தத்துவத்தின் பயன்மதிப்பு- கடிதம்

தத்துவத்தின் பயன்மதிப்பு

பேரன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

தத்துவத்தின் பயன் மதிப்பு என்ற கட்டுரை மிகவும் அருமையான ஒன்று. படித்து, விவாதித்து, வரண்டு, வாழ்வில் இருண்டு கிடப்பதற்கானது அல்ல தத்துவம் என்று மிகத் தெளிவாக விளக்கி இருந்தீர்கள். அதுவும் மிக முக்கியமாக கீழை தத்துவங்கள் எவ்வண்ணம் பயில்கின்ற ஒருவரின் வாழ்க்கையை இங்கேயே ஒளியை நோக்கி நகர்த்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளன என்ற விளக்கம் இன்றைய தலைமுறை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

நமது மரபில் வேதாந்த வகுப்புகளில் அடிக்கடி சொல்லப்படுகின்ற ஒரு வாசகம் “கவனமாக இருங்கள். வரட்டு வேதாந்தி ஆகிவிடாதீர்கள்” என்பதுதான். இன்னும் விளையாட்டாக ஒன்றும் சொல்லப்படும், “மூன்று காலங்களிலும் உலகம் இல்லவே இல்லை, பிரம்மம் மட்டுமே உள்ளது. இது மட்டுமே சத்தியம். ஐயமே இல்லை. ஆனால் நண்பரே! இப்போது நாம் உண்டு கொண்டிருக்கின்ற சாம்பாரில் உப்பு சற்று குறைவாக உள்ளது, தயவு செய்து முதலில் அதைக் கொண்டு வாருங்கள்”. இனிப் பிறவாநிலை, விடுதலை, முக்தி, பிரம்ம ஞானம் என்று பலவற்றை பேசுகின்ற பொழுதும் வேதாந்தத் தத்துவம் தன்னுடைய முதல் பயன் என முன்வைப்பது இங்கே இப்பொழுதே ஆன நிறைவான ஒரு வாழ்க்கையை. அதனாலேயே வேதாந்தக் கல்வியோடுகூட, மிகவும் கட்டுப்பாடோடு கூடிய எளிய வாழ்க்கை முறை (வைராக்கியம்), தொடர்ச்சியான உபாசனை மற்றும் சாதனைகள் நிறைந்த தினசரி வாழ்க்கை(அப்பியாசம்) என அனைத்தும் இங்கே தத்துவ கல்வியோடு சேர்த்து பயிற்றுவிக்கப்படுகின்றன.

“இங்குள்ளவை அனைத்தும் அதுவே” என்று பயில்கின்ற தத்துவத்திற்கு ஏற்ப “அது என்றாகி” வாழ முயல்கின்றபோதும் ஒரு வேதாந்த தத்துவ மாணவன் நிச்சயம் அறிந்து இருப்பான் ஒரு சிட்டுக் குருவிக்கும் பெரிய யானைக்குமான உலகியல் வேறுபாட்டை. தத்துவப் பார்வையில் அவை இரண்டும் அதுவே என்றான போதும் சிட்டுக்குருவிக்கு உணவான ஒரு கைப்பிடி அரிசி யானைப் பசிக்கு போதுமானதாகாது என்பதை அறிந்து யானைக்கு பல கவளம் உணவு அளிக்கத் தெரியாதவன் உலகியலில் கடமையாற்ற முடியாதவன். உரிய இடத்தில் உரிய வண்ணம் அறத்தின் வழி நின்று இயற்ற வேண்டிய கடமை ஆற்றி, உயர் தத்துவ தளத்தில் அனைத்தும் ஒன்றே என்ற மெய்மைத் தரிசனத்தில் திளைத்து, நிறைவில் வாழத் தெரியாதவன் ஒரு சரியான வேதாந்தி ஆவதில்லை.

“ஆரம்பத்திலும் நிறைவை அளிப்பது, முடிவிலும் நிறைவை அளிப்பது, பயில்கின்ற இந்தக் கணத்திலும் எந்தக் கணத்திலும் நிறைவை மட்டுமே அளிப்பது தம்மம்” என்கிறார் புத்தர். அப்படி நிறைவளிக்க முடியாத ஒன்று தம்மமாக இருக்கவே முடியாது என்றும் அவர் அறுதியிட்டுச் சொல்கிறார்.

முழுமுதல் பேருண்மை அல்லது சாரமற்ற வெறுமை எனப் பேசுகின்ற தத்துவமும் அதன் தரிசனமும் எது ஆன போதும் வேதாந்தமும்  பௌத்தமும் அனைத்திற்கும் மேலான உண்மை என்கின்ற மெய்யியலை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. அறவாழ்வு என்று வருகின்ற பொழுது சொல்லவே வேண்டாம் கீழை தத்துவங்கள் அனைத்தும் அவற்றை ஒரு மிகமிக அவசியமான அடிப்படையாகவே வைத்து விடுகின்றன. அறவாழ்வு வாழ உறுதி ஏற்காத மற்றும் அதற்காக தொடர்ந்து முயலாத ஒருவன் தம்மத்தையோ அல்லது வேதாந்தத்தையோ பயிலத் தகுதியற்றவன். அத்தகைய ஒருவன் எத்தனை முயன்றாலும் கீழைத் தத்துவங்கள் காட்டுகின்ற துன்பமற்ற நிறைவான வாழ்க்கை என்பதை ஒருக்காலும் அடையவே முடியாது.

குரு நித்யாவின் அன்பு மாணவராய், நாராயணகுருவின் மரபில் வந்த நீங்கள் இவற்றை உங்கள் தனித்துவமான தமிழ் நடையில் விளக்கிச் செல்கின்ற அழகே அழகு!

வெண்முரசு முடித்து நீங்கள் உள்ளம் ஓய்ந்து இருக்கின்ற இந்த இனிய வாழ்க்கைத் தருணத்தில், நீங்கள் துவக்கி இடையில் நிறுத்தி வைத்திருக்கின்ற பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் பகவத்கீதை போன்றவற்றுக்கான உரை எழுதும் பணியை மீண்டும் துவக்கி மிக விரைவில் முடிக்க வேண்டும் என்கின்ற அன்பின் கோரலை உங்கள் முன் வைக்கிறேன். தமிழ் உலகு உங்களுக்கு அதற்காக என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். ஒருவரின் தாய்மொழி வழித் தத்துவப் பயிற்சி செய்கின்ற ஆழுள்ள மாற்றத்தை வேறு எந்த மொழி வாசிப்பும் செய்துவிட முடியாது என்பதை நன்கு உணர்ந்திருப்பதினாலேயே இந்த அன்பான வேண்டுகோள். அதுவும் உங்கள் உன்னதமான தமிழ் நடையில் அவற்றை வாசிக்கும் பேறு பெறுகின்ற ஒருவர், நிச்சயம் சரியான தனக்கு உவந்த மெய்யியல் பாதையைத் தேர்ந்து, மெல்ல மெல்ல முழுமையை நோக்கி நகர்ந்து, தன் வாழ்வில் நிறைவை எய்துதல் திண்ணம்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

முந்தைய கட்டுரைஇடம்,அருகே கடல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசகன் எழுத்தாளன் ஆவது- கடிதம்