எம்.வி.வியின் இலக்கிய நண்பர்கள்- உஷாதீபன்

என் இலக்கிய நண்பர்கள் வாங்க

பெயருக்கேற்ப உண்மையான நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆத்மார்த்தமாய் நேசித்திருக்கிறார்கள்.. படைப்பு வேறு. விமர்சனம் வேறு. நட்பு வேறு என்கிற பக்குவம் இருந்திருக்கிறது. விமர்சனங்களைக் கருத்தோடும் கண்ணியத்தோடும் எதிர்கொண்டு, அது காட்டமாக இருப்பினும், எதற்காக இப்படிச் சொல்கிறார் என்று சிந்தித்தும், உடன்பாடில்லையென்றால் அது அவர் கருத்து என்று மனதளவில் பக்குவப்பட்ட நிலையில் அடுத்துச் சந்திக்கும்போது பாசத்தோடும், நேசத்தோடும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அவரின் ஒப்புதலுக்கு என்றாவது ஆளாக மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறார்கள். ஒரே படைப்பை அடுத்தடுத்துப் படிக்கும்போது ஏற்பட்ட தெளிவில், முன்னம் தான் சொன்னதையே மறுத்து, சிறப்பாய்த்தான் இருக்கிறது என்று வெளிப்படையாய் மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள். கருத்து மாறுபாடும், காலத்தால் ஏற்பட்ட பார்வை மாற்றமும், முதிர்ச்சியும் அவனவன் வளர்ச்சிக்கான அடையாளங்கள்தானே என்று வெளிப்படையாய்ச் சொல்லி, மனச் சமாதானம் பெற்று, பரஸ்பரம் கை கோர்த்து நட்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இலக்கியம் வேறு, வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்த்து, மனதளவில் கொண்ட அன்பை அது எவ்விதத்திலும் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதற்கடையாளமாய் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும், ஒருவரையொருவர் உபசரித்துக் கொள்வதிலும் அக்கறை காட்டி, கால நீட்சியில் பரஸ்பரம் எப்படிப் பலப்பட்டிருக்கிறோம் என்பதை மானசீகமாய் உணர்ந்து, இவர்களின் தொடர்பெல்லாம் கிடைத்தது பெருமையே….என்று எண்ணி எண்ணி இறுமாந்திருக்கிறார்கள்.

இலக்கியப் பணியில் வறுமை ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அதைப் பொருட்படுத்தினால் நல்ல எழுத்து கை வராது என்று படைப்புகளின் மீதான பற்றில் பசியையும், பட்டினியையும் புறந்தள்ளி அறிவுக்கு விருந்தாகும் பணியில் ஆத்ம திருப்தி கொண்டிருக்கிறார்கள்.

படைப்பாளியாகவும், ரசிகனாகவுமே என்னை நிலை நிறுத்திக் கொள்கிறேன் என்று மேற் சொன்ன கருத்துக்களுக்கு இணங்க தன் ஸ்திரமான இயங்கு தளத்தை முன் வைக்கிறார் எம்.வி.வி. விமர்சனங்கள் என்னை விருத்தி செய்கின்றன, மேம்படுத்துகின்றன என்பதில் திருப்தியுறுகிறேன். இலக்கியச் சங்கதிகளில் எனக்கென்று அபிப்பிராயங்கள் உண்டென்றாலும், என் எழுத்தின் தரத்தை நிர்ணயிக்கும் மாற்றுத் தரப்பின் கருத்துக்களையே நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், எதைச் செய்யக் கூடாது என்பதை நிர்ணயித்துக் கொள்ளவும், எப்படிச் செய்திருந்தால் இன்னும்  சிறப்பாய் உணரப்படக் கூடும் என்பதை உணர்ந்து கொள்ளவும், தொடர்ந்து ஊக்கமாய் பயணப்படவும் பேருதவி புரிகிறது என்பதை அறுதியிட்டுப் புரிந்து கொள்கிறேன்.

