குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்
அன்புள்ள ஜெ
குதுப்- முழுதமைந்த குரு ஓர் அற்புதமான கட்டுரை. சுபஸ்ரீ அருமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். அதன் சில சொற்களை அகற்றிவிட்டால் அதை ஒரு வேதாந்தக் கட்டுரை அல்லது பௌத்தக் கட்டுரை அல்லது ஒரு மேலைநாட்டு ஐடியலிஸ்ட் கட்டுரை என்று வாதிடமுடியும். எல்லா ஞானங்களும் சென்றடையும் ஓர் உச்சநிலையில் இயல்பாகவே அக்கட்டுரை அமைந்துள்ளது.
எந்த ஞானத்தையும் அதன் உச்சியிலிருந்து அறியமுடியும். அதன் வேரிலிருந்தும் அறியமுடியும். சிந்தனையை உச்சியிலிருந்து அறிவதே நல்லது. வேர் என்பது வரலாறு. அதன்வழியாகச் சிந்தனையை அறிவது தவறான வழிமுறை. இந்தக்கட்டுரை சூஃபி ஞானத்தை அதன் உச்சியிலிருந்து நமக்கு அறிமுகம் செய்கிறது.
சுவாமி
அன்புள்ள ஜெ
குதுப் கட்டுரையில் இந்த வரிகளை வாசித்தேன்
மனம் மறைந்து போக வேண்டும், நனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்… தனிப்பட்ட மனதுடன் இணைந்திருந்த நனவு இப்போது விடுவிக்கப்பட்டு, தடைகள் இன்றி இறுதி மெய்மையுடன்(Ultimate Reality) நேரடியாக ஒன்று சேர்கிறது. இப்போது நனவுக்கும் இறுதிமெய்மைக்கும் இடையே திரைகள் ஏதும் இல்லாதிருப்பதால் நனவு பூரணத்துடன்(Absolute) இணைந்திருக்கிறது.
முழுமை என்று வேதாந்தம் சொல்லும் அதே தன்னுணர்வு அதே சொற்களில் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது இக்கட்டுரையில். இது சூஃபி மெய்ஞானத்தின் அழகான தொகுப்பு. மிகச்சரியாக சொல்லப்பட்டு மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது
ஆர்.ராஜாராம்