தீயின் எடை- கடிதங்கள்

தீயின் எடை வாங்க

அன்புள்ள ஜெ,

தீயின் எடை செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப் பெற்றேன். நன்றி!

அட்டையில் வண்ண ஓவியத்தில் அக்னித் தாண்டவம். 576 பக்கங்கள் கொண்ட, மற்ற வெண்முரசு நாவல்களைவிட அளவில் சற்றே சிறிய நாவல். இறுதிப் போரையும் துரியோதனின் இறப்பையும் அஸ்வத்தாமனின் வஞ்சத்தால் பாண்டவ மைந்தர்கள் மடிவதையும் சொல்லும் எடைமிக்க நாவல்.

போருக்குப்பின் வெற்றி எவ்வாறு பொருள்படும் என்பது முதல் அத்தியாயத்திலேயே கவிஞர்களும் காவல் வீரர்களும் நடத்தும் ஊன்விருந்து நாடகத்தில் வெளிப்படுகிறது.

நெறி மீறி பீமனைக் கொல்ல வாய்ப்புக் கிடைத்தாலும் துரியோதனன் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்கு அவன் கூறும் சுருக்கமான விளக்கம் “நான் அரசன்”. இறுதிப்போருக்கு ஐவரில் யாரைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பிருந்தும் பீமனையே தேர்ந்தெடுக்கிறான். அவன் அவ்வாறுதான் செய்வான் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. சகதேவனை நடுவராகத் தேர்ந்தெடுத்தபின், ஏன் யுதிஷ்டிரரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவன் கொடுக்கும் விளக்கம் அவன் அரசன்தான் என்று நிரூபிக்கின்றது.

நடுவராக இருக்கும் சகாதேவன் யுத்தத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய 108 நெறிகள், ஏற்கப்பட்ட 34 வகையான தாக்குதல்கள், மறுக்கப்பட்ட நான்கு செயல்கள் இவற்றை விவரிக்கிறான். ஆனால், ஏழு முறை விலக்கப்பட்ட உரோஹாதம் என்னும் தொடையில் தாக்கும் பிழையின் மூலம் பீமன் துரியோதனனைக் கொல்கிறான்.

தொடர்ந்து போர், வஞ்சம், அழிவு என்றே செல்லும் நாவலில் ஒரு இனிய ஒளியாக 19ஆம் அத்தியாயம். யுதிஷ்டிரருக்கு தயை என்னும் வில் கிடைத்த கதை. எழவிருக்கும் கருவுக்கும் அருளிய அனுவின் கதை.

வெண்முரசு அருளிய உங்களுக்கு வணக்கமும் நன்றியும்.

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

 

அன்புள்ள ஜெ

தீயின் எடை நாவல் இன்றுதான் வாசித்து முடித்தேன். இணையத்தில் படித்து முடித்திருந்தாலும் நூல்வடிவில் ஒட்டுமொத்தமாக வாசிப்பதென்பது அபப்டியே மூழ்கடித்து வைத்திருக்கும் பேரனுபவம். எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்றே தெரியாத ஒரு நிலை. போரின் கொந்தளிப்பு நாவலில் மெல்ல அடங்கிவிட்டது. ஆனால் எனக்கு ஒட்டுமொத்த போரும் ஒரு பெரிய காட்சிவெளியாக மனதில் நின்றுவிட்டது. மைக்ரோஸ்கோப் வழியாக நுண்ணியிரிகளைப் பார்க்கும்போது ஒரு பெரிய குருக்க்ஷேத்திரத்தைப் பார்ப்பதுபோன்ற உணர்வு உருவாகிறது. தீயின் எடை என்னும் தலைப்பே திடுக்கிடச் செய்வது.

ஆர். கிருஷ்ணகுமார்

முந்தைய கட்டுரைசிவபூசையின் பொறுப்பும் வழியும்
அடுத்த கட்டுரைகேளாச்சங்கீதம் கடிதங்கள் -10