குமரி, கடிதங்கள்

தொடர்புக்கு: [email protected]

அன்புள்ள ஜெ

குமரித்துறைவி அச்சுநூல் வந்துவிட்டதை அறிந்தேன். என் மனதில் நான் இதுவரை வாசித்த நூல்கள் எவற்றுக்கும் இல்லாத இடம் இந்நூலுக்கு உண்டு. என் வாழ்க்கையின் மிகமோசமான நாட்களில் இந்நாவல் எழுதப்பட்டது. என் தொழில் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. என் வீட்டில் இரண்டு சாவுகள். நான்கரை லட்சம் ரூபாய்க்குமேல் கடன். எங்கேயாவது கண்காணாமல் கிளம்பவேண்டுமா இல்லை குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா என்ற அல்லாட்டம் இருந்த நாட்கள். கிட்டத்தட்ட ஓர் எதிர்மறை உணர்வுக்கே வந்துவிட்டிருந்த போதுதான் இந்நாவல் வெளியாகியது.

அன்றைக்கு இதை படித்தபோது எந்த சுவாரசியமும் இல்லாமல்தான் ஆரம்பித்தேன். என் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. எதையாவது செய்தாகவேண்டும். தந்தி பேப்பரையே திரும்பத் திரும்ப வாசித்தேன். வாடஸப் ஸ்டேட்டஸ்களை வாசித்தேன். அதே போலத்தான் இதையும் வாசித்தேன். முதல் ஒரு அத்தியாயம் மண்டைக்குள் ஏறவே இல்லை. ஆனால் எப்போதோ உள்ளே போய்விட்டேன். ஒரே மூச்சில் வாசித்துமுடித்து விம்மி விம்மி அழுதேன். நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சுருண்டு படுத்துவிட்டேன்.

அதன்பிறகு எத்தனை முறை இதை படித்தேன் என்பதற்குக் கணக்கே இல்லை. செல்போனில் படித்துக்கொண்டே இருந்தேன். நான் பக்தனெல்லாம் இல்லை. பிறப்பால் வைணவனும்கூட. ஆகவே எனக்கு எந்த செண்டிமெண்டும் இல்லை. என் மனம் ஏதாவது பிடிமானத்துக்காக ஏங்கியபோது இந்த கதை அதற்கு கிடைத்திருக்கலாம். ஆனால் அவ்வளவுபெரிய நம்பிக்கையை இந்நூல் எனக்கு அளித்தது.

என்னைச்சுற்றி குப்பைகூளம் இருட்டு நாற்றம் எல்லாம் இருப்பதுபோல ஒரு மனநிலையே அதுவரை இருந்தது. எல்லாமே மாறி மங்கலமும் நறுமணமும் நிறைந்ததுபோல ஆகிவிட்டது. மூளையே சுத்தமாகிவிட்டது. உண்மையில் சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். என் கண்பார்வையே துலக்கமாக ஆகி எல்லாமே பளிச்சென்று தெரிவதுபோல ஆகிவிட்டது

அற்புதங்களெல்லாம் நிகழவில்லை. ஆனால் அற்புதம் என்றும் சொல்லலாம். வெளியேறும் வழியை நானே கண்டுகொண்டேன். அதுவரை நானே எல்லாவற்றையும் குழப்பிக்கொண்டிருந்தேன். தேவையில்லாமல் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் சொந்தக்காரர்கள் முகத்தில் எப்படி முழிப்பேன் என்றெல்லாம் நினைத்து சீப்பட்டுக் கொண்டிருந்தேன். அதெல்லாம் சட்டென்று போயிற்று. பெரும் நம்பிக்கை வந்தது நல்லவர்கள் சிலர் இருப்பார்கள், கண்டிப்பாக உதவி செய்வார்கள் என்னும் நம்பிக்கை வந்தது.

