அழகிலமைதல்

அன்புள்ள ஜெ.

நலம் விழைகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நாராயணகுருகுலம்.வர்க்கலா சென்றேன்.(உங்களின் எழுத்துக்களை படித்துத்தான்) குரு முனி நாராயணபிரசாத்,சுவாமிதம்பான்,மற்றும் சில துறவிகளுடன் உரையாடினேன்.  நடராஜகுரு சமாதி மற்றும் அங்குள்ள நூலகத்தை பார்வையிட்டேன். அங்குள்ள புகைப்படம் ஒன்றை பார்த்தேன்.அது என்னை கவர்ந்தது.அது என்ன என்று கேட்டேன். அங்குள்ள துறவி ஒருவரிடம்.அது ஸ்ரீ சக்ரம் என்றார்.நித்யா நடராஜகுருவின் சவுந்தர்ய லஹரியைபடித்துக்கொண்டிருந்த நாளில் ஸ்ரீ சக்ரம் அவரின் கனவில் வந்ததாகவும் அதை அவரது அமெரிக்க மாணவரை கொண்டு வரைய சொன்னதாகவும் சொன்னார்.

மேலும் சவுந்தர்ய லஹரியை நீங்கள் படியுங்கள்.இந்த இடம் நடராஜகுருவின் சமாதி உள்ள இடம்.அவரின் வாக்காகவே எடுத்துக்கொள்ளுங்கள் இதை என்றார்.அன்றிலிருந்து இன்றுவரை சவுந்தர்ய லஹரி குறித்த சிந்தனைதான் என்னிடம்.ஆனால் என்னால் வாங்க இயலவில்லை அப்புத்தகத்தை. இப்போதுதான் வாங்க போகிறேன். (கொல்லூர் சென்று வந்தேன்)இதெல்லாம் ஆன்மீக அனுபவ பயிற்சி பெற உதவும் நூல்கள்.இது இவ்வாறுதான் அதற்குரிய நேரத்தில்தான் வந்தடையுமா?

சற்று அறிவுறுத்த முடியுமா?

நன்றி

க.சிவராமகிருஷ்ணண்.

சென்னை.

அன்புள்ள சிவராம கிருஷ்ணன்,

அத்வைதம் ஒரு முழுமைத்தரிசனம். மானுடம் அறிந்த ஞானங்களில் அதுவே முதன்மையானது.  அனுபவம் என கொண்டால்  அதுவே மானுடர் எய்தும் பெருநிலைகளில் அறுதியானது. ஆனால் அது அறிவார்ந்து, தர்க்கபூர்வமாகவே விளக்கப்படுகிறது. தனக்கான கலைச்சொற்களுடன் தத்துவார்த்தமாகவே இங்கே திகழ்கிறது. அதை ஓர் அறிவுத்தரப்பாக, ஒரு தர்க்கமுறையாக மட்டுமே பலர் அறிந்திருக்கிறார்கள்.

அத்வைதம் போன்ற அடிப்படையான மெய்மைத்தரிசனங்களுக்கு உள்ள சிக்கல் இது. அத்வைதத்தின் சாராம்சத்தை எவருக்கும் ஐந்து நிமிடத்தில் சொல்லிவிடமுடியும். ஐந்து அடிப்படையான சொற்றொடர்களால் [ஆப்தமந்திரங்களால்] வரையறை செய்துவிடவும் முடியும். அதை தர்க்கபூர்வமாக அறிவுக்குமுன் நிறுவவேண்டும் என்றால்தான் மிக விரிவான தத்துவக்கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதுவல்ல இதுவல்ல [நேதி நேதி] என மறுத்து மறுத்துச்செல்லவேண்டியிருக்கிறது. இது, இவ்வாறு, பிறிதல்ல என்று நிறுவவேண்டியிருக்கிறது.

அவ்வாறு நிறுவப்பட்டபின்னர் அது ஒரு மறுக்கமுடியா அறிவுநிலைபாடாக பேருருக்கொண்டு நம் முன் நிற்கிறது. அத்வைதத்தை முழுமையாக அறிந்துகொள்வது என்பது வழி உசாவி, அலைந்து திரிந்து, களைத்து மலையின் அடிவாரம் வரைச் சென்றுசேர்வதுதான். மலையேற்றம் அங்கிருந்துதான் தொடங்கவேண்டும்.

