உள்ளுலகம் – சக்திவேல்

விஷ்ணுபுரம் விருது

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

உள்வாங்கும் உலகம் விக்கி அண்ணாச்சியின் மூன்றாவது கவிதை தொகுப்பு. பொதுவாக ஒரு கவிதை தொகுப்பின் தலைப்பு அந்த தொகுப்பில் உள்ள நல்ல கவிதை ஒன்றின் தலைப்பாக இருப்பது காண கிடைப்பது. அந்த முதல் விஷயத்திலேயே இந்த தொகுப்பு வித்தியாசமாகிறது.

உள்வாங்கும் உலகம் என்ற தலைப்பை சூடி எந்த கவிதையும் உள்ளே இல்லை. யோகத்தின் ஐந்தாவது அங்கமான பிரத்யாஹாரம் கவனத்தை உள்நோக்கி திருப்புவது. தியானத்திற்கான முதல் படி. உலகத்தை விழைவின்றி உள்வாங்கி கொள்வது அதன் நோக்கம். இந்த தொகுப்பை முதல்முறை வாசிக்கையில் எனக்கு நிகழ்ந்தது அந்த தியான அனுபவம் தான்.

இவற்றில் களிப்பும் தரிசனமும் கவிஞனின் துயரும் என அனைத்தும் உள்ளன. அவை வளர்ந்து வளர்ந்து சென்று முற்றாக தன்னில் மகிழ்ந்திருக்கும் கவிஞனை சென்றடைகின்றன. பாமரன் என தொடங்கும் முதல் கவிதை சுற்றியுள்ள சகமனிதனின் துயரை சொல்ல ஆரம்பித்து பெரிய வித்தியாசமொன்றுமில்லை என்ற இறுதி கவிதையை அடைகையில் தன்னில் மகி்ழ்ந்திருக்கும் கவிஞனை கண்டு கொள்கிறது.

இத்தொகுதியில் கவிஞனின் கையறுநிலை, சமூக புறக்கணிப்பு, இங்குமங்குமான அவனது ஊசலாட்டம், வாழ்க்கை தரிசனங்கள், புன்னகை தருணங்கள் என்ற வகையில் கவிதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அத்தனையிலும் அவற்றை அப்பால் நின்று பார்க்கும், கவிஞனுக்கான ரசவாத கண்கள் நிறைந்திருக்கிறது. அதுவே இதை முதன்மை ஆக்குகிறது.

இத்தொகுப்பில் உள்ள ஏறத்தாழ அத்தனை கவிதைகளுமே பிடித்திருத்தாலும் என்னால் சொல்லாடியை நோக்கி பிடிக்க முடிந்த கவிதைகளின் மேலான ரசனைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

 

பாமரன்

பாடுபடுகிறான்

 

மேஸ்திரி

வேலை வாங்குகிறான்

 

மேலாளன்

நிர்வாகம் செய்கிறான்

 

முதலாளி

லாபம் சம்பாதிக்கிறான்

 

பொதுவில்

காய்கிறான் சூரியன்

 

பொதுவாகப்

பெய்யவும் பெய்கிறது மழை.

உழைப்பாளிகள் இங்கு இக்கருத்தை சொல்லாமல் கடந்து போகும் நாளென ஒன்றை நாம் பார்த்திருக்கிறோமா ? இந்திய தொழிலாளிகளின் பல்லாயிரம் நாவுகளில் ஒலிக்கும் ஏக்கம். வெயிலும் மழையும் போல என்று கிடைக்கும் எங்கள் உரிமை ?

