கவிதை இணையதளம் -கடிதம்

கவிதைக்கு ஓர் இணையதளம்

அன்புள்ள ஜெ

கவிதைக்கு ஓர் இணையதளம் பதிவு கண்டேன். முக்கியமான முயற்சி. கவிதைகளை தொகுத்தளிக்கும் பல முயற்சிகள் முற்காலங்களில் நிகழ்ந்தன. அவை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அதற்குரிய சில காரணங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன்

இது ஒரு ஆவணத்தொகுப்பு முயற்சியே ஒழிய, இதழ் அல்ல என்னும் தெளிவு தேவை. நாள்தோறும் வாசகர்கள் வந்துகொண்டே இருக்க வாய்ப்பில்லை. எதிர்வினைகளை நினைக்காமல் அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும். சில ஆண்டுகளில் ஒரு பெரிய டேட்டாபேஸ் ஆக மாறும். யார் தேடினாலும் கூகிள் அங்கே கொண்டுவந்து விடும். அப்போதுதான் இதன் உண்மையான மதிப்பு தெரியும். இன்றைக்கு அழியாச்சுடர்கள் அப்படி ஒரு இடத்தில் உள்ளது

அடுத்தபடியாக சகட்டுமேனிக்கு கவிதை போடக்கூடாது. கவிதையில் குப்பைகள் மிகுதி. கடைசியில் எதையுமே படிக்கமுடியாதபடி ஆகும். ஒரு எடிட்டர்ஸ் செலக்சன் இருக்கவேண்டும்.

நல்ல கவிஞர்களின் எல்லா நல்ல கவிதைகளும் இங்கே கிடைக்கவேண்டும் என்ற கொள்கை தேவை. பதிப்புரிமைபெற்று போடலாம். தேவையென்றால் கொஞ்சம் பணம்கூட கொடுக்கலாம்.

தமிழ்நவீனக்கவிதை, மொழியாக்கக் கவிதை என்றெல்லாம் பகுப்புகள் வேண்டும். மொழியாக்கக் கவிதைக்குள் மொழி வாரியாக பகுப்புகள் இருக்கலாம். அதுதான் வாசிக்க வசதியானது. தேடவும் அவ்வாறு இருந்தால்தான் நல்லது.

கவிஞர்கள் பற்றிய முழுமையான குறிப்புகள் வேண்டும். ஆண்டுகள் புத்தகத்தலைப்புகள் விருதுகள் எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

கவிதை பற்றிய நல்ல விமர்சனங்களையும் தொகுக்கலாம். அவற்றுக்கு அக்கவிதைகளுடன் லிங்க் கொடுக்கலாம். கவிதைகளை ஆராயவும் புரிந்துகொள்ளவும் உதவும்

ஆனால் இதெல்லாம் பொறுமையாக சில ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்யவேண்டிய வேலைகள். ஆரம்ப சூரத்தனத்துடன் தொடங்கிவிட்டு மற்றவர்களை குறைசொல்லிவிட்டு நிறுத்திக்கொள்வதே இங்கே அதிகம் நிகழகிறது

நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாஸ்

 

கவிதைகள் இணையதளம்  புதிய இதழ்

முந்தைய கட்டுரைவசைபாடிகளின் உலகம்- எதிர்வினையும் பதிலும்
அடுத்த கட்டுரைகல்குருத்து கடிதங்கள்-8