மலை நமக்கு திகைப்பளிக்கிறது. அப்படி ஒன்று திட்டவட்டமான இருப்புடன், வானளாவும் பேருருவாக அங்கே இருப்பது நமக்கு பெரும் பரபரப்பை அளிக்கிறது. ’இதோ இங்கிருக்கிறது, நான் கண்டேன், எனக்குத் திட்டவட்டமாகத் தெரியும்’ என நாம் கூச்சலிட ஆரம்பிக்கிறோம். நாம் அடைந்த அந்த நீண்ட வழிப்பயணத்தை மேற்கொள்ளாமல் எவரும் அங்கே வந்து சேரமுடியாது என்பதை நாம் எண்ணுவதில்லை.

இந்த பரபரப்பிலேயே பெரும்பாலான அத்வைதிகளின் வாழ்க்கை போய்விடும். அவர்கள் அத்வைதத்தின் மாபெரும் தர்க்க அமைப்பில் சிக்கிக் கொண்டவர்கள். பேசிப்பேசியே அழிவார்கள். அத்வைதத்தை தத்துவமாக அறிந்துகொள்ளும் ஒருவர் இவ்வுலகிலுள்ள அனைத்துக்கும் தத்துவ விளக்கம் அளிக்கமுடியும். சோறு முதல் சங்கீதம் வரை எதையும் பேசமுடியும். ஒருவகையான மேட்டிமைத்தனம் உருவாகும். இதையே ‘திண்ணைவேதாந்தம்’ என நம் முன்னோர் நையாண்டியாகச் சொன்னார்கள்.

அத்வைதத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வலைபின்னி அமர்ந்திருக்கும் சிலந்திகள். சிலந்தி தன் வலையில் சிக்கிவிடக்கூடாது. ஆனால் அது எளிதல்ல. அத்வைத ஆசிரியர்கள் எங்கோ தங்களை மிகமிக தர்க்கபூர்வமானவர்களாக உணர்கிறார்கள். மிகமிகச் சிக்கலான இயக்கம் கொண்ட ஒரு மாபெரும் கணிப்பொறியாக தங்கள் மூளையை அறிகிறார்கள். அவர்கள் அதைக் கடந்தாகவேண்டும். மண்டைக்குள் இருக்கும் அந்த இயந்திரத்தை ஒரு மலராக ஆக்கிக்கொள்ளவேண்டும்.

அத்வைதிகளுக்கு அழகியல் தேவையாவது அங்குதான். உணர்வுப்பெருக்கு தேவையாவது அதன்பொருட்டுத்தான். அவையிரண்டுக்கும் அவர்கள் பக்தியையோ தாந்த்ரீகத்தையோ சென்றடைகிறார்கள். அனைத்து விபாசனைகளையும் உதறிவிட்டு சிலகாலம் தீவிரமான உபாசனைக்கு சென்று  சேர்கிறார்கள்.

ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரி முதலிய நூல்களை இயற்றியது இதற்காகவே என்பதுண்டு. [அது அவர் இயற்றியதல்ல பிற்கால சங்கரர் ஒருவர் என மொழியைக்கொண்டு கூறுவர் ஆய்வாளர்] நாராரயண குரு காளிநாடகம், சுப்ரமணிய அஷ்டகம் முதலிய பக்திநூல்களை இயற்றினார். ஆத்மானந்தர் சிறிதுகாலம் ராதையாகவே புடவை கட்டி கிருஷ்ணபக்தியில் திளைத்தார். ராதாமாதவம் போன்ற இசைநூலை இயற்றினார். நடராஜகுரு அவ்வண்ணம் செய்த ஒரு குறுக்குவாட்டுப் பயணம் சௌந்தர்ய லஹரி.