 

கோயிலுக்கு

 

வாசல்

நான்கு

 

சந்நிதி

இரண்டு

 

சுயம்புலிங்கம்

சொல்ல ஒரு விசேஷம்

 

அம்மன்

அழகு சுமந்தவள்

 

ஐந்து கால

பூஜை நைவேத்யம்

 

பள்ளியறையில்

பாலும் பழமும்

 

ஸ்தல விருக்ஷம் பிரகாரம்

நந்தவனம் பொற்றாமரைக் குளம்

 

வசந்தோற்சவம் தேரோட்டம்

நவராத்திரி சிவராத்திரி

 

பட்டர் சொல்லும் மந்திரம்

ஒதுவார் பாடும் தேவார திருவாசகம்

 

சேர்த்து வைத்த சொத்து

வந்து சேரும் குத்தகை

 

ஆகமம் ஆசாரம்

தவறாத நியமம்

தெய்வமும்

ஐதிகத்தில் வாழும்

 

கோயிலொன்றின் சித்திரம் விரைவான கோடுகளினாலான ஒவியமாக எழுந்து வந்து தெய்வமும் ஐதிகத்தில் வாழும் என்ற ஈற்று வரியில் கவிதையாகி விடுகிறது.

தெய்வம் நமக்காப்பால் இருந்து நம்மை நோக்குகிறது என்பது நம்பிக்கை. அதுவும் நம்முடன் தான் நம்மை போலத்தான் உழல்கிறது என்பது நமக்கு ஒரு ஆசுவாசம் தருவதாக இருக்கிறதோ! இன்னொன்று பெருந்தெய்வத்தை என் வீட்டு நாட்டார் தெய்வமாக .பார்க்கையில் நான் உணரும் அணுக்கம் வேறு.

 

ஆனால்

 

பூமி

பூராவும் முளைத்துத் திரிகின்றன

 

மண்ணில்

குடைந்தும்

ஒட்டையிட்டும் வாழ்கின்றன

 

இருப்புக் கொள்ளாமல்

ஊர்ந்து அலைந்து

கொண்டு இருக்கின்றன

 

அவற்றுக்கும்

திட்டங்கள் இருக்கலாம்

லட்சியங்களும் கூட

 

எவ்வுயிருக்கும் தெரியும்

பிள்ளைப்பூச்சிகள்

பிள்ளைப்பூச்சிகள் தான்

 

அந்த பிள்ளைப்பூச்சிகள் எவையென்று சொல்லாமல் விட்டு செல்வது எதுவாக வேண்டுமானாலும் விரிக்க கூடியதாகிறது. ஒரூயிர் மற்றொரு உயிரை காணுகையில் இப்படி தான் நினைத்து கொள்ளுமோ ? அதற்குள்ளும் ஒன்று மற்றொன்றை காணுகையில் அப்பாடித்தான் நினைத்து கொள்ளும் போலும்.

எல்லாம் அப்படி காலச்சூழலில் விழியறியாது காணாமல் செல்பவை தான் என்றாலும் அவையும் கொண்டிருக்கின்றன திட்டங்களும் லட்சியங்களும்!

 

ஏற்கெனவே

கற்றுச் சொல்லித் தந்தவற்றை

மறக்க வேண்டியதுதான் என் பிரச்சனை

 

மேலும்

மேலும்

கற்றுச் சொல்லித்

தந்து கொண்டிருக்கிறார் அநேகர்

 

கற்றுக்

கொள்ள வேண்டிய

நிர்பந்தம் எனக்கு

சொல்லித்

தரவேண்டியதும்

நிர்பந்தமாக இருக்கலாம் அவர்களுக்கு

 

கற்றுக்கொண்ட பின்பும்

மறந்துவிடத்தான் பார்ப்பேன் நான்

சொல்லித்தந்த பின்பும்

நினைவில் இருத்தி வைத்திருக்கத்தான் பார்ப்பார்கள்

அவர்கள்

 

எத்தனை கற்றாலும் உள்ளுணர்வின் ஒளியை மாசிலாது பேண வேண்டும் என்கிறார் கவிஞர் தேவதேவன் ஒரு பேட்டியில். கவிஞர்களின் பிரகடனமாக ஒலிக்கிறது இக்கவிதை. அறிந்ததை மறக்காவிடில் அறியாதது பிடிபடுவதில்லை. அறிந்ததை அறியாது அறியாததை சென்றடைய முடிவதில்லை என்னும் விந்தை அது. உலகும் கவிஞனும் உரசிக் கொள்கையில் வெளிப்படுகிறதா உண்மையெனும் வியப்பு ?

 

நீயும்

காய் நகர்த்துகிறாய்

 

நானும்

ரகசியமாக

 

இரண்டு பேருமே

தொடர்ந்து

தோற்று கொண்டு வருவது

துக்கமா

வெட்கமா

 

சந்திப்புகள் எப்போதும் சதுரங்கம் போலே தான். கண்ணறியும் காயை கொண்டு நகர்த்துகிறோம். ஆனால் அதை நடத்தும் கருத்தறிய முடிவதில்லை. இங்கு உள்ள களமோ பகடை புரளுதலின் நெறியமைந்தது. எவரும் வெல்லாமல் தோற்கையில் வருவது துக்கமா வெட்கமா! ஆட்டத்தை அறிந்தவன் வெட்கமும் அறியாதவன் துக்கத்தையும் சூடுகிறானா என்ன ?

 

பிழைப்புக்காகக் கூட

பொய் சொல்ல

பாசாங்காக இருக்க

 

கறை சுமந்து திரிய

கணக்காக நடந்து கொள்ள

 

முடிந்ததா

முடிந்ததா இன்னமும்

 

எனது காய்கள்

இப்படித்தான் வெட்டுப்படுகின்றன

 

வயிற்றுவலிப் பயத்தில்

கூட

குடிப்பதை

 

நடுவழியே

நல்லது

 

கலைஞர்கள்

துருவ சஞ்சாரிகள்

 

இது விக்ரமாதித்யனின் தன்னுரையாகவே உள்ளது. குடிக்கும் போதை தரும் எதையும் எவராலும் நிறுத்தமுடிவதில்லை. கலைஞனும் உண்மை எனும் தேனருந்தி மயங்குபவன் தானே ? திரிபடையாத உண்மை உலகியலில் பயன்படுவதில்லை. முடிந்ததா முடிந்ததா இன்னமும் என்ற வரி அவருள் வாழும் கவிஞனிடம் அவரே வினவுவது போல் உள்ளது. ஆனால் இவர் மட்டுந்தானா இப்படி ? ஏதோ ஒருவகையில் எல்லா கலைஞனும் துருவ சஞ்சாரிகள் தான்.

 

சமீபகாலமாக

 

யோசிப்பதையே

நிறுத்தி வைத்துவிட்டேன்

 

படிப்பதையே

ஒதுக்கி வைத்து விட்டேன்

 

எழுதுவதும்

இல்லை

நட்புகளில்

ஆர்வம் காட்டுவதும் இல்லை

 

நேரம்

தவறாமல் சாப்பாடு

 

மதியச்

சாப்பாட்டுக்குப் பிறகு தூக்கம்

 

நிறைய

தமிழ் சினிமா

 

உடம்பில்

கொஞ்சம் சதைபோட்டிருக்கிறது

 

முகத்தில்

ஒரு பொலிவு கூடியிருக்கிறது

 

ஆனாலும் ரொம்பக் கொடுமை

மக்கள்

நூறாண்டுகால உயிர் வாழ்க்கை

 

முந்தைய கவிதையில் நடுவழியே நல்லது என்று வருத்தப்படும் கவிஞன் தான் இந்த கவிதையில் ஆனாலும் ரொம்பக் கொடுமை என சலித்து கொள்கிறான். இருகவிதைகளையும் சேர்த்து வாசிக்கையில் விக்ரமாதித்யனை இன்னும் சற்று நெருங்க முடிகிறது. கூடவே பெரும்பாலன கவிகளின் மனநிலையையுமே.

ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் நல்ல கவிதை இன்னொன்றாக நமக்குள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. நடுவழியே நல்லது என்ற முந்தைய கவிதையின் வரியை ஞானத்தின், புத்தர் சொல்லும் நடுவழியாகவும் கொள்ளலாம். ஏனெனில் கவிஞனின் தேடல் ஞானம் தான். அப்படி வாசித்தால் இந்த கவிதையை தனித்த ஒன்றாக, உலகியலின் மேலான அவனது பிடிப்பும் விலக்கமுமாக வாசிக்கலாம்.

 

விரும்புவது

நதிக்கரை நாகரீகம்

 

விதிக்கப்பட்டது

நெரிசல்மிக்க நகரம்.

 

நதிக்கரை நாகரீகம் நதியென கணமென ஒழுகுவது. அங்கிருந்து இங்கு வந்து இங்கிருந்து அங்கு செல்லும் விழைவு தான் கவிஞனாகிறது போலும்.

 

எங்கும்

சூழ்ந்து

பரவி

விரிந்து கிடக்கிறது வெளி

 

எதோ

வொரு புள்ளியில் மையங்கொண்டு

தகைந்திருந்திருக்கிறது வீடு

 

வெளியின் பிரமாண்டத்துக்கு முன்

சிறுத்துத் தெரிகிறது

வீட்டின் இருப்பு

 

நிகழ்வாழ்வும்

நிம்மதியில்லா மனமும்

வீடும் வெளியுமென்று

ஊடே வெட்டிச் செல்கிறது வொரு மின்னல்

 

வீடு

வெளி போல

விளக்கங் கொள்வதும்

 

வெளி

வீடு போல

சுருக்கமடைவதும்

 

வாழ்வு நதியின்

மாய தோற்றங்கள்

 

வீடு

வெளி

கடந்த ஞானம்

வித்தகர்க்கல்லால்

வேறே யாருக்கு வாய்க்கும்

 

நிகழ்வாழ்வும் நிம்மதியில்லா மனமும் வீடும் வெளியுமென்று என்ற வரியில் இருந்து கவிதையின் சுட்டுதளம் துலங்கி விடுகிறது. நோக்க நோக்க ஏதுமிலாதாகும் விந்தை பெருக்கே மனமென்பது. புறமோ மேலும் மேலும் உறுதிகொள்வது. அறிய தொடங்குகையில் எழுப்பும் வியப்பு இது.

அறிதல் முதிர்ந்து செல்கையில் உறுதி உருக்குலைந்து பெருகுவதும் பெருகும் வெளியோ சுருங்கும் சிமிழாக ஆவதும் நிகழ்கிறது. ஆனால் இம்மாயை கடந்த ஞானம் வித்தகர்க்கல்லால் வேறே யாருக்கு வாய்க்கும்!

 

அக்கரையில்

என் தோட்டம் காடு வயல்கள்

 

இக்கரையில்

என் வீடு வாழ்வு மனசு

 

நதி

எதிரில்

 

தோட்டமும் வீடும் விருப்பம் போல அமைபவை. வாழ்வும் காடும் அவற்றின் விருப்பம் போல நம்மை அமைப்பவை. அது கொடுக்கும் ஏராளத்தில் இருந்து குவளையில் அள்ளிய நீர் போல் வயலும் மனசும். அக்கரையில் இருப்பவை எல்லாம் என் கைக்கு முற்றுரிமையில்லாது கிடைப்பவை. இக்கரையில் இருப்பவையோ நான் ஆள்பவை, சிலநேரங்களில் என்னையும் ஆள்பவை. இவை இணை கோடுகளுக்கு இடையில் ஓடும் அந்நதி வாழ்வு அல்லவா! அந்த பெருக்கில் செல்லும் துளி போலும் நான்!