இலக்கியச் சங்கதிகளில் எனக்கென்று தனிக் கருத்துகள் உண்டுதான். அவற்றிலிருந்து மாறுபடும் நண்பர்களோடு நான் கட்சியாடுகிறேன். அதுவே எங்கள் நட்பைப் பலப்படுத்துகிறது என்று பெருமையுறுகிறார். திரு.க.நா.சு. அவர்களோடு தனக்கேற்பட்ட நட்பும், பாசமும், காலத்தால் இவ்வாறுதான் பலப்பட்டு சகோதர வாஞ்சையோடு பயணப்பட வைத்தது என்று நெக்குறுகுகிறார்.

இந்தக் கட்டுரைத் தொடர் என் சகாக்களின் படைப்புக்கள் பற்றிய ஆய்வோ, விமர்சனமோ அல்ல. எங்கள் நட்புப் பயணம் எவ்வாறிருந்தது என்பதை விளக்கமாய் முன் வைக்கும் இனிய அனுபவமே…! என்று எம்.வி.வி. உள்ளன்போடு எடுத்துரைக்கையில் இன்றைய நவீன இலக்கியச் சூழலை, குழுக்களாய்ப் பிரிந்து நிற்கும் அவலங்களை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இந்தக் கட்டுரைகளில் நான் முன் வைக்கும் விஷயங்கள் சற்று முன் பின்னாக இருக்கலாமே தவிர எதுவும் உண்மைக்குப் புறம்பானதல்ல. என்னோடு பழகிய இலக்கியப் படைப்பாளிகளின் குடும்ப விஷயங்கள் எதையும் நான் இதில் சொல்ல முற்படவில்லை. அவர்களாகவே என்னிடம் சொன்னவைகளையும் நான் சேர்க்கவில்லை. அவைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவைகள் என்றே ஒதுக்கியிருக்கிறேன் என்று தெளிவான மனநிலையில்  எடுத்துரைக்கிறார் எம்.வி.வி.

கவிஞர் ஞானக்கூத்தனின் கருத்துக்களோடு முரண்பட்டபோது, அது மனச் சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், நீங்க பெரிய கவிஞர், பொயட்டிக்ஸ் பற்றியெல்லாம் எழுதற நல்ல கட்டுரையாளர், ஒரு ஞானஸ்த்தன் இப்படிப் பேசலாமாங்கிற ஆத்தாமைதான் என்று அவர் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, தன் அன்பைப் பொழிகிறார்..நட்பைப் பலப்படுத்துகிறார்.

இலக்கியவாதிகள்ங்கிற பேர்ல சிலரை மட்டும் காலம் பூராவும்  ஓகோன்னு கொண்டாடுறது ஒரு பக்கம்னா,இன்னொரு பக்கம் வாழ்க்கை முழுக்க ஒருத்தன் என்னதான் எழுதியிருக்கான்னு கூடப் பார்க்காமக் கழிக்கிறது எவ்வளவு கொடுமை?  இதெல்லாம் எந்த வகைல சகிச்சிக்கக் கூடியதா இருக்கு? என்று தன் ஆதங்கத்தை ஆழமாய் வெளிப்படுத்துகிறார்.

கும்பகோணம் காலேஜ் நூற்றாண்டு விழாவுக்கு சொற்பொழிவிற்காகச் சென்றிருந்ததும் அங்கே தன்னையும், தி.ஜா வையும் எந்த ஆசிரியர்கட்கும் (தமிழாசிரியர் உட்பட) தெரியாமல் இருந்ததையும், மௌனி, நகுலன்,கு.ப.ரா., பிச்சமூர்த்தி  என்று யாரையுமே அவர்கள் அறிந்திராமல் இருந்ததையும் கண்டபோது வியப்பும், வேதனையும்தான் மிஞ்சியது என்று கூறி குறைந்தபட்சம் அவர்களின் படங்களையாவது வைத்திருக்கக்கூடாதா என்று வெதும்புகிறார்.