நடராஜகுரு தத்துவ ஆசிரியர். தத்துவமே அவருடைய மொழி. ஆனால் ஐந்தாண்டுக்காலம் சௌந்தரிய லஹரியில் திளைத்திருக்கிறார். அவர் வாழ்க்கையில் ஒரு பெருங்காதலனுக்குரிய பரவசம் மிகுந்த நாட்கள் அவை.  ஐம்புலன்களும் கூர்கொண்டிருந்தன. உலகம் இனிய வண்ணங்களால், இசையால், சுவைகளால் ஆனதாக மாறியது. கனவுகளில் பூக்களும் கண்களும் நிறைந்திருந்தன. சௌந்தரிய லஹரி உரை அதன் விளைவு.

ஸ்ரீசக்ரம் என்பது சக்தி என்னும் கோட்பாட்டை ஒரு ஓவியவடிவமாக ஆக்குவது. சக்தி என்பது இப்புடவியின் இயக்கவிசை, இயக்க அழகியல். அதை ஒரு பெருஞ்சுழல் என உருவகித்தனர். ஒரு மையச்சுழி, முடிவில்லாமல் இதழ்விரியுமொரு மலர், உருவிலி அமரும் உருவடிவ பீடம்.  அதை சிற்பமாக ஆக்கினால் மேரு, ஓவியமாக ஆக்கினால் ஸ்ரீசக்ரம்.

ஸ்ரீசக்ரம் என்பது ஒரு வெளிப்பாடுதான். அதற்கு அடிப்படையான ஓர் இலக்கணம் உண்டு. அதற்கப்பால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிவெளிப்பாடுகள். வெவ்வேறு ஆப்தமந்திரங்கள் போல. வெவ்வேறு கவிதைகள் போல. வெவ்வேறு தெய்வச் சிலைகள் போல. நடராஜ குருவின் ஆணைப்படி அக்காலத்தில் ஓரிரு ஸ்ரீசக்ரங்கள் வரையப்பட்டன. அவை ஊழ்கநிலையில் அவர் உணர்ந்தவற்றின் கலைவெளிப்பாடுகள். அன்றைய அவருடைய நிலையின் சான்றுகள்.

அவற்றை வழிபடுவதென்பது சக்திவழிபாடுதான். உபாசனைதான். அழகுணர்வினூடாக புடவிப்பெருக்கை அறியும் ஊழ்கம்தான். பல காலமாக அது இங்கே இயற்றப்பட்டு வருகிறது

சௌந்தர்யலஹரியின் வாசிப்பு மூன்று தளம் கொண்டது. ஒன்று, அந்நூலை பொருளுணர்ந்து கற்றல். இரண்டு, அந்நூலின் வரிகளை அழகுணர்வுடன் அறிதல். சொற்களாகவும் சொற்பொருளாகவும். மூன்று, கூடவே செய்யவேண்டிய அழகியல் சடங்குகள். உதாரணமாக, சௌந்தர்ய லகரி பயிலும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மலர்க்கோலத்தை அமைக்கும் முறை உண்டு. அந்த மலர்களை பயில்பவரே தேடிச்சேர்க்கவேண்டும். அனைத்து வண்ணங்களிலும் மலர்கள் தேவைப்படும். அம்பிகையின் வடிவை வண்ணக்கோலமாக வரையும் வழக்கமும் உண்டு.

தர்க்கத்தின் சிக்கலை உதறிச்சென்று பெரும்பித்தில் திளைப்பதென்பது அத்வைதிக்கு விடுதலை. அத்வைதத்தையே புதுப்பித்து அளிப்பது. நடராஜ குரு போன்ற மாபெரும் ஆசிரியர்கள் அதில் திளைத்தனர். மிக எளிய அளவிலேனும் நான் நீலம் வழியாக அந்நிலைக்குச் சென்றிருக்கிறேன். முழுக்க மீளவுமில்லை. பெருங்களிப்பும் பெருவலியும் ஒன்றேயான ஒரு அதீதநிலை. இன்று அதை எழுதிவிடமுடியுமா என முயல்கிறேன். எழுதுவதனூடாகவே அதை கடக்கமுடியுமென நினைக்கிறேன்

ஜெ

நடராஜகுருவின் சௌந்தரிய லஹரி உரை

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
அடுத்த கட்டுரைஓராயிரம் பார்வை.. ஜா.தீபா