ஆசிரியருக்கு வணக்கம்
இம் மடலில் கனிவாய்ந்த முதுமை(Gracious in old age) குறித்து தங்களிடம் பகிர விரும்புகிறேன், தங்கள் கருத்தையும் அறிய விரும்புகிறேன். தாங்கள் இது பற்றி வேறு விதங்களில் எழுதி இருக்கிறீர்கள், இருந்தாலும் நீங்கள் சமீபத்தில் இன்றைய தற்கொலைகள் பற்றி எழுதிய ஆழமான கட்டுரை போல் கனிவாய்ந்த முதுமை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம்.
இன்றைய தற்கொலைகள் பற்றி உங்கள் கட்டுரையில் “இலட்சியம் வேறு, இலக்கு வேறு” மற்றும் “ஒரு மனிதன் அன்புக்காக, காதலுக்காக, பாசத்துக்காக மட்டுமே வாழ்ந்தான் என்றால் அவன் மிகமிகச் சிறிய மனிதன்” என்கிறீர்கள். மற்றும் ஒரு யுகசந்தியில் “தன் வாழ்நாளில் இறந்து மீண்டும் பிறக்காதவன் வாழவே இல்லை என்று சொல்வேன்”என்கிறீர்கள். அவற்றைப் படிக்கும் போது மனதில் பல சபாஷ்கள் போட்டுக்கொண்டேன்.
பல ஆண்டுகளுக்கு முன் நான் குடும்பத்துடன் விண்டர்மியர் சென்று இருந்தேன், ஆண்டின் முதல் மழை இல்லாத வெயில் கொண்ட வாரஇறுதி நாள் என்பதால், அன்று ஒரே மக்கள் கூட்டம், கார் நிறுத்தும் இடத்தில இடம் கிடைக்காது சுற்றி கடைசியில் இடம் கிடைத்து, கார் பார்கிங் மீட்டரில் கட்டணம் செலுத்த சென்றால், நோட்டுகள் அது எடுத்து கொள்ளாது என அறிவிப்பு இருந்தது. என் கையுலோ பவுண்ட் நோட்டுகள் மட்டுமே இருந்தது. வண்டியை எடுத்தால் திரும்பி இடம் கிடைப்பது எளிது இல்லை. எடுக்காவிட்டால் வண்டியின் சக்கரத்திற்கு பற்றுக்கட்டையை இட்டுவிடுவார்கள்.
அந்த இக்கட்டில் இரூக்கும் போது காரில் என்னை கடந்து சென்ற முதியவர் ஒருவர் என்னை பார்த்ததும் காரை நிறுத்தி சில்லறை வேண்டுமா என்று கேட்டார். என்னிடம் £6.00 கொடுத்து “we all have been there” என்று சொல்லி, நான் கொடுத்த £10.00 மறுத்து (அவரிடம் அப்பணத்திற்கு சில்லறை இல்லை) என்னிடம் அப்பணத்தை எதாவது ஒரு சேவை மையத்திற்கு பிறகு கொடுக்குமாறு சொல்லி ச்சென்றார்.
இது என்னை மிகவும் பாதித்த சம்பவம். ஐக்கிய ராஜ்யத்தில் பொதுவான அபிப்பிராயம் உண்டு. அது என்னவென்றால். வயதானவர்கள் வெளிநாட்டிலிருந்து ஐக்கிய ராஜ்யம். வந்தவர்களை பிடிக்காது என்பது, அது ஓரளவுக்கு உண்மையாக இருக்கும்போதும், அவர்கள் வெறுப்பை எப்போதும் காண்பிப்பதில்லை. உதவி செய்ய எப்போதும் தயங்க மாட்டார்கள். நான் தீவிர சிகிச்சை பிரிவில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது அங்கே இருந்த குணமடைந்த வயதான நோயாளி ஒருவர் என்னிடம். வெளிநாட்டில் இருந்து ஐக்கிய ராஜ்யத்தில் இடம்பெயருபவர்கள் பற்றி நல்லது கெட்டதுமாக நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் ” I would have been in a mess if it is not for your care” என்றார்
வயதானோர் இப்படி நினைப்பதற்கு சில சரியான காரணங்களும் உண்டு. ஆனால் அவர்களின் கனிவும் அன்பும் அவர்கள் வாழ்விட மாற்றங்களை நல்லபடியாக ஏற்றுக்கொள்ள செய்கிறது என்பது என் அனுபவத்தால் நான் இங்கு தெரிந்து கொண்டது. நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரில் எங்கள் குடும்பம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பம். எங்கள் வீட்டை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே 80 வயதைத் தாண்டியவர்கள். இடது புறத்தில் வாழும் Harold நாங்கள் வெளியூருக்கோ, இந்தியாவுக்கு வரும்போது எங்கள் வீட்டை பார்த்து கொள்வார். அவரிடம் தான் எங்கள் வீட்டு சாவியை கொடுத்துவிட்டு வருவோம் அவர் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை அன்றாடம் எங்களுக்கு குடுப்பார். .எங்கள் வலது புறத்தில் இருப்பவர் John, எங்கள் மிதிண்டியை அவர்தான் சரி செய்து கொடுப்பார். .இவர்களிடம் பொறாமையோ கோபமோ இதுவரை கண்டதில்லை. இவர்களுடைய வாழும் முறையை கண்டு என் உள்ளத்தில் நான் கனிவுடன், சந்தோசமாக எல்லோருக்கும் உதவும் உள்ளவனாக வயதாக விரும்புகிறேன்.
