குழந்தைகள் தேவையா?
அன்பு ஜெ,
நலமா?
உங்களிடம் நான் முன்னரே பகிர்ந்திருக்கிறேன், நானும் குழந்தையே வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் இருந்தேன். எதோ ஒரு தருணத்தில், முடிவே மறுபரிசீலனை செய்து மாற்று முடிவை நானும் எனது மனைவியும் எடுத்தோம். உங்களது பல வாசகர்கள் நான் இருந்த மனநிலையிலேயே இருக்கலாம் அவர்களுக்காக இதை பகிர்கிறேன். இன்று, இந்த முடிவை யாரேனும் எடுக்கிறாரென்றால் அவர் வாழ்வில் ஒரு பெரும் இன்பத்தை இழக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன் (நான் குறிப்பிட்டு சொல்வது என்னை போன்று வேண்டாம் என்று சுயமுடிவு எடுவைபவர்களை பற்றியே. ஏதேதோ மருத்துவ காரணங்களால் அவர்களுக்கு விருப்பமிருந்தும் சிலருக்கு இந்த வரம் அருளப்படுவதில்லை, அவர்களை நோக்கி நான் இதை கூறவில்லை என்று தெளிவு படுத்த விரும்புகிறேன்). ஒவ்வொரு நாளும் எனது மகள் செய்யும் சேட்டைகளை காணும்போதும், நெஞ்சில் மிதித்தேரி சிரிக்கும்பொழுதும், இப்படி ஒரு இன்பத்தை முட்டாள்தனமாக இழக்க இருந்தேன் என்ற எண்ணம் வராத நாளில்லை . மறுகணமே அந்த முடிவில் இருந்து என்னை (எங்களை) மடை மாற்றியே அந்த தருணத்திற்கு நன்றி கூறுகிறேன். இதில் வெண்முரசிற்கும் ஒரு பங்கிருக்கிறது என்று நான் முன்னரே உங்களுக்கும் எழுந்திருப்பது நினைவிருக்கலாம்.
நான் என் குழந்தை வேண்டாம் என்று எண்ணினேன்?
குழந்தை ஒரு சுமை பொருளியில் ரீதியாகவும், மனதளவிலும் நான் தீவிரமாக நம்பியிருந்தேன். அதற்கு அளிக்கும் உழைப்பை, பொருளியல் தியாகங்களை நான் வேறு வழியாக (உலகம் சுற்றுவதன் மூலமும், பெரும் பொருள் ஈட்டி சேர்ப்பதன்முலமும் அடையமுடியும் என்று நம்பியிருந்த காலமது). இணையம் ஒரு பெரு வரம் உங்கள் நம்பிக்கை என்னவாகவே இருந்தாலும் அதையொட்டிய கருத்தில் திளைப்பவர்களே கண்டுகொள்ளமுடியும் (நீங்கள் childless by choice என்று தேடினால் கண்டடையமுடியும்) . அதை படிக்க , பார்க்க நாமே நம்மை மாற்றிக்கொள்கிறோம், நம்ப தொடங்குகிறோம்- நாளைடைவில் நாமே அதை தீவிர பிராச்சரம் போல மற்றவர்களுக்கும் சொல்லத்தொடங்கிவிடவோம்.
இப்பொழுது என்னுடைய நிலைப்பாடு;
- குழந்தை உங்களக்கு உங்களில் இருக்கும் நீங்கள் அறிந்திராத உன்னதமான பகுதிகளை காட்டும், உணர்த்தும். எனது குழந்தை சிறிய அடி பட்டுவிட்டது (அருண்மொழி அக்கா அவர்களது அப்பா அவரை தூக்கிக்கொண்டு ஓடியதை எழுதிருப்பார்) நானும் ஓடினேன் (ஓட்டினேன்). முதல் அழுகை நான் கேட்டபொழுது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. இந்த அனுபவம் சொல்லியுணர்த்த என்னிடம் வார்தைகள் இல்லை.
- ஒரு அளவிற்கு மட்டுமே நீங்கள் லௌலிகத்தில் திளைக்கமுடியும் அதில் இருந்து இன்பத்தை பெறமுடியும்; உப்பு தண்ணீரை போல பருக பருக தாகத்தை அடைக்காது மேலும் பெரிய தேவைகளை நோக்கி ஓடுவதை தவிர வேறு எந்த இன்பமும் அமையாது. நீங்கள் மிகப்பெரிய லட்சியத்தை நோக்கி உழைப்பவர் என்றால் இந்த வெறுமையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
- மனிதனாக நாம் எல்லாரும் சிம்பொனி எழுதவோ, வெண்முரசு போன்ற ஒரு படைப்பையோ எழுதுவதற்கான திறமையோ, உழைப்பையோ குடுக்கமுடியாதவர்கள். நீங்கள் இதை எல்லாம் செய்யவேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்களது வாழ்க்கையில் ஒரு பொருளை (meaning) ஒரு குழந்தை அளித்துவிடும் . சுருங்கச்சொன்னால் நான் முன்னைவிட உத்வேகமாக செயல்புரிகிறேன். அவ்வப்போது வரும் இருத்தலியல் சார்ந்த வெறுமைகளும் இல்லாமல் போனது குழந்தைக்கு பிறகே.
- நீங்கள் கையில் ஏந்தும் ஒரு துளி இறை ! நான் மிகவும் நிறைவாக, மகிழ்ச்சியாக, நேர்மறையான வாழ்க்கையில் 34 வருடங்களில் இருந்தது குழந்தைக்குப்பிறகுதான்.
குழந்தை மட்டும் தான் இந்த இன்பத்தை அளிக்கமுடியுமா ?
இல்லை என்பதே எனது பதில். உங்களக்கு வேறு எதாவது செயல்பாடு ஒரு structure, framework ஒரு நிலையான சந்தோஷத்தை அளிக்கமுடியுமானால் (இலக்கியம், எழுத்து, சமூகசேவை) நீங்கள் இந்த இன்பத்தை அதன்முலமும் பெறமுடியும்.
பின்குறிப்பு: தயவு செய்து தவறான வழிகாட்டுதலால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றே நான் மன்றாடுவேன் (உதாரணம்: மணவாழ்க்கை சரியில்லை என்று நண்பர்களிடம் பகிரும்போளுது அவர்கள் கூறும் பல தேய்வழக்கு அறிவுரைகளில் முதன்மையானது – ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாப்போயிடும். இதை பின்பற்றி இப்பொழுது பிடிக்காத மணவாழ்க்கையில் குழந்தைக்காக நடிப்பவர்களை (நீடிப்பவர்களை) நானறிவேன், நீங்களும் அறிந்திருக்கக்கூடும்). வாழ்க்கையிலே எடுக்கும் ஒரு பெரியமுடிவுகளில் இதுவே அகப்பெரியது, ஆகவே கணவனும் மனைவியும் நல்ல புரிதல் அடைந்தபின் எடுப்பதே நல்லது – மிகப்பெரிய பொருளியில், தனிமனித சுதந்திர தியாகங்களை கோரும் செயல் ஆதலால் தீர கலந்தோசித்து எடுக்க வேண்டிய முடிவு.
அன்புடன்
கோபி