தொடர்புக்கு: [email protected]
மதிப்பிற்குரிய ஜெ
வணக்கம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இன்று தபாலில் “குமரித்துறைவி” புத்தக வடிவில் கிடைக்கப்பெற்றேன். நீண்ட நாள் நண்பன் ஒருவனை நேரில் சந்தித்த மகிழ்ச்சி இந்த புத்தகத்தை தபாலில் பெறும்போது.
பலமுறை இணையத்தளத்தில் படித்தபோதும், புத்தகமாய் கையில் வைத்து படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தமே தனிதான். இனிய தொடக்கமாய், இன்று கிடைக்கப்பெற்ற, இந்த ஆறு புத்தகத்தை, நெருங்கிய நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக கொடுக்க உள்ளேன். (தீபாவளிக்கு இதை விட சிறப்பு பரிசு என்ன இருக்க முடியும்)
உங்கள் வாக்கின் படி, இந்த “மங்கலப்படைப்பு” எங்கள் பண்டிகை நாளில் மங்களமாய் திகழட்டும்.
மரியாதையுடன்,
முரளி அண்ணாமலை
அன்புள்ள முரளி அண்ணாமலை,
நான் தனிப்பட்ட முறையில் இன்று மிக அணுக்கமாக உணரும் நூல்களில் ஒன்று குமரித்துறைவி. ஒருவகையில் அறம், குமரித்துறைவி இரண்டுமே ஒரு தேடலின் இருமுனைகள். இரண்டுமே நன்னம்பிக்கையில் நிறைவுகொண்ட படைப்புக்கள்.
அறம் பல்லாயிரம்பேரைச் சென்றடைந்தமைக்குக் காரணம் அது பலரால் இலவசநூல்களாக வழங்கப்பட்டதுதான். அதன் இலட்சியவாதம் அவ்வாறாக ஒரு பொதுப்பேச்சுக்கு வந்து சேர்ந்தது. தமிழில் அதற்கு முன் நடந்திராத ஒரு பெருநிகழ்வு அது.
அதைப்போலவே குமரித்துறைவியும் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன். அதை ஆர்வலர் அன்பளிப்புகளாக, திருமணப்பரிசுகளாக பரவலாக அளிக்கவேண்டும். அதற்கான கொடையாளர்களைக் கண்டடையவேண்டும். அது பல்லாயிரம் கைகளுக்குச் செல்லவேண்டும்.
அறம் திட்டவட்டமான கருத்துநிலை ஒன்றை முன்வைக்கும் படைப்பு. சமகாலத்தன்மை கொண்டதும் கூட. ஆகவே அதன் பயன்பாடு கண்கூடானது. குமரித்துறைவி அப்படியல்ல. ஒரு சாமானிய வாசகர் அதை ஓர் எளிய வரலாற்றுப்புனைவு என்று கொள்ள வாய்ப்புண்டு. பேசிப்பேசியே அதை பற்றிய தெளிவை அடையமுடியும்
குமரித்துறைவி ஒருமைப்பாடு என்பதை முன்வைக்கிறது. அறங்களில் தலையாய அறம் அதுவே. அனைவரும் கூடி, ஒன்றென்றே ஆகி நிகழ்த்திக்கொள்ளும் ஒரு விழா அது. அனைவருக்கும் நிகரான பங்களிப்பு கொண்டது. மானுடர் ஒன்றாகி மகிழ்ந்திருக்கும்போது தெய்வங்கள் அணிக்கோலம் கொள்கின்றன. இயற்கை மங்கலம் கொள்கிறது.அறங்களில் முதன்மையானது மைத்ரி என்னும் ஒருமைப்பாடுதான். குமரித்துறைவி அதை முன்வைக்கும் நூல்.
ஆகவே முழுமையான மங்கலநூல் அது. துளியும் எதிர்மறைத்தன்மை அற்ற நிறைவுகொண்டது. பண்டிகைகளுக்கு மட்டுமல்ல அனைத்து விழாக்களுக்கும் உரியது. உண்மையில் ஓர் இலட்சியத் திருவிழாவின் காட்சி அது.
ஜெ