சென்னை கவிதைவிழா- கடிதங்கள்

கவிதைக்கான ஒரு நாள்

வியனுலகு வதியும் பெருமலர்- உரைகள்

அன்புள்ள ஜெ

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைநூல் விழாவுக்கு வந்திருந்தேன். சில நிகழ்வுகள் நிகழ்வு நடக்கும்போது துள்ளலாக இருக்கும். பின்னர் ஒன்றும் மிஞ்சாது. சில நிகழ்வுகளில் ஒரு நீண்ட சலிப்பு இருக்கும். ஆனால் வந்தபின் நிறைய யோசிக்கும்படி மிஞ்சியிருக்கும். இந்த விழா இரண்டாம் வகை. பிரவீன் பஃறுளி, தேவசீமா,மனோ மோகன் ஆகியோருடைய உரைகளை தொடர்ச்சியாகக் கேட்டபோது திகட்டல் தோன்றியது. கடைசியாக நீங்களும் மனுஷ்யபுத்திரனும் இரு கோணங்களில் ஆழமாகப் பேசினீர்கள். நிகழ்ச்சிக்கு அழகான முத்தாய்ப்பு அமைந்தது. பின்னர் யோசிக்கும்போது சமகாலக் கவிதையின் இயல்பு பற்றிய பலவகையான சிந்தனைகளை ஒவ்வொரு பேச்சும் உருவாக்கியிருப்பதை உணர முடிந்தது.

இலக்கியக்கூட்டம் என்பது எத்தகைய நிறைவை அளிக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது. இரண்டு ஆண்டுகளாக ஜூம் மீட்டிங்குகள். அவற்றில் என்னதான் இருந்தாலும் நாம் தனியாக இருக்கிறோம் என்னும் உணர்வு உண்டு. நேரடியான கூட்டங்களில் நாம் ஒரு திரளாக நம்மை உணர்கிறோம். நாம் தமிழ்நாட்டிலிருக்கும் சிறுபான்மையினர். ஆனால் கவிதைரசனைகொண்ட ஒரு சின்ன இயக்கம். அது கண்கூடாக அங்கே தெரிகிறது. அது ஒரு அற்புதமான அனுபவம். அந்தச் சந்திப்பின் சிறந்த அம்சமே உங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டதும் கூட்டத்துடன் அமர்ந்திருந்ததும்தான்

ஆர்.மகேஷ்

அன்புள்ள ஜெ

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைநூல் வெளியீட்டுக் கூட்டம் முடிந்து கிளம்பும்போது ஒரு பேச்சு வந்தது. உங்களை இளங்கோ கிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், மனோ மோகன் ஆகியோர் மிகவும் பாராட்டிப்பேசினர். விழா உங்களுக்கானது அல்ல என்றபோதும் இந்தப்பாராட்டு நிகழ்ந்தது. இப்படி பாராட்டும் வழக்கம் பொதுவாகச் சிற்றிதழ்ச்சூழலில் இல்லை.

இப்போது உங்கள்மீதான ஒரு வகை அவதூறுத்தாக்குதல் முத்திரை குத்துதல் கொஞ்சம் கூடுதலாக நடைபெறுவதனால் இந்த பாராட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று நண்பர் சொன்னார். இலக்கியவாதிகள் உங்களை சற்று அழுத்தமாகவே முன்வைக்க விரும்புகிறார்கள். வசைபாடும் கும்பலிடம் ‘நீங்களெல்லாம் சொல்லி நாங்கள் எதையும் மாற்றிக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு எவர் முக்கியம் எது முக்கியம் என்றெல்லாம் தெரியும்’ என்று சொல்ல விரும்புகிறார்கள் இலக்கியவாதிகள்.

நான் சொன்னேன். இலக்கியவாசிப்பே இல்லாத, இலக்கியநுண்ணுணர்வே இல்லாத ஒரு சின்ன அரசியல்கும்பல் கூச்சலிட்டு  தொடர்ந்து கூச்சலிட்டு இலக்கியவாசகனின் கருத்தை முழுக்க மாற்றிவிடமுடியும் என்று நினைக்கிறது. அவர்கள் அதைச் செய்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை. ஆனால் அப்படி இலக்கிய வாசகனை மாற்றிவிடமுடியும் என்று அவர்கள் உண்மையாகவே நம்புகிறர்கள். அதுதான் பரிதாபமானது.