க.நா.சு உடல் நலமில்லாமல் உறார்ட் அட்டாக்கில் படுத்திருந்தபோது நேரத்துக்குப் பொருத்தமில்லாமல் ஜோக் அடிக்கிறோமே என்ற உறுத்தலோடேயே “மௌனிக்கு ஒரு மாடம் கட்டி…ஆறுகால பூஜைக்கு.என்று துவங்கும்போதே, ஏன் சிலையே வச்சிற வேண்டிதானே என்று க.நா.சு பொங்கிட, என்ன சார்…இந்த நேரத்துல போய் இப்படி என்று மகள் வந்து சொல்ல முடியாமல் தவிக்க….அத்தோடு அந்தப் பேச்சு நின்றது என்றும், நல்லவேளை அவரது திருமதி அப்போது அங்கே இல்லை என்று தெரிவித்து  அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் க.நா.சு இப்பூவுலகில் வாழ்ந்து கலகம் செய்தார் அன்பு பொங்கத் தெரிவிக்கிறார்.

சந்திக்கும் பொழுதெல்லாம் வாதமும் விவாதமும்தான் இருந்திருக்கிறது அவர்களுக்குள். ஆனால் உள்ளார்ந்து அமிழ்ந்து கிடந்த அன்பும் பாசமும் அவர்களது நட்பை உயர்த்திப் பிடித்திருக்கிறது. என்ன சண்டை போட்டா என்னய்யா…நீதான் எல்லாத்தையும் ஒரு அருமையான காபியோட சரி பண்ணிடுவியே…என்பாராம் க.நா.சு. கையில் காசில்லாவிட்டாலும், ஒரு நல்ல காபிக்காக சில மைல் தூரம் கூடச் சென்று சேர அவர் அஞ்சமாட்டார் என்று அவரை ஆதரவாக நினைவுபடுத்திக் கொள்கிறார். அப்படியான எழுத்தாள நண்பர்கள் இப்போது உறிருதய சுத்தியாக இருக்கிறார்களா என்று நினைக்க வேண்டியிருக்கிறது நமக்கு.

ஜாதி முத்து என்றொரு நாவலை க.நா.சு. துவக்கியிருந்ததையும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி நூற்றாண்டு விழாவுக்கு வந்திருந்தபோது நான் தி.ஜா.வோடு பழைய மாணவர்கள் என்கிற உரிமையில் சுற்றித் திரிந்தபோது, எங்களோடு எதிர்பாரா நேரத்தில் வந்து சேர்ந்து கொண்டார் க.நா.சு. என்று கூறி ஒரு நாளைக்கு இருபது பக்கம் எழுதும் உங்கள் திட்டம் என்னவாயிற்று? என்று தி.ஜா.கேட்க…அது இருக்கு…ஆனா நாவல்தான் முடியலை…முடிக்கணும் என்று இவர் சொல்ல, தேனீ இதழில் வந்த அந்தத் தொடர்…இதழ் நின்று போக…அதுவும் நின்றதில், திருமணத்திற்கு வந்த கிழவிகளில் நாலில் ஒரு பங்குப்பேரைத்தானே சொல்லியிருக்கிறீர்கள், மீதி எத்தனை ஆயிரம் கிழவிகளும், கிழவர்களும் இன்னும் இருப்பார்கள்? குறைஞ்சது 5000 பக்கமாவது வேண்டாமா என்று தி.ஜா ஜோக்கடிக்க, க.நா.சு.வோடு நானும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தோம் என்று அந்த மகிழ்ச்சிகரமான நேரங்களை மறக்க முடியாமல் தவிக்கிறார். முடிக்காத கதையாகிப் போனது அது என்ற தகவல் கிடைக்கிறது நமக்கு.

மௌனி பற்றிச் சொல்கையில் அவரிடம் பழகும்போதெல்லாம் என்னிடமிருந்த பயத்தை கடைசிவரை என்னால் விலக்கவே முடியவில்லை….நல்லா எழுதற….ஆனால் நான் நினைச்சதைவிட சின்னப் பையனா இருக்கே…என்றாராம் மௌனி. எழுதறதுக்காக குறிப்பு எடுத்து வச்சிருக்கேன் பார்த்தியா? என்று ஒரு நோட்டைக் காண்பித்திருக்கிறார். பி.எஸ்.ராமையாதான் மணிக்கொடியில் என் கதையைத் தேர்வு செய்து போட்டார் என்றும் ந.பி, கு.ப.ரா. மௌனி இவர்களோடு என் கதையும் வந்திருப்பது அப்போது எனக்கு அவ்வளவு பெருமையாயிருந்தது என்று மகிழ்கிறார்.

