இன்றைய தற்கொலைகள்- கடிதங்கள்

இன்றைய தற்கொலைகள்

நான்கு வேடங்கள்

அன்புள்ள ஆசிரியர்க்கு,

வணக்கம்

இன்றைய தற்கொலைகள் கட்டுரை, நான்கு வேடங்கள் கட்டுரையின் நீட்சியாக கச்சிதமாக அமைந்துள்ளது, நான்கு வேடங்களை உணர்ந்தாலே ஒரளவு தனிமையில் இருந்து விடுபட முடியும் என்பதை கண்டிருக்கிறேன், பொருள் என்னும் ஒரே உலகத்தில் உழல்வதால் அருகில் இருப்பவர் அனைவரும் போட்டியாளர் அந்தஸ்து பெறுகின்றனர் குடும்ப உறுப்பினர்கள் உட்பட, இதனால் தளர்வதற்கு இடமே இல்லை. குடி தளர்த்தும் ஆனால் அழிவுப்பாதை, இப்பொதெல்லாம் நெருங்கிய நண்பர்கள் இடையே கூட அனாவசியமாக பொருளாதார அந்தஸ்து குறித்த பேச்சுகள் வந்து திணற வைக்கிறது.

நான்கு வேடங்களில் நான்கு உலகங்கள் காணலாம், நான்கும் குழம்பும் எல்லைகள் உண்டு ஆனால் ஒற்றை உலக இறுக்கத்திற்கு இந்தக் குழப்பம் நன்று.

அன்புடன்,

மணிகண்டன்

***

அன்புள்ள ஜெ

இன்றைய தற்கொலைகள் கட்டுரையை மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன். உங்கள் கட்டுரைகளின் சிறப்பம்சமாக நான் காண்பது அவை விசித்திரமான கோணங்களை சொல்வதில்லை, விந்தையான வாதங்களை முன்வைப்பதுமில்லை என்பதுதான். பொதுவாக அறிவுஜீவிகளின் மனச்சிக்கல் இது. சமூகப்பிரச்சினைகளில் எது சரி எது தப்பு என்பது அவர்களுக்குப் பிரச்சினையே அல்ல. எது தனக்குரிய தனி அபிப்பிராயமாக இருக்கும், எப்படி தன்னை வேறுபடுத்தி முன்வைப்பது என்பதுதான் அவர்களின் சிக்கல். ஆகவே எதையாவது சொல்வார்கள்.

ஆனால் மிகச்சரியாகச் சொல்வதற்கான முயற்சியையே நீங்கள் எடுக்கிறீர்கள். தொகுத்துச் சொல்கிறீர்கள். சரியான சொல்லாட்சிகளை உருவாக்குகிறீர்கள். நாம் அதை கொஞ்சம் உணர்ந்திருப்போம். ஏனென்றால் அதெல்லாம் உண்மை. உண்மையை யாரானாலும் கொஞ்சமாவது அறிந்திருப்பார்கள். உண்மை ஒட்டுமொத்தமாகவே விசித்திரமான ஒன்றாக இருக்காது. ஆகவே நீங்கள் வகுத்துரைக்கும்போது அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது. மேலே நாம் சிந்திப்பதும் ஒரு வகையான ஒழுங்குக்குள் வருகிறது

இலக்கியவாதி என்பவன் சிந்திப்பவன் அல்ல சிந்தனைகளுக்குச் சொல்கொடுப்பவன் என்று ஒரு விமர்சனக்கூற்று உண்டு. அதை உங்கள் கட்டுரைகளில் காண்கிறேன்

எஸ்.பாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகேளாச்சங்கீதம், கடிதங்கள் 11
அடுத்த கட்டுரைபெண்விடுதலை, சமூகப்பரிணாமம்