அழகிகள், மர்மங்கள், கற்பனைகள்
அன்புள்ள ஜெ
விஜயஸ்ரீ பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தபோது, இந்த இதழ் வந்தது. இப்படி ஓர் இதழ் வந்திருப்பது இப்போதுதான் தெரிந்தது.
கனகலதா
சிங்கப்பூர்
அன்புள்ள லதா,
தமிழ் இதழியல் வரலாற்றிலும், சினிமா வரலாற்றிலும் மறக்கமுடியாத ஒரு பெயர் இந்துநேசன். இது ஒரு மஞ்சள்பத்திர்கை. இந்த இதழின் ஆசிரியராக இருந்த லட்சுமிகாந்தன் என்பவரை என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகிய இருவரும் சேர்ந்து ஆள்வைத்து கொலைசெய்துவிட்டதாக வழக்கு. அவர்கள் சிறைசென்றனர். லண்டன் பிரிவி கௌன்ஸில் நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டனர்.
லட்சுமிகாந்தன் கொலைவழக்கு என அது புகழ்பெற்றது. பலர் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ராண்டார்கை எழுதிய கட்டுரைகளும் தமிழில் டி.என்.வி.பாலகிருஷ்ணன் எழுதிய எம்.கே.டி.பாகவதர் இசையும் வாழ்க்கையும் என்னும் நூலும் முக்கியமானவை
இந்துநேசன் என்பது லட்சுமிகாந்தனால் வாங்கப்பட்ட ஒரு பத்திரிகை. அதன் காப்புரிமை போன பிறகு பலர் அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அறுபதுகளில் அப்பெயரில் வெளியான இன்னொரு இதழ் நீங்கள் கொடுத்திருப்பது. எண்பதுகளில் இன்னொரு இந்துநேசன் வெளிவந்ததை நான் கண்டிருக்கிறேன்
ஜெ