சகட்டு மேனிக்கு புதுமைபித்தன், ந.பி., ராமையா, கு.ப.ரா., சிதம்பர சுப்ரணியன் இவர்களெல்லாம் என்ன எழுதுகிறார்கள், சரியான அப்ரோச்சே இல்லை எதிலும்  என்று சாடுவார் மௌனி. நான் வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன் என்று பயத்தோடு தெரிவிக்கிறார்.   அத்தோடு மணிகொடி என்றொரு மாதப் பத்திரிகை மட்டும் தோன்றியிருக்காவிட்டால், தமிழ்மறுமலர்ச்சி என்பது இன்னும் பல ஆண்டுகள் பிற்பட்டிருக்கும் என்றும் புகழ்ந்துரைக்கிறார்.

இப்படி முத்து முத்தாகக் கோர்க்கப்பட்ட பலவிதமான அனுபவத் தகவல்கள் அடங்கிய அரும்பெரும் பொக்கிஷமாக விளங்குகிறது இந்தப் புத்தகம். இதை இத்தனை காலம் கழித்து, கண்டுபிடித்து  வெளியிட்ட சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர் அமைப்பு மிகவும் நன்றிக்குரியதாகும். இல்லையெனில் மறுபதிப்பாக வராமல் இப்புத்தகம் காணாமலே போயிருக்கும் வாய்ப்பு நிறைய உண்டு.

எம்.வி.வி.யின் காதுகள் நாவல் ஒப்புமை சொல்ல இயலாத தமிழில் முன்னெப்போதும் யாராலும் இதுபோல எழுதப்படாத தனித்துவமான நாவல் என்றும் அவரது பரிசோதனை முயற்சிகள், யாரோடும் ஒப்பிட முடியாத நடை, உள்ளடக்கத் தேர்வு, அதைக் கையாண்ட விதம், செய்து பார்த்த புதுப் புது உத்திகள் இவை எல்லாமும் தமிழ் இலக்கியம் எப்போதும் அவரை உயர்ந்த ஸ்தானத்திலேயே வைத்திருக்குமென்பது தி்ண்ணம் என்று திரு ரவி சுப்ரமணியம் சொல்லும் கணிப்பு அவரது படைப்புக்களைத் தேடிப்  படித்த தீவிர வாசகர்களுக்கு நிச்சயம் புரிபடும்.

என் கதைகளில் நான் என்னையே தேடினேன். நான் அறிந்ததை, கேட்டதை, பேசியதை, அனுபவித்ததை, தொட்டதை, விட்டதை, சிந்தித்ததையே எழுதினேன் எழுதி எழுதித் தீர்த்தேன்…பாதி எனக்காகவும், பாதி பசிக்காகவும் என்று சொல்லிவிட்டு இறுதியாக அவர் ஒன்று சொல்லிச் சென்றதை நினைக்கும்போது அதில் அடங்கியிருக்கும் அவரது வாழ்வின் தீர்க்க முடியாத வேதனைகளின் பிரதிபலிப்பாக அதை நாம் உணர்கிறோம். அது –

“தமிழ்நாட்டில் முழு நேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு மானங்கெட்ட பிழைப்பு…“

எம்.வி.வி.அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் இந்த வேளையில் அவரது அத்தனை சிறுகதைகளையும் ஒன்று சேர்க்கும் அரிய பணி பேராசிரியர் திரு கல்யாணராமன் அவர்களால் செயலூக்கம் பெறப்பட்டுள்ளது என்பதும், காலச்சுவடு வெளியீடாக அது வரவிருக்கிறது என்பதும் இங்கு முக்கியமான கூடுதல் செய்தியாகிறது.

 

உஷாதீபன்

“என் இலக்கிய நண்பர்கள்“-எம்.வி.வெங்கட்ராம் – வாசிப்பனுபவம் – உஷாதீபன்           வெளியீடு:-சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர்.

முந்தைய கட்டுரையுடியூப் வானம்
அடுத்த கட்டுரைஎஸ்.பொ பற்றி நோயல் நடேசன்