அன்புள்ள ஜெ,
நலம் என்று நினைக்கிறேன். நூறு நாற்காலிகள் குறித்து கேள்வியும் உங்கள் பதிலும் வாசித்தேன்.அந்த கடிதத்தை படித்தவுடன் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.உங்களுக்கு இது போன்ற கடிதங்கள் பல எழுதப்பட்டிருக்கலாம். அந்த கடிதத்தில் அவர் இது போன்ற ஜாதிய ஒடுக்குமுறை உயர் அதிகாரவர்கத்தில் இருப்பதாக அவருக்கு தெரியாமல் இருக்கும் என்று நினைகிறேன். என் மருத்துவ மாணவ பருவத்தில் எங்கள் கல்லூரி உயர் பதவிகளை வகிப்பது ஆதிக்க ஜாதியினர் தான் .மாணவர்களுக்கான முக்கிய பொறுப்புகள் அந்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தான் அவர்களால் வழங்கப்படும் . பிற யாரையும் அவர்கள் அந்த அதிகார மட்டத்தில் நுழையாமல் பார்த்துக்கொள்வார்கள். பிற யாராவது பதிவுகளை அடைந்தால் அவர்கள் பதவியில் இருந்தும் இல்லாதது போலத்தான்.
நான் நேரில் கண்ட நிகழ்வு என் நண்பன் ஒரு தலித் அறுவை சிகிச்சை பாட பிரிவுக்காக சிறந்த மாணவனாக தேர்வு செய்யப்பட்டும் துறைத்தலைவரின் விருப்பமான அவர் சமூகத்தை அடிவருடிக்கு அவன் தகுதி பெறாமலும் அந்த விருது அவனுக்கு வழங்கபட்டது. இதற்கும் இந்திய அளவில் முக்கியமான நிறுவனம் அந்த பரிசை வழங்குகிறது.தகுதி திறமை இருந்தும் என் நண்பனுக்கு அந்த பரிசு வழங்கப்படவில்லை. உண்மை ஜெ தலித்துக்கள் இன்னும் வெல்லவில்லை.
சம காலத்திலே இது போன்ற சிக்கல்கள் இருக்கும் போது அந்த கதை நடந்த கால கட்டத்தை கற்பனை செய்தால் எப்படிப்பட்ட உச்ச காழ்புகளை அவர் சந்திக்க நேர்ந்திருக்கும் .
நூறு நாற்காலிகளும் வணங்கானும் என்னை மிகவும் பாதித்த கதைகள்.நூறு நாற்காலிகளின் பேசிய பல சிக்கல்கள் இன்னும் பல இடங்களில் முறைமுகமாகவும் நுட்பமாகவும் நடத்து கொண்டு தான் இருக்கிறது.வணங்கான் தொட்டு காட்டும் இடங்கள் முக்கியம் என்றால் நூறுநாற்காலிகள் பேசாமல் சொல்லூம் இடங்கள் பல முக்கியமான ஒன்று.குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பதும் உங்கள் கடமையே.
நன்றி ,
சுகதேவ்.
அன்புள்ள ஜெ
நூறு நாற்காலிகள் கதையை இன்றுதான் வாசித்தேன். உங்கள் கதைகள் எவற்றையும் நான் இதுவரை வாசித்ததில்லை. உங்களைப்பற்றிச் சொல்லப்பட்ட வம்புகள் என்னை தடுத்து வைத்திருந்தன. இந்தக்கதையை வாசித்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி. நான் என்னிடம் உங்களைப்பற்றி பேசியவர்களிடம் போய் கேட்டேன், அவர்கள் இதை வாசித்திருக்கிறார்களா என்று. பெரும்பாலானவர்கள் நீங்கள் எழுதிய எதையும் வாசித்ததில்லை. சிலர் மேலோட்டமாக ஏதோ படித்திருக்கிறார்கள். நீங்கள் பெரியாரை எதிர்க்கிறீர்கள், கருணாநிதியை எதிர்க்கிறீர்கள், கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறீர்கள் இப்படி சில அசட்டு காரணங்களைச் சொன்னார்கள். ஆனால் அபப்டி ஒரு தன்னம்பிக்கையும் திமிருமாகப் பேசினார்கள். மடையர்களுக்கு மட்டும் உருவாகும் திமிர் அது
எனக்கு என்மேலேயே கேவலம் வந்துவிட்டது. இந்த மொக்கைப்பயல்கள் சொல்லியதை நம்பி சொந்தமாகப் படிக்காமலிருந்த நான் பெரிய குற்றவாலி என்று தோன்றிவிட்டது. இப்படித்தான் மொக்கைகள் என்று தெரிந்தாலும் சூழலில் ஒருசிலர் சிலவற்றை சொல்லிக்கொண்டே இருந்தால் நாமும் மொக்கையாக ஆகிவிடுகிறோம். மகத்தான அறவுணர்ச்சியுடன் எழுதப்பட்ட ஒரு மாபெரும் படைப்பு நூறுநாற்காலிகள். அதற்குமேல் அதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தக்கடிதம் மன்னிப்பு கோருவதற்காக மட்டும்தான்.
தமிழ் மணவாளன்