அன்புநிறை ஜெ,
அணிபுனைதல் – ஒவ்வொரு அணுவும் கரைந்தழிந்த பேரனுபவம். நூறு முறை, ஆயிரம் முறை கோடி முறை பிறந்திணைந்திறந்திருக்கிறேன். இன்னும் எச்சமிருப்பதைத் தாளமுடியாது இருக்கிறேன். பெண்ணாக அல்ல, ஆணாக அல்ல, கரைந்துவிட கணம் கணம் எனக் காற்றிடம் மன்றாடும் சுடர் தொடாத கற்பூரமாக. தன்னிருப்பு மட்டுமாக.
தொடக்கம் முதல் அணி சூடிவிடும் பகுதி இது. பகல் என்பதே இரவு சூடும் அணிதானே. அதைக் களைந்து அணுகக் காத்திருக்கிறது ஒவ்வொரு பொருளின் காலடியிலும் கரவு கொண்ட இரவு.
ஒற்றை ஒரு பகுதியில் எத்தனை எத்தனை சித்திரங்கள்.
பாரிஜாதம், எங்கு புன்னகைப்பதென்று அறிந்தவள் அவள் – இவ்வரியின் ஊடாக மலரென வந்ததன் பேறடைந்து விட்டது இம்மலர். பகலில் தவமிருக்கும் பாரிஜாதத்தை சொல்லி அந்திவரை குலப்பெண் என ஆற்றி நிற்கும் ராதையின் சித்திரம் வருகிறது.
ஆனால் அதன் இறுதியில் உயிர் அள்ளி உண்ணும் ஒரு சித்தரிப்பு. கூடைக்குள் நாகம்போல் என்னுள் நானிருந்து விழிமின்ன நெளிகின்றேன். – கூடையின் கண்களின் ஊடாக உள்ளே நெளிந்து உடலெல்லாம் விழிமின்னும் நாகத்தை ஒரு நொடி கண்டுவிட்டேன். பாம்பின் கால் பாம்புணர்ந்த நொடி அது. கூடையும் நாகமுமாக புறத்தைக் கொண்டு அகத்தை அணைகட்டும் அற்பச்சிறு முயற்சி. எப்போதும் வெல்வது நாகம்தான்.
காளிந்தி நீர்ப்பரப்பாய் கரியோன் கரம் வந்து என் ஆடைபற்றி இழுக்க அள்ளிச்சுழன்று நாணுவேன் காளிந்தியைக் கண்ணன் என்று கண்டபின் கரையேறுவது எங்கனம். அல்லது கரையேற வேறு வழியுண்டா என்ன? நீந்தித் திளைக்கிறாள். தழுவித் திமிறுகிறாள், மூச்சடக்கி மூழ்குகிறாள்.
இல்லத்து மகளிர் வசை பொழிகிறார்கள். சிதலெனக் கூடி ஒன்றையே ஆற்றும் சிற்றுயிர்கள். இவளோ சிதல்புற்றில் குடியேறும் கருநாகம் நான். – அடுத்த படிமம்.
அதன் பின் வரும் வரிகளை அது அமைந்திருக்கும் நிரை முறையே முற்றுரைக்கிறது. முகத்தை, முலையை எனத் தொடங்கி தொடையிணையில் நின்றுவிட்டு அதன் பிறகு ஒரு தனிப்பெரும் பத்தி.
வேள்விக்கட்டைகள் கடைந்து கடைந்தெடுக்கும் கனல் எனத்தொடங்கி இடைஒளித்த நாகப்பத்தியை சொல்லெண்ணி அர்ச்சிப்பது போல. பாதவெண்மைக்கு நகரும் அடுத்த பகுதி. சௌந்தர்யத்தின் லஹரி.
ஒவ்வொரு அணியாய் அணிந்தணிந்து உச்சம் தொட்டு, இவ்வளவு அணியும் சூடியது நானா என விதிர்த்து அனைத்தையும் களைந்தெறிந்து, அதன் உச்சத்தில் ஆன்மா தரித்திருக்கும் உடல் எனும் எடைமிக்க அணியையும் களைந்து எறியும் தவிப்பு. இம்முலை களைந்து தோள்களைந்து இடைகளைந்து அல்குல் தழல் களைந்து எழுந்தோட விழைவேன்.– இதனினும் இந்த வேட்கையை வேறெப்படியும் சொல்ல முடியாது. நூறாயிரம் முறை இந்த உடலைத் தாள முடியாது இதற்குள் சிறைப்பட்டிருக்கும் பறவையை விடுவிக்க பதைபதைக்கும் அகம் மட்டுமாகி நின்றிருக்கிறேன். இவ்வரிகளில் இறந்து மீண்டு வந்தேன்.
ஆடை மறைத்த உடல். ..சொல் மறைத்த மனம். இந்த சொல் வெளி அனைத்துக்கும் அப்பால் நிற்கும் ஆழத்துக் கனல்.
அதோ ஆடியில் என் கண்கள். கொலை வஞ்சம் கொண்டோன் உடைமறைத்த குறுவாளின் நுனிமின்னல் – இந்தக் கண்களை மறைக்க கண்ணனைத்தான் அணிய வேண்டியிருக்கிறது. கொலைவாளின் முனையில் அமர்ந்து குழலூதத் தெரிந்தவன்.
