தாம் 

இதுநாள் வரையில் சதாசிவா

 

இங்கே வந்து விழுந்தவை  லெளகீக  வாழ்வில் தோல்வியுற்ற, ஒருவரின் புலம்பல்கள் அல்ல. மாறாக திருமூலரில் தொடங்கி பாரதி வரை வந்த, இங்கிருந்தே ”அவ்வுலகை’ வென்றோரின் குரல். ஆகவே கடைசி வரி நம்மிடமல்ல, அந்த  சதாசிவத்திடம் சொல்லப்படுகிறது.

நமது மரபின் வரிகளாக ‘செயலின் பலனை எதிர்நோக்காது, செயல் புரிக” எனும் வரிகளை  கவிஞர்  ‘ஆட்டக்காரன்‘ எனும் கவிதையில்

 

ஆட்டக்காரனுக்கு அத்தனை அடைவுகளும், ஆட்ட வகைகளும் அத்துப்படி 

ஆட்டம் உடம்பையும், மனசையும்,வைத்துதான் என்பான் ஆட்டக்காரன் 

ஆடும் இடம்தான் அரங்கமென்று தெரியும்  ஆட்டக்காரனுக்கு 

ஆடும்வரைதான் எல்லா ஆட்டமுமென்று சொல்லிக்கொண்டிருப்பான்  ஆட்டக்காரன் 

ஆட்டம் ஆட்டத்துக்காகத்தான் என்பதே ஆட்டக்காரன் கொள்கை 

ஆடுவதெல்லாம் தனக்காகவே என்பதுதான்  ஆட்டக்காரன் கோட்பாடு 

ஆட்டம் எப்படி வந்திருக்கிறதென்றெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டான்  ஆட்டக்காரன்

ஆட்டம் முடிந்தபின்னே ஆட்டத்தை மறந்துவிட்டு போய்விடுவான் ஆட்டக்காரன்.

மிக ஆச்சரியகரமாக இந்த மறைஞான கருத்து ,  வாழையடி வாழையென, ஒரு கவியின் வரிகள்  வழியாக  வந்து சேர்த்திருப்பது,   நம் சிறார் விளையாட்டு வரை.

இன்றும் கூட நீங்க ஏதேனும் ஒரு  சிறுவர் தொலைக்காட்சி தொடரை ஓடவிட்டால், பத்து நிமிடத்திற்குள்  ஒரு எலியோ , பூனையோ , சோட்டாபீமனோ , பால கணேசனோ  சொல்வது இந்த ‘ஆட்டக்காரன் ‘ கருத்தைத்தான். {எதப்பத்தியும்  கவலப்படாம போட்டியில,  வெளயாடிக்கிட்டிரு  என்  செல்லமே !!! }

எப்போதும் நம்மை புன்னகைக்க வைப்பவை இவை .

மஹா கவிகள் ரதோற்சவம் தொகுப்பில்  தனது மரபு தொடர்ச்சியை,  சங்கஇலக்கியம் முதல்  நவீன கவிதை வரையான ஒரு கோட்டை இழுத்து , தனது விருப்பப் பட்டியல் ஒன்றை தருகிறார். அதில்  அவர்களது பிடிமானத்தை  சொல்கிறார்.  இந்த தொகுப்பில் தனக்கான பிடிமானம் என பல இடங்களில்  ‘அமர்’ எனும் பெயருடன் வரும் கவிக்காரன் பேசிக்கொண்டே இருக்கிறான் .

 

பற்றுக்கோடு 

——————–

.பிச்சமூர்த்தி  வேதாந்தி 

.நா .சு  அத்வைதி 

நகுலன்  அம்மாபிள்ளை 

பிரமிள்  சாதுக்கள் பிரியன் 

ஞானக்கூத்தனுக்கு மரபு 

தேவதேவனுக்கு பிரபஞ்ச விசாரம் 

கலாப்ரியா சக்தி உபாசகர் 

சுகுமாரன் இசை ரசிகர் 

தேவதச்சனுக்கு தத்துவம் 

சமயவேல்க்கு சித்தாந்தம் 

பாலைநிலவன் பைபிள் விசுவாசி 

லக்ஷ்மி மணிவண்ணன்  பன்றிமாடசாமிக்கு  கொண்டாடி 

யவனிகா ஸ்ரீராமுக்கு லோகாயவாதம் 

பிரான்சிஸ் கிருபா வேளாங்கன்னிமாதா பக்தர் 

 

{பெண்கவிஞர்களுக்கு என்ன பிடி தரமோ தெரியாது}

எல்லோருக்கும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு தான் 

இருக்க முடியும் போல 

நவீனமென்று வந்தபின்னும்.

இந்த கவிதையை தொடர்ந்து  தன்னிலை விளக்கமாக அமர்  சொல்வது, உலகம் எனும் மாபெரும் நிறுவனத்தின் முன் அவன் யார்?  என்பது தான் .

அது ஒரு பெரும் நிறுவனம்  

அமர் ஒரு சாதாரணன்.

எனில் அப்பெரும் நிறுவனத்தைக் காட்டிலும் 

அமர் விஷேசமானவன் ……எனத்தொடங்கி 

 

இறுதியில்

 

கபிலர் பாடல்கள் நின்ற சொற்கள் 

இளங்கோவடிகள் காவியம் 

திருநாவுக்கரசு பதிகங்கள் தீராத தென்றல் காற்று 

பாரதியின் கண்ணன்பாட்டு 

பல்லாண்டு  பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு சாஸ்வதம் 

சிறுகூடல்பட்டிக் கவிஞன் , செந்தமிழ் இசைப்பாடல்கள் நிரந்தரமானவை 

அமர் ஒரு  பெருங்கவிஞன்  – என முடிகிறது .