நான் பிறந்து, வளர்ந்து, படித்த ஊர், மதுரை. நான் என் நெருங்கிய மற்றும் துரத்து வயதாகிய சொந்தங்களின் செயல்களை நோக்கும்போது, அவர்களின் வயதாக வயதாக சுயநலமும், தற்பெருமையும், குடும்பப்பெருமையும், தங்களுக்கு எங்கே முதல் மரியாதை கொடுப்பார்கள் என அலையும் நெஞ்சம் கொண்டவர்களாகவே பார்க்கிறேன். வீட்டின் மூத்தவர் அல்லது குடும்பத்தில் பெரும் பணம் படைத்தவர் என்ற முறையில் எல்லா குடும்ப விழாக்களிலும் தான் முன்னின்று பிறர் தன் சொல்லை கேட்டு விழா நடக்கவேண்டும் என நினைப்பார்கள், இதில் ஏதாவது மாற்றம் இருந்தால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போவதும் விழாக் கொண்டாட்டத்தில் ஈடுபாட்டுடன் இல்லாமல் இருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இந்த வருடம் அல்லது இந்த விழாவை தங்கையும் தம்பியும் முன்னின்று நடத்தட்டும் என்று இதுவரையில் விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை.
ஏன் வயதாகும்போது கனிவு பெருகாமல் மங்குகிறது. நான் இப்போது மதுரையில் வழாததாலால் சமூகத்தில் உள்ள வயதானோரை பற்றி அறுதி பட எழுதவில்லை. நான் அறிந்தவரையில் வயதானோர் கனிவு மிக்கவராக வயதாகவில்லை என்பதே உண்மை.
பி.கு: சமிபத்தில் உங்களுடைய திருவண்ணாமலை பயண கட்டுரையில் நீங்கள் ஒரு குழந்தையின் கையை பிடித்து கொண்டு இருந்த ஒரு புகைபடம் “The Green Mile” படத்தில் John, Paulin கையை பிடித்து கொண்டிருக்கும் காட்சியை நினைவுபடுத்தியது. குழந்தை என்பதால் இருவருக்கும் நடுவில் வேலி எதுவும் தேவையில்லையோ!
அன்புடன்
வெங்கடேஷ்
அன்புள்ள வெங்கடேஷ்
கடந்த பல ஆண்டுகளாக நான் கண்டு வரும் ஒரு உண்மை இது. இங்கே பெரும்பாலான முதியவர்கள் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் என்னிடம் தங்கள் இல்லத்தில் முதியவர்கள் செய்யும் கொடுமைகள் அவர்களின் அற்பத்தனங்கள் ஆகியவற்றைச் சொல்லி முறையிடுகிறார்கள். நான் அவற்றுக்கான விளக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறேன்
சென்ற நாளில் கூட ஓர் இலக்கிய நண்பர் என் விடுதி அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். அவருடைய தந்தை எண்பது அகவை கடந்தவர். தன் வாழ்நாளில் சரியாக சம்பாதித்தவரும் சேமித்தவரும் அல்ல. மைந்தனை முறையாக படிக்க வைத்தவரும் அல்ல. இப்போது நோயுற்றிருக்கிறார். தன்னை தன் மகன் லட்சக் கணக்கில் கடன் வாங்கி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மகன் கீழ்நிலைப் பொருளியலில் வாழ்பவர். அது அவருக்கு தெரியும். ஆனாலும் தன்னை செலவுசெய்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்று அவனிடம் மன்றாடுகிறார். உணர்வுபூர்வ மிரட்டல்கள் விடுக்கிறார்.குற்ற உணர்வை உருவாக்குகிறார். சாபமிடுவதாகச் சொல்கிறார்.
