அறிவுரைகளா?
அன்புள்ள ஜெ
உங்கள் பதிலில் இந்த வரிகளைப் பற்றி யோசிக்கிறேன்
இலக்கிய ஆக்கத்தில் கருத்துக்களே இருக்கக்கூடாது என்று சொல்பவர்கள் பற்றித்தான் நான் கேட்டிருந்தேன். இலக்கியவாதி குழப்புவானே ஒழிய தெளிவு அளிக்கமாட்டான் என்று சொல்லப்படுவதைப்பற்றிய உங்கள் கருத்தை கேட்க விரும்புகிறேன்
அகிலன் மா
அன்புள்ள அகிலன்,
இலக்கிய ஆக்கம் கருத்து சொல்வதற்குரியது அல்ல. ஆனால் இலக்கியப் படைப்புக்குள் கருத்துக்கள் இன்றியமையாதவை.
இலக்கிய ஆக்கத்திற்குள் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் எப்படி வர இயலும் என இலக்கியவாசிப்பினூடாக தெளிவடைய முடியும். ஓர் இலக்கிய ஆக்கம் தன் மையமாக ஒரு கருத்தை முன்வைக்கிறது என்றால், அதன்பொருட்டு அந்தப்படைப்பின் அமைப்பையும் ஒழுக்கையும் கட்டமைக்கிறது என்றால் அது கலைக்குறைபாடு கொண்டது. அதையே பிரச்சார இலக்கியம் என்கிறோம். அதை கலைப்பார்வையில் நிராகரிக்கிறோம்.
அந்தக்கருத்து எத்தனை முக்கியமானது என்றாலும் அந்தப்படைப்பு கலைக்குறைபாடு கொண்டதே. அக்கருத்தை நாம் ஆழமாக விவாதிக்கையிலும்கூட அந்தப்படைப்பை கலைப்படைப்பாக எழவில்லை என்று சொல்லுவோம். இதுவே அழகியல் நோக்கு
ஏன்? இலக்கிய ஆக்கம் அதன் ஆழ்மன இயக்கம் சார்ந்தே மதிப்பிடப்படுகிறது. அதை கலையாக ஆக்கும் கூறுகள் எழுத்தாளனின் அறிவோ நிலைபாடோ அல்ல அவனுடைய ஆழுள்ளம் மொழிவழியாக தன்னிச்சையாக வெளிப்பட்டிருக்கும் விதமே அதை கலைப்படைப்பாக ஆக்குகிறது. எழுதும்போது தன்னிச்சையாக உருவாகி எழுந்து வந்து நிற்கும் ஒன்றே படைப்பாகும். சிந்தித்து தெளிந்து கட்டமைக்கப்படுவது அல்ல. அந்த சிந்தனை எத்தனை தெளிவானதாக இருந்தாலும் சரி.
எழுத்தாளனின் ஆழுள்ளம் படைப்பில் வெளிப்படுகிறது. படைப்பிலுள்ள கதைமாந்தர், கதைத்தருணங்கள், உணர்வுகள், படிமங்கள், குறியீடுகள், மொழியாட்சிகள், வடிவம் ஆகியவற்றினூடாக அவற்றை வாசகன் தன் ஆழுள்ளத்தால் அறிகிறான். அதுவே வாசிப்புச் செயல்பாடு. அந்த எழுத்தாளன் தான் சிந்தித்து அறிந்த ஒரு கருத்தை முன்வைக்கும்பொருட்டு தன் அப்படைப்பை எழுதினான் என்றால் அவனுடைய ஆழுளம் அதில் இல்லை என்று பொருள். அவ்வாறு இருந்தாலும் அதை அவன் கட்டுப்படுத்தியிருக்கிறான், திரித்திருக்கிறான் என்று பொருள். ஆகவே அது கலைக்குறைபாடு கொண்டது. இலக்கியத்தின் நோக்கம் எதுவோ அதை அப்படைப்பு அடையவில்லை என்று அழகியல்விமர்சனம் கருதும்.
