நீலம்- கடிதம்

நீலம் கடலூர் சீனு உரை, கடிதம்

இனிய ஜெயம்

கோவை சொல்முகம் கூடுகையில் நிகழ்த்தப்பட்ட நீலம் நாவல் மீதான உரை சார்ந்து, லோகமாதேவி அவர்களின் பதிவுக்குப் பின்னர், அடுத்த இரு தினங்கள் அதில்  பங்கு பெறாதோர் புதிய நண்பர்கள் வசமிருந்து என தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

அந்த உரையின் முதல் பகுதியாக நான் வெண்முரசு எனும் பேரிலக்கியத்தில் அதில் நீலம் எனும் பகுதியை வகுத்துவைக்கத் தேவையான பகைப்புலம் எதுவோ அதை, அதன் விரிவை குறித்த சிறிய அறிமுகம் ஒன்றை அளித்திருந்தேன்.

உங்களது முப்பது ஆண்டுகால பாரதப் பண்பாடு சார்ந்த ( தகவல்கள் முதல் பயணங்கள் தொட்டு தியானம் வரை) தேடுதல் எனும் விரிந்த அடித்தளத்தின் சிகர முனையே வெண்முரசு. நீங்கள் முடித்துக் கடந்த முனையில் நின்று, இனிதான் அடுத்த முப்பது ஆண்டுகளுக்குகான பயணத்தை வாசகன் துவங்க வேண்டும்.

வெண்முரசு வழியே அதன் தேடலை தனதாக்கிக் கொண்டு, பாரதத்தின் தொன்மவியல், சிற்பவியல், உளவியல், சமூகவியல், தத்துவம் என பலநூறு பாதை கண்டு வாசகன் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்; ஆயுளுக்கும். இந்தப் பயணத்தில் ‘தகவல்கள்’ என்று வரும் பொழுது, இணையம் அளிக்கும் வசதி மிகப் பெரியது. இன்னும் சொல்லப்போனால் இந்த இணைய யுகம் அளித்த வசதியை முற்றிலும் பயன்படுத்திக்கொண்டமை சார்ந்தே வெண்முரசு சாத்தியப்பட்டது என்று கூட சொல்லலாம்.

உதாரணத்துக்கு வெண்முரசு சார்ந்த எந்த குறிச்சொல்லயும் தமிழில் உள்ளிட்டு கூகுளில் தேடினால் அது ஜெ தளத்துக்கே கொண்டு வந்து சேர்க்கும். ஜெ தளம் தவிர்த்த பிற தளங்கள், ஜெ இன் தளம் அளித்த ஒன்றுக்கு மேலதிகமாக எதையும் அளித்து விடாது. மாறாக அதே குறிச்சொற்களை கூகிளில்  ஆங்கிலத்தில் உள்ளிட்டு தேடினால், பல சமயங்கள் வெண்முரசு தேடுதல் சார்ந்த அபூர்வ புதையல்கள் கிடைக்கும்.

உதாரணத்திற்கு இந்த நீலம் உரை சார்ந்து வேறு சிலவற்றை தேடுகையில், என் பாணிப்படி, she came out from ekha naimisha temple… என்று உள்ளிட்டு தேடினேன். வந்த சுட்டிகள் வழியே இந்த மோனி கதா டே எனும் எழுத்தாளர் கிடைத்தார். (அவரை குறித்து தளத்தின் சுய அறிமுக பகுதி வழியே அறியலாம்)

https://monidipa.net/

ஏக நைமிஷை ஜெ ‘உருவாக்கிய’ தெய்வங்களில் ஒன்று என்றே எண்ணி இருந்தேன்; ஸ்தூநகர்ணன் போல. இத் தளத்தின் ஏக நைமிஷை சார்ந்த கட்டுரை எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. பூரி ஜகன்னாதர் கோயிலில் கிருஷ்ணர், பலராமர் இடையே நிற்பது சுபத்ரா அல்ல ஏக நைமிஷை. அப்படி ஒரு தொன்மக் கதையும் உண்டு அங்கே துவங்கி ஏக நைமிஷை குறித்து சிறிய ஆனால் ஆழமான அறிமுகத்தை அளிக்கும் கட்டுரை. கட்டுரையில் முதன் முறையாக ஏக நைமிஷை படிமத்தைக் கண்டேன்.