 

இதிகாசமும்

வரிகளாலானது

 

வரிகளையுடைத்தால்

வாக்கியங்கள்

 

வாக்கியங்கள் முறித்தால்

வார்த்தைகள்

 

வார்த்தைகளைப் பிரித்தால்

எழுத்துகள்

 

எழுத்தில்

என்ன இருக்கிறது.

 

இது இவ்வாறு நடந்தது என்ற பொருளுண்டு இதிகாசம் என்ற வார்த்தைக்கு. வாழ்வு இவ்வாறெல்லாம் இருக்கிறது என காட்டி அதனை பொருளாக்குவது இதிகாசம். கட்டுடைத்து கட்டுடைத்து சென்றால் எழுத்தே மிஞ்சுகிறது. அதுவோ காற்றில் கரைந்தழியும் வெற்றொலி. இணைகையில் முழுமையும் பிரிகையில் இன்மையும் கொள்ளுவது எது ?

 

செடிகள்

வளர்கின்றன

 

குழந்தைகள்

வளர்கிறார்கள்

 

எனில்

மரங்களுக்கு

வருவதில்லை மனநோய்

 

நேற்றை காற்றோடு உதிர்த்துவிடுவதால் தான் செடியான மரம் செழுமையாகவே உள்ளது போலும்!

 

எனது தள்ளாடும் நிழலோடு நான்

 

எனது

தள்ளாடும் நிழலை மிதித்து மிதித்துத்தான்

நான்

முன்னே போக வேண்டியிருக்கிறது

 

எனது

தள்ளாடும் நிழலை மிதிக்காமல்

நான்

நடக்க முடிவதில்லை

 

சூரிய

வெளிச்சத்திலும் சரி

சந்திர

ஒளியிலும் சரி

 

எனது

தள்ளாடும் நிழல்

என்

காலடியில்

 

எனது

தள்ளாடும் நிழல்

எங்கே போகும்

என்னை விட்டு

 

நான்

எங்கே போவேன்

எனது

தள்ளாடும் நிழலை விட்டு

 

எனினும்

எனது தள்ளாடும் நிழல் சமயங்களில்

என்னை விழுங்கப் பார்க்கும்

 

நான்

எனது தள்ளாடும் நிழலை

மிதித்து மிதித்து நடப்பேன்

 

நான் என உணரும் தன்னிலையில் அலைபாயும் இச்சையை தள்ளாடும் நிழலென்று உருவகித்து கொண்டேன். சமயங்களில் என்னை விழுங்கப் பார்க்கும் அது நாகம் தான். சத்தமில்லாது சாவும் வரை வருவது.

சூரிய வெளிச்சத்திலும் சரி சந்திர ஒளியிலும் சரி என்ற வரிகளிலிருந்து கடுமையிலும் இனிமையிலும் சூழிலும் தனிமையிலும் என்னோடே இருப்பது. ஒளியும் இருளுமாக நானும் எனது தள்ளாடும் நிழலும். ஒன்றுக்கொன்று பிரியாதப்படி பிணைக்கப்பட்டோம்.

 

கரையான்

 

இற்று

விழப் பார்க்கிறது உத்தரம்

 

தேக்குமரங்களை விலைபேச

வருகிறார்கள் தரகர்கள் சிலர்

 

வெள்ளையடிக்கப்பட்டு

தயாராக இருக்கிறது வீடு

 

தாத்தா மனசுநோக

பேரப்பிள்ளைகள் அறியாது

பேரத்தில் இழுபடுகிறது ஜீவன்

 

ஆனாலும்

ஆச்சியின் துக்கம்

அந்தரத்தில் நிற்கிறது எதிர்பார்த்து

 

ஆண்டாண்டு உழைத்தாலும் உலுத்து கொட்டினால் உலைக்கு வைக்க தயங்குவதில்லை நாம். அழித்து கொள்ள அத்தனை துடிக்கும் நமக்குள் வாழும் அது என்ன ? ஆச்சி எதிர்பார்த்திருப்பது தாத்தாவின் மரணத்தையோ என கேள்வி எழுவது இயல்பு தான். இக்கவிதை வாசிக்கையில் குருட்டு ஈ என்ற தேவதச்சனின் இக்கவிதை தான் நினைவுக்கு வந்தது.

