விஜய் பிச்சுமணி கொல்வேல் காடலாக்
அன்புள்ள ஆசிரியருக்கு,
நேற்று சென்னை வந்து இங்கே நுங்கம்பாக்கம் ஸ்டர்லிங் சாலையில் இயங்கும் ஆர்ட் ஹவுஸ் கலைக்கூடத்தில்(Art Houz gallery) நடந்து கொண்டிருக்கும் விஜய் பிச்சுமணி என்ற கலைஞனின் ‘கொல்வேல்'(Kolvel) கலைக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். இக்கொரோனா தொற்று காரணமாக பல மாதங்கள் இயக்கமில்லாமல் இருந்த கலைக் கூடங்கள் சார்ந்த செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எனக்கும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கலந்து கொள்ள வாய்த்த ஒரு கலைக் கண்காட்சி. அரைநாள் கலைக்கூடத்திலேயே செலவழித்து படைப்புகளைப் பார்த்து விஜய் பிச்சுமணியுடனும் அப்படைப்புகளைப் பற்றி விரிவாக உரையாடவும் முடிந்தது. ஒரு காட்சிக்கலை ஆர்வலனாக அப்படைப்புகள் ஏற்படுத்திய அனுபவங்களை தொகுக்க முயன்றுள்ளேன்.
விஜய் பிச்சுமணி கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பிற்கு அருகில் உள்ள ‘கொல்வேல்’ பகுதியைச் சேர்ந்தவர்(இக்கண்காட்சியின் தலைப்பே ‘கொல்வேல்’ தான்). சென்னை ஓவியக் கல்லூரியில் பதிப்போவியத் துறையில்(print making) இளங்கலையும், வண்ணக்கலையில்(painting) முதுகலை யும் படித்தவர். எனக்கு இருவருடம் முன்னால் படிப்பை முடித்தார். இப்போது சென்னையில் வசிக்கும் அவர் கல்லூரி காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து படைப்புகளைப் படைப்பதிலும் அதை கண்காட்சியாக வைப்பதிலுமாக இத்தளத்தில் தீவிரமுடன் செயல்படும் சிலரில் ஒருவர். அவரது படைப்புகள் இந்திய மற்றும் வெளிநாடுகளில் நடந்த பல கண்காட்சிகளிலும் இடம் பெற்று ஒரு தேசிய விருது உட்பட விருதுகளையும் வென்றிருக்கிறது.
பள்ளிப் பருவத்திலும் இப்போது கொரோனா ஊரடங்கில் நெடுநாட்கள் ஊரில் இருக்க நேர்ந்த போதும் அவரது சூழல் உருவாக்கிய பாதிப்பை படைப்புகளாக மாற்றியிருக்கிறார். இவையாவும் பல சமகால கலைப் படைப்புகளைப் போன்று ‘ஓவியம்’ என்றோ ‘சிற்பம்’ என்றோ ஒரு வரை முறைக்குள் துல்லியமாக அடக்கமுடியாதவை. மரம் என்ற ஊடகம் இக்கண்காட்சியின் எல்லா படைப்புகளுக்கும் பொதுவாக இருக்கிறது. மரத்தில் உருவாக்கப்பட்ட சில படைப்புகளின் மேல் ஓவியக் கோடும் செதுக்கல்களும் இருக்கும். சிலவை பசையும் சுண்ணாம்பும் உபயோகித்து மரவடிவின் மேல் ஒட்டித்தேய்க்கப்பட்டு அதன் மேல் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.
கூடத்திற்கு உள்ளே வரும் போதே இடப்புறத்தில் பேப்பரில் வண்ண பென்சிலால் வரைந்து சுற்றி நீர் வண்ணத்தால் இடைவெளி விட்டு வரைந்த நரம்புகளுடன் கூடிய பச்சை திட்டுகளுடன் மரச்சட்டகம் போட்ட சுமார் நாற்பது சிறு ஓவியங்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. மேரி மாதா, தும்பைத் செடி, பசு மாடு, கையில் வைத்து நசுக்கினால் இரத்தம் வரும் விதைகளைக் கொண்ட செடி, தட்டான்கள், மரத்தடிகள் ஏற்றிச் செல்லும் லாரி, விட்டில், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி முதல் ஊருக்குள் ஓடும் டிரக்கர் வரை. எல்லாம் அவர் ஊர் பகுதியில் பார்க்க முடியும் காட்சிகளின் பதிவுகள்.
விஜய்யின் ஊரான கொல்வேலுக்கு பக்கத்து ஊரான மாறப்பாடியில் தான் என் நான்கு வயது வரையான குழந்தைப் பருவம் கழிந்தது. இன்றும் என் பாட்டி-தாத்தா மற்றும் உறவினர்கள் அங்கே வசிப்பதால் அவ்வூருடன் நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் இவ்வோவியங்கள் எல்லாம் என் நினைவுகளையும் மீட்டிச் சென்றது. இவர் படைப்புகளில் உள்ள கோடுகளும் நரம்புகளும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இணைக்கும் தொடர்புகளை நினைவுறுத்துபவை. செடியின் வேர்கள், மின்னல்கள், பறவைக் கோணத்தில் பார்க்கப்படும் ஆறுகள் செல்லும் பாதைகள் எல்லாம் உடலின் நரம்புகளின் வடிவத்தை கொண்டிருக்கிறது என்று அதை விவரிக்கிறார். இப்படி நாமெல்லாம் இங்குள்ள எல்லாவற்றுடனும் ஏதோ ஒரு விதத்தில் பிணைப்பைக் கொண்டிருப்பதை இது உணரச்செய்கிறது. இந்த ஓவியங்களைச் சுற்றியிருக்கும் பச்சை திட்டுகள் நாஞ்சில் நாட்டு மலைகளையும் பசுமையையும் ஞாபகப்படுத்துகிறது.
துல்லியமான வட்டவடிவ மரப்பலகைகளின் நடுவில் சிறு பகுதி வெட்டி எடுக்கப்பட்டு அதில் உருவங்களைச் செதுக்கி அதைச் சுற்றி அடர்த்தியான கோடுகளும் செதுக்கல்களும் உள்ள நான்கு படைப்புகள் ஒரு தொகுப்பாக அருகருகே வைக்கப்பட்டிருந்தது. ஒன்றின் நடுவில் நாயும்(SNIFFER என்று தலைப்பிடப்பட்ட படைப்பு), மற்றொன்றில் சிலோப்பிய மீனும்(SLOPIA), அடுத்த இரண்டில் வயதான மனிதர்களின் சிரித்த வாயும்(SMILE-1, SMILE-2) செதுக்கப்பட்டிருந்தது. இப் படைப்புகளில் உபயோகப்படுத்தப்பட்டிருந்த கோடுகளின் வண்ணங்கள் மற்றும் கோடுகள் உபயோகப்படுத்தப்பட்டிருந்த விதம், மரத்தின் நிறம் மற்றும் அதன் மேல் முருங்கை இலைச்சாறு, வண்ணப்பென்சில்கள் முதலியவைகளால் தேய்த்து சாயம் ஏற்றப்பட்ட விதம் மற்றும் அதில் ஒன்றில் உபயோகப்படுத்தப்பட்டிருந்த ஊதுபத்தியால் ஓட்டையிடப்பட்ட காகிதத்தின் வடிவமைப்பு போன்றவற்றால் நான்கும் நான்கு நிறம் மற்றும் தன்மைகளைக் கொண்டு வேறு வேறு அர்த்தங்களை கொடுத்துக் கொண்டேயிருந்தது. மனிதனின் சிரிப்பு(அல்லது மகிழ்ச்சி) நாய், சிலோப்பியா போன்ற உயிரினங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளாகவும் விளைவுகளாகவும் அவற்றைச் சுற்றியுள்ள கோடுகள் மற்றும் வடிவமைப்புகள் எனக்குப் பொருள் கொண்டது. அல்லது இவைகளைச் சுற்றி நடப்பவைகள் இவ்வுயிரினங்களின் போக்கை தீர்மானிப்பதாகவும் கொள்ளலாம். எப்படி கதைகள் நாவல்கள் வாசிக்க விவாதிக்க மேலதிகமாக திறப்புகள் கொடுத்துக் கொண்டே இருக்கிறதோ அதேபோல ஒவ்வொரு வரையையும் கோடுகளையும் உன்னிப்பாக கவனிக்கும் போது அவற்றை பற்றி பேசும் போது பல அர்த்தங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நல்ல காட்சிக்கலைப் படைப்புகள் வரைகளாலும் வண்ணங்களாலும் உருவங்களாலும் வடிவங்களாலும் எழுதப்படும் கவிதைகள்.
THE WAIT(காத்திருப்பு) என்பது மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த படைப்பு. இதில் மரத்தால் செய்யப்பட்ட பெரிய சிலோப்பிய மீன் ஒன்று பிளைவுட்டில் வடித்த பெரிய கூழாங்கல் மேல் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் சாவகாசமாக நீந்தும் ஒரு மீனின் வாலின் சிறு அசைவின் நளினத்தை நிலைக்கச் செய்த ஒருங்கமைவு. கூழாங்கல்லின் வழவழப்பை அப்படியே பிளைவுட்டில் கொண்டுவந்துள்ளார். இம்மீனின் ஒரு பக்கம் மட்டும் நுண்ணிய செதில் வெள்ளைக் கோடுகளால் ஆன வடிவமைப்புகள் உள்ளன. இது தண்ணீரின் மேல் வரும் மீனின் மேல்புறத்தில் அல்லது ஒரு பக்கம் வெயில் ஒளி பட்டு மின்ன அதன் அடிப்புறம் அல்லது அதன் மறுபக்கம் நீரின் நிழலுடன் இருப்பதை ஞாபகமுட்டுகிறது. இதிலும் நாம் அசைந்து கொண்டிருக்கும் இவ்வாழ்க்கையில் நாம் கொண்டிருக்கும் கருப்பு-வெள்ளை(வெண்முரசின் முதற்கனலில் ஒளி-இருள்) தருணங்களை இணைத்துப் பார்த்தேன். ‘காத்திருப்பு’ என்ற தலைப்பு மீனைப் பிடிக்க தூண்டிலிடும் போது காத்திருப்பதுடன் இணைத்து படைப்பாளி சொன்னாலும் அதிலிருந்து மேலும் தூரம் சென்று சிந்திக்கத் தூண்டுகிறது. ஒரு கொக்கு மீனைக் கவ்வி காத்திருப்பதை, ஒரு மீன் அதைவிடச் சிறிய புழுவைக் கவ்வ காக்கும் தருணத்தை, மனித வாழ்வெனும் மீனை விடப் பெரியதான ஊழ் நம்மை விழுங்கிச் செரிக்க காத்திருப்பதை….. என்று இணைத்துக் கொண்டே செல்லலாம்.
Stop! Reflect(நில்! கவனி)…என்ற படைப்பு. பாதியாக வெட்டப்பட்ட ஒரு பெரிய திருஷ்டி எலுமிச்சையில் சிவந்த குங்குமம் பூசப்பட்ட இரு துண்டுகள். இதுவும் மரத்தால் வடிக்கப்பட்டு பின்னர் அதன் மீது சுண்ணாம்பு மற்றும் பசை, சிகப்பு வண்ண ரெசின்(resin) போன்றவை உபயோகப்படுத்தப்பட்டிருப்பதுடன் வண்ணங்களால் வரையவும் பட்டது. இப்படைப்பு குறியீட்டு ரீதியாக பல அர்த்தங்களை கொடுக்கிறது. சிவப்பு நம் மரபில் நிறைய அர்த்தங்களை தன் அகத்தே கொண்டுள்ளது. சக்தியின் பெண்மையின் நிறம். இரத்தத்தின் வீரத்தின் நிறம். ஆனால் திருஷ்டி கழிக்கப்பட்ட பூசையில் உபயோகப்படுத்தப்பட்ட எலுமிச்சையை அதில் பூசப்பட்டிருக்கும் சிகப்பு குங்குத்தை நாம் மிதிக்கவும் அருகில் செல்லவும் கூடாது என்று வளர்க்கப்பட்டிருக்கிறோம். அப்படியென்றால் எதை நின்று கவனிக்க படைப்பாளி சொல்கிறார். ஒரே நேரத்தில் இந்த எலுமிச்சை துண்டுகளைப் போல மாங்கல்யத்தின் அடையாளமாகவும் ஆனால் உள்ளே ஒதுங்கி வாழ பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் நம் மரபின் பெண்களின் இரத்தக் கண்ணீரையுமா? இல்லை இந்த வெட்டப்பட்ட எலுமிச்சையின் நிறங்களின் வடிவத்தின் அழகியலை மட்டுமா? இரண்டு வழிகளிலும் நம் பார்வையை நெடுந்தூரம் செல்ல வைக்கிறது…..
100% GOLD என்ற இரு படைப்புகள்- பழைய சொரசொரப்பான மரத்துண்டுகளை அடுக்கி உருவாக்கப்பட்ட ஒரு பெரிய கை மற்றும் பெரிய காலின் வடிவங்கள். மிக நேரடியான தலைப்போ என்று தோன்றினாலும் அப்படைப்பு கடத்தும் விஷயங்கள் நம்மை வெகுவாக பாதிக்கிறது. மண்ணில் உழைப்பவர்களின் கைகளையும் கால்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் படைப்புகள். பொதுவாகவே மரத்தடிகளின் நிறம் மண்ணின் நிறத்திற்கு நெருக்கமானது. இயற்கை மற்றும் மண் சார்ந்தவற்றை எடுத்துப் பேசுவதற்கு மரத்தை ஊடகமாக பயன்படுத்தியிருப்பது இக்கண்காட்சியில் உள்ள எல்லா படைப்புகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. கை சிற்பத்தின் மேல் மிக மெல்லிய வெள்ளைக் கோட்டால் தொட்டாச்சிணுங்கி செடி வரையப்பட்டிருந்தது. தொட்டாச்சிணுங்கியைத் தவிர வேறு எந்த செடியின் ஓவியமும் அங்கே பொருத்தமாக இருந்திருக்காது. கல்லும் முள்ளும் பட்டு பழக்கமாகி சொரசொரப்பான கைகள் கூட முதன்முதலாக மாட்டிற்கு புல் அறுக்கப் போயிருக்கும் போது தொட்டாச் சிணுங்கியின் முள் பட்டு அதிர்ச்சியுடன் பல தடவை சுருங்கியிருக்கும் சிணுங்கியிருக்கும்…
SOUND ALERT-1 & SOUND ALERT-2 என்ற தாவர விதை வடிவப் படைப்புகள். பொதுவாக எல்லா படைப்புகளுமே கூர்ந்து நிதானமாக பார்க்கவில்லையென்றால் கோடுகளின் நுணுக்கங்களையும் அழகியல்களையும் அது உணர்த்துபவற்றையும் தவறவிடுவோம். அதிலும் இவ்விரு படைப்புகள் பளிச் நிறங்கள் எதுவும் இல்லாமல் மரப்பட்டையின் நிறத்துடன் கலந்து கண்ணுக்கு உறுத்தாமல் அதேசமயம் பக்கத்தில் போய் பார்த்தால் மட்டுமே தெரியும் அடர் கோடுகளைக் கொண்டுள்ளது. எரியும் ஊதுபத்தி கொண்டு போட்ட ஓட்டைகள் உள்ள காகிதங்கள் இக்கண்காட்சியின் பல படைப்புகளில் வடிவமைப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. SOUND ALERT-2 படைப்பில் ஒரு விதையின் பகுப்பில் ஒரு பக்கம் ஆட்டின் உருவமும் மறுபக்கம் புலியின் உருவமும் நடுவில் ஆள்காட்டி பறவையின் உருவமும் உள்ளது. ஆள்காட்டிப் பறவை சத்தம் எழுப்பி வரப்போகும் அபாயத்தை பற்றிய எச்சரிக்கை எழுப்புவது. ஒன்று மற்றொன்றுடன் முட்டி மோதி வென்று வாழ்வது இயற்கையின் நியதி. அந்த செயல்பாட்டை முடிந்தவரை உரசலில்லாமல் கொண்டு செல்வதைப் பற்றி தான் காந்தி பேசினார் என்று காந்தி பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் ஏதோ காரணத்தால் காந்தியை ஆள்காட்டிப் பறவையின் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.
SOUND ALERT-1 எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான படைப்பாக தோன்றியது. ஒரு விதையின் ஒரு பகுதி. SOUND ALERT-2 உடன் ஒப்பிடும் போது கொஞ்சம் சிவப்பு நிறத்தின் அடர்த்தி இதில் ஏறியிருக்கிறது. பிறகு அதன் மேல் உள்ள கட்டுக்குள் நிற்காத கிறுக்கல்களின் செறிவு. முந்தைய படைப்பில் ஆடு-புலி-ஆள்காட்டிப்பறவை என்பது தாய்கோழி-பருந்து-அணில் என்றாக இதில் உள்ளது. பிரபஞ்ச ஆடலின் வெவ்வேறு வடிவங்கள். அக்கிறுக்கல்களும் கோடுகளும் இவ்வடிவங்களின் மேல் ஏறி இறங்கி எல்லாத்தையும் இணைத்து ஒன்றோடொன்று கலந்து ‘அத்வைதம்’ ஆக உணரச் செய்தது.
துல்லியமான வட்டமில்லாத மூன்று மரப்பலகைகளின் நடுவில் சிறிது அகழ்ந்து அதில் முறையே தூங்கும் மனித உருவமும், விரியாத ஒரு மென்மையான மொட்டும், கத்தி கூப்பாடு போடும் கிரிக்கெட் பூச்சியும் வரையப்பட்டு அதற்கேற்ற தலைப்பும்(SLEEP, BUD-INNOCENCE, CRICKET) வைக்கப்பட்டுள்ளது. இம்மூன்றையும் சுற்றியுள்ள மரப்பலைகைகளில் இயற்கையாகவே உள்ள கோட்டடையாளங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தத்தை அளித்துக் கொண்டிருந்தது. தூங்கும் உருவம் கனவிற்குள் ஆழ்ந்து செல்லும் உணர்வையும், மிருதுவான பூ மொட்டை சுற்றியுள்ள கோடுகள் மிருதுவான எதையும் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு அதைச் சுற்றி உருவாகி வரும் கடினத்தன்மையை(ஆமையும் ஓடும், மரம் மற்றும் செடிகளின் விதைகள், பெண்மை….) கூறிக்கொண்டிருந்தது. கிரக்கெட் பூச்சி ஏற்படுத்தும் ஓசையின் அதிர்வுகளை அதைச் சுற்றியுள்ள வரிகள் கூறின.
மகிழ்ச்சியின் தருணம்(Moment Of Happiness) என்று தலைப்பிடப்பட்ட ஒரு படைப்பு வாகை மரத்தில் செதுக்கி விரித்தெடுக்கப்பட்ட ஏறத்தாழ மூன்றடிக்கு மேல் வரும் மூன்று தனித்தனி செம்பருத்தி பூக்களின் இதழ்களின் அடிப்புறத்தில் வண்ணம் தீட்டி சிவக்க வைத்து அதன் சிறு நரம்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொகுப்பு. மலர்ந்த பூக்களின் மகிழ்ச்சியை நம்மில் பகரும் படைப்பு இது. இப்பூக்களின் தனித்தன்மையே அது மரத்தில் செதுக்கப்பட்டாலும் ஒரு அழகான செம்பருத்திப் பூவின் குழைவும் நளினமும் மென்மையும் கைவரப் பெற்றிருக்கும். செம்பருத்திப் பூக்களில் உள்ள வரைகளையும் சுருக்கங்களையும் அவர் இதற்காகவே தேர்ந்தெடுத்திருக்கும் வாகை மரத்தடியில் உள்ள வரிகளே பிரதிபலிக்கிறது. விஜய் இப்படைப்பு பற்றி பேசுகையில் ‘அடர் பச்சை நிறப் பிண்ணனியில் மலர்ந்திருக்கும் ஒரு செக்கச்சிவந்த செம்பருத்தி பகிரும் மகிழ்ச்சியை நினைக்கும் போது ‘அப்படியே ஒரு நூறு பூவை பண்ணிப் போட்டு அந்த மகிழ்ச்சியை நம்மளும் மற்றவர்களுக்கு கடத்தணும்னு அந்த தருணத்தில தோணுச்சு. அப்புறம் மூணு மட்டும் பண்ணமுடிஞ்சது’ என்றார். தான் பார்த்து தன்னை மகிழ்வித்து கற்பனையை தூண்டிய அந்த மலரும் பூவை மூன்று மரப்பூவாக வடிக்க அவருக்கு மூன்று மாதங்கள் ஆகியது.
இதை யோசித்துக் கொண்டிருந்தேன். எது ஒரு கலைஞனை தான் உணர்ந்த ஒன்றை பிரம்மாண்டமாக ஆக்கி மற்றவர்களுக்குப் பகிர பல மாதங்கள் வருடங்கள் உழைக்க வைக்கிறது என்று. விஜய்க்கு நண்பரான கவிதைக்காரன் இளங்கோ தன் ஆறாம் வகுப்பு படிக்கும் மகள் தான்யா’வுடன் கண்காட்சி பார்ப்பதற்கு வந்திருந்தார். உரையாடலின் இடையில் விஜய் தான் கலைக்கூடத்தின் வெளியில் வரும் போது பார்த்த உதிர்ந்து போன ஒரு வாதுமை மரத்தின் இலையின் நிற வகைகளை விவரித்துக் கொண்டிருந்தார். அதை தானும் பார்த்திருந்த அந்த சுட்டிக் குழந்தை தான்யா திருப்பிப் போய் அதே இலையை எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தாள். அழகான சிகப்பு நிறம் கொஞ்சம் பச்சை நிறத்துடன் கலந்து அவ்விலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்க வலது ஓரத்தில் ஆங்காங்கே வட்டவட்டமாக மஞ்சள் கலந்த காப்பி நிறப் புள்ளிகள். இன்னும் கூர்ந்து பார்த்தால் நமக்குத் தெரிந்த பல நிறங்களும் கொஞ்சம் அவ்விலையில் நிறைந்திருப்பதை உணர முடியும். அப்போது நாம் பார்த்து வியந்த அந்த இலையின் நிறஅழகு சில மணிநேரங்களில் மாறிவிடும் என்பது பிரபஞ்ச நியதி. ஓரிரு நாட்களில் மட்கி மண்ணோடு மண்ணாகவும் கலந்து விடும்.
இது போன்ற பலரும் கவனிக்காமல் கடந்து போகும் சிறு தருணங்களையோ அல்லது பெரும்பாலானவர்களுக்குச் சாத்தியமில்லாத உச்ச தருணங்களின் மகிழ்ச்சியை(அல்லது வேறு உணர்வுகளை) தன்னிலும் இவ்வுலகத்திலும் கொஞ்சம் அதிக காலம் நிலைநிறுத்திப் பார்க்கவும் அதை மற்றவர்களுக்குப் பகிரவும் முற்படும் போது ஒரு கலைப்படைப்பு பிறக்கிறது. உண்மையில் மூன்று பூக்கள் செய்ய மூன்று மாதங்கள் செலவழித்தாரென்றால் அந்த பூக்கள் பகிரும் மகிழ்ச்சியை மூன்று மாதங்களும் உணர்ந்து அனுபவித்திருப்பார். கலைஞனின் வரம் அது. பார்வையாளன் அப்படைப்பின் வழி தானும் அதை உணரும் போது ‘கலாரசிகன்’ ஆகிறான். வெறும் ‘பார்வையாளன்’ என்பவனிலிருந்து வேறு படுகிறான்.
இவையாவும் விஜய் பிச்சுமணி கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்ற இருவருடங்களாக உருவாக்கிய படைப்புகள் ஆகும். பல மாதங்களுக்குப் பிறகு கலந்து கொண்ட நிறைவான கண்காட்சியாக இது அமைந்திருந்தது.
தொடர்புடைய இணைப்புகள்:
அன்புடன்,
ஜெயராம்