அன்புள்ள ஜெ
வணக்கம்..
கோவை ஆலந்துறை பகுதியில் பாலாஜி பேக்கரி உள்ளது. நானும் நண்பர்களும் தினசரி செல்வதுண்டு.ஒருநாள் உங்கள் புத்தகம் ஒன்று
கையில் வைத்திருந்தேன்.உரிமையாளர் ரமேஷ் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் முதன் முதலில் அறம் தொகுப்பு வாசித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.என்னிடமிருந்த பிற உங்கள் புதினங்களை கொண்டு போய் கொடுத்தேன்.அந்த முகில் நாவல் வாசித்து அவர் நேரில் பேசியது அவ்வளவு உயிர்ப்பான ஒன்று.
தன் நண்பர்களுக்கு அறம் தொகுப்பு தான் பரிசளித்து வருகிறார்.கொஞ்சம் பிஸ்கெட், கேக் சாருக்கு அனுப்ப வேண்டுமென்று தோன்றுகிறது.அனுப்பலாமா என்று கேட்டார்.இன்று அனுப்பி வைத்திருக்கிறார்.
நன்றிகள் சார்…
குமார் ஷண்முகம்
*
அன்புள்ள குமார்,
திரு ரமேஷ் அவர்களுக்கு என் வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவிக்கவும். வாசிப்பவர் ஒவ்வொருவரும் நம் கூட்டத்தவரே. நாம் இங்கே எழுதியும் வாசித்தும் ஒன்றை திரட்டியமைத்துக் கொண்டிருக்கிறோம்
ஜெ
அன்புள்ள ஜெ
நேற்று ஓர் ஆட்டொவில் பயணம்செய்துகொண்டிருந்தேன். சென்னையில் ஆட்டோக்காரர்கள் இயந்திரத்தனமாக இருப்பார்கள். இந்த ஆட்டோ ஓட்டுநர் உற்சாகமாக ஏதோ பாடியபடி இருந்தார். நான் பேச்சுக்கொடுத்தேன். என்னிடமிருந்த வெண்முரசு நாவலைப் பார்த்தவர் உங்களை தெரியும் என்று சொன்னார். அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை உண்டுபண்ணிய நூல் என்று தன்மீட்சியைச் சொன்னார். எவரோ அவருக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.
அதற்கு முன் அவருக்கு வாழ்க்கையின் நோக்கம் என்ன என்னும் குழப்பங்கள் இருந்ததாகச் சொன்னார். மதங்கள் சொல்லும் பதில்களில் ஈடுபாடில்லை. அரசியலில் ஈடுபாடு இருந்தது, இப்போது கிடையாது. தனிமனிதனாக அவர் தேடிய கேள்விகளுக்கான விடை தன்மீட்சியில் இருந்தது என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. அவர் பெயர் ரங்கமன்னார்
சிவக்குமார் பொன்னம்பலம்
*
அன்புள்ள சிவக்குமார்
தன்மீட்சி நூலை தன்னறம் பதிப்பகம் பல்லாயிரம் பேருக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளது. என் உலகுக்குள் நுழைய வாசலாக அது உள்ளது. முன்பு அறம் எப்படி இருந்ததோ அப்படி.
ரங்கமன்னார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஜெ