அஜ்மீர் பயணம்- 7
அஜ்மீர் பயணம்-6
அஜ்மீர் பயணம்- 5
அஜ்மீர் பயணம்- 4
அஜ்மீர் பயணம்-3
அஜ்மீர் பயணம்-2
அஜ்மீர் பயணம்-1
அன்புள்ள ஜெ
நேரடியாகவே ஒரு கேள்வி. நான் நேற்று ஒரு மூத்த இந்துத்துவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆசாரமான வைணவர். அவர் சொன்னார். சூஃபிகள் பலர் இந்து வழிபாடுகளைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறார்கள் என்று. ஆகவே அவர்களை நாம் மதிக்கக்கூடாது என்று சொன்னார். சிஷ்டி அவர்கள் அவ்வாறு பேசியிருக்கிறாரா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஸ்ரீராம்
அன்புள்ள ஸ்ரீராம்,
சூஃபிக்கள் அனைவரும் ஒரே கொள்கை கொண்டவர்கள் அல்ல. சித்தர்களைப்போல வெவ்வேறு வகையான பார்வை கொண்டவர்கள். அவர்கள் ஒற்றை இயக்கம் அல்ல.அவர்கள் தனித்தலைந்து மெய்மையை அறிந்தவர்கள். அவர்களில் மிகமிகச் சிலரே எதையாவது வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து திரட்டிய ஞானத்தொகையில் இருந்து பொதுவாக உருவகிக்கப்படுவதே சூஃபி மெய்ஞானம்.
சூஃபிகளில் முரண்பட்ட கொள்கை கொண்டவர்கள் உண்டு என்பதுபோலவே சூஃபி மெய்ஞானத்திற்குச் சம்பந்தப்படாத எளிய மதப்பிரச்சாரகர்கள் சூஃபிகளாக இச்லாமியர்களால் கருதப்படுவதுமுண்டு. சில இடங்களில் களப்பலியான போர்வீரர்களே சூஃபிகளாக ஊரால் கருதப்படுவதுண்டு. அவர்களில் பலர் மிகமிக கடுமையான மதவெறுப்பை, அழித்தொழிப்பை முன்வைத்ததும் உண்டு. அவர்களைக்கொண்டு சூஃபிகளை வரையறை செய்ய முயல்வது அறிவின்மை.
சூஃபிகள் என ஏற்கப்பட வேண்டியவர்கள் சூஃபி மெய்ஞானத்தை அடைந்தவர்களே. அவர்கள் மதங்களுக்கு மேலெழுந்தவர்களாகவும் இறையன்பர்களாகவுமே இருப்பார்கள். அஜ்மீர் அப்படிப்பட்ட இடம். சிஷ்டி அவ்வண்ணம் வெளிப்பட்டவர். ஆகவே அங்கே மதவேறுபாடின்றி பல்லாண்டுகள் அன்னம் போடப்பட்டது. விளைவாக, அவர் கரீபிநவாஸ் என பெயர் பெற்றார். இந்துக்கள் அவரை வழிபடுவது அந்த பேதமற்ற மெய்ஞானத்தின் பொருட்டே.
ஆனால் இன்னொன்றுமுண்டு. சூஃபிகள் என்றல்ல, எந்த மெய்ஞானியும் தன் ஞானத்தை முன்வைக்கும் தீவிரத்தால் பிறவற்றை நிராகரிக்கக்கூடும். பிற ஞானங்களைக் கடுமையாக மறுத்துரைப்பவர்களும் உண்டு. அவர்களின் வழிவந்தவர்கள் பின்னர் அந்த மறுப்பை எதிர்நிலைபாடாக முன்னெடுப்பதும் வழக்கமே. அது காழ்ப்பாக வெளிப்படுவதையும் காணமுடியும்
அது ஒரு வரலாற்று இயல்பு என்று மட்டுமே நாம் கொள்ளவேண்டும். இல்லையேல் நம்மால் எந்த மெய்ஞானத்தையும் அணுகமுடியாது. அவ்வாறு வரலாற்றில் எதிர்நிலைகலைக் கணக்கிட ஆரம்பித்தால் நாம் ஏற்றுக்கொண்ட ஒன்றை மட்டும் பற்றிக்கொண்டு, பிறவற்றை வெறுத்துக்கொண்டு, எளிய காழ்ப்பாளர்களாகவே நிலைகொள்ள முடியும். மெய்ஞானம் முன்வைக்கப்படுகையில், அச்சூழலில், அது அவ்வண்ணம் மறுப்பும் ஏற்புமாக விளக்கப்பட்டது என்று மட்டும் எடுத்துக்கொண்டு: அந்த மெய்ஞானத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான் நாம் செய்யக்கூடுவது.
யோசித்துப்பாருங்கள், நான் அத்வைத மரபினன். சங்கரரை ராமானுஜ மரபைச் சேர்ந்த வைணவர்கள் என்னென்ன சொன்னார்கள் என்று தொகுத்துப்பார்த்தால் நான் உங்கள் வைணவ நண்பரை கண்ட இடத்தில் சங்கைப்பிடிக்கவேண்டும் இல்லையா? சரி, வைணவர்களிலேயே தென்கலையும் வடகலையும் சங்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும் அல்லவா?
இந்தக் காழ்ப்பாளர்களை கூர்ந்து கவனியுங்கள். முதலில் இவர்கள் இந்து என்னும் அடையாளத்தில் நின்றுகொண்டு பிற மதங்களை வெறுப்பார்கள். அதன்பின் வைணவம் சைவம் என பிரிந்து அடையாளம் சூடிக்கொண்டு பிற இந்து ஞான முறைமைகளை கசந்து கொட்டுவார்கள். அதன்பின் மேலும் குறுகி தங்களுக்கென சிறு சாதிய வட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு பிறரை வசைபாடுவார்கள். தங்களவர் என இவர்களால் உணரப்படும் சிலர் அன்றி எந்த மெய்ஞானியையும் நாகூசாமல் இவர்களால் இழிவுசெய்ய இயலும்.
உங்களுக்கு என்ன வேண்டும் என்பதே கேள்வி. ஆன்மிகமா அரசியலா? ஞானமா உலகியல் உழலலா? அரசியல் சார்ந்த பார்வையை முழுமையாகவே மெய்ஞானத்தில் இருந்து விலக்கிவிடவேண்டும் என நான் சொல்வது அது எதிர்மறையாகவே செயல்பட முடியும், காழ்ப்பை மட்டுமே அளிக்கமுடியும் என ஆழமாக உணந்ததனால்தான்.
ஜெ