விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்படுவது மகிழ்வான செய்தி, தமிழின் தலைசிறந்த இன்னொரு கவிஞனைக் கொண்டாட ஒரு சந்தர்ப்பம். விழா சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இது குறித்த பதிவுகளில் வெளிவரும் அவருடைய புகைப்படங்களையும் கூர்ந்து கவனிக்கிறேன், புகைப்படக் கருவிகள் சில முகங்களிடம் மட்டும் அதீத வாஞ்சையுடன் இருந்துவிடுகின்றன. அவருடைய கவிதைத் தொகுப்புகள் கிண்டிலில் வாசிக்க கிடைத்தது. அவற்றில் சில கவிதைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்,
கறுத்த மேகங்கள் திரளும் வானம்
இருளோ சமுத்ரமோ
அந்திக்கருக்கலோ என்றாகும்
ஈசானமூலையில் தென்வடலில்
அங்கே இங்கே நாற்புறமும்
இடி இடிக்கும் மழையைச் சொல்லி
சேரும் மஞ்சுக் கூட்டம்
…….
கருகும் புல் மீண்டும் துளிர்க்க விரும்பி
விமோசனம் எதிர்நோக்கும்
…….
தவளைகளின் வாய் ஓயா சப்தம் கேட்டு
அவித்துத் தின்ற மீத விதைநெல்லை
அளந்து பார்ப்பான் விவசாயி
…….
குளம் நிறையும் சந்தோஷத்தில்
ஊர்ஜனங்கள் நம்பிக்கைகொள்ள
நிலம் குளிரப் பெய்யும் மழை
மழை என்பது இயற்கையின் நிகழ்வுகளில் தலையாயது, சட்டென்று பூமியில் ஒரு சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டுவிடுகிறது. ஒரு கிராமத்து மனிதனின் எளிய வார்த்தைகளால் விவரிக்கப்படும் காட்சியாய் இந்த கவிதை மனதில் விரிகிறது.
நீச்சலுக் கென்றே
ஆற்றுக்கு வந்தவனை
உள் வாங்கும் சுழல்
பார்த்தபடி
தன் போக்கில் போகும் நதி
என்ற வரிகளில் ஒரு கலைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், என்றுமே கண்டுகொள்ளாத சமுதாயத்தையும் சாடுகிறார்.
கரையோர அலைகள்
கடக்க வேண்டும்
கட்டுமரங்கள்
பெருஞ்செயல்கள் ஆற்ற எத்தனிக்கும் மனதின் தொடக்க நிலைத் தடைகளாக அலைகள். இந்த கரையோர அலைகளைக் கடந்தால்தானே வாழ்வெனும் விரிந்த கடலை முழுமையாக தரிசிக்கமுடியும்.
மண்
கீறிப் புதைத்து வை
வான்
பார்க்க வருவேன் முளைவிட்டு
என கலைஞனின் செருக்கை, விடுதலை தேடும் மனத் திண்மையை கூர்மையான வரிகளில் சுருக்காகச் சொல்லிவிடுகிறார். ஒரு கலைஞன் கொள்ளும் கர்வம் கம்பீரமானது, பாரதி கவிதைகளில் இருக்கும் உக்கிரம் இந்த வரிகளில் தெரிகிறது.
எழுதினேன்
கவிதை என்றார்கள்
எழுதுகிறேன்
எதிர்கவிதை என்கிறார்கள்
எழுதுவேன்
ஏதாவது சொல்வார்கள்
என விமர்சகர்களை நோக்கி அங்கலாய்க்கிறார்.
எப்போவோ
போய்விட்டிருந்தது அந்திக்கருக்கல்
…..
கல்வி நிலையங்கள் திறக்கும் காலம்
பெண்களுக்கான பெட்டியிலும் நெரிசல்
…..
காத்திருக்கப் பொறுமையில்லாதபோதும்
காத்திருந்தேன்
வண்டி
புறப்படும் நேரம்
என்ன நினைத்துக்கொண்டிருந்தாளோ இவள்
உதடுதுடிக்க
பார்த்துக்கொண்டேயிருந்தான் பெரியவன்
தாடியைப்பிடித்திழுத்து
விளையாடிக்கொண்டிருந்தான் சின்னவன்
வெறுமையை உடைக்கத்தெரியாமல்
யோசித்துக்கொண்டிருந்தேன் நான்
நாளை இந்நேரம்
ஊரில் இருப்பார்கள்
பழகிப்போன தனிமைதானென்றாலும்
பயமுறுத்தத்தான் செய்யும் என்னை
பிழைப்புத் தேடி நகரத்தில் வாழவேண்டிய கட்டாயத்தையும், தனிமையின் தாக்கத்தையும் இந்த கவிதை பேசுகிறது. ‘நாளை இந்நேரம் ஊரில் இருப்பார்கள்’ எனும் வரிகளில் அவர் மனதில் ஊரின் பிம்பம் வந்துசெல்கிறது. கவிஞன் தன் வாழ்வின் ஒரு சிறு தீற்றலைச் சொல்லுவதாத் தோற்றம் கொண்டாலும், இதன் வலி எல்லோருக்கும் பொதுவானது. எளிய வரிகளக இருக்கலாம், பரவலான பேசுபொருளாக இருக்கலாம், ஆனால் இந்த கவிதை மனதில் ஏற்படுத்தும் தாக்கம் உண்மையானது, ஆழமானது.
பாலாஜி ராஜு
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-16
விக்ரமாதித்யன் -விஷ்ணுபுரம் விருது –கடிதங்கள்-15
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11
விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3