சின்னச் சின்ன ஞானங்கள் தொகுதியில் குரு நித்யா புத்தகம் வாசிப்பது குறித்து சொல்லியிருப்பது மிக முக்கியமாக இருந்தது. ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, வாசிக்கும் புத்தகத்தில் இருந்து நாம் அடையும் அறிதலை அதன் கீழ் தொகுத்துக் கொண்டே சொல்ல வேண்டும் என்பது. புத்தகம் வாசிப்பது குறித்து புதிதாகக் கற்றுக் கொண்டேன்.
[அஸ்ட்ரோ பிஸிக்ஸ் புத்தகம் கையில் வைத்திருக்கும் அப்பாவிடம் அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கு என கேள்வி எழுப்பும் சிறு மகவுதான். அவ்வளவு தொலைவும் விஷயங்களும் இருக்கிறது கற்றுக் கொள்வதற்கு. உண்ண உண்ணப் பசித்துக் கொண்டேதான் இருக்கிறது. நேரமும் காலமும் போதாது என்பது போல உணர்கிறேன்.]
அதனால் இன்று தளத்தில் கவிதை என்னும் வகைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த பதிவுகளையெல்லாம் வாசித்து தொகுத்துக் கொண்டிருந்தேன். எது கவிதையாகிறது? எது கவிதையை அல்லாமலாக்குகிறது? அதன் பேசுபொருள், சொல்லிணைவுகள், இசையொழுங்கு, பிறிதொன்று சொல்லி உணர்த்துவது, மலர்மொக்கவிழ்வது போன்ற நுண்தொடுகை, என பல கட்டுரைகளில் சொல்லியதை கைப்படக் குறிப்பெழுதிக் கொண்டேன்.
அதில் கவிதைக்கு நம் அகத்தின் மிக அந்தரங்கமானதொரு பகுதியைத் திறந்து வைக்கிறோம். எனவே அங்கு நுண்மையான ஒலிகளும் பேரோசைகளாகும், குண்டூசி விழும் ஓசை கூட இடியென ஒலிக்கும். எனவே அதில் நேரடியாய் சொல்வதற்கும், தேம்பி அழுவதற்கும், செயற்கையானவற்றுக்கும் இடமில்லை என்று வாசித்ததும் நான் வாசித்துக் கொண்டிருப்பது கவிதை குறித்து மட்டுமல்ல, ஆன்மீகமான ஒரு கட்டுரை என்று தோன்றியது. கவிதை குறித்து சொன்னதெல்லாம் ஆன்மீகப் பயணத்துக்கும் அப்படியேதான் பொருந்துகிறது எனக் கண்டேன். அந்தரங்கமானவற்றை சொல்ல முற்படும் போது நாம் வேறெங்கோ பார்க்கிறோம், அசட்டுத்தனமாக புன்னகைக்கிறோம், வேறெங்கோ தொடங்குகிறோம். திரைப்படத்தில் ஒளியை ஒரு சுவரில் பிரதிபலித்து அதை இன்னொரு திரையில் பிரதிபலித்து அந்த ஒளியை நடிகர்கள் முகத்தில் விழுமாறு அமைப்பார்கள் என்றும் அது போல எத்தனை பெரிய வலியாக இருந்தாலும் பிரபஞ்ச வெளியில் பட்டு எதிரொலித்து ஒரு சிறிய முணுமுணுப்பாகவே, தன்னுள் எழும் குரலெனவே கவிதை பேச வேண்டும் என்றும் எழுதியிருப்பீர்கள்.
இதையேதான் கற்றுத் தேர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு எண்ணத்தையும், ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லாக்கி விட முனையும் இந்த அகத்தை வைத்துக் கொண்டு பாடாகத்தான் இருக்கிறது. உணர்வதெல்லாம் உள்ளமைந்து உதிர்ப்பதுவும் எக்காலம்!
இருளில் விரல் தடவி தொட்டுணர்ந்த ஒன்றை மொழி தொடாதிருக்கட்டும்!
அதோ எனச்சுட்டும் விரலில் பறந்துவிடக் கூடும் அனிச்சமலர்ப் பறவை! என்றே எண்ணிக் கொள்கிறேன்.
சுபா