[மிக அரிதாக எழுத்தாளன் தெளிவான நோக்கத்துடன், கருத்து சொல்வதற்காகவே எழுதும்போதுகூட அவனை மீறி அவனுடைய ஆழுள வெளிப்பாடாக படைப்பு மாறிவிடுவதுண்டு. அது மாபெரும் கலைப்படைப்பாகவும் கருதப்படும். தல்ஸ்தோயின் அன்னா கரீனினா அத்தகைய படைப்புக்கு சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுகிறது]
இதனால்தான் இலக்கியத்தில் கருத்துச் சொல்லுதலை விமர்சகர் நிராகரிக்கிறார்கள். ‘கருத்துசொல்லும் படைப்பு’ என்னும் சொல்லாட்சி எதிர்மறைக் குறிப்புடன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை மூன்று வகையில் பிழையாக புரிந்துகொள்ளும் எளிய வாசகர்கள் உண்டு.
ஒன்று, இலக்கியப்படைப்பில் சிந்தனைசார்ந்து வருவன அனைத்தையும் கருத்துசொல்லும் கலைப்பிழை என எடுத்துக்கொள்வது.
இரண்டு, ஆசிரியர்கூற்றாக வரும் கருத்துக்களை கருத்துசொல்லுதல் என எடுத்துக்கொள்ளுதல்.
மூன்று, இலக்கியப்படைப்பில் உருத்திரண்டு வரும் ஒரு சிந்தனை எழுத்தாளரால் முன்வைக்கப்படுவது, அது கருத்துப்பிரச்சாரம் என எடுத்துக்கொள்வது..
மானுடத்தின் அகச்செயல்பாடுகளில் முக்கியமானது சிந்தனை. அது ஓர் இலக்கிய ஆக்கத்தில் வரக்கூடாது என்பதைப்போல அறிவின்மை வேறில்லை. உலக இலக்கியத்தின் பெரும்படைப்புகள் அனைத்துமே சிந்தனைகளை முன்வைப்பவைதான். என்ன வேறுபாடென்றால் அவை ஒரு ‘மையச் சிந்தனையை’ முன்வைப்பதில்லை. அவை ஒரு சிந்தனைப்புலத்தை முன்வைக்கின்றன. ஒரு சிந்தனைப்பரிமாற்றத்தை, உரையாடலை சித்தரிக்கின்றன. ஆகவே முரண்படும், பல்வேறுபட்ட சிந்தனைகளை அவை முன்வைக்கின்றன. விவாதங்களை உருவாக்குகின்றன. தஸ்தயேவ்ஸ்கி அல்லது தாமஸ் மன் அல்லது விக்டர் ஹ்யூகோவின் படைப்புகள் உதாரணம்.அவை தீவிரமான கருத்துக்கள் முரண்பட்டு செயல்படும் பெரும்களமாகவே அமைந்துள்ளன.
பேரிலக்கியங்கள் சிந்தனைகளை மூன்று வகைகளில் முன்வைக்கின்றன. வலுவான சிந்தனைப்போக்கு கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி அவற்றின் எண்ணங்களாகவும் உரையாடல்களாகவும் சிந்தனைகளை அவை முன்வைப்பதுண்டு. அச்சிந்தனைகளை அந்தக் கதாபாத்திரத்தின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டும். அவற்றின் மறுபக்கம் பலசமயம் அந்நாவலிலேயே வெளிப்பட்டிருக்கும். இன்னொரு கதாபாத்திரத்தால், அல்லது அதே கதாபாத்திரத்தின் இன்னொரு உளநிலையால்.
சிலசமயம் ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுநிலையே ஒரு கருத்தாக வெளிப்பட்டிருக்கும்”நரகம் என்பது மற்றவர்கள்தான்” என்பது சார்த்ரின் ‘மீளமுடியுமா?”என்ற நாடகத்தின் கதைநாயகரின் வரி. அவனுடைய உணர்வு அது. அதை ஒரு தத்துவ வரையறையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு குறிப்பிட்ட உளநிலையின் சரியான சொல்வடிவம் அது. அந்த உளநிலை சமூகத்தில் திகழ்வது, இருத்தலியல் சார்ந்த பறதியின் [anxt] விளைவு அது.அது ஒரு விவாதக்கருத்து அல்ல, ஒரு நிலைபாடு அல்ல.