 

குருட்டு ஈ

 

ஆஸ்பத்திரியில்

வெண்தொட்டியில்

சுற்றுகிறது

இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்

மூச்சொலி

பார்க்கப்

பயமாக இருக்கிறது

சுவரில்

தெரியும் பல்லி

சீக்கிரம் கவ்விக் கொண்டு

போய்விடாதா

என் இதயத்தில்

சுற்றும் குருட்டு ஈயை

 

ஒன்று எண்ணி எதிர்நோக்க இன்னொன்று எண்ணாமல் எண்ணி மருகி பின்வர, நம்முள் அழியாமல் வாழும் அழித்து பார்க்க விரும்பும் அவ்வியல்பு என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பி செல்கிறது.

 

எரியவேண்டிய தீக்கு

எண்ணெய் வார்த்து வளர்த்து

அணைக்க வேண்டிய தீக்கு

தண்ணீர் கொட்டி அவித்து

அக்னியின் இயற்கை

அழியாது காக்கலாகாதா

உலகுயிர்க்கெல்லாம் முலைதரும் அம்மையே

தலைமாலே சூடித் திரியும் சுடலைக் காளியே

 

முலைதரும் அம்மை எண்ணெய் வார்த்து வளர்க்கமாட்டாளா ? சுடலை காளி தண்ணீர் கொட்டி அவிக்க மாட்டாளா ? என அறிந்ததை அறியாத கோணத்தில் காட்டி செல்கிறது கவிதை. சுடலை நெருப்பு நீராவதும் வெறுப்பு அன்பாவதும் முலைதந்த பால் தண்மை குறைந்து வெம்மை கொள்வதும் எப்படி ? ஒன்றுக்குள் ஒன்றென பின்னி நிற்கும் அவர்களிருவரிடம் அழியாமல் காக்க வேண்டுவது எந்த ஒன்றை ? அது அக்னி, அனைத்துமான அக்னி. அதை நீருள் உறையும் நெருப்பே என்கிறது வேதம்.

 

நான்

யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை

 

வசந்தம் தவறியபோதும்

வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கையில்

வன்கொலைச் சாவுக்கு இடமில்லை

 

வெயில் காயும்

மழை புரட்டிப்போடும்

அல்பப் புழுக்களும் வாழ்ந்து

கொண்டிருக்காமல் இல்லை

 

நீ

கலகக்காரன் இல்லை

 

நல்லது நண்ப

 

நானும் கூடத்தான்

 

எனது இருபதுகளில்

 

கவிதைகள் பலவகை. சில உணர்ச்சியின் சுழலில் சிக்க வைப்பவை, வேறுசில தத்துவத்தின் கனத்தை அளித்து செல்பவை. சில எடையற்று பறக்க வைப்பவை, இனிய புன்னகையை தருபவை. கண்ணீரை கொடுப்பவை, புன்னகையை விரிய வைத்து சோகத்தை அள்ளி பரிமாறுபவையும் உண்டு. அந்த வகையில் ஒன்று இந்த கவிதை.

 

நீ கலகக்காரன் இல்லை

நல்லது நண்ப

 

நானும் கூடத்தான்

எனது இருபதுகளில்

 

என்ற வரி தரும் புன்னகையில் எழுகிறது கவிதை. வானம் தனக்காக காத்திருக்கிறது, ஒரு எட்டு வைத்தால் பறந்து விடலாம் என துடிக்கும் வயது அது. சிறகுகள் முளைத்து வண்ணத்துப்பூச்சியாக வெளிவரும் காலமது. கவிஞன் அங்கேயே நின்றுவிட்டவன். வசந்தம் தவறிய போதும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வில் வன்கொலை சாவுக்கு இடமில்லை என்கையில் அந்த துயரம் வந்து அறைகிறது.