நண்பர் அந்த உணர்வுபூர்வ மிரட்டல்களாக் குழம்பிப்போயிருந்தார்.நான் அவரிடம் சொன்னேன், இந்து மரபின் உலகியல்நெறிப்படி ஒருவனுடைய கடமைகள் அவனுடைய தந்தையிடமும் மகனிடம் இணையாகவே உள்ளன. தந்தைக்கு உணவு மருத்துவம் நீத்தார் கடன் ஆகியவற்றை அவன் தன்னால் இயன்றவரைச் செய்யவேண்டும். அதேபோல தன் மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்யவேண்டியதும் அவன் கடமையே.
அவர் தன் தந்தைக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கி மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டு அவர் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்கிறார் என்று கொள்வோம். கடன் காரணமாக மகனை முறையாக படிக்க வைக்கவில்லை ,வாழ்க்கையில் முன்னேற உதவ வில்லை என்று கொள்வோம். அவர் சரியானவற்றைச் செய்தவராக ஆகுமா? உறுதியாக இல்லை. அவர் மைந்தனின் பழி கொண்டவர் ஆவார். அது தந்தைப்பழியை விட கூரியது.
அவர் தந்தை அவருக்கு சாபம் போடுவதாக சொன்னது எதுவும் பலிக்காது. சாபம் என்பது ஒருமுனைப் பட்டது அல்ல. அதைப் பெறுபவரும் அதற்கு உரியவராக இருந்தால் ஒழிய அது சென்று சேர்வதில்லை. அளிப்பவரின் தகுதியும் பெறுபவரின் பழியுமே சாபத்துக்கு ஆற்றலை அளிப்பவை. வெறும் உணர்ச்சிகர மிரட்டல்களுக்காகச் சொல்லப்படும் சாபங்கள் சொன்னவரையே சென்று சேரும்.
“உங்கள் மனசாட்சிப் படி உங்கள் வருமானத்தில் இன்று தந்தைக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்யுங்கள்.உங்கள் மகனுக்கும் அதைப்போலவே இயன்றவரைச் செய்யுங்கள். உங்கள் கடமை முடிந்துவிட்டது என்று கொள்ளுங்கள். அந்த தெளிவு உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த அலைக்கழிப்பை அடைய வேண்டியதில்லை” என்று நான் சொன்னேன்
சென்ற தலைமுறையில் முதியவர்கள் குடும்பச் சூழலை உணர்ந்தவர்கள். குடும்பத்துடன் ஒத்துப்போகிறவர்கள். குடும்பத்துக்குப் பயனுள்ளவர்கள். குழந்தைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். இன்று மிகப்பெரும்பாலான முதியவர்கள் முழுக்க முழுக்க பயனற்றவர்கள். தன்னலமன்றி வேறு எண்ணமே அற்றவர்கள். அற்பத்தனத்தை மட்டுமே வெளிப்படுத்துபவர்கள்.
என்னிடம் சென்ற மாதம் ஒரு திரைத்துறை ஓட்டுநர் சொன்னார். அவர் வீட்டில் வயதான தந்தை இருக்கிறார். டிவியை எந்நேரமும் சத்தமாக வைத்து கேட்பார். பிளஸ்டூ படிக்கும் பெண் இருக்கிறாள். அவளுக்கு படிக்க வழி இல்லை. வீடு என்பது ஒரே அறைதான். செவிகளில் செருகி ஓசை கேட்காமலாக்கும் எலக்ட்ரானிக் கருவி என ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறார். அப்படி ஒன்று உண்மையில் உள்ளதா என்றார். அவர் தந்தையிடம் புரிந்துகொள்ளச் செய்ய முடியவில்லை. அவருக்கு பிறர் பற்றி கவலை இல்லை. அவர் வீட்டை நரகமாக ஆக்கிவிடுவார்.
இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? எளிதில் முடிவெடுக்கக்கூடிய ஒன்றல்ல இது. ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. நிலத்தில் உழைக்கும் விவசாயிகள் இப்படி அற்பர்களாக ஆவதில்லை என்பதைக் காணலாம். அது ஒரு புரிதலை அளிக்கிறது. இது நம் நடுத்தரவற்க மனநிலையின் முதிர்ந்த வடிவம்.
சென்ற ஒரு நூற்றாண்டில் நம்முடைய சமூகத்தில் உலகியல் பார்வை என்பது மிக ஆழமாக வேரூன்றியுள்ளது நாம் ஆன்மீகம் பேசுவோம் ஆனால் நமது ஆன்மிகமே கூட உலகியல் நன்மைகளுக்காக வேண்டுதலும் நோன்புகளும் பரிகாரங்களும் செய்யும் ஒரு களமாகவே உள்ளது உலகியலுக்கு அப்பாலுள்ள எதைப் பற்றியும் நாம் அறிந்திருப்பதில்லை. நாம் கொள்ளும் அன்பு பாசம் முதலிய உணர்வுகளே கூட முற்றிலும் உலகியல் சார்ந்தவையே.
உண்மை, எல்லா சமூகத்திலும் உலகியலே முதன்மையானது. வாழ்க்கையின் முகம் என்பது உலகியல் இன்பங்களும் உலகியல் அடையாளங்களும் அவற்றை அடைவதற்கான போராட்டமும்தான். ஆனால் மதம், தத்துவம், இலக்கியம் ஆகியவை மீளமீள உலகிலுக்கு அப்பாலுள்ள ஒன்றை வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இங்குள்ள வாழ்க்கைக்கு இங்கே நாம் பொருள் அளித்துவிட முடியாத வேறொன்று அடிப்படையாக உள்ளது என்கின்றன.
அந்த உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் மீதான ஆழமான நம்பிக்கை ஒன்றே மனிதனின் விலங்கியல்பை கட்டுப்படுத்துகிறது. அவனை தன்னலம் என்னும் இயல்பான நிலையில் இருந்து விடுவிக்கிறது. அன்பு பாசம் போன்றவை உலகியல் சார்ந்தவையாக இருக்கும் போதே கூட உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தளம் அவற்றுக்கு உள்ளது என ஆன்மிகமும் தத்துவமும் இலக்கியமும் கூறுகின்றன. அந்த தளம் இல்லை என்றால் அன்பு பாசம் போன்றவை வெறும் வணிகப்பேரங்களே. கொடுத்தால் நிகரானதை பெற்றுக்கொண்டாகவேண்டும், கணக்கு வைத்துக்கொண்டாகவேண்டும்..
நீதியுணர்ச்சி, கொடை, தியாகம் போன்றவை அத்தகைய உலகியலுக்கு அப்பாற்பட்ட நிலையிலேயே பொருள்படுகின்றன. இங்கே உள்ள சுயநலச்சூழலில் அவற்றுக்கு பொருளே இல்லை. முகம் தெரியாத ஒருவருக்கு அன்பு காட்டுவது, எளியோருக்கு இரங்குவது,அறத்தின் பொருட்டு போராடுவது அனைத்துமே உலகியலுக்கு அப்பாற்பட்டவைதான். முழுக்க முழுக்க உலகியலை நோக்கிச் செல்லும் சமூகம் இழப்பது இந்த விழுமியங்களையே.
தனிமனிதர்கள் வாழ்வது நுண்ணலகுகளில். அவர்களுக்குரிய சிறு உலகு அது. அதில் திளைப்பதே உலகியல் எனப்படுகிறது. விழுமியங்கள் இருப்பது பேரலகுகளில். மொத்தப்பார்வையில். அந்த பேரலகுகளை உருவாக்கி தனிமனிதர்களுக்கு அளிப்பதையே மதம், தத்துவம், இலக்கியம் ஆகியவை செய்கின்றன. சமூகத்தைப் பார், மானுடத்தைப்பார், இயற்கையைப்பார்,பிரபஞ்சத்தைப்பார் என அவை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அந்த பேரலகுதான் உலகியலுக்கு அப்பாற்பட்ட களம்
அந்த பேரலகை தெய்வம் என்னும் மையத்தால் வரையறை செய்தது. அல்லது பிரம்மம், மகாதம்மம், பவசக்கரம் என்னும் மாபெரும் உருவகங்களால் விளக்கியது. தத்துவமும் இலக்கியமும் வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றன. ஆனால் அவையனைத்துமே அடிப்படையில் உலகியலுக்குப் பின்னணியாக ஒரு முழுமையை முன்வைக்கின்றன, அந்த முழுமையில் இருந்து கொள்ளப்பட்ட விழுமியங்களை உலகியலுக்கு நிபந்தனையாக்குகின்றன.