இந்த அறிவிலித்தனம் சென்ற தலைமுறையில் இருந்த அரசியல்காரர்களுக்கு இருந்தது இல்லை. அவர்கள் ஒரு நிலைபாடு எடுத்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இலக்கியவாசகனுக்கு அவனுக்குரிய வேறு அளவுகோல்கள் இருக்கும் என்றும் தெரிந்து வைத்திருந்தனர். இன்றைய அரசியல்காரர்களிடமிருக்கும் இந்த அப்பாவித்தனம் ஒரு பின்நவீனத்துவ அம்சம் என்று சொன்னேன்.

மேலும் நிறைய பேசிச் சிரித்துக்கொண்டே இருந்தோம். [மழையானதனால் பீர் இல்லை. பதிலுக்கு வேறு. இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. மன்னிக்கவும்]

ஒரு இனிமையான நாளாக அமைந்தது. மீண்டும் சிறந்த இலக்கியக்கூட்ட்டம் நிகழவேண்டும்.

கே.எம்.சுந்த்ர்ராஜன்

அன்புள்ள ஜெ

சென்னை கவிதைவிழாவில் இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளைக் கொஞ்சம் மிகையாகவே பாராட்டுகிறீர்களோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால் நூலை வாங்கி வாசித்தபோது ஒரு பிரமிப்பை அடைந்தேன். கண்டிப்பாக தமிழில் வந்த மிகச்சிறந்த தொகுதிகளில் ஒன்று. எளிதில் வாசித்து முடிக்க முடியாதது. வெவ்வேறு மனநிலைகளில் வெவ்வேறு மொழிநடைகளில் கவிதைகள் உள்ளன. ஒரு நகரத்தின் வேறுவேறு பகுதிகள் போல உள்ளன அவை

மனதின் எந்த உலை

ததும்பிப் பொங்குகிறது?

என்ற வரியிலிருந்து நீண்டநாட்கள் வெளியே வரமுடியாது என்று தோன்றுகிறது. உலை என்பது உருக்கு உலையாகவும் சோற்று உலையாகவும் மாறி மாறித் தோன்றுகிறது. அற்புதமான தொகுப்பு. அறிமுகம் செய்தமைக்கு நன்றி

செல்வன் குமார்

அன்புள்ள ஜெ

மனுஷ்யபுத்திரன் தன் உரையில் சொன்ன மையக்கருத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன். சமகாலப் பேச்சுமொழியிலேயே கவிதை அமையவேண்டும் என்பது எஸ்ரா பவுண்ட் சொன்னது. க.நா.சு அதை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். தமிழில் பிரமிள் தவிர அனைத்து புதிய கவிஞர்களின் கவிதைகளும் அப்படித்தான் இருந்தன. நகுலன், பசுவய்யா கவிதைகள் எல்லாமே அப்படித்தான் இருந்தன.

அவர்களுக்கும் வானம்பாடிகளுக்கும் உள்ள வேறுபாடேகூட இதுதான். வானம்பாடிகள்தான் பேச்சுமொழிக்கு வெளியே இருந்தனர். அவர்கள்தான் மேடைத்தமிழில் கவிதை எழுதினர். தமிழில் இன்றைக்கு வந்திருப்பதாக மனுஷ்யபுத்திரன் சொல்லும் அந்த பேச்சுத்தமிழ் புதியதாக என்ன? எனக்கு விடைகிடைக்கவில்லை. இசை போன்ற சில கவிஞர்களை தவிர்த்தால் இன்றைக்கு எழுதும் கவிஞர்களெல்லாம் இறுக்கமாக திரிபடைந்த சொற்களாகத்தானே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரைகவிதைக்கு ஓர் இணையதளம்
அடுத்த கட்டுரைஅழகிகள், மர்மங்கள், கற்பனைகள்