தமிழ்நூல்தொகையா, திராவிடக் களஞ்சியமா?

அன்புள்ள ஜெ

வணக்கம் .  தமிழ் இந்துவில்  இந்த செய்தியை படித்தேன். [https://www.hindutamil.in/news/literature/712500-events-1.html] 

திராவிடக் களஞ்சியம்

“தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகளில் பெருங்கவனத்தை ஈர்த்திருக்கிறது திராவிடக் களஞ்சியம் குறித்த அறிவிப்பு. கூடவே விமர்சனங்களையும். கால்டுவெல் தொடங்கி சம காலம் வரையிலான திராவிடக் கருத்தியல் குறித்த ஆய்வுகளின் தொகுப்பாக திராவிடக் களஞ்சியம் வெளிவரவிருக்கிறது. மொழியியல், வரலாறு, தொல்லியல், பண்பாட்டு மானிடவியல், சமயவியல், மெய்யியல், அரசியல் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறவுள்ளன. சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து வெளியிடுவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அறுபதுகளிலேயே ‘மர்ரே’ சாக்கை ராஜம், சாந்தி சாதனா அறக்கட்டளையை நிறுவி எஸ்.வையாபுரி, கி.வா.ஜகந்நாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முதலான தமிழறிஞர்களைக் கொண்டு சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து வெளியிட்டுள்ளார். இன்னும் அந்நூல்கள் மறுபதிப்பில் உள்ளன. செய்த வேலையை மீண்டும் செய்ய எதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு என்ற கேள்வியும் தமிழ் வளர்ச்சித் துறையை எதிர்நோக்கியிருக்கிறது.”

எனது கேள்வி என்னவென்றால் திராவிடம் என்பதற்கான சான்றே இல்லாமல் , இவர்கள் திராவிடம், தமிழியம் என்று ஓயாமல் சத்தமிட்டு கொன்டே இருகிறார்கள் . ஒரு பொய் திரும்ப திரும்ப சொல்லும்போது உண்மையாகி விடும் . அதை தெரிந்தே செய்கிறார்கள் போல.

திராவிடம் பேசும் என் பல நண்பர்களிடம் நீங்கள் பேசும் திராவிடத்திற்கு ஏதாவது சான்று இருக்கிறதா என்று கேட்டால் , youtube விடியோக்களை அனுப்புகிறார்கள் . (குறிப்பு எல்லா மத அடிப்படைவாதிகளுக்கும் இது பொருந்தும் )

நான் google செய்து பார்த்ததில் சில சுட்டிகள் கிடைத்தன.

https://www.thehindu.com/sci-tech/science/ancestral-dravidian-languages-were-possibly-spoken-by-many-in-indus-valley-civilisation-says-study/article35738505.ece

https://www.indiatoday.in/india/story/rakhigarhi-excavation-indus-valley-civilisation-aryan-dravidian-1328881-2018-08-31

எனக்கு புரிந்தவரை திராவிடம் என்பது ஒரு பெயரளவில் இடப்பட்ட ஒரு சொல் நாம் குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல . அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது.
என் புரிதல் சரியா ?

இன்னொன்று  திராவிட களஞ்சியம் என்பதற்கு பதில்   தமிழ் களஞ்சியம் என்ற பெயரே சால பொருந்தும் அல்லவா?.

அன்புடன்
பன்னீர் செல்வம் ஈஸ்வரன் 

 

அன்புள்ள பன்னீர்செல்வம்,

பொதுவாக எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியை அமைக்கும் கருத்தியல் தன்னை நிறுவிக்கொள்ள முயலும். அதன்பொருட்டு அது வரலாற்றை எழுதிக்கொள்ளும். அதற்குரியவகையில் பண்பாட்டுத் தரவுகளை திரட்டி முன்வைக்கும். அது தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த, எதிர்காலத்தில் நீட்டிக்கொள்ள செய்யப்படும் முயற்சிதான்.

திமுக அதையே செய்கிறது. தமிழிலக்கியத் தொகையை திராவிடப் பண்பாட்டுத் தொகை என்று பார்ப்பதே அவர்களின் இதுவரையிலான அரசியல் நிலைபாடு. அந்த அரசியலுக்குத்தான் தமிழர்கள் வாக்களித்துள்ளனர் என அவர்கள் சொல்லலாம். எனில் அவர்கள் அதைச் செய்வது இயல்பானதே.

உண்மையில் சங்க இலக்கியத் தொகையை திராவிடக் களஞ்சியம் என்று சொல்ல முடியுமா? இல்லை அது தமிழிலக்கியத் தொகை மட்டும்தானா?

இரண்டு பார்வைகளுக்கும் இடமுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியத்தின் அழகியலே பிராகிருத மொழியின் தொல்நூலான கதாசப்தசதி [பிராகிருத உச்சரிப்பு கஹா சத்த சயி] போன்ற நூல்களிலும் உள்ளது. முனைவர் மதிவாணன் என்பவர் “ஆந்திரநாட்டு அகநாநூறு” என்றே அதை மொழியாக்கம் செய்திருக்கிறார். பிராகிருதமொழிக் காவியங்கள் பின்னாளில் தமிழாக்கம் செய்யப்பட்டன. உதாரணம், பெருங்கதை.

