தலபுராணங்கள் எதன்பொருட்டு?

அன்புள்ள ஜெ,

நம் பண்டைய ஆலயங்கள் கொண்டுள்ள “இரு வித வரலாறுகள்” பற்றிய பதிவை ஒட்டிய கேள்வி இது. யதார்த்த வரலாற்றை விட, புராணம் சார்ந்த வரலாறே மக்கள் மனதில் நீடித்து இருக்கிறது. ஆலயங்களின் அமைப்பு, தெய்வங்களின் உருவங்கள் மற்றும் பெயர்கள் பெரும்பாலும் இந்த புராண வரலாற்றை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. எதன் அடிப்படையில் இந்த தல வரலாறு உருவாகிறது?

எனது சொந்த ஊர் சிவகாசியை அடுத்த திருத்தங்கல். அங்குள்ள நின்ற நாராயண பெருமாள் ஆலயம், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த ஆலயத்திற்கான தொன்மங்களில் ஒன்று, இளைய யாதவன் இத்தலத்தில் தான் அநிருத்தனுக்கும் பாணாசுரனின் மகள் உஷைக்கும் திருமணம் செய்வித்தான் என்பது. இங்குள்ள மூலவர் சன்னதியின் உட்புறம் அநிருத்தனுக்கும் உஷைக்கும் திருமண கோலத்தில், நின்ற நிலையில் சிலைகள் உண்டு. ஆனால் பாணாசுரனின் தொல்நிலமோ, மஹாபாரத கதைகளின் படி கூட எங்கோ வடக்கில் இருப்பது.

பின் ஏனிப்படி ஒரு தல வரலாறு தேவையாகிறது? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தைக் கட்டிய அரசனின் அல்லது சிற்பியின் வெறும் கற்பனையோ, விழைவோ மட்டுமே இவ்வாறு ஒரு புராணத்தைக் கட்டி எழுப்பி, இத்தனை நூற்றாண்டுகளாக மக்களை நம்ப வைக்க முடியுமா?

சாரதி

அன்புள்ள சாரதி,

சுசீந்திரம் ஆலயத்துக்கு முன்னால் புத்தகக்கடையில் அ.கா.பெருமாளின் சுசீந்திரம் ஆலயவரலாறு நூல் விற்கப்படும். சுசீந்திரம் தொன்மக்கதையும் விற்கப்படும் . தொன்மவரலாற்றுநூல் ஆயிரம் பிரதி விற்கப்பட்டால்கூட வரலாற்றாய்வு ஒருபிரதி விற்கப்படுவதில்லை

சுசீந்திரம் என்னும் தலத்துக்கு கல்வெட்டுகளின் படி சிவீந்திரம் என்றுதான் பெயர். சிவ இந்திரம். இந்திரனுக்குரிய சிவத்தலம். தொன்மையான ஆலயங்களில் அவற்றுக்கான காவல்தெய்வம் அல்லது துணைத்தெய்வம் எது என்பது முக்கியமானது. இந்திரன்.சூரியன், வருணன் முதலிய தெய்வங்கள் அவ்வாறு காவல்தெய்வங்களாக அமையும். அவற்றின் அடிப்படையில் ஆலயங்கள் இந்திர க்ஷேத்திரம் சூரியக்ஷேத்திரம் என அழைக்கப்படுகின்றன. அங்கே சிவனோ பெருமாளோ மையத்தெய்வங்களாக அமையலாம்.

ஓர் ஆலயத்தின் தாந்த்ரீக இயல்புகள் அது இந்திரன் ஆலயமா சூரியன் ஆலயமா என்பதைப் பொறுத்து அமைகின்றன என்பார்கள். பண்டைக்காலத்தில் இந்திரனுக்கும் சூரியனுக்கும் உரிய ஆலயமாக இருந்து சைவ வைணவ தலங்களாக ஆனவை அவ்வாறு இந்திரத்தலம் சூரியத்தலம் என்றும் அழைக்கப்படுகின்றன என ஒரு தரப்பு உண்டு. வேதங்களில் இந்திரனை மையமாக்கிய பிரிவு ஐந்திரம். சூரியனை மையமாக்கியது சௌரம். அவ்வாறு வேதமரபே தனி மதங்களாக இருந்துள்ளன. அந்த ஆலயத்தின் மையமான வேதம் எது என்னும் கேள்வியின் அடிப்படையில் அது இந்திரன் ஆலயமா சூரியன் ஆலயமா என்று முடிவெடுக்கப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்.