சென்ற நூறாண்டுகளில் நம் சமூகத்தில் மரபு மீதான பிடிப்பு நவீனக் கல்வியால் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. நவீனக்கல்வியை மரபற்றதாக ஆக்க நூறாண்டுகளாக முயன்று வென்றுவிட்டோம். நவீன ஜன்நாயகம் மதச்சார்பற்றது. ஆனால் நாம் நவீன குடிமகன் மதச்சார்பற்றவன் என எண்ணிக்கொண்டோம். மதச்சார்பின்மைக்காக மரபை கல்வியிலிருந்து விலக்கினோம். மரபு என்பது மதம் மட்டுமே என மயங்கியமையால் குளிப்பாட்டிய நீருடன் குழந்தையையும் வீசிவிட்டோம்.
[இந்த இழப்பு இந்துக்களுக்கு மட்டுமே. இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் தங்கள் மதக்கல்வி முறைமைகளை இறுக்கமாகப் பேணிக்கொண்டனர். நாத்திகத்தின் மொத்தத் தாக்குதலும் இந்துமரபு மீதுதான்.]
மரபார்ந்த ஞானம் கல்வியிலிருந்து அகன்றால் அதை ஓரளவேனும் அளிக்கவேண்டியவை குடும்பங்கள். நம் குடும்பங்கள் எவற்றிலும் மரபார்ந்த எந்தக் கல்வியும் அளிக்கப்படுவதில்லை. எளிய முறைமைகள், மனப்பழக்கங்கள் அளிக்கப்படும் குடும்பங்கள்கூட மிகமிகச் சிலவே. பெரும்பாலான குடும்பங்கள் சுயநலங்களின் மோதற்களங்கள். அதன் விளைவான வன்முறை திகழுமிடங்கள்.
மதம் அகன்ற இடத்தில் தத்துவம் வந்தமைந்திருக்கவேண்டும். இலக்கியம் திகழ்ந்திருக்கவேண்டும். மதம் இல்லாமலாகும்போது மேலைநாடுகளில் தத்துவமும் இலக்கியமுமே விழுமியங்களை நிலைநாட்டுகின்றன. நீங்கள் பார்த்ததைப்போன்ற கனிந்த முதியவர்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் ஒன்று மதத்தால் அவ்வாறு உருவாக்கப்பட்டிருப்பார்கள். அல்லது தத்துவத்தாலோ இலக்கியத்தாலோ.
தத்துவம் என்னும் போது அரசியல், சமூகவியல், அறவியல் என அனைத்துத் தளங்களிலும் திகழும் அடிப்படைத் தரிசனங்களின் தொகுதியை குறிப்பிடுகிறேன்.உச்சகட்ட அறச்சார்பு கொண்ட இடதுசாரிகள் பலரிடம் நான் பழகியிருக்கிறேன். அவர்களுக்கு மதமில்லை, அந்த இடத்தை தத்துவம் நிரப்புகிறது.
நம் சமூகத்தில் மதம் அகன்றுவிட்டிருக்கிறது. தத்துவமோ இலக்கியமோ அறிமுகமே இல்லை. எஞ்சியிருப்பது வெறும் உலகியல். அது பிழைப்புவாதமாக வாழ்நாள் முழுக்க கூடவே இருக்கிறது. சாதி,மதம், மொழி என அடையாள அரசியலாகிறது. தன்னலமாக மாறி தனிமனிதனில் சீழ்கட்டி நிற்கிறது. இன்றைய முதியவர்கள் பெரும்பாலானவர்கள் அந்த வழியில் வந்தவர்கள்.