அப்படி உதவி வந்தது. மறுபடி எல்லாம் ஆரம்பித்துவிட்டது. மிக நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில் எல்லாமே சரியாக ஆகிவிடும். நான் எதையுமே எண்ணிப் பயப்படவேண்டியதில்லை. எல்லாமே தேவியின் அருள்தான். கோயில் திறந்ததும் குடும்பத்துடன் மீனாட்சியம்மை கோயிலுக்கும் பூண்டி மாதாகோயிலுக்கும் போய்வந்தேன். எல்லா அம்மைகளையும் கும்பிடும் மனநிலையில் இன்று இருக்கிறேன்.

இந்த கதையை தேவியின் திருவிளையாடல் என்றுதான் நான் சொல்வேன். ஒரு நவீனப்புராணம் இது. இதை இந்துக்களின் புராணங்களில் ஒன்றாகச் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இப்படித்தான் புராணங்கள் உண்டாகின்றன. புராணங்கள் இட்டுக்கட்டப்படுபவை அல்ல. யாரோ ஒரு கவிஞனின் மனதில் அம்மை எழுந்தருளி இப்படியெல்லாம் எழுத வைக்கிறாள். நமஸ்காரம்

ஆர்

அன்புள்ள சார்

தினமும் காலையில் fm கேட்டுக்கொண்டேதான் சமைப்பேன். இன்றைய தினம் ரேடியோ ஆன் பண்ணியவுடன் “மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி” பாட்டு. கேட்டவுடன் கண்களில் நீரே வந்துவிட்டது. ஒரு இரண்டாம் மூன்றாம் பக்கத்தில் இருந்து கடைசி வரை அழுதுகொண்டே படித்தது குமரித்துறைவிதான். அதைப் படித்து முடித்ததும் மதுரை போகவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஆசையில்தான் இருக்கிறேன். மதம் குறித்து எப்பொழுதும் எதுவும் நினைத்ததில்லை. ஆனால் குமரித்துறைவி படித்ததும் ஒரு இந்துவாக இல்லையே என்று ரொம்ப நினைத்தேன்.

சிறுவயதில் எல்லா கோவிலுக்கும் போவோம். மாவிளக்கு செய்து எடுத்துக்கொண்டு சமயபுரம் போயிருக்கிறோம். ராமேஸ்வரம் போய் கிணற்றில், கடலில் குளித்திருக்கிறோம். சுசீந்திரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், திருவானைக்கா எல்லாம் போய் இருக்கிறேன். சபைக்குப் போகிற குடும்பத்தில் கல்யாணம் செய்துகொண்ட பிறகு எல்லாம் நின்றுபோனது. காலையில் ரேடியோ கேட்கும்போது சாமி பாடல்கள் வந்தால் மிகக்குறைந்த வால்யூம் வைத்துகேட்பேன். யாரும் கிச்சன்க்கு வரமாதிரி இருந்தால் ஆப் பண்ணிவிடுவேன். இன்று வேலைக்கு வந்ததும் முதல் வேலையாக ஒரு ரெண்டு தடவை ஆசைதீர அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டுதான் இன்றைய வேலைகளை ஆரம்பித்தேன். பாடல் கேட்கும்போதே கண் கலங்கி ஊற்றிக்கொண்டே இருந்தது. ரொம்ப சந்தோஷமாகவும் இருந்தது. குமரித்துறைவி யாருக்கும் தெரியாமல் என்னிடம் இருக்கும் ஒரு மங்கலச்சின்னம். நன்றிகளுடன்

டெய்ஸி.

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க

குமரித்துறைவி அச்சுநூல் வாங்க 

வான் நெசவு அச்சுநூல் வாங்க

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

 


 

குமரித்துறைவி, விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல்நூல்

குமரித்துறைவி, அச்சுநூல்

குமரித்துறைவி

குமரித்துறைவி பற்றி…

குமரித்துறைவி- ஒரு சொல்

முந்தைய கட்டுரைகல்குருத்து, கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைகாந்தி,ஞானம் – கடிதங்கள்