வெண்முரசு பேசும் ஜாரா சந்தன் கதை, அந்த ஜாரா சந்தன் கதைக்கு இணையாக இருக்கும் கிரேக்க தொன்மங்கள் குறித்து, ஜேஷ்ட்டா தேவி குறித்த கட்டுரையில் பேசுகிறார். ஜேஷ்டா வழிபாடு, (ஓரிடத்தில் ஜேஷ்டா சுப்ரமணியன் என மருவி அவ்வாறே வழிபடப் பட்ட நிலை ஒன்றை கட்டுரை பேசுகிறது) அதன் துணை தெய்வங்களான கொள்ளைநோய் சார்ந்த தேவிகள் இவை குறித்து ஒரு கட்டுரை அறிமுகம் செய்கிறது. வெண்முரசு பேசும் மகிஷாசுரமர்த்தினி பாரத சிற்பவியலில் அவள் வளர்ச்சி சார்ந்த (முதல் நூற்றாண்டில் துவங்கும்) முக்கிய புகைப்பட வரிசை இந்த தளத்தில் கண்டேன். தகவல்கள் இங்கிருந்து எடுத்து உருவான கட்டுரைகள் இவை என்ற அனுபந்த சுட்டிகள் கொண்ட, நிதானமான ஆய்வுகதி அழகியல் கொண்ட (என்னைப்போன்ற குறைவான ஆங்கில அறிவு கொண்ட ஒருவர் கூட வாசிக்கலாம் எனும் வகையிலான) அறிமுகக் கட்டுரைகள்.

கோயில் பண்பாட்டில் உள்ள அலங்கார வரிசையின், கீர்த்தி முகங்கள், அலங்கார வாயில்கள், வாழ்க்கை மர ஜன்னல் சட்டகங்கள், சிற்பவியலில் கேச அலங்காரங்கள், தெய்வங்கள் கரங்கள் சூடும் ஆயுதங்கள், அவர்தம் வாகனங்கள், தொன்மைக் காலம் முதல் இன்று வரை கங்கையில் போக்குவரத்து எவ்வாறு நிகழ்ந்தது போன்ற வெண் முரசு சார்ந்த பல்வேறு பாதைகளின் அறிமுக சுட்டிகள் பல உண்டு. பொறுப்புணர்வு கூடிய எழுத்துக்களும் பதிவுகளும் கொண்ட தளம்.

இப்படி முன்னர் தேடி அடைந்த மற்றொரு தளம் இது.

https://indianculture.gov.in/

இந்தியக் கலாச்சாரம் சார்ந்த கருவூலம். இந்திய அரசினுடையது. அரசு தளம் எனும் பலவீனம், இணையே அற்ற பலம் இரண்டும் கொண்டது. பல ஆயிரம் மின் நூல்கள், புகைப்பட ஆவண நூல்கள், அடிக்குறிப்புகளுடன் பல்லாயிரம் புகைப்படங்கள், இந்திய அருங்காட்சியகங்களின் சேமிப்புகள், பல நூறு புகைப்பட கட்டுரைகள், மெய் நிகர் பயணப்படங்கள், பல்லாயிரம் காணொளிகள் என பாரத தேடுதல் களம் சார்ந்த பெரும்பாலானவை கொட்டிக் கிடக்கும் களம். தேவையானவை எல்லாம் சரியான சாவி வார்த்தையை உள்ளிட்டுத் தேடும் எளிய திறமை மட்டுமே. இந்த தளம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் இரண்டுக்குமான நிரலி வடிவிலும் கிடைக்கிறது.  நான் தரவிறக்கி விரல் சொடுக்கின் அருகிலேயே வைத்திருக்கிறேன்.

இப்படித் தேடித் தேடி வெண் முரசுடன் சேர்ந்து  உங்கள் உள் உலகை விரியவைத்துக்கொண்டே போக வேண்டியதுதான் :).

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைதேவதேவன் முழுத்தொகுதிகள்- முன்வெளியீட்டுத்திட்டம்
அடுத்த கட்டுரைசாத்தானின் தந்திரங்கள்