கேளாச்சங்கீதம், கடிதங்கள் 12

கேளாச்சங்கீதம்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெமோ,

‘கேளாச்சங்கீதம்’ கதையில் வரும் நிலை பல பேருக்கு வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும். கடைசியில் வரும் அந்த வரி, இந்த  கதையை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறது (“ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை கிடைக்காமலேயே போறது நல்லதில்லியா?”).

நான் கல்லூரி கடைசி வருடம் படிக்கும் போது ஏன் எப்போது என்றே தெரியாமல் கிட்டத்தட்ட கணேசனின் நிலைக்கு ஆளானேன். வீட்டினுள்ளே சுற்றி கொண்டிறாமல் நண்பர்களோடு வெளியே செல்லும் பழக்கமும், வாசிக்கும் பழக்கமும், எதையும் பகுத்து ஆராயும் தன்மையும் உடையவனாக இருந்த நான் எவ்வாறு அந்த நிலைக்கு ஆளானேன் என்றே தெரியவில்லை. நோட்டு புத்தங்கங்கள் பூராவும் அவள் பெயரை எழுதி வைத்திருப்பேன். பைத்தியம் போல் எந்நேரமும் அவளையே நினைத்து கொண்டிருப்பேன். இனக்கவர்ச்சியில் ஆரம்பித்து, காமத்தை கடந்த காதலாகி, கடைசில்  ஒருதலைக்காதலாகவே அது முடிந்தது. கடைசிவரை என் காதலை அப்பெண்ணிடம் வெளிப்படுத்தவில்லை (தாழ்வு மனப்பான்மை).

கணேசனை போல அது முடிவிலா அக பயணமாக அமைந்திருக்க கூடும். நல்ல வேலையாக நண்பர்கள் துணை கொண்டு அதை கடந்தேன். அதே நண்பர்களே எனது பள்ளி கால தோழியின் பால் எனக்கு இருந்த சிறிதளவு ஈர்ப்பை இனம் கண்டு கொண்டு, எனது காதலை மடை மாற்றினார்கள். கடைசியில் இதிலிருந்து விலக தோழியிடம் பேச, அது காதலாகி, கல்யாணத்தில் முடிந்தது (தோழிக்கு கல்லூரி நிகழ்வு தெரியும்).

இப்போது பழையவை நினைத்து பார்ப்பதில்லை. நினைத்தாலும் சிரித்து கொள்வேன். ஆனால் உங்கள் கதையை படித்த பிறகு, நாமும் அதை அனுபவித்திருக்கிறோம் என்ற சந்தோஷம் வந்தது.  தன்னை “துறந்து” மற்றதை பூஜிப்பதை பக்தி என்பர். கணேசனின் நிலையும் அதுவே. இலக்கியங்கள் காதலை தெய்வ நிலையில் வைப்பது அதன் பொருட்டே.

நீங்கள் கணேசனின் நிலையில் இருந்திருக்கீர்களா? அப்படி இல்லை என்றால் எப்படி அதை உங்களால் உண்மை நிலைக்கு நிகரான அனுபவமாக கொடுக்க முடிகிறது?

அன்புடன்

ஆர்

***

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதம் கதையை உயிர்மையில் படித்தபோது மிக அபூர்வமான ஒரு மனநிலையை அடக்கமாக எழுதிய கதை என்னும் எண்ணம் வந்தது. பலபேருக்கு அந்தக்கதை புரியாது என்றும் தோன்றியது. அவர்கள் கைவிஷம் என்பதை நேரடிப்பொருளாகவே எடுத்துக்கொள்வார்கள் [அற்புதமான கவர்ச்சியை அளிக்கும் ஓர் அழகனுபவத்தை அளிப்பது எப்படி விஷம் ஆகியது என்பதுதான் கதையே]

ஆனால் உங்கள் தளத்தில் வந்துகொண்டிருக்கும் கடிதங்களைப் பார்க்கையில் எங்கும் இந்தவகையான அதீத அனுபவங்கள் உள்ளன என்னும் என்ணம் ஏற்பட்டது. பல குடும்பங்களில் நிகழ்ந்திருக்கிறது. பல இளைஞர்கள் இந்த அனுபவம் வழியாகச் சென்று மீண்டு வந்திருக்கிறார்கள். ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம் இது. அயனெஸ்கோவின் காண்டாமிருகம் போல நம் நடுவே நாமறியாமல் இது புழங்கிக்கொண்டிருக்கிறது

எஸ்.ஸ்ரீனிவாஸ்

***

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்1

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-2

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம் – கடிதங்கள்-3

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம், கடிதம்-6

கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 7

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்- 8

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுர விழாவும் ஆண்டு நிறைவும்- இரம்யா
அடுத்த கட்டுரைஅறம்- வாசிப்பு