பி.கே.பாலகிருஷ்ணன் – கடிதங்கள்.

கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

பி.கே.பாலகிருஷ்ணனின் தஸ்தயேவ்ஸ்கி பற்றிய கட்டுரை மிகமிக ஆழமான ஒன்று. இங்கே நாம் தஸ்தயேவ்ஸ்கி பற்றி பேசுவதற்கும் அதற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. இங்கே நமக்கு விமர்சகர்கள், ஆய்வாளர்கள் குறைவு. கல்வித்துறையாளர்களும் அரசியலாளர்களும்தான் இங்கே ஆய்வுமாதிரி எதையாவது எழுதுகிறார்கள். அதில் மேற்கோள்களும் கோட்பாடுகளும் குவிந்துகிடக்குமே ஒழிய எந்த அடிப்படையான புரிதலும் இருக்காது. அவற்றிலிருந்து வாழ்க்கையை முன்வைத்து இலக்கியப்படைப்புகளை வாசிக்கும் நுண்ணுணவுள்ள இலக்கியவாசகனுக்கு பெறுவதற்கு ஒன்றுமிருப்பதில்லை. பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை ஆய்வுக்கட்டுரையின் ஆழமும் செறிவும் கொண்டிருக்கிறது. கூடவே அது அழகுணர்வும் வாழ்க்கைப்பார்வையும் கொண்டிருக்கிறது. நீங்கள் எங்கிருந்து எந்த ஆசிரியர்களிடமிருந்து வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது

எம்.பாஸ்கர்

அன்புள்ள ஜெ

பி.கே.பாலகிருஷ்ணனின் தஸ்தயேவ்ஸ்கி பற்றிய கட்டுரையை படித்துக்கொண்டே இருக்கிறேன். மிகமிக ஆழமான கட்டுரை. ஆனால் ஆய்வுக்கட்டுரை அளிக்கும் சோர்வு சற்றுமில்லை.மூளையை மின்னல்கள் தீண்டிக்கொண்டே இருக்கின்றன “எல்லையில்லாதபடி மிகமிக விரிவான ஒரு போர்க்களத்தில்தான் தன் கலைமனம் முழுமையான வெளிப்பட முடியும் என்று கண்டுடைந்த டால்ஸ்டாய் ‘போரும் அமைதியும்’ நாவலை எழுத ஆரம்பிக்கிறார்” என்ற வரி என்னை அதிரவைத்தது. போரும் அமைதியும் எழுதியவர் போரில்தான் தன் கலைமனம் வெளிப்படும் விரிவும் உச்சமும் அமையும் என்று எண்ணி அதை எழுதினார் என்றால் போர் என்றால் என்ன? பகவத்கீதை ஏன் போரில்தான் சொல்லப்படமுடியும் என்பதை அங்கே பொருத்தி யோசித்துக்கொண்டேன்

அழகிய மணவாளன் மிக அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

ஆர்.ஸ்ரீனிவாசன்

நாவலின் பேசுபொருள் -பி.கே.பாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகுருவி, கடிதம்
அடுத்த கட்டுரைஎரியும் தீ -சௌந்தர்