 

தூரத்திலிருந்து

பார்க்கும்போது

அழகாகத்தான்

இருக்கிறது ஊர்

 

அழகின் உச்சம் என்பது விருப்பமும் விலக்கமும் ஒருங்கே நிகழ்வது. இந்த உணர்ச்சியை வாழ்வில் துளியளவேனும் காணாதவர் அரிது. அதை சொல்லில் செதுக்கி காலமிலா மெய்மைக்கு நகர்த்துவதால் இது கவிதை.

 

யுத்தம்

தோன்றியபோதே

 

யுத்த

தந்திரமும்

 

யுத்தம் வலிமையின்மைகளின் வலிமைக்கான போட்டி. சிகரங்கள் சிறகுகளை ஒரு பொருட்டாக கொள்வது இல்லை.

 

அண்ணி மேல் கொண்ட ஆசை

கொழுந்தனைக் குழப்ப

அந்நிய இடமாகும் வீடு

 

நான்கு சுவர்கள் அல்ல, நான்கு பேரால் ஆன உறவுகளே வீடு. உறவுகள் உருமாறினால் உருக்குலைந்து விடுகிறது அது.

 

சாதுக்கள் சுவாமிகள் சித்தர்கள்

என்றெல்லாம் பேசுவது சுலபம்

 

பேசத்தான்

செய்கிறோம்

 

நடப்பில் முடியாதது

பேச்சில்

 

பேசுவது ஓர் தன்நடிப்பு. பல்லாயிரம் தன்நடிப்புகளின் ஊடாக வாழ்கிறான் மனிதன்.

 

வானத்தில்

நிறைய நட்சத்திங்கள்

 

பூமி

எதிர்பார்த்திருப்பது மழை

 

அழகு அமுதமாகி சொட்டாவிடில் என்ன பயன் ? அழகும் அமுதமும் ஒன்றாவது எப்போது!

 

ஒடுங்கி

உறையலாம் உள்ளேயே

 

வெளியேயிருந்துதான்

வரவேண்டும் காற்று

 

காற்றான ஒன்று அசைவான ஒன்று. அசைவான ஒன்றே அகிலம் என நிற்பது. சாவுக்கு தான் உள்ளே செல்ல வேண்டும். வாழ்வோ வளி என வெளியே இருப்பது. உள்ளத்தை உறைய வைப்பவன் எப்போதும் வந்து கொண்டிருப்பதை எப்படியாவது பிடித்துவிடத்தான் முயற்சிக்கிறான் போலும் – யோகி.

 

பெரிய

வித்தியாசமொன்றுமில்லை அடிப்படையில்

 

தீப்பெட்டிப் படம்

சேகரித்துக் கொண்டிருக்கிறான் என் மகன்

 

கவிதை

எழுதிக் கொண்டிருக்கிறான் நான்.

 

காலம் முழுவதும் பிஞ்சு நெஞ்சத்தை பறிக்கவிடாமல் பொத்தி பொத்தி வளர்ப்பவன் கவிஞன். அழகாக இருப்பதற்காக மட்டுமே சேகரிக்கப்படுகின்றன படங்கள். மகனுக்கு தெரியாது தீப்பெட்டி என்னவெல்லாம் செய்யுமென்று. இவனுக்கும் தெரியாது கவிதையை எப்படியெல்லாம் ஆக்கமுடியுமென்று. இவனொரு வளர்ந்த குழந்தை, நித்தியத்தில் வாழும் குழந்தை.

 

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-16

விக்ரமாதித்யன் -விஷ்ணுபுரம் விருது –கடிதங்கள்-15

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1

முந்தைய கட்டுரைஅறம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொலிதல்