தமிழக கிராமிய விளையாட்டுக்கள் வாங்க
நான் வசதியான இடங்களில் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்தால் அதில் ஒருமணிநேரமாவது ஏதேனும் விளையாட்டை ஒருங்குசெய்வேன். ஆனால் கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுக்கள் அல்ல. தமிழக நாட்ட்ப்புற விளையாட்டுக்கள். அவை கிட்டத்தட்ட முழுமையாகவே மறைந்துவிட்டன. ஏதேனும் உள்கிராமங்களில் எவரேனும் கண்ணுக்குத் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தால்தான் உண்டு.
நண்பர்களிடம் பழைய விளையாட்டுக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது கிளித்தட்டு என்னும் குமரிமாவட்ட விளையாட்டு பற்றிச் சொன்னேன். பல அடுக்குகளாக வரையப்பட்ட ஒரு களத்தில் முதலில் இருந்து கிளம்பும் ஓர் அணி ஒவ்வொரு அடுக்காக, அல்லது தட்டாக, வெட்டிக்கடந்து மறு எல்லையை அடைந்து திரும்பி வரவேண்டும். எதிர் அணி அந்த தட்டுகளின் கோடுகளில் ஒவ்வொருவராக நின்று கடந்துசெல்ல முயல்பவரை தடுக்கவேண்டும். கடந்துசெல்பவர் கடந்துசெல்லும் அக்கணத்தில் அவரை தடுப்பவர் தொட்டால்போதும், அவர் வெளியேறிவிடுவார்.
இது தவிர கிளி என ஒருவர் தட்டுகளின் புறக்கோடு வழியாக ஓடிக்கொண்டிருப்பார். அவர் எவரை தொட்டாலும் அவர் வெளியேறவேண்டும். மிக உற்சாகமான இவ்விளையாட்டை இன்று என் தலைமுறையினரான சிலரே நினைவில் வைத்திருக்கிறார்கள்.
நண்பர் குமரி ஆதவன் எழுதிய தமிழக கிராமிய விளையாட்டுக்கள் என்னும் நூல் இன்று மறைந்துகொண்டிருக்கும் விளையாட்டுக்களைப் பற்றிய குறிப்புகளால் ஆனது.
ஐந்தாண்டுகள் ஆய்வில் எழுதப்பட்ட இந்நூலை ஆசிரியர் அவற்றின் கருப்பொருட்களின் அடிப்படையில் அத்தியாயங்களாகப் பிரித்திருக்கிறார். மொத்தம் நூற்றி எழுபத்தொன்று விளையாட்டுக்கள். அவற்றை வாழ்வை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கள் அறநெறி சொல்லும் விளையாட்டுக்கள், அறிவுத்திறன் பயிற்சிக்கான விளையாட்டுக்கள், உடற்பயிற்சி விளையாட்டுக்கள், பொழுதுபோக்குக் கான விளையாட்டுக்கள், கலைவடிவு கொண்ட விளையாட்டுக்கள் என்னும் ஆறு பகுதிகளாக பகுத்திருக்கிறார்.
வாழ்க்கையை சித்தரிக்கும் விளையாட்டுக்களில் கடைவைத்தல், கூட்டாஞ்சோறு சமைத்தல், திருமணம் நடத்துதல் போல பல விளையாட்டுக்கள் உள்ளன. ஒரு சுவாரசியமான விளையாட்டு பூசணிக்காய். வரிசையாக குழந்தைகள் அமர்ந்துகொள்ள ஒரு குழந்தை பூசணிக்காய் வாங்க வருகிறது. பூசணிக்காய் இருக்கிறதா என்று கேட்கிறது. இப்பதான் முளைச்சிருக்கு என பதில் வரும். இப்படியே இப்பதான் பூத்திருக்கு என்று சென்று பூசணியின் பருவங்களைச் சொல்லி வரவேண்டும். கடைசியில் சொற்கள் இல்லாமலாகும்போது அங்கிருக்கும் குழந்தையை பூசணிக்காயாக தூக்கிச்செல்வார்கள்.
மிக எளிமையான ஒரு விளையாட்டை இந்நூலில் வாசித்தபோது அதைக் கண்டு எத்தனை நாளாயிற்று என நினைத்துக்கொண்டேன். நீளமான ஒரு மூங்கிலை விரித்த வலது உள்ளங்கையில் பிடிக்காமல் செங்குத்தாக நிறுத்தவேண்டும். இடதுகையை பின்னால் கட்டிக்கொள்ளவேண்டும். அதை எத்தனை நேரம் நிறுத்த முடியும் என்பதுதான் போட்டி. உடலை வளைத்து நெளித்து அதை நிலைநிறுத்தும் முயற்சி மிக வேடிக்கையான ஒன்று முழுநாளும் நிறுத்துபவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை ஆட்டத்திலேயே சேர்ப்பதில்லை. ’ஆட்டம் திகைஞ்சவன் ஆசான்’ என பழமொழி. அவன் ஆடவே வரக்கூடாது.
அட்டிக்கா தொட்டிக்கா
உப்பிள்ளா காட்டுமேலே கருங்குயிலு
காக்கா வெட்டா அவர துவர கிண்ணம்
கண்ணுக்குட்டி அக்கரமேலே கொக்கு
வெச்சா குன்றாலே குன்று
என்பது போன்ற வரிகளை வாசிக்கையில் ஒரு புன்னகை வந்தது. ஏதோ குழந்தையின் தன்னிச்சையான கற்பனைச்சொல்லோட்டம் இது. காலத்தில் நிலைகொண்டு அச்சு வரை வந்துவிட்டிருக்கிறது. பெரும்பாலான விளையாட்டுப்பாடல்களில் ஒரு ‘அர்த்தமற்ற’ தன்மை இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு சொல்விளையாட்டு மட்டும்தான். ஐம்பதுக்கும் மேற்பட்ட விளையாட்டுப்பாட்டுக்கள் இந்நூலில் உள்ளன.
ஒருவன் நடுவே அமர்ந்திருக்க சுற்றிலும் நண்பர்கள் நின்று தங்கள் கைகளை பின்னால் வைத்து அதன் வழியாகவே விரைவாக ஒரு பழுக்காப் பாக்கை மாற்றிக்கொண்டிருக்க நடுவே அமர்ந்திருப்பவன் மிகச்சரியாக எவர் கையில் பாக்கு இருக்கிறது என்று சொல்லும் மாணிக்கச் செம்பபழுக்கா விளையாட்டு நான் விளையாடியது. கண்ணும் கவனமும் மிகக்கூர்மையாக இருக்கவேண்டிய இவ்விளையாட்டை நான் ஒருமுறைகூட சரியாக ஆடிய நினைவில்லை.
புலிக்கட்டம், புன்னக்காய் எடுத்தல், எறிபந்து என தெரிந்தும் தெரியாதவையுமான ஆட்டங்களை சுவாரசியமாக விளக்கிச்செல்லும் இந்நூல் ஒரு நாட்டாரியல் ஆவணமாக உள்ளது. கூடவே ஒரு சிறந்த புனைவை வாசிக்கும் நிறைவையும் அளிக்கிறது
கிராமிய விளையாட்டுக்களை நான் வெறும் பண்பாட்டு பதிவுகள், நினைவுபேணல்கள் என நினைக்கவில்லை. அவற்றில் உயர்தொழில்நுட்பம் இல்லை. கடும் போட்டிகள் இல்லை. அவற்றில் ஒருவர் முன்னரே பயிற்சிபெற்று தேர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை. அவை ஒருவரின் தன்னியல்பான உடல்திறனையும் உளத்திறனையும் வெளிப்படுத்துபவை. அவற்றிலுள்ள அந்த இயல்பான தன்மை, கள்ளமின்மையே அவற்றை உற்சாகமான விளையாட்டுக்களாக ஆக்குகிறது.
இந்நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஓர் எண்ணம் வந்தது. கடுமையான ‘கண்டெண்ட்’ சிக்கலில் இருக்கும் நம் தொலைக்காட்சிகள் ஏன் நாட்டுப்புற விளையாட்டுப்போட்டிகள், விளையாட்டுவிழாக்களை ஒருங்கிணைக்கக்கூடாது? சரியாக நடத்தப்படுமென்றால் அவை மிகப்பெரிய அளவில் மக்களை ஈர்க்கக்கூடும்.