எவ்வாறாயினும் சுசீந்திரம் இந்திரனுக்குரியது. ஆகவே அது சிவீந்திரம்.ஆனால் அது பேச்சுவழக்கில் சுசீந்திரம் என்றாகியது. சுஜி என்றால் சம்ஸ்கிருதத்தில் தூய்மை. இந்திரன் தொழுநோய் வந்து நீராடி தூய்மை அடைந்தமையால் அந்த இடத்துக்கு சுசீந்திரம் என்ற பெயர் வந்தது என்று ஒரு பிற்காலத் தொன்மம் உருவாகியது. அது பேச்சுவழக்கில் இருந்து அச்சுக்கு வந்தது.

அங்கே விற்கப்படும் நூல்களில் அ.கா.பெருமாலின் நூல் முதலில் சொல்லப்பட்ட வரலாற்றுச்சித்திரத்தை அளிக்கிறது. பிறநூல்கள் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட புராணக்கதையை சொல்கின்றன.

இதுவே எல்லா ஆலயத்திலும் நிகழ்கின்றது. எவருக்கும் வரலாறு மேல் ஆர்வமில்லை. அனைவருக்கும் தலவரலாறுகளே போதும். தொன்மங்களிலேயே ஈடுபாடு. இது அன்றெல்லாம் எனக்கும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. இன்று ஒரு தெளிவு உள்ளது.

ஓர் ஆலயத்தின் நோக்கம் என்ன? இறையனுபத்துக்கான வழிபாடு முதன்மையாக. மரபார்ந்த பண்பாட்டுச்செயல்பாடுகளுக்கான மையமாக அமைதல் அடுத்தபடியாக. பொதுவான அறநிலையாகச் செயல்படுதல் மூன்றாவதாக. இம்மூன்றையும் ஒட்டியே மக்கள் ஆலயங்களுக்குச் செல்கிறார்கள், ஆலயங்களைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள்.

ஆலயம் ஒரு வரலாற்றுச்சின்னம். ஒரு காலக்குறி. ஆனால் அதெல்லாம் ஆலயத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு வெளியே உள்ளவை. அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியவை. ஆலயம் வரலாற்று அடையாளமாகவோ, காலச்சின்னமாகவோ அமைக்கப்பட்டது அல்ல.

தமிழகத்தில் நமக்கு முறையாக வரலாற்றைப் பதிவுசெய்யும் மரபு இல்லை. ஆகவே எழுதிவைக்கப்பட்ட வரலாறுகள் நமக்கு இல்லை. வரலாறு என நமக்குக் கிடைப்பவை முதன்மையாகத் தொல்பொருட் சான்றுகள். இரண்டாவதாக இலக்கியச் சான்றுகள். தமிழகத்தின் தொல்பொருட்களில் பெரும்பாலும்  சிதைவின்றிக் கிடைப்பவை ஆலயங்கள் மட்டுமே.

ஆகவே நாம் இலக்கியங்களை வரலாற்று நோக்கிலும் ஆராய்கிறோம். ஆலயங்களை வரலாற்றுச்சின்னங்களாக கருத்தில்கொள்கிறோம். தமிழக வரலாற்றின் முதன்மைச் சான்றுகளாக நமக்குக் கிடைப்பவை வெவ்வேறு ஆலயங்களில் உள்ள கல்வெட்டுக்கள். அவை ஆலயம் கட்டப்பட்ட வரலாறு, ஆலயத்தின் சொத்துரிமை, ஆலயநடைமுறை ஆகியவற்றின் பதிவுகள். அவற்றைக்கொண்டு நம் பொது வரலாற்றை நாம் ஊகிக்கிறோம்.

நம் கலைவரலாற்றிலும் ஆலயங்கள் முக்கியமானவை. ஏனென்றால் மரபார்ந்த கலைத்தொகுப்புகளாக நமக்கு எஞ்சுபவை ஆலயங்களே. கட்டுமானக்கலை. சிற்பக்கலை ஆகியவற்றுக்கான பதிவுகளாக அவையே உள்ளன. ஆலயங்களிலேயே இசை, நடனம் ஆகியவற்றைப் பற்றிய சான்றுகளும் உள்ளன. நம் ஆலயங்களை கலைக்கண்காட்சியகங்கள் என்றும் சொல்லலாம்.

இவ்வாறுதான் நம் வரலாற்றாய்வில் ஆலயங்கள் முதன்மையாக இடம்பெறுகின்றன. ஆனால் அது ஒரு அறிவுத்தள அணுகுமுறை மட்டுமே. ஆலயங்களின் முதன்மைநோக்கம் வழிபாடும், பண்பாட்டுநிலைநிறுத்தலும், அறச்செயல்களும்தான்.

இந்தக் கோணத்தில் பார்த்தால் ஆலயத்திற்கு வரும் வரலாற்று ஆய்வாளர்கள், பண்பாட்டு ஆர்வலர்கள் தவிர பிறருக்கு அதன் வரலாற்றுச்செய்திகளோ பிறசெய்திகளோ தேவையாக இருக்கவேண்டும் என்பதில்லை. பொதுமக்கள் அவற்றில் ஆர்வம் காட்டவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. ஆகவேதான் அச்செய்திகளுக்கு வழிபாட்டாளர்கள் நடுவே பெரிய ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறது.

ஆனால் தொன்மங்கள் நேரடியாகவே அந்த ஆலயத்தின் அடிப்படை நோக்கமான ஆன்மிகத்துடன், வழிபாட்டுடன் தொடர்புடையவை. அவை எவ்வளவு எளிமையானவையாக, செயற்கையானவையாக இருந்தாலும்கூட அவை ஆன்மிகத்தையும் வழிபாட்டையுமே சுட்டுகின்றன. ஆகவே பக்தர்களுக்கு அவற்றின்மேல் ஈடுபாடு உருவாகிறது.

வழிபட வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்களுக்கு எளிய உலகியல் கவலைகளும் உலகியல் கோரிக்கைகளும்தான் இருக்கும். தொன்மங்கள் அவற்றுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவை. இங்கே நீராடினால் இந்த நோய் குணமாகும், இங்கே நீராடினால் இன்ன பலன் கிடைக்கும் என அவை சொல்கின்றன. ஆகவே அவற்றை அவர்கள் உடனடியாக அறிந்து ஏற்கிறார்கள். அது இயல்பானதே.

அதற்கப்பால் ஆன்மிகநாட்டம் உடையவர்கள் அந்த புராணங்களின் குறியீட்டுப்பொருளை நோக்கிச் செல்கிறார்கள். அக்குறியீடுகளை முதலில் அறிந்து பின்னர் ஊழ்கம் செய்து மெய்மை நோக்கிச் செல்கிறார்கள். பெரும்பாலான புராணங்கள் ஆலயங்களின் அடிப்படையான குறியீட்டுத்தன்மையைச் சுட்டிக்காட்டுவனவாக இருக்கும்.அதன் வழியாக அந்த ஆலயமாக எழுந்த ஆதாரமான மெய்த்தரிசனத்தைச் சென்றடைவனவாகவும் இருக்கும்.

ஆகவே ஆன்மிகம்நாடி ஆலயத்துக்கு வருபவர் ஆலயத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆர்வமற்றிருப்பது இயல்பே. அவருக்குத்தேவை தொன்மம்தான். ஒருவேளை வரலாற்றாய்வுநோக்கு அவருக்கு தடையாகவும் ஆகக்கூடும்.