தமிழகத்தில் தொழில் செய்பவர்களுக்குத் தெரியும், ஆயிரம் ரூபாய்க்கு நம்பத்தக்க எவரும் கண்ணுக்கே படமாட்டார்கள். மோசடி, ஏமாற்று, சொல்மாறுதல் எல்லாமே இங்கே வியாபார முறைமை. தமிழகத்தில் வணிகத்தில் பெரும் உழைப்பு செலவிடப்படுவது ‘வசூலுக்கு’த்தான். அதாவது நமக்கு தரப்படவேண்டிய காசை நாம் அலைந்து திரிந்து வசூலிப்பது. எந்த ஊழியரிடமும் தன்னியல்பான தொழில் நேர்மையை எதிர்பார்க்கமுடியாது. வேலைக்களங்களில் வேலைசெய்பவர்களுக்கு நிகராகவே இங்கே மேஸ்திரிகளும் கண்காணிகளும் தேவை. இல்லையென்றால் ஒன்றும் நிகழாது.அரசுத்துறைகளில் ஊழல் என்பது இயல்பான உபரி வருவாய். அதை ஈட்டுவது திறமை. அல்லது அச்சத்தால் வாளாவிருத்தல்.
இவ்வாறு ஈட்டும் பொருள் வழியாக நுகர்வின் இன்பம், ஆணவநிறைவு ஆகியவற்றை அடைவதே மகிழ்ச்சி என கொள்ளப்படுகிறது. அவற்றை நிறைவேற்றிவிட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைத்துவிட்டது. இப்படி வாழ்ந்து முதிரும் ஒருவர் முதுமையில் மட்டும் கனிந்து இருப்பார் என எப்படி எதிர்பார்க்கமுடியும்? எட்டிக்காய் கனிந்தால் இனிப்பாகிவிடுமா என்ன?
இந்த மனநிலைதான் ‘வாழ்வாசை’ ஆக மாறுகிறது. வாழ்க்கை என்பது அவர்களுக்கு அறிதல் அல்ல, நுகர்வு மட்டுமே. அறிதலில் கடந்துசெல்லுதலும் உள்ளது. அறிந்தவற்றை அக்கணமே தாண்டிவிடுகிறோம். நுகர்வு சலிப்பதில்லை, நுகர நுகர இன்னும் மிச்சமுள்ளது என்னும் பதற்றமே எஞ்சுகிறது. அதுவே கடைசித்துளி வரை வாழ்க்கையை அள்ளிக்கொள்ளும் வெறியை அளிக்கிறது. அது ஒன்றும் உயர்பண்பு அல்ல. அது ஓர் உயர்பண்பு என இந்த நுகர்வுமைய உலகம் நம்மிடம் சொல்கிறது. அது ஓர் இழிநிலை. ஆன்மிகமற்ற சதையிருப்பு நிலை.
எண்ணிப்பாருங்கள், நம் சமூகத்தில் முதுமை என்பது கௌரவத்துக்குரியதாக இருந்தது. ஆகவே வரவேற்கப்படுவதாக இருந்தது. எப்போது நாம் இளமையே வாழ்க்கை, முதுமை என்பது பொருளற்றது என்று எண்ண ஆரம்பித்தோம்? எப்போது தலைச்சாயம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தோம்? “நான் மனசாலே இன்னும் இளமையாத்தான் இருக்கேன்” என்னும் அசட்டுத்தனத்தைச் சொல்ல ஆரம்பித்தோம்? உடல் முதுமையடைந்தபின்னரும் ஏன் அபப்டி இருக்கவேண்டும் என்று ஏன் நமக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு பருவத்துக்கும் அதற்கான விவேகமும் வாழ்க்கைப்பார்வையும் உண்டு, அதை அடைவதே வாழ்க்கை என்று ஏன் தெரியவில்லை?
அப்படி வெறுத்து, கசந்து, அஞ்சி ,கூடுமானவரை ஒதுக்கி , வேறுவழியில்லாமல் வந்துசேரும் முதுமையில் ஒருவர் கனிவு கொண்டிருப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அந்த முதுமையை இன்றைய மனிதர் ஒரு தண்டனைக்காலமாகவே எண்ணுவார். குப்பைக்கூடையில் வீசப்பட்டதாக நினைப்பார்.அவர் அங்கே அதிருப்தியுடன் பொருமிக்கொண்டிருப்பார். தன் வாழ்க்கை முடிந்துவிட்டதா என பதறிக்கொண்டிருப்பார். தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா, உலகம் தன்னைப் பொருட்படுத்துகிறதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். தன்னை நிறுவிக்கொள்ள முயல்வார். அதன்பொருட்டு பிறரை தொந்தரவு செய்தாலும் சரி என நினைப்பார்.