அவளணிந்த அத்தனை அணிகளும் அவன் தொடுகைகள் ஆவது பேரழகு. நான் இவ்வாழ்வில் அணிந்திராத ஒவ்வொரு அணியையும் அணிந்து பெண்ணாகி, அவளுக்கு அணிவித்து ஆணாகி, மீண்டிருக்கிறேன். அந்தந்த அணி எவ்விடத்து அமையுமோ அங்கு அவன் அமரும் நுண்தருணம். அதன் உச்சம் நெற்றியில் துவள்வது அவனுக்கு நான் ஆட்பட்ட அத்தருணம் இது விரிக்கும் காட்சி!
அவனை அணியாக்கி அவள் அணிந்த பின்னர்தான் கானகத்து மலர்கள் கூட அணிகின்றன. முல்லை தொடங்கி நீலத்தாமரை வரை. அவனையே சூடிய பின் மலரணியக் கொடுத்த சுடர்க்கொடியாகிறாள் ராதை.
அடுத்து வருகிறது இரவு, நிலவு.
நிலவின் ஒளி போல இருளை அள்ளிப்பருகுவது வேறொன்றில்லை.இலைப்பரப்புகளில் படர்கிறது நிலவின் காமம் அந்த ஒளி – அனைத்து கரவுப் பகுதிகளையும் உட்புகுந்து அரை ஒளி பாய்ச்சும் நிலவின் ஒளி காமமேதான்.
அதன்பின் வருகிறது பித்தெழச் செய்பவன் மீதான காதல்வசைகள். தெய்வமறியாததொனறில்லை. எனில் களவில் ஈடுபட்ட நெஞ்சம், காதலை அரும்பொருளென ஒளித்து வைக்கும். பரம்பொருள் கள்ளன் என்றாகி அங்கு வந்து அரும்பொருள் கவரும் எனில் பாவம் மானுடம் என்ன செய்யும்!! //கைபிடித்துக்கொண்டுசெல்லும் கள்ளப்பெருந்தெய்வம்.// கள்ளப்பெருந்தெய்வம் எனும் ஒரு சொல்லில் அடப்பழிகாரா என வெகுநேரம் ஆழ்ந்திருந்தேன்.
கொன்று உடலாக்கி உண்டு பசியாறி சென்று திரும்பும் முன் திசைவெளியில் உயிர்ப்பித்து இன்று பிறந்தாய் இனிக்கொள்க எல்லாம் என்று சொல்லி புன்னகைக்கும் மாயக்கொலைகாரன்.// இது காமத்தில் பிதற்றும் மோகச்சொற்புயல் மட்டுமன்று, இப்பிறவிச்சுழலில் பிறப்பித்து இறப்பித்து பலமுறை பலபிறப்பெடுக்க வைக்கும் கொலைகாரன். இடையே //காமத்தில் நனைத்து காயவைத்து மீண்டும் எழுப்பும் கயவன்.
உடலெனும் கிளைஉதைத்து விண்நோக்கி விரிசிறகு விரித்து விட்ட வரிகள் இவை.
அடுத்து வருவது இருமை தொட்டு முன்பின்னாடும் ஊஞ்சலின் நிலை.
மழையில் நிறைந்து வேனிலில் வறளும் மலைச்சுனை போல ஒவ்வொரு கணமும் உருவழிந்து மீண்டேன். காலடி ஓசையில் பூத்தேன். அது காற்றோசை என கணுதோறும் உதிர்ந்தேன். கழலோசை எனத் தளிர்த்தேன். அது கலமுருள்தல் என்று கருகினேன். பறவைச்சொல் இனிதென்று பசுமைகொண்டேன். பல்லி அதைச் சொல்லவில்லை என்று பாலையானேன்.
இனி நீயே வந்தாலும் உனக்காகக் காத்திருப்பதன் இன்பத்துக்கு நிகராகாது என உணர்கிறாள். ஊசல் நின்றுவிட்ட ஊஞ்சல் பொருளிழந்து போவது போல காத்திருப்பு எனும் சொல்லில் இனி நான் கண்டடைய ஏதுமில்லை எனும் ராதைக்கு காத்திருப்பே நீலன். அதன் கரையணைந்தாலும் நீலன்தான், ஆற்றுப்பெருக்கும் நீலன்தான்.
அதன்பின் வரும் பகுதியை சொல்ல ஒவ்வொரு வரியையும் மீண்டும் எழுதுவதொன்றே வழி. என் வெறும்மேனிமீது புல்வெளிமீது தென்றல்போல் அவன் விழியோடியது. பின் பெருங்கடல்மீது புயல்போல அவன் மூச்சோடியது. “உன் உடல்கொள்ளும் மெய்ப்பே கண்ணனுக்கு பிடித்த அணி” என்றான். அவளணிந்த அணிகளிலேயே அழகான அணி!
இரவெல்லாம் தனித்திருப்பவள் நான். இரவை உண்டு இரவை உயிர்த்து இரவிலாடி இங்கிருப்பவள். அணுஅணுவாக இவ்விரவில் திளைத்து அவளாகி நிற்கிறேன். சியாமையாகி சியாமனை அறிகிறேன்.
என்றேனும் இந்த உடல் எனும் அணி களைந்து, அது சூடும் ஆயிரம் சொற்களையும், அது கற்பித்துக் கொண்ட பொருள் அனைத்தையும், நூறு நூறு பாவனைகள் அனைத்தையும் களைந்து நீலனுடன் கரையும் தருணத்துக்காக தவமிருக்கிறேன்.
தோடி முடித்து பூபாளத்தில் மலர்வது வேறொரு மலர். அங்கு இந்த தவிப்புகள் நிழலென்றாகி காலடியில் ஒளிந்திருக்கும்.
மிக்க அன்புடன்,
சுபா