இலக்கிய ஆக்கங்களில் ஆசிரியர்கூற்றாகச் சிந்தனைகள் வருவதுண்டு. அவையும்கூட அந்த புனைவுக்களத்திற்குள் உள்ள உணர்வுவெளிப்பாடுகளோ எண்ணங்களோதான். அவற்றை அந்த புனைவுக்களத்திற்கு வெளியே அதேபோன்ற வாழ்க்கைச்சூழல் ஒன்றை விளக்க பயன்படுத்தலாம். அவற்றையும் அறுதியான தத்துவ வரையறைகளாகக் கொள்ளலாகாது, தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி நூல்களில் அத்தகைய வரிகள் ஏராளமாகவே காணக்கிடைக்கும்.
கடைசியாக படைப்புகள் ‘சென்றடையும்’ கருத்துநிலையை ஆசிரியரின் கருத்தாகக் கொள்வது எளிய வாசகர்களிடையே அடிக்கடி காணப்படும் உளப்பழக்கம். ஒரு புனைவு அதன் களத்தில் எல்லாக் குரல்களையும் முன்வைத்து ஒரு பெரிய விவாதத்தைக் கட்டமைக்கிறது. அந்த விவாதத்தின் மையப்புள்ளியாக திரண்டு வருவது அப்படைப்பின் மையமே ஒழிய ஆசிரியரின் தரப்பு அல்ல. அந்த மையமும்கூட நாம் நம்முள் உருவாக்கிக் கொள்வதே ஒழிய மெய்யாகவே அப்படைப்பில் நிலைகொள்வது அல்ல. அந்த விவாதங்களை அறிவுபூர்வமாக உணர்வுபூர்வமாக வாசகன் தன்னுள் உருவாக்கிக்கொள்கையில் அவன் சென்றடையும் இடம் அது.
அதாவது ஆசிரியன் அங்கிருந்து தொடங்கவில்லை, அப்படைப்பு அங்கே சென்றடைகிறது. இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. இதையறியாமல் ‘எல்லா படைப்பும் பிரச்சாரமே’ என்று சொல்லும் எளியவாசகர் உலகம் முழுக்கவே உண்டு.
நுணுகிப் பார்த்தால் ஓர் இலக்கிய ஆக்கம் எதை சென்றடைகிறது என்று நமக்கு தோன்றுகிறதோ அதற்கு எதிராகவும் அது நிலைகொள்ளும். அப்படிப்பட்ட வாசிப்புக்கும் அது இடமளிக்கும். அது ஆழுள்ளத்தின் இயல்பு. ஆசிரியனின் ஆழுளம் வெளிப்பட்டால் படைப்பு அவ்வண்ணம் விரிந்து பரவி தன்னைத்தானே மறுத்து தனக்குத்தானே உரையாடிக்கொண்டு மேலே செல்லும். அதையே பன்முகத்தன்மை, உள்விரிவுத்தன்மை என்று அழகியல்விமர்சனம் குறிப்பிடுகிறது. அவ்வாறன்றி ஒரே திசைநோக்கிச் செல்லும் ஆக்கங்களையே ஒற்றைப்படையானவை என்கிறோம்.
எளிய வாசகர் இதையே ‘குழப்புவது’ என்கிறார். இது குழப்பம் அல்ல. ஒரு பாலைநில மண்ணில் நீரூற்றுவது. அங்கே இருக்கும் எல்லா விதைகளையும் முளைக்கச் செய்வது. வாசகனிடமிருக்கும் எல்லா கேள்விகளையும் ஐயங்களையும் உசுப்பி எழுப்புவது படைப்பின் இயல்பு. அவனை தீவிரமான தன்னுசாவலுக்குக் கொண்டுசெல்வது அதன் வழிமுறை. வாசகன் தெளிவை அடைவது அந்த தன்னுசாவலின் வழியாக அவன் மேற்கொள்ளும் பயணத்தின் முடிவில்தான். அப்படி ஒரு பயணத்தை ஆற்ற முடியாதவர்களுக்கு எஞ்சுவதுதான் குழப்பம்.
இது படைப்பின் இயல்பே ஒழிய படைப்பாளியின் இயல்பல்ல. அவன் குழம்பிப்போனவன் அல்ல. அவனும் தன் படைப்பினூடாகப் பயணம் செய்திருப்பான். அவனும் சில தெளிவுகளைக் கண்டடைந்திருப்பான். அவன் அவற்றை முன்வைத்து திட்டவட்டமாகப் பேசுவான்
ஜெ