ஆயிரம் ஊற்றுகள் மின்னூல் வாங்க
அச்சு நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெயமோகன்,
முதலில் மலையரசி கதையைத்தான் படித்தேன். அதிலே பராசக்தியின் இரு தரிசனங்களை விரித்துக் கொள்ளமுடியும். வாசகர் கடிதத்தை படித்தபின் லட்சுமியும் பார்வதியும் கதையை படித்தேன். இரண்டும் இரட்டைக் கதைகள். ஒரு தெய்வத்தின் இரு முகங்களை நமக்கு காட்டும் இரு ஆடிகள். ஒருவள் கனிந்த அன்னை, இன்னொருவள் துணிந்த அன்னை. இருவரும் ஒருவரே. தன் மக்களை காப்பாற்ற தன்னையே அழித்துக்கொள்ளும் அன்னை. தன் மக்களை காப்பாற்ற தன் மகனை அழிக்கும் அன்னை.
இதில் கருணை மகத்தானது? தன்னை காப்பாற்ற அத்தனை சாத்தியங்களுமுண்டு. சாத்தியத்தை அடைய மலையளவு தங்கமுண்டு. தங்கத்தை எடுத்தால் வெள்ளையன் கொண்டு போய்விடுவான். தான் அழிந்தாலும் அச்செல்வம் தன் மக்களுக்கு பயன்படவேண்டுமென்று தன்னை அழித்துக்கொள்ளும் கருணையா? தன் மக்களை காப்பாற்ற தன் மகனை அழிக்கும், அதனால் விளையும் இருளையும் தன் மக்களுக்காக தாங்கும் குரூரமா? இரண்டுமே பெருங்கருணையின் இருமுகங்கள். வெளிப்படும் முகத்தை அவளே தீர்மானிக்கிறாள்.
அக்காள் தன் மக்களுக்காக வெள்ளையனை கெஞ்சுகிறாள். அடுத்த தலைமுறை தன் மக்களுக்காக துணிகிறாள். சுதந்திர வேட்கையின் துவக்கத் தருணம். பொறுமையால் பின் துணிவால் வென்றோம்.
மேல்சொன்னவற்றைத் தாண்டி கதையை படிக்கும்பொழுது அகத்தில் கோபம் எழுந்தது. வெளியேயிருந்து வந்த வெள்ளையன் நம் தலைமீது செலுத்திய ஆதிக்கம், எப்படிச் சொல்வது? ஒரு எரிச்சல், கோபம், இயலாமை. நம் குலசேகரன்கள் அறமிழந்து கொலைசேகரன்களாய் மாறியபின் வெளியேயிருந்து வந்த குலசேகரன் வெள்ளையன். இதுவும் பராசக்தியின் ஆடல். அவனும் கொலைசேகரனாய் மாறியபின் குணசேகரன் காந்தி வந்து குலசேகரனானார்.
அன்புடன்,
மோகன் நடராஜ்
திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் நூல்களாக வெளிவந்துள்ளனவா? ஒரு நூலாக வெளிவருமளவுக்கு கதைகள் உள்ளன என்று நினைக்கிறேன். அவை உண்மையில் திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த கதைகள் அல்ல. வரலாறு எப்போதும் எப்படி அதிகாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒருவகை புனைவாகவே உள்ளது என்பதை, அப்புனைவுக்குள் ஊடாடும் மானுடரின் உண்மையை நோக்கிச் செல்லும் பாதையைக் காட்டும் கதைகளாக உள்ளன. எவருக்கும் அவை தங்கள் சொந்த வரலாற்றை நோக்கித் திறக்கும் கதைகளாகவே இருக்கும்
ஆர்.ராஜாராம்