குடும்பத்தவர் தன்னை பொருட்படுத்தவேண்டும் என்பதற்காகவே அவர்களைச் சித்திரவதை செய்யும் கிழடுகள் உண்டு. இல்லாத நோய்களை நடிப்பார்கள். புலம்பிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் குமுறுவார்கள். தனக்கு மருத்துவம் செய்ய செலவிட்ட தொகை எவ்வளவு என அறிய பில்களை தேடி கூட்டிப்பார்க்கும் முதியவர்களை கண்டிருக்கிறேன். போதிய பணம் செலவிடப்படவில்லை என்றால் சீற்றம் கொள்வார்கள். எதிரிகளை உருவாக்கி அவர்களை கசந்து வசைபாடிக்கொண்டே இருப்பதன் வழியாக தன் இருப்பை நிறுவிக்கொள்ளும் முதியவர்கள் ஏராளமாக நம்மைச்சுற்றி இருக்கிறார்கள். வெறுப்பு என்பது அழுத்தமான ஓர் உணர்வு. அது தானாக வளர்வது.இவர்கள் தன் முக்கியத்துவத்துக்காகவே வெறுப்பை வளர்த்துக்கொள்வார்கள்.அதனாலேயே துயரில் உழல்வார்கள்.
நான் மகிழ்ந்தும் வியந்தும் பார்த்த பல முதியவர்களை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சந்தித்திருக்கிறேன். எத்தனை முகங்கள். இயல்பாக உதவுபவர்கள். நிதானமாக ஆலோசனை சொல்பவர்கள். சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் மூவர்.எமர்சன் நினைவகத்தில் ஓய்வுநேர ஊதியமில்லா பணியாக வேலைபார்த்த மூதாட்டியின் புன்னகைக்கும் முகம் இந்நாளை பரவசம் கொள்ளச் செய்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன. அன்றே தொண்ணூறு அகவை நிறைந்தவர். மறைந்திருக்கக்கூடும். நிறைவாழ்க்கை.
இன்றும்கூட சிற்றூர்களில் அத்தகைய கனிந்த முதியவர்களைக் காண்கிறேன். பலரைப்பற்றி எழுதியுமிருக்கிறேன். உதாரணமாக, ஆகும்பேயில் உணவகம் நடத்தும் கொங்கணி பிராமணரான முதியவரும் மனைவியும். பயணங்களில் அத்தகையோர் தென்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே உழைப்பவர்கள், பெரும்பாலும் அடித்தளத்தினர். நடுத்தர வர்க்கத்தில் பணி ஓய்வுபெற்ற முதியவர்களில், இலக்கிய வாசகர் அல்லாதவர்களில், அடிப்படை மரியாதைக்குரிய எவரையேனும் சந்தித்திருக்கிறேனா என எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். நினைவுக்கு வரவில்லை. இளமையிலேயே திரும்பத் திரும்ப நான் எனக்குச் சொல்லிக்கொண்டது எந்நிலையிலும் இவர்களைப்போல நான் ஆகிவிடக்கூடாது என்னும் வஞ்சினத்தை மட்டுமே.
கனிதல் என்பது முதுமையில் திடீரென அமைவது அல்ல. வாழ்க்கை முழுக்க மெல்லமெல்ல நிகழ்ந்து நிறைவடையும் ஒரு நிலை அது. அதற்குத் தேவை சிற்றலகுகளில் வாழும் சிறுவாழ்க்கையில் இருந்து மேலெழும் உளவிரிவு. சென்றகால அன்னையர் குழந்தைகளை வளர்த்தே அந்தப்பெருநிலையை அடைந்ததுண்டு. விவசாயிகள் பயிர்களைக் கண்டே அதை எய்தியதுண்டு. மதம் என திரட்டப்பட்டிருப்பது அந்த முழுமையுணர்வே. மெய்ஞானம் என்பது அதுவே.
மதம் நிறுவனங்களும் அடையாளங்களும் ஆகிறது, தன்னை குறுக்குகிறது என்று ஒருவர் எண்ணினால் அதற்கு நிகர்நிற்கும் உயர்தத்துவமும் பேரிலக்கியங்களும் அவரை நிறைக்கவேண்டும். தன்னலத்தை பெருக்கவைக்கும், ஆணவத்தால் சிறுமைகொள்ளச்செய்யும் அரசியல்வாதம் அன்றாடவம்புகளில் இருந்து உள்ளம் மேலெழவேண்டும்.
ஜெ