கவிதைக்கு ஓர் இணையதளம்

அன்புள்ள ஜெ,

நடந்து முடிந்த கவிதை முகாமை ஒருங்கிணைக்கும் முன்பு ஈரோடு கிருஷ்ணனுக்கு தமிழ் கவிதை மீதான சில வருத்தம் இருந்தது. மலையாளம், ஹிந்தி போன்று தமிழில் சமகால கவிதைகளை அல்லது கவிஞர்களை தொகுக்கும் வழக்கம் இல்லை என சொல்லிக் கொண்டேயிருந்தார். கவிதை முகாமிற்கு பின் அது மேலும் தீவிரம் அடைந்தது.

ஒரு முறை என் வீட்டிற்கு வந்த போது சரி நாம் ஒரு இணையதளம் தொடங்கலாம் என்றார். அதில் சமகால கவிதைகளில் தெரிவு செய்த கவிதைகளைப் பற்றி ஒரு சிறு வாசிப்பு அனுபவத்துடன் மாத மாதம் ஒரு இதழ் போல் செய்யலாம் என்ற திட்டத்தையும் உடன் மொழிந்தார்.

அதிலிருந்தே கவிதைகளுக்கான https://kavithaigal-tamil.blogspot.com/ இதழுக்கான திட்டம் உருவாகியது. இந்த எண்ணத்தை கவிஞர் ஆனந்த், கவிஞர் மதாரிடம் சொன்னவுடன் சரி என ஒப்புக் கொண்டனர். மூவரும் சேர்ந்து இம்மாத இதழை உருவாக்கினோம். கிருஷ்ணனும், மணவாளனும் உடன் உதவினர்.

இனி இவ்விதழை ஒவ்வொரு மாதமும் பத்து கவிதைகளுடன் வெளியிடும் திட்டம் உள்ளது. இனி வரும் இதழ்கள் அதிகபட்சம் 5 கவிஞர்களை முன்வைத்து அமையும்.

இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும். இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு பின் பிரசுரம் கண்டவையாக அமையலாம் என முடிவு செய்துள்ளோம். சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

மேலும் இது ஒரு கூட்டு இணையதளமாக இருப்பதே எங்கள் விருப்பம். எனவே நண்பர்கள் அனைவரும் இதில் பங்கு பெற வேண்டுமென விரும்புகிறோம். இதழுக்கு  அனுப்பப்படும் கவிதைகள் பற்றி அதன் ஆசிரியர் அல்லாத ஒருவரின் சிபாரிசு சில வரிகளில் வேண்டும். அவை அடுத்த இதழில் பிரசுரிக்க கருத்தில் கொள்ளப்படும்.

இப்போதைக்கு பின்னூட்டம் தவிர்க்கப் படுகிறது, வாசகர்கள் விமர்சனத்தை அல்லது வாசிப்பை மின்னஞ்சல் செய்யலாம். மின்னஞ்சல் முகவரி: [email protected].

கலைமகளின் திருநாளன்று இதழ் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் தங்கள் ஆசியையும், நண்பர்களின் ஆதரவையும் கோருகிறோம்.

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

இணைய தளம் முகவரி: https://kavithaigal-tamil.blogspot.com/

முந்தைய கட்டுரைகேளாச்சங்கீதம்- கடிதங்கள்- 8
அடுத்த கட்டுரைசென்னை கவிதைவிழா- கடிதங்கள்