அதற்குப் பிந்தைய சமண,பௌத்த பேரிலக்கியங்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும் நிலைகொள்பவை அல்ல. அவை தென்னகத்திற்கே பொதுவான அழகியலும் தத்துவமும் கொண்டவை. கர்நாடகத்திலுள்ள சிரவணபெளகொளா மற்றும் கும்சா போன்ற சமண மையங்களும், ஆந்திரத்தின் நாகார்ஜுன கோண்டா மற்றும் அமராவதி போன்ற பௌத்த மையங்களும் அவற்றின் ஊற்றுமுகங்கள்.  ஒட்டுமொத்தமாக அவற்றைக் குறிப்பிட திராவிட இலக்கியத்தொகுப்பு என்பதில் பிழை இல்லை.

திராவிடம் என்பதை இன அடையாளமாகக் கொள்ளாமல் நில அடையாளமாகக் கொண்டால் அப்பார்வையை ஏற்பதில் எனக்குத் தடையேதுமில்லை. திராவிடம் என்பது இனப்பெயர் என்பதுதான் கால்டுவெல்லின் பிழையான புரிதல். அது நிலவியல்படி தென்னகத்தின் பொதுவான பெயர். சிற்பவியலிலும் தாந்த்ரீகவியலிலும் தென்னகம் அவ்வண்ணமே குறிப்பிடப்படுகிறது. திராவிடச்சிற்பக்கலை தனித்த அழகியல் கொண்டது. தென்னகத்துக்குரிய தாந்த்ரீக மரபும் உண்டு. அது சிற்பக்கலையுடன் இணைந்தது. ஆயுர்வேத நூலான கவனகௌமுதி பல தென்னகத் தாவரங்களையும் திராவிட நிலத்தது என்கிறது.

தமிழ் இலக்கியத்தொகையை சிற்பவியல், மறைஞானவியல், பழங்கால அறிவியல் ஆகியவற்றுடன் இணைத்து ஆராய அதை திராவிடக் களஞ்சியமாக பார்க்கும் பார்வை உதவுமென்றால் ஏன் தவிர்க்கவேண்டும்? தென்னக இலக்கியங்களை முழுக்க ஒட்டுமொத்தமாக அணுகுவது மேலும் விரிந்த பார்வையை அளிக்குமென்றால் அதில் என்ன தடை?

இது புதிய பார்வை அல்ல. உலகளாவிய ஆய்வாளர் நடுவே இந்த அணுகுமுறை உள்ளது. குப்பம் திராவிடப் பல்கலை கழகம் இந்த நோக்குடன் உருவாக்கப்பட்டதுதான். எங்களூர் பேரறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்கள் குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்து நடத்தி நெடுந்தொலைவு சென்ற ஆய்வுமுறை அது. இன்றைய தமிழாய்வில் குப்பம் திராவிடப் பல்கலையின் திராவிடவியல் ஆய்வுநூல்களே மிகப்பெரிய சாதனைகள்.

அப்பார்வையை மறுத்து, தமிழிலக்கியத் தொகை தனக்கே உரிய தனித்தன்மைகள் கொண்டது என்று சொல்லி அவற்றை வலியுறுத்தி ஆராயும் ஒரு நோக்கு இருக்கமுடியுமா என்றால் முடியும். அதுவும் சரியானதே. தமிழிலக்கியத்திற்கென பல சிறப்பியல்புகள் உண்டு. சங்க காலத்து புறத்திணையிலேயே அத்தகைய தமிழ்த் தனித்தன்மைகள் துலக்கமாக உள்ளன. அகத்துறை பிற்காலத்தில் பக்தி இலக்கியமாக விரிவடைந்ததிலும் தமிழின் தனித்த வளர்ச்சிமுறை உள்ளது.

இருபார்வைகளும் அறிஞர் நடுவே விவாதிக்கப்படுபவை. அவ்விவாதம் ஆக்கபூர்வமாக நிகழுமென்றால் நன்று. அன்றி, அரசியல் என்றால் வென்ற தரப்பின் முயற்சியை வெல்ல விரும்பும் தரப்புகள் அரசியல்களத்தில் சந்திக்கலாம். அதில் ஆய்வாளர்களும் அறிஞர்களும் என்னைப்போன்ற வாசகர்களும் சொல்ல ஏதுமில்லை.

ஜெ

https://tamil.indianexpress.com/literature/sangam-literature-and-dravidian-kalanjiyam-controversy-political-leaders-and-writers-scholars-opinion-337927/

 

முந்தைய கட்டுரைமொழியை அனுபவமாக்கும் ஜெயமோகனின் மாயப்பொன்: எம்.எல்.ஜானி
அடுத்த கட்டுரைகல்குருத்து- கடிதம் -13