அக்னி தத்துவத்தை உணராமல் திருவண்ணாமலை ஆலயத்த்தின் மெய்யை சென்றடைய முடியாது. ஆகாய தத்துவத்தை அறியாமல் சிதம்பரத்தை உள்வாங்கவும் இயலாது. திருவண்ணாமலை ஆலயத்தை எந்தெந்த நாயக்க மன்னர்கள் புதுப்பித்தனர், சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாளை எந்த மன்னன் நிறுவினான் என்பதெல்லாம் ஆன்மிகநாட்டம் கொண்டவருக்குத் தேவையான செய்திகள் அல்ல.

பல அண்மைக்கால தொன்மங்கள்  வேறு இடங்களில் உள்ள பழைய  தொன்மங்களை ஒட்டி உருவாக்கப்பட்டவையாக இருக்கும். அரிதாகச் சில உள்ளூர்புராணங்கள் அபத்தமானவையாகவும் இருக்கும். ஆயினும் தொன்மங்களை கவனிக்கவேண்டியது மிக அவசியம். அந்த ஆலயத்தின் தீர்த்தம், தலவிருட்சம், அது எந்த முனிவருக்குரிய ஆலயம், எந்த காவல்தேவனுக்குரிய ஆலயம் ஆகியவை குறிப்பாக கருத்திகொள்ளப்பட்டகவேண்டும்.

சில சமயம் தொன்மங்களே திரிபடைந்திருக்கும். அந்த முதல்வடிவை ஆர்வம் எடுத்து அறிந்தாகவேண்டும். திருநெல்வேலிக்கும் நெல்லுக்கும் தொடர்பில்லை. ஆனால் அங்கே நெல்லில் வேலிகட்டும் சடங்கு பிற்காலத்தில் நடைபெறுகிறது. பழந்தமிழில் நெல் என்றால் மூங்கில். அந்த ஆலயத்தின் தலவிருட்சம் மூங்கில். அதற்கு வேணுவனம் என்று பெயர் உண்டு. மூங்கில்காட்டு இறைவன் அவன்.

சில தொன்மங்கள் முதலில் மிக எளிமையானவையாக இருக்கும். ஆனால் மரபை முழுமையாக அறிந்தால் அவற்றில் நெடுந்தொலைவு செல்லமுடியும். உதாரணமாக சுசீந்திரத்துக்கே வருகிறேன். இந்திரன் தொழுநோய் நீங்க நீராடிய ஆலயம். ஆனால் தொழுநோய் எப்படி வந்தது? காமம் என்பது இந்திரனுன் சிறப்பு. அது அவன் உடலெங்கும் யோனிகளாயிற்று. அவற்றை கண்களாக மாற்றிக்கொண்டான். ஆனால் காமம் அத்துமீறியமையால் அந்தக் கண்களெல்லாம் புண்ணாயின. தொழுநோயாளியானான். சுசீந்திரத்தில் நீராடி புண்களை கண்களாக மீண்டும் மாற்றிக்கொண்டான்.பழைய திருவிதாங்கூர் ஓவியங்களிலெல்லாம் தாணுமாலையன் முனிவருக்குரிய தோற்றத்துடன் வரையப்பட்டிருப்பதை இதனுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.

இக்குறியீடுகளின் கவித்துவம் வழியாகச் செல்பவர் அடையும் ஒரு மெய்மை உண்டு. அதுவே சுசீந்திரத்தின் சாராம்சம். அதைச் சுட்டவே அப்பேராலயம் கல்லில் எழுந்து அங்கே கண்நிறைய நின்றுள்ளது

ஜெ

சுசீந்திரம்

படிமங்களின் உரையாடல்

தமிழக வரலாறும் பண்பாடும்- ஒரு முழுச்சித்திரம்

நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

ஆலயம் எவருடையது?

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-5
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- மோகன் நடராஜ்