 

இதில் அமர், கம்பனின் காவிய நாயகிபோல ,  கவிதை எனும் ‘ஒற்றைப்புல்லுடன்’  அமர்ந்திருப்பது,  உலகியல் , பொருளியல் , இடதுசாரி , வலதுசாரி , ஆண் , பெண் , உயிருள்ள,உயிரற்ற பருப்பொருள்கள், ஆச்சாரம் , வர்த்தகம்  எனும் பத்துத்தலை ராவணன் முன்.

இதை சொல்லவே  ஒரு விடுபட்ட மனோநிலை தேவையாகிறது  அதுவும் ஒரு  அலைச்சல் மிக்க கவிக்கு இது எப்படி சாத்தியமாகிறது என்கிற கேள்வி எழுகையில்,  அமர் கைகாட்டுவது அவருடைய சிறு தெய்வங்கள் சார்ந்த கவிதையைத்தான் .

ஸ்ரீ  காலராத்ரி, வராஹி , வாக்தேவி , கருப்பசாமி, காந்திமதியம்மையும் , நெல்லையப்பரும் , புட்டார்த்தி அம்மனும் , சாலைக்குமாரனும் , சங்கிலி பூதத்தானும்  என கவிதைகள் நெடுகிலும் குறுக்கும், நடுக்குமாக  உலாவிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும் பிரார்த்தனையும் , சன்னதமும் தீர்ந்தபின்  யதார்த்தக்கவி விழித்துக்கொண்டு,  சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கண்டு  வாய்பொத்தி சிரிக்கும் சிறு குழந்தையாகிறான் இந்த வரிகளில்

 

ஆயுஷ் ஹோமம்

————————- 

 

முன்னம் இல்லாதது 

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் 

சொல்கிறான் 

ஆயுஷ் ஹோமம்  செய்கிறான் 

அடிமனதில் 

மரணபயம் 

தீவிரமாக ஒன்றை செய்யாத நபரை, அதிலும் கவிஞனை  எவ்வகையிலும் மதிக்க வேண்டியதில்லை.  என்பதை சொல்லும் வரிகளாக   ‘புத சுக்கிர யோகம்‘ எனும் கவிதையில்.

நேரத்துக்கு சாப்பிக்கிடுகிறார்கள் 

காலத்தில் தூங்குகிறார்கள் 

நல்ல கால்சராய் சட்டை தான் போடுகிறார்கள் ….

 

என சொல்லிக்கொண்டே போய் …

..உண்மையான கவிஞனை கண்டதும் 

பதைபதைத்து போகிறார்கள் குற்றவுணர்வுடன்

தருமனையும் , துரியோதனையும் , சகுனியையும்

பீஷ்மரையும் , விதுரரையும் , துரோணரையும் 

மாயக்கண்ணனே முழுதாய் அறிவான் 

என்று முடிகிற இடத்தில  ஒரு ‘பொழுதுபோக்குக்கவி’  கைகள் நடுங்க தானாகவே எழுந்து நின்றாக வேண்டும்.

தேர்த்தட்டில் அமர்ந்து மெய்ஞ்ஞானம் உரைத்தவனின் அறுபடாத கண்ணி நான் என்கிற  பதாகையுடன் தான்  இந்த கவி தன்னை அறிவித்துக்கொள்கிறார்.  இந்த கவிதையில்

 

மஹாகவிகள் ரதோற்சவம் 

————————-

மஹாகவிகள் ரதோற்சவம் வருகிறது 

வழிவிட்டு நில்லுங்கள் 

புழுதி பறக்கிறதென்று 

புகார் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள் 

வாசல் பெருக்கி இட்ட  கோலம் 

அழிந்து விட்டதென  வருத்தப்படாதீர்கள்……

 

இப்படி தொடங்கி …

 

மஹா கவிகளாலேயே 

மழை பெய்கிறது 

மகா கவிகளாலேயே 

காற்று வீசுகிறது 

மஹா கவிகளாலேயே 

வானம் நிலைகொண்டிருக்கிறது 

 

மஹா கவிகளாலேயே  தீ  எரிகிறது.

என்கிற வரிகளில், இந்த உலகில் எதையும் நிகர் வைக்க ஒப்பாத  ஒரு தீவிர பைராகி எழுந்து நின்று கூத்தாடுவதை காணமுடிகிறது .

பெரும்பாலும் கவிகளின் மனம்  உன்னதங்களிலிருந்து உன்னதங்களுக்கும் , உச்சத்திலிருந்து மேலும் உச்சங்களுக்கும் தாவிக்கொண்டிருந்தாலும் , அவர்களுடைய காலில் குடிகொள்ளும் பிரஞை தரையில் ஊன்றியபடியே இருக்கிறது, அது கவிதை வாசகனுக்கு ஒரு நூல் ஏணி.  அந்த கவி மனதின்  சிகரங்களை,  இவனும் தொடமுடியும் என விடுக்கப்படும் ஒரு அழைப்பு . விக்கிரமாதித்தன் கவிதைகள் எங்கிலும் இருப்பது அப்படியான ஒரு  அழைப்பிதழ் தான்.

 

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-16

விக்ரமாதித்யன் -விஷ்ணுபுரம் விருது –கடிதங்கள்-15

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1

முந்தைய கட்டுரைபி.கே.பாலகிருஷ்ணன் – கடிதங்கள்.
அடுத்த கட்டுரையுடியூப் வானம்